Share it

Saturday, 26 April 2014

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

வணக்கம் வாசகர்களே!

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது.

தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.

இது வெறும் 
புத்தகமல்ல.
இதைத் 
தொடுபவன் 
காதலனாகிறான் 
தொடுபவள் 
காதலியாகிறாள்.அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.


 

இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும் அமைந்திருக்கிறது. இது நூலுக்கு மேலும் மெருகூட்டும் ஒரு அம்சமாகக் காணப்படுகிறது. எல்லாக் கவிதைகளுமே ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கின்றன. எளிமையான வரிகள், இனிமையான வரிகள், மனதை மயக்கும் வரிகள் - எல்லாம் சேர்ந்தது தான் இந்த 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?'.

இனி உங்களுக்காக சில கவிதைகள் இதோ. முதலில் நூல் தலைப்பிற்குரிய கவிதையைப் பார்க்கலாம்.

எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே...
வெட்கத்தைக் கேட்டால் 
என்ன  தருவாய்?

காதலியைப் பார்த்து காதலன் வினவுவதாக அமைந்திருக்கும் இந்தக் கவிதையைப் பார்க்கும் போது புனைவுகளற்ற இந்த வரிகளுக்குள் பல அர்த்தங்கள் ஒளிந்திருப்பதைக் காணலாம். இதைப் போன்றே இன்னும் பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் சில வரிசைக்கிரமமாய் இதோ:

காதலியை நோக்கி காதலன்:

1. உன்னை இருட்டில் நிற்க வைத்து 
தீர்த்துக்கொள்ள வேண்டும்....
வெளிச்சம் என்பது 
உன்னிடமிருந்துதான் வீசிக்கொண்டிருக்கிறதா 
என்கிற சந்தேகத்தை.

ஆனால் 
உன்னை அருகில் வைத்துக்கொண்டு 
இருட்டை நான் எங்கு தேடுவேன்?


2. நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது 
நீ தானா?

தொடப்போனால் சிணுங்குவதில்லையே 
நீயா

முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே 
நீயா

கவிதை சொன்னால் நெஞ்சில் 
சாய்வதில்லையே 
நீயா

எவ்வளவு அருகிலிருந்தும் அந்த வாசனை 
இல்லையே நீயா 

 வேண்டாம் 
நீயே வைத்துக்கொள்.

புகைப்படத்திலெல்லாம் நீ 
இருக்க முடியாது.

3. உன் மார்புகளுக்கு நடுவே
படுத்துக் கொள்கிற மாதிரி
என்னை எப்படியாவது
சின்னவனாய் ஆக்கிவிடேன்!

 

காதலனை நோக்கி காதலி: 

4. உன்னிடம் 
எந்தக் கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது 
எனக்கு மகிழ்ச்சிதான் 
எனினும் 
வருத்தமாய் இருக்கிறது 

நான் சொல்லி 
நீ விட 
ஒரு கெட்ட பழக்கம் கூட 
இல்லையே உன்னிடம்.


5. என்ன வேதனை 
என் இரண்டு இதழ்களைக் கொண்டு 
உனக்கு ஒரு 
முத்தம் தானே தர முடிகிறது?

                      இவ்வாறு இன்னும் பல கவிதைகள்   இந்நூலுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. முக்கியமாக உங்கள் காதலிக்கு பரிசளிக்கவும் காதலர் தின வாழ்த்தட்டையில் எழுத கவிதைகளை சுட்டுக் கொள்வதற்கும் இது மிகவும் ஏற்ற நூல். கவிதைகளுடன் ஆங்காங்கே அழகிய ஒளிப்படங்களும் [Photos ] இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. படிக்கப் படிக்கப் பரவசம் தரும் இந்த நூலை நீங்களும் ஒரு தடவை வாங்கி படித்துத்தான் பாருங்களேன்!

பி.கு:
இது எனது 99 வது பதிவு. அடுத்தது நூறு தான். நூறாவது பதிவு ஒரு விசேடமான பதிவாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். காலத்தின் கட்டாயம் எப்படியோ?

இப்பதிவு தூறல்கள் வலைத்தளத்தில் எழுதுவதற்காக 2011 ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டது. ஆனால் அப்போது வெளியிட முடியவில்லை. இப்போது சிறிதும் மாற்றமின்றி இங்கு வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து இரசியுங்கள் .

இப்படிக்கு 
என்றும் அன்புடன்,

சிகரம்பாரதி. 

Saturday, 19 April 2014

#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

                சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

 

                          கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. வேலைச் சுமை, சம்பளம் போதவில்லை, படிக்க நேரமில்லை, நல்ல வீடு இல்லை, உறவினர் தொல்லை , புரியாத மொழியினருடன் வேலை, தொழில் மாற்றம், பிறப்பு, இறப்பு என நம்மைச் சுற்றிச் சுழலும் பிரச்சினைகளின் பட்டியலுக்கு முடிவே இல்லை. இத்தனைக்கும் மத்தியில் 100 மகிழ்ச்சியான நாட்கள் - சாத்தியம் தானா?


                  இன்றைய சூழலில் பணத்தை நோக்கிய தேடல் அதிகமாகியிருக்கிறது. மடிக்கணினி, தொடுதிரை கைப்பேசி, தனி வீடு, திருமணம், முதலீடு, கல்வி மற்றும் இதர தேவைகள் என பணத்தின் தேவை ஒவ்வொருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது. காலை எட்டு மணிக்கு வேலைக்கு சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் தொழில் எல்லோருக்கும் அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் சிலருக்கு அதில் வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே இரவு வரை மேலதிக நேரக் கடமை, இரவு வேலை முறைமை [Night Shift], பகுதி நேர வேலை என பணத்தை நோக்கிய தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கான பணத்தின் தேவை முடிந்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபடுவதில்லை.

 

            நகைச்சுவையாக சொல்வது போல, 'அம்பது வயசு வரைக்கும் கஷ்டப்படுவீங்க - அப்புறம் - அதுவே பழகிடும்' மாதிரியே இந்த பணத்தின் தேடலுக்கு பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அப்புறம்? அவர்களுக்கான பணத்தின் தேவை விரிவடைந்து கொண்டே போகும், அவர்களும் ஒரு நாளும் அதிலிருந்து மீளப்போவதில்லை.


       நம்மில் பலருக்கு பிரச்சினைகளை பிரச்சினையில்லாமல் கையாண்டு பழக்கம் இல்லை. கடுகளவு சிக்கலைக் கண்டாலும் மலையே இடிந்துவிட்டது போல் கலங்கிப் போய்விடுவார்கள். தனக்கு வந்தால் தெரியும் தலையிடியும் காய்ச்சலும் என்பீர்கள். உண்மைதான். ஆனாலும் பிரச்சினைகளை திறமையாகக் கையாளத் தெரிந்தவரா நீங்கள்? அப்படியானால் இந்த #100 மகிழ்ச்சியான நாட்கள் சவாலில் பங்கேற்க நீங்கள் தகுதியானவர் தான்.

 

அவ்வாறு இல்லையா? கவலை வேண்டாம். தகுதியை வளர்த்துக் கொண்டு சவாலில் களம் இறங்குங்கள். இந்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டால் இந்த உலகில் உங்களால் எதையும் இலகுவாகச் சாதிக்க முடியும்.


முதலில் நமது தேவைகளை இனம் காண வேண்டும். நமக்கான இலக்குகளை திட்டமிட வேண்டும். அடுத்து நமது சிக்கல்களை இனம் காண வேண்டும். அதற்கான தீர்வுகளை அடையாளப்படுத்த வேண்டும். நாளாந்த, வாராந்த, மாதாந்த, வருடாந்த நடவடிக்கைகளை சரிவரத் திட்டமிட வேண்டும். நம்பிக்கையானவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நமது சுக துக்கங்களைப் பரிமாறிக்கொள்ள காதலி / மனைவி, நண்பன், புத்தகம், எழுத்து என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இடையறாத முயற்சியும் பயிற்சியும் அவசியம் தேவை. மிக முக்கியமாக உங்களுக்கான ஓய்வு / பொழுதுபோக்கு நேரத்தை தவறாமல் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இனி பாருங்கள். 100 நாட்கள் மட்டுமல்ல, வாழ்க்கையே மகிழ்ச்சியாக அமையும்.

இப்படிக்கு,
அன்புடன் 

சிகரம்பாரதி.

Thursday, 17 April 2014

கந்தசாமியும் சுந்தரமும் - 02

"கந்தசாமி அண்ணே.. கந்தசாமி அண்ணே..." என்று தன்னை அழைக்கும் குரல் கேட்க தொலைக்காட்சியிலிருந்து தன் கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார் கந்தசாமி. வேறு யார்? நம்ம சுந்தரம் தான்.

"வாப்பா சுந்தரம், உட்கார்."

"டிவி ல சித்திரைக் கொண்டாட்டம் இன்னும் முடியலையோ?" - ஆசனத்தில் அமர்ந்தபடியே கேட்டார் சுந்தரம்."அதில்லப்பா.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் கூத்துக்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்."

"அதுவா? இந்த உள்ளூர் அலைவரிசைகள் போதாதுன்னு போன வாரம் நம்ம பிள்ளைங்க Sun Direct ஆன்டனாவை வாங்கிப் போட்டாங்க. போட்டு என்ன பிரயோசனம்? எல்லாம் தேர்தல் மயமா இருக்கு."

"உண்மை தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போய்க்கிட்டிருந்த நேரத்துல எல்லாம் இந்த பொல்லாத தேர்தல் கூத்துகள் தான் போகுது சுந்தரம்."

"அது சரிண்ணே... 2014 ஆம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்கன்னு நினைக்கிறீங்க?"

"யாரப்பா சொல்றது? மக்கள் அறிவு பூர்வமா மட்டும் வாக்களிக்கறவங்களா இருந்தா உறுதியா சொல்லலாம். ஆனா நிலைமை அப்படி இல்லையே....?"

"ஆமாண்ணே... தமிழகத்துல அ.இ.அ.தி.மு.க இல்லைன்னா தி.மு.க, மத்தியில காங்கிரஸ் இல்லைன்னா பா.ஜ.க தானே?"

"சரியா சொன்ன. ஜெயலலிதா, கருணாநிதி ரெண்டு பேரும் தாங்க செஞ்ச சாதனைப் பட்டியலையும் மத்தவங்களைப் பத்தின குற்றப் பட்டியலையும் வாசிக்கிறாங்க."

"விஜயகாந்த் இவங்க ரெண்டு பேரையும் தாக்குறாரு. கருணாநிதியும் ஜெயலலிதாவும் விஜயகாந்த், வை.கோ, காங்கிரஸ், பா.ஜ.க எல்லாரையும் தாக்குறாங்க."


"மொத்தத்துல ஒரு சொற்போருக்கான தேர்தல் களம் இதுன்னு சொல்லலாமில்லையா சுந்தரம்?"

"ம்ம்... வாய்ப்பேச்சு தான் ஜனநாயகம்ன்னு மக்கள் தவறா நினைச்சுகிட்டிருக்காங்க ."

"வேட்பாளர்களைப் பொறுத்தவரை மக்கள் ஒரு வாக்களிக்கும் இயந்திரம். அவ்வளவு தான்."

"ஆமாண்ணே... மக்களைக் கவர திரையுலகப் பிரபலங்கள் கூடஇப்போ பிரச்சாரம் செய்றாங்களே?"

"திண்டுக்கல் லியோனி, ஆனந்தராஜ், ராமராஜன், செந்தில், குண்டு கல்யாணம், வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு."

"ம்ம்.. விஜயகாந்த் பேசினதுல எனக்கு ஒன்னு மட்டும் தாண்ணே எனக்கு பிடிச்சிருந்தது."

"என்னப்பா அது?"

"ஜெயலலிதா ஹெலிகாப்டர்ல பறந்து வரும்போதே அமைச்சர்கள் எல்லாம் குனிந்து வணங்குகிறார்களே, ஏன் தெரியுமா? தரையிறங்கும் போது கண்ணுல தூசி விழுந்துரக் கூடாதுன்னு தான்னு சொன்னாரே?"

"அதை மட்டுமா சொன்னார்? வணக்கம் வைக்கிறதை நடித்தும் காட்டினாரே?"


"இந்த நடிகர்கள் பிரச்சாரம் செய்கிற மாதிரியே கலைக்குழுக்களின் ஆடல் பாடல் நிகழ்சிகளும் இடம் பெறுகிறதாமே ?"

"என்னமோப்பா, ஒரு திருவிழா போல இந்தியாவே தேர்தலால் களை கட்டியிருக்கிறது."

"முடிவுகள் தான் மக்கள் மனதில் யாருடைய கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தின என்பதை உணர்த்தும்."

"அதுவும் சரிதான் சுந்தரம்."

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts