Share it

Monday, 30 April 2018

டுவிட்டர் @newsigaram - 11

சமூக வலைத்தள ஊடகமான டுவிட்டரில் தற்போது அதிகளவானோர் ஈடுபாடு காட்டி வருகின்றனர். பிரபலங்கள் எல்லாம் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பதும் முக்கியமான விடயங்கள் உடனடிப் பிரபலமாவதும் இதற்குக் காரணம். டுவிட்டரும் அதிகளவான வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சரி, இப்போது நாம் நமது கண்ணில் பட்ட சில அற்புதமான டுவிட்டுகளை இங்கே பார்ப்போமா?


டுவிட்டர் கடலில் கொட்டிக் கிடக்கும் ஆயிரமாயிரம் டுவிட்டுக்களில் இன்னும் சில முத்துக்களைத் தேடி எடுத்துக் கொண்டு மீண்டும் உங்களைச் சந்திப்போம்!  

#டுவிட்டர் #சிகரம் #twitter #twitterATnewsigaram  @manipmp @Inban_Ofl @MJ_twets @Vettaian @RoShini_MK @ak47ask  @NKKannan1 
@balu_gs @mohanramko @sudhansts @mokkasaami

Wednesday, 25 April 2018

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். 'வேர்களைத் தேடி' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக: சிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி?
குணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், திறன்பேசி என பேசுவதைப்பார்த்து வியந்த, சிரித்தவர்கள் இப்போது அவர்களே அச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு ஆசிரியர்களுடன் நான் நின்றால் பிற ஆசிரியர்களிடம் குட் மார்னிங் என்று கூறும் மாணவர்கள் என்னைப் பார்த்து காலை வணக்கம் ஐயா என்றுதான் கூறுவார்கள். கலைச்சொல்லாக்கங்களைப் பயன்படுத்துவதில் தமிழ் விக்சனரி பெரும் உதவியாக உள்ளது.

https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்  - தற்பொழுதுள்ள சொற்கள் = 3,54,597

சிகரம் : பேஸ்புக், வாடஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா?

குணசீலன் : விக்சனரி போன்ற பல தளங்கள் மட்டுமின்றி இணையத் தமிழ் மாநாடுகளிலும் கலைச்சொல்லாக்கங்கள் குறித்த விவாதங்கள் நடந்துதான் வருகின்றன. இருந்தாலும் முகநூல் போன்ற பல கலைச் சொல்லாக்கங்களை தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகப் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்வது தவறு என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் உலவுவது எப்படி சரியாகும்? அது அவர்களது விருப்பம் என்றால் இது தமிழுணர்வாளர்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே?

சிகரம் : பெயர்ச் சொற்கள் ஒரு மனிதனை, ஒரு பொருளை அல்லது ஏதேனும் ஒன்றை அடையாளப்படுத்துபவை. அதனை மொழிக்கு ஒரு பெயரில் வைத்தால் சிக்கல் அல்லவா ஏற்படும்? பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா? சிகரம் என்னும் தமிழ் இணையத்தளத்தை எந்த மொழியிலும் சிகரம் என்றே அழைக்க வேண்டும். அது போலத்தானே பேஸ்புக்கும் வாட்ஸப்பும்?

குணசீலன் : தங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே. ஆனால் எனது பார்வை என்னவென்றால் ஆங்கிலத்திலிருக்கும் வார்த்தைகள் யாவும் அம்மொழிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. கிரேக்கம், இலத்தீன் என பலமொழிகளின் கலவையே அம்மொழி. ஆனால் அம்மொழி இன்று உலகையே ஆள்கிறது. இன்றைய நிலையில் அறிவு மனித இனத்தின் பொதுவான சொத்து. அப்படியிருக்கும்போது எந்தவொரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை அவரவர் தாய்மொழியிலேயே பயன்படுத்துவது என்பது மொழிசார்ந்த உணர்வு. இன்று சூப்பர் கம்யுட்டர்களை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அந்நாடு அமொிக்காவையே முந்திவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் சீனர்களின் மொழி உணர்வு. கலைச்சொல்லாக்கத்தின் தொடக்கநிலையிலிருக்கும் நாம் இதுபோன்ற பல தடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும். 

முதலில் எந்வொரு அறிவியல் துறையாக இருந்தாலும் அதனை தமிழில் புரியவைக்க கலைச்சொல்லாக்கங்கள் அடிப்படையாக அமைகின்றன. எந்த மொழிச்சொல்லாக இருந்தாலும் அச்சொல்லின் மூலச் சொல் எது என்று அறிவதற்கே வேர்ச்சொல் ஆய்வு என்ற துறை உள்ளது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல்களை வாசித்தால் நமக்கு ஒன்று புரியும். எந்தவொரு அறிவியல் மரபுகளையும் நாம் அழகுத் தமிழில் விளக்கமுடியும் என்பதே அது. கணினிக்கு 01 என்பதுதானே மொழி. அப்படியிருக்க அதை அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்த இயலவில்லை...? என்பதே எனதுகேள்வியாக உள்ளது. தங்கள் கேள்வி கலைச்சொல்லாக்க நெறிமுறை சார்ந்தது. எனது கருத்தோ தமிழ்மொழி சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கலைச்சொல்லாக்கத்தின் தற்காலத் தேவை குறித்தது. கூகுளில் பணியாற்றும் சுந்தர் பிச்சை போல இன்னும் மிகச்சிறந்த அறிவாளர்கள் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவு ஆங்கிலமொழியைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி. இந்த நிலையும் மாறும். ஒருநாள் கலைச்சொல்லாக் வரலாற்றில் இதுபோன்ற கருத்தாடல்களும் வாசிக்கப்படும்.

