பயணங்கள் பலவிதம் - 06

2018.05.27
பூண்டுலோயா நோக்கி ஒரு பயணம்

மலையகம்! இலங்கையில் இயற்கையின் உறைவிடம் என்றால் அது மலையகம் தான். ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலிகள் காடுகளை பொன் விளையும் பூமியாகச் செதுக்கினார்கள். கூலிகளாக வந்தவர்கள் எப்போதும் தங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. தாம் அழைத்து வரப்பட்ட நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றி வந்தார்கள். காலம் செல்லச்செல்ல கூலிகள் தம்மைப் பற்றியும் சிந்தித்தார்கள். தமக்கான அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்தனர். 

பூண்டுலோயா திருமண மண்டப முன்புறம் 




திருமண மண்டபத்தின் எதிர்ப்புறம் 








தன்னை நம்பி வந்த மக்களுக்காக ஆங்கிலேயனும் படிப்படியாக அங்கீகாரம் வழங்க ஆரம்பித்தான். அது முழுமையடைவதற்குள் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. கூலிகளும் மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கையின் அதிகார வர்க்கம் ஆங்கிலேயனை விட மோசமாக கூலிகளை அடிமைப்படுத்தியது. ஆங்கிலேயன் வழங்கிய அங்கீகாரம் அடியோடு இல்லாது போனது. அப்படியானதொரு வேளையில் கூலிகளில் ஒரு பகுதியினரை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது இலங்கையின் அதிகார வர்க்கம். 

மாலை திருமண மண்டபத்தில் இருந்து
டன்சின் தோட்டத்துக்கு வீடு திரும்பும் போது 




அதே சமயத்தில் தொடங்கிய ஈழ விடுதலைப் போராட்டமும் கூலிகளின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியது. கூலிகள் தம்மை மலையகத் தமிழர் என அடையாளப் படுத்திக் கொள்ளவும் இலங்கையின் ஏனைய மக்களும் அனுபவிக்கும் உரிமைகளைத் தாமும் அனுபவிக்கவும் இன்னமும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிற சூழலே காணப்படுகிறது. மலையகத்தின் பிரதான வாழ்வாதாரம் தேயிலையும் மரக்கறிப் பயிர்ச் செய்கையும் தான். இறப்பர் தொழிலும் இன்னும் பல தொழில்களும் இங்கே காணப்படுகின்றன. 

27ஆம் திகதி ஞாயிறன்று பூண்டுலோயா நகரத்தில் இடம்பெற்ற மனைவியின் உறவினர் திருமணத்திற்கு கொட்டகலையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணம் செய்தோம். தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா வரையிலான பாதை நீண்டு உயர்ந்த மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. பாதையின் ஒருபுறம் கற்பாறைகள் நிறைந்த மலைப்பகுதியும் மறுபுறம் பல நூறு அடிகள் ஏன் ஆயிரம் அடி கூட இருக்கலாம் என என்னும் அளவுக்குப் பள்ளம். இந்தப் பாதையில் மழைக் காலத்தில் பயணம் செய்வது சவாலானது. மண்சரிவு அபாயம் இங்கு அதிகம். ஆங்காங்கே மண்சரிவு இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது. காலை 11.15 மணியளவில் திருமண மண்டபத்தை வந்தடைந்தோம். திருமண நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் பூண்டுலோயா, டன்சின் தோட்டத்துக்கு உறவினர் வீட்டுக்குப் பயணமானோம். திருமண நிகழ்வுகள் மண்டபத்திலேயே முடிந்து விடுவதில்லையே? இன்னும் இருக்கிறதல்லவா? வாங்க போகலாம்.

2018.05.28 - திங்கற்கிழமை

28ஆம் திகதி காலை வேளையில் டன்சின் தோட்டம் 










மணமகன் இல்லம் அமைந்துள்ள டன்சின் தோட்டத்தில் இருந்து மணமகள் வீடு அமைந்துள்ள பூண்டுலோயா வடக்கு தோட்டத்திற்கு மறுவீடு செல்வதற்காக காலை 09.30க்கு புறப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பன்னிரண்டு மணியளவிலேயே பயணம் ஆரம்பமானது. நாமெல்லாம் என்னிக்கு சொன்ன நேரத்துக்கு புறப்பட்டிருக்கோம்?







காலை 11.25 மணிக்குப் பயணம் ஆரம்பமானது. இரண்டு வேன்கள் (Van) பயணத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மணமகன் வீடு ஒரு மலை உச்சியிலும் மணமகள் வீடு அதற்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இன்னுமோர் மலையின் உச்சியிலும் அமைந்துள்ளது. ஆகவே நாம் மணமகன் வீடு அமைந்துள்ள மலையின் மேலிருந்து கீழே இறங்கி அடுத்த மலையில் கீழே இருந்து மேலே பயணித்தோம்.

டன்சினன் நீர்வீழ்ச்சி 


டன்சின் தோட்டம் என்று நான் பதிவில் குறிப்பிட்டாலும் டன்சினன் (Dunsinane) என்றே சரியாகக் குறிப்பிட வேண்டும். பேச்சு வழக்கில் டன்சின் என்றே குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் பிரதான நீர்வீழ்ச்சிகளில் டன்சினன் நீர்வீழ்ச்சியும் (Dunsinane Waterfalls) ஒன்று. இந்த நீர்வீழ்ச்சி டன்சினன் தோட்டத்தில் இருந்து பூண்டுலோயா நகருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

டன்சினன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவில் 




டன்சினன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.





டன்சினன் நீர்வீழ்ச்சி 100 மீற்றர் அதாவது 328 அடி உயரமானது. சுற்றிலும் இயற்கை சூழ்ந்திருக்க கண்கொள்ளாக் காட்சியாக நம் பார்வைக்கு விருந்தளிக்கிறது டன்சினன் நீர்வீழ்ச்சி.







பூண்டுலோயா பிரதேசம் சுற்றிலும் தேயிலை மற்றும் காடுகளினால் சூழப்பட்ட மலைகளைக் கொண்டமைந்துள்ளது. இலங்கையில் இயற்கையின் கொடையை அள்ளிக்கொண்ட பிரதேசம் என்றால் அது பூண்டுலோயா தான். 

பூண்டுலோயா டன்சின் தோட்டத்தில் இருந்து பூண்டுலோயா வடக்கு தோட்டத்திற்கு செல்லும் வழி இயற்கை அழகு நிறைந்தது. அந்த அழகை நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே? 












பூண்டுலோயா வடக்கு தோட்டத்தில் மலையின் உச்சிப் பகுதியில் இரண்டு அருவிகள் உள்ளன. பூண்டுலோயா வடக்கு தோட்டத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு அருவி வீழ்வதை மட்டுமே காண முடியும். பூண்டுலோயா நகரில் இருந்து டன்சின் தோட்டத்துக்கு செல்லும் வழியில் மற்றுமோர் அருவி அந்த அருவிக்கு அருகில் இருந்து வீழ்வதை காணலாம். இரண்டு அருவிகளும் கீழே வீழும் காட்சி டன்சின் செல்லும் போது தான் பார்க்க முடியும். 










டன்சின் செல்லும் வழியில் இரு அருவிகளும் வீழும் காட்சி.

இந்த அருவிகளுக்குப் பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய காட்சி இது. 

பகல் உணவுக்குப் பின் பூண்டுலோயா வடக்கு தோட்டத்தை எனது நோக்கியா கேமராவால் சுற்றிப் பார்த்த காட்சிகளையும் கொஞ்சம் பாருங்களேன்.


















பூண்டுலோயா வடக்கு தோட்டத்தில் 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட லயன் குடியிருப்பு (மலையக மக்களுக்கு ஆங்கிலேயன் நிர்மாணித்துக் கொடுத்த தொடர் குடியிருப்பு) பகுதியின் முகப்புப் பகுதி இது 



மாலை 05.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு டன்சின் தோட்டம் நோக்கி விரைந்தோம். இருளில் எனது திறன்பேசியில் புகைப்படங்களைத் தெளிவாக எடுக்க முடியாதென்பதால் வேறு புகைப்படங்களை எடுக்கவில்லை. 


அன்றிரவு டன்சின் தோட்டத்தில் தான் தங்கினோம். அன்றிரவும் அடுத்த நாள் காலையும் டன்சின் தோட்டத்தில் மின்சாரம் இருக்கவில்லை. ஆகவே திறன்பேசி மின்கல இருப்பு இல்லாமல் தூங்கிப் போனது. ஆகவே அடுத்த நாள் பகல் அங்கிருந்து வரும்போதும் புகைப்படம் எடுக்கவியலாமல் போய்விட்டது. 

2018.05.29
செவ்வாய்க்கிழமை (பூரணை தினம்/ போயா தினம்) 

அடுத்த நாள் காலையில் டன்சின் தோட்டத்தில் இருந்து பூண்டுலோயா நகருக்கு பேரூந்தில் வந்தோம். அங்கு உணவகமொன்றில் சிற்றுண்டி சாப்பிட்டோம். பின்பு பூண்டுலோயா-தலவாக்கலை பேரூந்தில் ஏறி வட்டகொடையில் இறங்கி புகையிரத நிலையத்திற்கு வந்தோம். பின்பு அங்கிருந்து 12.35க்கு புறப்பட்ட கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் ஏறி கொட்டகலையில் வந்திறங்கி வீடு வந்தோம். 

மூன்று நாள் இயற்கை எழில்மிகு பிரதேசத்தில் தங்கியிருந்தது மிக்க மகிழ்ச்சி. நம்ம மலையகத்தில் இப்படி ஒரு இடமா என்று வியக்கும் அளவு கொள்ளை அழகு. நம்ம ஊருல இவ்வளவு அழகா? அட, அட... ம்ம்... இது மட்டும் இல்ல, இந்த இயற்கையின் அற்புதங்கள் இன்னும் இருக்கு. நாம தொடர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை அல்லவா?

அன்று எந்தவொரு புகைப்படமும் எடுக்க முடியாமல் போனது மிகுந்த மனவருத்தம் தான். என்ன செய்வது? இயற்கையும் மின்சார சபையும் சேர்ந்து செய்த சதியில் ஒரு அற்புதமான புகைப்படக் கலைஞனின் திறமையை உலகறிய செய்ய விடாமல் தடுத்து விட்டார்கள். பரவாயில்லை, இப்போதைக்கு இந்தப் புகைப்படங்களை விருதுக்கான பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இனி வருங்காலங்களில் நான் எடுக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். என்ன, சரிதானே?

#பூண்டுலோயா #மலையகம் #டன்சினன் #நீர்வீழ்ச்சி #Pundaluoya #Malaiyagam #UpCountry #Dunsinane #WaterFalls #DunsinaneWaterFalls #SriLanka #LK #Travelling #Travel #TravelLanka #SigaramBharathi ##சிகரம்பாரதி 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!