சிகரம் : நல்லது. எனது சொந்தக் கருத்தை இந்த இடத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். எனது கருத்தானது பேஸ்புக் என்னும் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால் பேஸ்புக்கின் டைம்லைன், ஸ்டேட்டஸ், லைக் போன்ற செயல்பாடுகளை / பதங்களை தமிழ்ப்படுத்தினால் தவறில்லை. பேஸ்புக் என்பதை தமிழ்ப்படுத்தினால் இன்னும் நோக்கியா, சோனி, மைக்ரோசாப்ட் என்று நீளும் ஆயிரமாயிரம் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்ய நேரும். பின் பெயர்ச் சொற்களை கலைச்சொல்லாக்கம் செய்வது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் பெயர்ச் சொல்லுக்கு அதன் மதிப்பை வழங்குவது தான் நியாயம். இது எனது கருத்து மட்டுமே. நேர்காணலோடு தொடர்பில்லை.

சிகரம் : அரசியல் குறித்த தங்கள் பார்வை என்ன?

குணசீலன் : 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை என்று வைக்கப் படும்' என்றார் வள்ளுவர். ஒருகாலத்தில் சேவையாகக் கருதப்பட்ட அரசியல் இன்று வணிகமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசங்களுக்கு விலைபோவதும் இன்றைய மக்களின் இயல்பாகவுள்ளது.

சிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது?

குணசீலன் : ஊடகங்களின் வளர்ச்சியால்தான் மொழித்தாக்கம் மிகுந்து வருகிறது நண்பரே.

சிகரம் : இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் தமிழை ஆங்கிலம் கலந்து பயன்படுத்தும் போக்கு மிக அதிகமாக உள்ளதே?

குணசீலன் : ஆம் நண்பரே. கவிஞர் காசியானந்தன் அவர்கள் சொல்வது போல இது லன்டன் டங் என்னும் நோய். அவர்கள் பேசுவது தமிங்கிலம்.

மொழியை விடவும் மேலானது மொழி உணர்வு. எனவே தமிழை விடவும் தலையாயது தமிழுணர்வு. மொழி உணர்வு இறந்த தேசத்தில் மொழியும் இறந்துபடும். தமிழுணர்வு இழக்கும் நாட்டில் மிஞ்சுவது தமிழின் சவமே. மொழி உணர்வைக் கழித்துவிட்டு மிச்ச உணர்வுகளை ஊட்டுவது பிணத்துக்கு ஏற்றும் ஊசி மருந்துகளே. மொழி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன அடிமைகளாவது இயல்பு. தமிழுரிமை பறிகொடுத்த மக்களைத் தளைப்படுத்துவது எளிது.

சிகரம் : உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன?

குணசீலன்: கணினியை முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தவேண்டும். இயங்குதளம் தொடங்கி மென்பொருள் வரை. காலத்துக்கு ஏற்ற எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு என்னால் இயன்றவை தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள் உருவாக்குதல், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துதல் ஆகியன என் அடிப்படையான இலக்கு. திருக்குறளின் பெருமைகளை உரையாசிரியர்களைக் கடந்து குறளின் மெய்யான பொருளை உணரும் நுட்பத்தை என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு.

சிகரம் : இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளிலேயே இணைய முகவரியைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தனர். ஆனால் அறிமுகக் கட்டத்தைத் தாண்டி உலக நாடுகளில் அமுல்படுத்தப்படவோ அல்லது அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படவோ இல்லையே? இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?குணசீலன் : இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத்தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் (IP Address) உலாவிக்குக் கிடைக்கும். இது இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP – Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல்கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப்பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இது ஒரு தொடர் செயல்பாடு.

இந்த நுட்பியல் பின்புலத்தில் இப்போது தங்கள் சிகரம் தளத்தை தேடவேண்டுமானால் https://www.sigaram.co என்றுதான் தேடவேண்டும் என்று இல்லையே. தற்போது சிகரம் என்று தேடினாலும் கிடைக்கும். ஆனால் இதில் என்ன நடைமுறைச் சிக்கல் என்றால், எது தாங்கள் தேடும் சிகரம்? அது திரைப்படமா, இயற்கைவளமா? இணையதளமா? என்பதுதான். இதற்குத்தான் இப்போது கணினிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் போதிக்கப்பட்டுவருகிறது. ஒருங்குறி என்னும் எழுத்துமுறை கணினியுடன் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இணையதளங்களுக்கான பெயர்களை தமிழிலேயே வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றே கருதுகிறேன்.

சிகரம் : நமது எல்லாத் தேவைகளும் இணையத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளங்கள் மீதான வைரஸ் தாக்குதல்கள் தனி மனித பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலல்லவா? இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நம்பிக்கையோடு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும்?

குணசீலன் : ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்தமூல மென்பொருள்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. வைரஸ் எனப்படும் நச்சுநிரல்கள் இவற்றில் பரவுவதில்லை. இணையவெளியில் இன்று தனிஉரிமை என்பதும், தகவல் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ப நுட்பங்களை சராசரி மனிதர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்துகொள்ள முயலாதவர்கள் ஏமாற்றமடைவதும், பாதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும். அல்லன செத்து மடியும். இது இணையஉலகத்துக்கும் ஏற்புடையதாகத் தான் உள்ளது.

சிகரம் : திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? அதன் பயன்பாடுகள் யாவை?

குணசீலன் : திறந்த மூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள். அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.


மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்குவது இதன் தனிச்சிறப்பாக அமைகிறது. இம்மென்பொருள்கள் பற்றியும் இதன் பயன்பாடுகள்பற்றியும் யுடியுப்பிலும், விக்கிப்பீடியாவிலும் நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

சிகரம் : "தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்" - இது சிகரம் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் (எனது பதினாறாம் வயதில்) சிகரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய நோக்கம். இதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் நிகழ்த்துவது சாத்தியமா?

குணசீலன் : நுட்பியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை தகவமைத்துக்கொள்ள முதலில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விமுறையை மாற்றவேண்டும். உலகத் தரத்திலான கல்வியை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு திறனறிந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். தமிழ் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் பங்காற்றவேண்டும். கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழ்ச் சமூகத்துக்கு சவாலாக உள்ளது. அறிவு எந்தமொழிக்கும் சொந்தமானதல்ல, மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். பொறியியல் படிப்புக்கு இன்றைய நிலைதான் கலை அறிவியல் படிப்புக்கு நாளை ஏற்படும். இன்று தேவை இளம் விஞ்ஞானிகள் மட்டுமல்லை, இளம் விவசாயிகளும்தான். கலாம் விதைத்த விதைகள் அறுவடையாகும் காலம் 2020. நம்பிக்கையோடு நடைபயில்வோம். இன்றைய இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல. பயன்படுத்தப்படாதவர்களே. இருள் இருள் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட நாம் விளக்கேற்றிவைப்போம்.

சிகரம் : உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

குணசீலன் : தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், கல்கி, சுஜாதா, மு.வரதராசனா், கி.ராஜநாராயணன், அறிஞர் அண்ணா, இறையன்பு, கண்ணதாசன், வைரமுத்து, இராஜேஷ்குமார்.

சிகரம் : பிடித்த புத்தகங்கள்?

குணசீலன் : திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல்

சிகரம் : சஞ்சிகைகள் வாசிப்பதுண்டா?

குணசீலன் : தமிழ்க் கம்யுட்டர், வளர்தொழில், தடம் ஆகியவை தொடர்ந்து வாசிப்பதுண்டு. இணையத்தில் முத்துக்கமலம், இனம், பதிவுகள், வரலாறு வாசிப்பது வழக்கம்

சிகரம் : தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்கள் பலர் இன்னமும் அடிப்படைத் தொழிநுட்ப வசதிகளையே பெற்றுக் கொள்ளாதிருக்கும் நிலையில் முழுமையான தொழிநுட்ப அடிப்படையிலான தினசரி வாழ்க்கை சாத்தியமாகுமா?

குணசீலன் : இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஜி சேவை அறிமுகமாகவுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டில் பல தொழில்நுட்ப வசதிகளை தனியார்தான் வழங்கி வருகிறது. bsnl என்னும் அரசு சேவையகம் மாட்டுவண்டி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.

இன்றைய தனியார் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ரோபோட்டிக் பொறியியல் நுட்பம் கற்றுத்தரப் படுகிறது. ஆனால் அரசுக் கல்லூரியில் கணினிக்கல்வி என்பது போதுமானதாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்கும் வரை சராசரி மக்களுக்கும் தொழில்நுட்ப வசதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.சிகரம் : சிகரம் இணையத்தளம் குறித்த தங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா?

குணசீலன் : சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்குச் சமமானது. 'தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!' என்ற தங்கள் நோக்கும், அதற்கான தங்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. தெளிவான நோக்குடன் சரியான பாதையில் செல்லும் இந்த இணையம் எதிர்காலத்தில் திட்டமிட்ட இலக்குகளை அடையும் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.

சிகரம் : சிகரம் இணையத்தளத்தின் குறைபாடுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

குணசீலன் : குறைபாடு என்றும் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் தாங்கள் கேட்பதால்... பிற இணையதளங்களில் காணக்கிடைக்கும் சராசரி செய்திகளும் தங்கள் தளத்தில் கிடைப்பதை குறையாகக் கருதுகிறேன். சிகரம் தளம் சென்றால் புதிய செய்தி பிற இணையதளங்களில் காணக்கிடைக்காத செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்தைப் பார்வைாயாளர்களிடம் உருவாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்

சிகரம் : இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி?

குணசீலன் : சமூகத் தளங்களின் வழியாக தமிழ் மொழியை வளர்ப்பதுடன், சமூக மாற்றத்துக்கும் வித்திடமுடியும் என்ற கருத்தையும் சமூகத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற சிந்தனையையும் பதிவுசெய்யவிரும்புகிறேன்.

சிகரம் இணையத்தளத்துடனான நேர்காணலுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி பொறுமையாகவும் முழுமையாகவும் திறமையாகவும் பதிலளித்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். 

093/2018/SIGARAMCO 
2018/04/25
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP 
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம் 
 

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 03

வாரம் 02 - 2018/04/21 - 2018/04/27

ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் 

அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  
போட்டி - 06 | வெற்றி - 04 | தோல்வி - 02 | புள்ளி - 08 | சராசரி +0.492 
சென்னை சூப்பர் கிங்ஸ் 
போட்டி - 05 | வெற்றி - 04 | தோல்வி - 01 | புள்ளி - 08 | சராசரி +0.742 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
போட்டி - 06 | வெற்றி - 05 | தோல்வி - 01 | புள்ளி - 10 சராசரி +0.394
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
போட்டி - 06 | வெற்றி - 03 | தோல்வி - 03 | புள்ளி - 06 | சராசரி +0.572
ராஜஸ்தான் ராயல்ஸ் 
போட்டி - 06 | வெற்றி - 03 | தோல்வி - 03 | புள்ளி - 06 | சராசரி -0.801
மும்பை இந்தியன்ஸ்        
போட்டி - 06 | வெற்றி - 01 | தோல்வி - 05 | புள்ளி - 02 | சராசரி +0.008
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
போட்டி - 05 | வெற்றி - 02 | தோல்வி - 03 | புள்ளி - 04 | சராசரி -0.486 
டெல்லி டேர்டெவில்ஸ்     
போட்டி - 06 | வெற்றி - 01 | தோல்வி - 05 | புள்ளி - 02 | சராசரி -1.097

ஐ.பி.எல் 2018 ஆட்ட விவரங்கள் 

ஆட்டம் - 18 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் 09 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வர்த் லுவிஸ் முறை)

ஆட்டம் - 19 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ்   
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 06 விக்கெட்டுகளால் வெற்றி 

ஆட்டம் - 20
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  
சென்னை சூப்பர் கிங்ஸ் 04 விக்கெட்டுகளால் வெற்றி 

ஆட்டம் - 21
ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   
ராஜஸ்தான் ராயல்ஸ் 03 விக்கெட்டுகளால் வெற்றி 

ஆட்டம் - 22
டெல்லி டேர்டெவில்ஸ் எதிர் கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் 04 விக்கெட்டுகளால் வெற்றி 

ஆட்டம் - 23
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் 
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ஓட்டங்களால் வெற்றி ஆட்டம் - 24 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் 

#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #WhistlePodu #ஐபிஎல் #ஐபிஎல்2018 #ipllive #pointstable #iplschedule 

ஐ.பி.எல் - சிகரம் பதிவுகள்: Tuesday, 24 April 2018

ஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித்தது பஞ்சாப்!

வணக்கம் நண்பர்களே. ஐபிஎல் 2018 மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்திலும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. 

நேற்று ஐபிஎல்2018 இன் 22வது போட்டியாக இடம்பெற்ற கிங்ஸ் இலவன் பஞ்சாப் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்தது. ட்ரென்ட் போல்ட் 02 விக்கெட்டுகள், அவேஷ் கான் 02 விக்கெட்டுகள் மற்றும் லியாம் ப்ளன்கட் 03 விக்கெட்டுகள் என சிறப்பாகப் பந்து வீசிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் இலவன் பஞ்சாப்பை 143 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. லோகேஷ் ராகுல் 23, மாயங்க் அகர்வால் 21, கருண் நாயர் 34 மற்றும் டேவிட் மில்லர் 26 என வீரர்களின் பங்களிப்புடன் 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது. 

144 என்னும் இலகுவான ஓட்ட இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் 139 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்தி வெற்றியைத் தனதாக்கியது. 

அங்கித் ராஜ்பூட் 02, சரண் 01, அன்றூ டை 02 மற்றும் முஜிபுர் ரஹ்மான் 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெல்லி சார்பில் ஷ்ரேயஸ் அய்யர் 57 ஓட்டங்களைப் பெற்றபோதும் அணி தோல்வியைத் தழுவியது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 06 போட்டிகளில் 05 வெற்றி 01  தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 06 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

இன்று (24) மும்பை இந்தியன்ஸ் எதிர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியும் நாளை (25) சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன. 

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #கிரிக்கெட் #விளையாட்டு #சிகரம் #IPL #IPL2018 #VIVOIPL #CRICKET #DDvKXIP #MIvSRH #CSKvRCB

Monday, 23 April 2018

எங்கள் ஔவை!

ஒன்றல்ல, இரண்டல்ல
பலவானவர் ஔவை.
ஒவ்வொரு காலமும்
புதிரானவர் ஔவை.
முத்தமிழ் கவியில்
முதலானவர் ஔவை.
முழுமதி முகத்தினிற்
திருவானவர் ஔவை!

செந்தமிழ் மொழியின்
சிறப்பானவர் ஔவை,
சீர்மிகுத் தமிழில்
கனிவானவர் ஔவை,
கம்பன் வீட்டில்
கட்டுத்தறிதான் கவிபாடும்-ஔவை
யென்றால் அணுக்களும்
அஞ்சி வாய்மூடும்!

மூதுரையின் மூதாட்டி
எங்கள் ஔவை,
நன்னூல் நான்மணியினிற்
 கோவை அவர்,
பிங்கல நிகண்டின்
இலக்கணமும் அவர்!
ஆத்தியைச் சூடியே
அறம்வளர்த்த அன்னையவர்!

அதியனின் அரிய
நெல்லிக்கனி ஔவை,
பாரிமகளிரை மணம்
செய்வித்த மாதரசியவர்,
நெறிபல உரைத்துக்
கவிபல படைத்து
போர்களைத் தடுக்கும்
புலவரு மவர்!

கம்பனை கதறிட
செய்தவர் ஔவை-பதில்
கவிகளால் பதறிட
செய்தவர் ஔவை,
பக்தியில் திழைத்த
ஞானப்பழமு மவர்,
தமிழ்சக்தியாய் திகழ்ந்த
ஞானசெருக்கு மவர்!மறத்தமிழ் புறத்தையும்
உரைத்தார்  மனங்களின்
உணர்வில் காதல்
அகத்தையும் வடித்தார்,
வள்ளுவன் குறளினை
அணுவென குறைத்தார்,
சமகால புலவர்களையும்
கவிதையில் வடித்தார்!

அகத்திலும் புறத்திலும்
உணர்வினை வடித்தார்,
நற்றிணைக் குறுந்தொகையினை
நயம்பட உரைத்தார்!
கிழவுருவம் படைத்த
அரம்பையு மிவர்,
இவருக்கு இணையாக
தமிழ்பாட ஒருவருமிலர்!

பதிவர் : கவின்மொழிவர்மன்

#தமிழ் #கவிதை #ஔவை #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #sigaram #sigaramco #சிகரம்

எங்கிருந்து வந்தாய்?

எங்கிருந்து என்னுள் வந்தாய்!
கண்ணே யெந்தன்
கனவுக்குள் வந்தாயா?
எந்தன் கண்களாக வந்தாயா?

கோடையில்கூட தேகம்
 குறுக்குகிறேன்!
பெண்ணே தென்றலாய்
 வந்தாயா-குளிர் நீராய்
 நனைத்தாயா?

எந்தன் உயிருக்குள்
 எப்படிநீ நுழைந்தாய்!
அன்பே உதிரத்தில் கலந்தாயா?
எந்தன் உணர்வினில்
கலந்தாயா!எந்தன் மழலையின்
 நினைவு என்னிடத்தில்
உயிரே தாயென வந்தாயா-மனக்
கருவினில் சுமந்தாயா?

அயர்ந்து நிற்கிறேன்
உனைக்கண்டு!
மலரே சிலையென
 வந்தாயா?
சித்திரமாய் வந்தாயா?

விழிநீர் சொரிகிறேன்
உந்தன் அதட்டல்களில்
தாயே குருவென
வத்தாயா-எந்தன்
குருதியாய் வந்தாயா?

வேண்டிடும் வரங்கள்
 நீதந்தாய்!
கனிவே எந்தன்
இறையென வந்தாயா
இவன் இடமென
 வந்தாயா?

பதிவர் : கவின்மொழிவர்மன்

#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco

கற்றோரை மதி!

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்" என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்" என்று உடனடியாகப் பதில் வந்தது.இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்... பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்.

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்...

கற்றவரை பின் தொடருங்கள்...

வாழ்வின் அர்த்தம் விளங்கும்...

படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தவர் : முனீஸ்வரன்

#முனீஸ்வரன் #படித்ததில்பிடித்தது #சிகரம் #SIGARAM #SIGARAMCO #MUNEESWARAN

நுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ஓகே கூகுள் | கூகுள் பிக்ஸல்

உலகம் என்று தோன்றியதோ அன்றே தொழிநுட்பமும் தோன்றிவிட்டது. தானாகக் கீழே விழுந்த பழங்களை எடுத்து உண்ட மனிதன் மரத்தில் ஏறிக் கனியைப் பறித்து உண்டது தொழிநுட்ப முன்னேற்றம் தான். கல்லில் இருந்து நெருப்பை உண்டாக்கிய மனிதன் விறகைக் கொண்டு சமைத்ததும் தொழிநுட்ப முன்னேற்றம் தான். ஓலைச்சுவடியில் எழுதிய காலம் முதல் தாள், தட்டச்சு இயந்திரம், கணினி, வாசிப்பு கருவி (கிண்டில் போல) வரை எல்லாம் தொழிநுட்ப வளர்ச்சி தான். இப்படியாக காலத்துக்குக் காலம் தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழிநுட்ப வளர்ச்சி எப்போதும் தடைப்படுவதில்லை. யாராலும் தடை செய்யவும் முடியாது. ஆகவே நாம் நாள்தோறும் தொழிநுட்ப உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. 

எதிர்காலத்தில் பணப்பரிமாற்றம் இணையம் மூலமாகவே நடைபெறும். குறுஞ்செய்திகள் இணையவழிக்கு மாறும். எல்லோர் கையிலும் திறன்பேசி இருக்கும். எழுத்தறிவில்லாதவரும் குரல்வழி திறன்பேசியையும் கணினியையும் தன் தாய் மொழியிலேயே பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். சரி, இன்றைய தொழிநுட்பச் செய்திகளைப் பார்ப்போமா?

கூகுளின் Chat, ஆப்பிளுக்குப் போட்டி!

ஆப்பிள் ஐபோன் IMessage குறித்து அறிந்திருப்பீர்கள். அதற்குப் போட்டியாக விரைவில் கூகுள் களமிறக்கவிருக்கும் வசதிதான் இந்த Chat. நீங்கள் தினமும் உங்கள் கைப்பேசியில் இருந்து யாருக்கேனும் குறுஞ்செய்தி அனுப்புவீர்கள். குரல் அழைப்புகளை எடுத்து உரையாடுவீர்கள். இந்த செயல்கள் GSM தொழிநுட்பத்தின் மூலம் நடைபெறுகின்றன. இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் ஊடாகத்தான் குறுஞ்செய்திகளும் குரல் அழைப்புகளும் பரிமாற்றப்படுகின்றன.நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி பெறுநருக்குக் கிடைத்ததா என அறிய முடியும். ஆனால் அதைப் பெறுநர் வாசித்தாரா என அறிய முடியாது. புகைப்படங்களைப் பரிமாற முடியாது. இதற்கெல்லாம் தீர்வைத் தந்தது இணையம். ஆனால் நாளொரு செயலியும் பொழுதொரு தேடலுமாகத் திரிய வேண்டியிருந்தது. இந்தக் கவலைகளைப் போக்க கூகுள் முடிவெடுத்துவிட்டது. ஆம், இனி நீங்கள் தினம் தினம் ஒரு செயலியைத் தேடிச் செல்ல  வேண்டியிருக்காது.SMS எனப்படும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலாக RCS என்னும் அரட்டை (Chat) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இது கூகுள் அரட்டை (Google Chat) கிடையாது. ஏனெனில் இது ஒரு தனி செயலி கிடையாது. 'அரட்டை (Chat)' என்பது செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு வசதி மட்டுமே. நீங்கள் இதுவரை சாதாரணமாக பயன்படுத்தி வந்த குறுஞ்செய்திச் சேவையைப் போன்றே இந்த 'அரட்டை (Chat)'  வசதியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் செய்திகள், படங்கள், ஒலி மற்றும் ஒளி பதிவுகள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் இது உங்கள் இணைய இணைப்பின் மூலமாகவே நடைபெறும். ஆகவே RCS தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் திறன்பேசியை நீங்கள் கொண்டிருப்பது அவசியமாகும். 


ஓகே கூகுள் (OK Google)

நீங்கள் 'ஓகே கூகுள்' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், கூகுள் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். இது 'கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant)' என அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்போதைக்கு கூகுள் அசிஸ்டென்ட் உடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட முடியும். வருங்காலத்தில் ஏனைய மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது எட்டு வரையான மொழிகளையே கூகுள் அசிஸ்டென்ட் இனால் புரிந்துகொள்ள முடிகிறது. 2018 இறுதிக்குள் 30 மொழிகளை கூகுள் அசிஸ்டென்ட் புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உங்கள் தொடர்புப் பட்டியலில் (Contact List) உள்ளவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்துதல், குறுஞ்செய்தி அனுப்புதல், கூகுள் வரைபடத்தில் வழிகாட்டுதல், இசைக் கோப்புகளை இயக்குதல், இணையத்தில் தேடுதல் என ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உங்கள் குரல் கட்டளைக்கு பணிந்து 'சொல்லுங்க எஜமான்' என்று மறுக்காமல் செய்யும். 
உங்கள் திறன்பேசியில் கூகுள் அசிஸ்டன்ட் செயலி இல்லாவிட்டால் இப்போதே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எங்கே எல்லோரும் சொல்லுங்க பார்ப்போம் 'ஓகே கூகுள்'!


கூகுள் பிக்ஸல் 3 - Google Pixel 3 

கூகுள் ஆண்ட்ராய்டு உலகிற்கு அறிமுகப்படுத்திய திறன்பேசிதான் இந்த 'கூகுள் பிக்ஸல் (Google Pixel)'. Pixel, Pixel XL, Pixel 2 மற்றும் Pixel 2 XL ஆகிய நான்கு திறன்பேசிகளை கூகுள் இதுவரை வெளியிட்டுள்ளது. கூகுள் திறன்பேசி தயாரிப்பில் களமிறங்கிய பிறகு திறன்பேசிக்கு அவசியமான தொலைபேசி அழைப்பு (Dialler), குறுஞ்செய்தி உள்ளிட்ட அனைத்து செயலிகளையும் தானே தயாரித்து வெளியிட்டுவருகிறது. கூகுள் பிக்ஸல் திறன்பேசி வரிசையில் 2018 இல் வெளியாகவுள்ள திறன்பேசிதான் Pixel 3 மற்றும்  Pixel XL. கூகுள் பிக்ஸல் திறன்பேசிகளின் விலை ஆப்பிளுக்குப் போட்டியாக இருந்து வருகிறது. ஆகவே இந்த வருடம் Pixel 3s என்னும் பெயரிலான நடுத்தர விலையிலான திறன்பேசி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெயரிடப்படாமல் உருவாக்கப்பட்டுவரும் Android  P (ஆண்ட்ராய்டு P) எனப்படும் Android 9.0 இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதமளவில் வெளியாகவுள்ளது Pixel 3!

#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM

இணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM!

நீங்கள் வானொலிப் பிரியரா? வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயமாகியிருக்கிறது Style FMஇலங்கைக்கு பழமையான வானொலி வரலாறு உண்டு. இலங்கை வானொலி என்றால் அந்நாட்களில் தமிழகத்தில் கூட வெகு பிரபலம். இப்போது வரலாறு மட்டுமே இருக்கிறது. வானொலிகள் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என தாங்களாகவே வரையறை செய்துகொண்டு ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. இளம் அறிவிப்பாளர்கள், புதுமையான சிந்தனை என சாதனை படைக்க புறப்பட்டிருக்கிறது Style FM. இப்போது ஒலித்தெளிவுக்கான பரீட்சார்த்த ஒலிபரப்பு http://styleno1fm.com/ என்னும் இணைய முகவரி வழியாக இடம்பெற்று வருகிறது. விரைவில் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் புதிய, புதுமையான வானொலிக் கலாச்சாரத்தை Style FM உருவாக்கவுள்ளது. இது மட்டுமல்ல, Style TVயும் விரைவில் உதயமாகவிருக்கிறது. காதுகளுக்கு மட்டுமல்ல உங்கள் கண்களுக்கும் விருந்தளிக்க Style TV தயாராகி வருகிறது. Style FM மற்றும் Style TV தொடர்பான இன்னும் மேலதிகத் தகவல்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். அதுவரை இணையத்தின் வழி Style FMஐக் கேட்டு மகிழுங்கள்.

உங்கள் அபிமான Style FM ஐ நீங்கள் பேஸ்புக்கிலும் பின்தொடரலாம் - Style FM Facebook 

#StyleFM #Radio #OnlineRadio #ஸ்டைல்வானொலி #இணையவானொலி #சிகரம் #SIGARAMCO 

Friday, 20 April 2018

நுட்பம் - தொழிநுட்பம் - 01

வணக்கம் நண்பர்களே! தொழிநுட்ப உலகில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. அந்த மாற்றங்களை உங்கள் கைவிரல் நுனியில் தொகுத்துத் தருவதே இந்தத் தொடர். வாங்க போகலாம்!

கணினி 
மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 இந்த வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளது. இந்த பதிப்பானது விண்டோஸ் 10 கணினிகளில் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் உலகிலுள்ள 30 வீதத்திற்கும் அதிகமான கணினிகள் விண்டோஸ் XP பதிப்பிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 10க்கான பயனாளர்களை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 செயலி விண்டோஸ் 10இல் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. திறன்பேசி 
வாட்ஸப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வாட்ஸப்பில் நீங்கள் தவறுதலாக அழித்த படங்கள், ஒளிப்பதிவுகளை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வாட்ஸப் பயனாளர்களின் படங்கள், ஒளிப்பதிவுகளை தனது நினைவகத்தில் நிரந்தரமாக சேமிக்கவுள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்க முடியும். இந்த வசதி வாட்ஸப் 2.8.113 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

புது வரவு 
புது வரவாக திறன்பேசி சந்தைக்கு வரவுள்ளது எக்ஸியோமி MI 6. தற்போது திறன்பேசி சந்தையில் எக்ஸியோமி முக்கியத்துவமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் எக்ஸியோமியின் புது வரவுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையிலேயே எக்ஸியோமி MI 6 வெளியீடு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

எக்ஸியோமியின் MIUI பயனர் இடைமுகத்துடன் வெளியாகவுள்ள MI 6 திறன்பேசி 20MP தற்பட ஒளிப்பட வசதியைக் (Selfie camera) கொண்டிருக்கும். பிங்க், சிவப்பு, கோல்டு, நீலம் மற்றும் கறுப்பு வண்ணங்களில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 25 இல் MI 6 திறன்பேசி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM

Wednesday, 18 April 2018

பயணங்கள் பலவிதம் - 01

சித்திரைக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து விட்டன. ஒருவார கால விடுமுறையும் முடிவடைந்து விட்டது. நாளை 18ஆம் திகதி மீண்டும் வழமை போல் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எழுந்து தயாராகி வேலைக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு திரும்ப முடியும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத நரக வாழ்க்கை. தினமும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் மாதாந்த வரவு-செலவில் துண்டு விழும். 

ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் போல ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்திலும் சித்திரை மாதத்திலும் தமிழரின் புத்தாண்டு தையா சித்திரையா என்று விவாதம் நடத்த வேண்டியிருக்கிறது. தைமாதம் தான் தமிழரின் புத்தாண்டு என்பதை எவ்வளவு புரிய வைத்தாலும் நம்மவர்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை. காலம் தான் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.இம்முறை சித்திரை விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர கொண்டாட வேண்டும் என்று நினைக்கவில்லை. சித்திரைப் புத்தாண்டு என்று வந்து கொண்டிருந்த வாழ்த்துக்கள் ஒரு பக்கம் கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தன. எங்கள் ஊரில் தொடர்ச்சியாகப் பெய்த மழையும் குளிரான கால நிலையும் வீட்டை விட்டு வெளியே நகர அனுமதிக்கவில்லை. 

இன்று எனது சொந்த ஊரான கொட்டகலையில் இருந்து கொழும்புக்கு இரயிலில் திரும்பி வருவதற்காக கடந்த மாதமே ஆசன முன்பதிவு செய்திருந்தேன். கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு செல்ல ஆசன முன்பதிவு செய்ய முயன்ற போதும் ஏப்ரல் 10, 11 திகதிகளில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்து முடிக்கப் பட்டிருந்தன. திரும்பி வருவதற்கும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யக் கோரிய போதும் மூன்றாம் வகுப்பில் தான் இடம் கிடைத்தது. கிடைத்ததை விட்டுவிட்டால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி வரும் என்பதால் மூன்று ஆசனங்களை முன்பதிவு செய்து கொண்டேன்.

எனக்கு பேரூந்துப் பயணம் ஒத்து வராது. சௌகரியமும் இல்லை. புகையிரதப் பயணம் எனக்குப் பிடித்தமானதும் கூட. இயற்கையினூடே பயணிக்கும் அனுபவம் அலாதியானது. ஆனால் இன்றைய பயணம் வெயிலின் சதியினால் சற்றுக் கொடுமையானதாகவே இருந்தது.சித்திரை விடுமுறைக்காக ஊருக்கு சென்ற நாளில் இருந்து காலை எழும்பும் நேரம் ஒன்பது அல்லது பத்து மணியாக இருந்தது. ஆனால் இன்று காலை வேளையிலேயே புகையிரதத்தில் பயணிக்க வேண்டியிருந்ததால் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். எடுத்து வர வேண்டிய பொருட்கள் எல்லாம் நேற்றே தயார்படுத்தி வைக்கப் பட்டிருந்ததால் இன்று காலையில் அதிக சிரமம் இருக்கவில்லை. 

காலை 09.50 அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு வீதிக்கு வந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புகையிரத நிலையம் வந்து சேர்ந்தோம். எழுபது அல்லது எண்பது ரூபாய் தான் நாங்கள் பயணித்த தூரத்திற்கான வாடகையாக இருக்க வேண்டும். ஆனால் ஓட்டுநர் அநியாயமாக நூற்றைம்பது ரூபாயைக் கொள்ளையடித்தார். மனதிற்குள் திட்டிய படியே புகையிரதம் வரும் மேடைக்கு வந்து சேர்ந்தோம். நான், மனைவி மற்றும் மனைவியின் தாயார் ஆகிய மூவரோடு பதினோரு மாதக் கைக்குழந்தையும் எங்களுடன் பயணிக்கத் தயாராகியிருந்தது. காலை 10.15க்கு வர வேண்டிய புகையிரதம் காலை 10.40க்குத்தான் வந்தது. இருபத்தைந்து நிமிடங்கள் தாமதம். பிறகு வழி நெடுகிலும் ஆங்காங்கே சில தாமதங்கள். நாங்கள் பேரூந்தில் பயணிப்பதானால் கொட்டகலையில் இருந்து ஹட்டன் வந்து ஹட்டனில் இருந்து வட்டவளை, கினிகத்தேனை, கித்துல்கல, கரவானெல்ல, அவிசாவளை, கடுவலை, கடவத்தை வழியாக கொழும்பை வந்தடைய வேண்டும். பகல் நேரத்தில் நான்கரை மணிநேரப் பயணம். நள்ளிரவில் மூன்று மணிநேரத்தில் கூட சென்று விடலாம். ஆனால் புகையிரதத்தில் ஐந்தரை மணிநேரம் முதல் ஆறரை மணிநேரம் வரையில் பயணிக்க வேண்டும். காரணம் கொட்டகலை, ஹட்டன், வட்டவளை வழியாக நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி சென்று கொழும்பை வந்தடையும். இது சுற்று வழி. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட புகையிரத வழித்தடம். 

இலங்கையில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான புகையிரத வழித்தடங்கள் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டவை. பெரும்பாலான புகையிரத நேர அட்டவணைகளும் கூட ஆங்கிலேயரால் வகுக்கப் பட்டவை தான். நமது ஆட்சியாளர்களால் இவற்றை முழுவதுமாக மாற்றியமைத்து விட முடியவில்லை. நாவலப்பிட்டியில் இருந்து அவிசாவளையை இணைக்கும் புகையிரத வழித்தடத்தை நிர்மாணித்தால் பேரூந்தை விட குறைவான நேரத்தில் புகையிரதத்தின் மூலம் கொழும்பை வந்தடையக் கூடியதாக இருக்கும். காரணம் அவிசாவளையில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை நடைமுறையில் உள்ளது.

நாங்கள் பயணித்த புகையிரதம் நேர அட்டவணைப்படி மாலை 03.30க்கு கொழும்பை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் 04.15க்குத்தான் கொழும்புக்கு வர முடிந்தது. 45 நிமிடத் தாமதம். வீட்டுக்கு வந்து சேரும் போது மாலை 05.15 ஆகி விட்டது. வந்ததும் வீட்டை ஒதுங்க வைத்து விட்டு, தேநீரை அருந்தி விட்டு... என்ன விட்டு, விட்டு? எழுதுவதை விட்டு விட்டு போய் தூங்கு, நாளைக்கு வேலைக்கு போகணும்ல? 

பயணங்கள் பலவிதம் - இன்னும் பேசலாம்...

#பயணம் #புகையிரதம் #சித்திரை #அனுபவம் #சிகரம்பாரதி #TRAVEL #TRAINTRAVEL #EXPERIENCE #SIGARAMBHARATHI

Monday, 16 April 2018

மழைக்காகத்தான் மேகம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது எம்.எஸ்.வி சிறப்புப் பதிவு.

எம்.எஸ்.வி - இந்த மூன்றெழுத்துக்கு இன்றளவிலும் தமிழ் இசையுலகில் தனி மதிப்பு உண்டு. தமிழ்த் திரையுலகை வளர்த்தெடுத்ததில் இவருக்கு தனிப் பங்குண்டு. இவரது பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவை. இசையமைப்பாளர் , பாடகர் , நடிகர் எனப் பல அவதாரம் எடுத்தவர் எம்.எஸ்.வி. 

24.06.1928 இல் கேரளா, பாலக்காடு, எலப்புள்ளி கிராமத்தில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார் எம்.எஸ்.வி என்னும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன். கருப்பு வெள்ளை முதல் கலக்கல் வண்ணத்திரை வரை தன் இசையால் முத்திரை பதித்தவர் எம்.எஸ்.வி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இவரது இசையைப் போலவே கணீரென்ற குரலும் பாடலை மெய்மறந்து ரசிக்க வைத்தது என்றால் மிகையில்லை. 'பாசமலர்' திரைப்படத்தில் துவங்கி பல படங்களில் தன் சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார் எம்.எஸ்.வி. 

'சங்கமம்' திரைப்படத்தில் 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்' என்ற பாடல் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கக் கூடும். அந்தப் பாடலில் மணிவண்னணனின் நடிப்பில் எம்.எஸ்.வி-யை நான் கண்டேன். ஒருவேளை எம்.எஸ்.வி  அவர்களே நடித்திருந்தாலும் கூட மணிவண்ணனின் நடிப்பில் கொஞ்சம் கூட மாறாமல் அச்சு அசலாய் அப்படியே தான் நடித்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். 

அந்தப் பாடலின்
'மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்! 
உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .'
என்ற வரிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை. 

பாடலின் இசையும் குரலும் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதவை. 'தில்லானா மோகனாம்பாள்' திரைக்கதையை 'சங்கமம்' திரைக்கதை நினைவுபடுத்திச் செல்கிறது. உங்களுக்கு வாய்ப்பமைந்தால் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்! 

இதோ பாடல் வரிகள் உங்களுக்காக: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!

(மழைத்துளி)

ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க!
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க!
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்!

(மழைத்துளி)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)

மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!
உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
போர்க்களம் நீ புகும்போது - முள்
தைப்பது கால் அறியாது!
மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!

(ஆலாலகண்டா)

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!

#எம்எஸ்வி #எம்எஸ்விஸ்வநாதன் #சங்கமம் #MSV #MSVISVANATHAN #SANGAMAM #MANIVANNAN #TAMILSONGS

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts