Share it

Monday, 31 October 2016

சிகரம் பாரதி 24 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! தீபாவளித் திருநாளான சனிக்கிழமையும் தொடர்ந்த ஞாயிறுமாக இரண்டு விடுமுறை நாட்களுக்குப் பின் ஒரு வேலை நாளை நிறைவு செய்து விட்டு வந்திருக்கிறேன். நாளை முதலாம் திகதி. எனது வேலைத் தளத்தில் மாதாந்த இருப்புக் கணக்கெடுப்பு நாள். காலை முதல் மதியம் வரை நீளும் கணக்கெடுப்புச் செயற்பாடு தலைவலியை வரவழைத்துவிடும். காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் வேறு தன் பங்கிற்கு தலைவலியை இன்னமும் அதிகப்படுத்தும். தினசரி வேலை, பின்பு வீடு என்று ஒரே சுழற்சியில் இயங்கிக் கொண்டிருப்பது மனதளவில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து வருடங்கள் கடந்து ஆறாவது வருடமாக ஒரே வேலையில் நிலைத்திருக்கிறேன். தற்போதைய வருமானத்திற்கு குடும்பச் செலவுகள் பழக்கப்பட்டுவிட்டதால் வேறு வேலையும் தேட முடியாத நிலை.கல்வியும் இடை நடுவில். க.பொ.த உயர்தரம் ( தரம் 13 ) வரை கல்வி கற்றேன். உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவானேன். அனுமதிக்கான சகல செயற்பாடுகளையும் நிறைவு செய்துவிட்டு அழைப்புக்காகக் காத்திருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கான அழைப்பு வந்தது. பல்கலைக்கழக அழைப்பு வரும் வரைக்கும் மட்டும் இந்தத் தொழிலை மேற்கொள்வோம், அதன் பின்னர் விலகிவிடலாம் என்றெண்ணியே தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் பல்கலைக்கழக அழைப்பு வந்த போது மனம் மாறியிருந்தது. ஆம். கல்வியை விடுத்து தொழிலைத் தொடர்வதாய் தீர்மானித்தேன். பல்கலைக்கழகக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தொழிலில் இருந்து கொண்டே தனியார் கணக்கீட்டு நிறுவனங்களில் உயர்கல்வி கற்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது கைகூட வில்லை.

இணையத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமும் வழிதெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனக்கு கைப்பேசி, கணினி, இணையம் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் சார்ந்த அம்சங்களில் ஆர்வம் உண்டு. மேலும் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளிலும் அதிக ஆர்வம் உண்டு. நான் பிறந்த மலையக மண்ணிற்கு ஏதேனும் ஆக்கபூர்வமான உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. எனது ஆர்வம் சார்ந்த செயற்பாடுகளில் தொழில் தொடங்கி அதற்கு 'சிகரம்' என நாமம் சூட்டி கைநிறையப் பணம் சம்பாதித்து என் மலையகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அது நிறைவேறும் காலத்திற்காய் காத்திருக்கிறேன். காலம் கனியுமா?

Sunday, 30 October 2016

இணையத்தளம் உருவாக்க உதவி தேவை! - சிகரம் பாரதி 23 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது எனது 175 ஆவது பதிவு. நான் முன்னரே குறிப்பிட்டது போல எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல. நிற்க, இந்தத் தீபாவளித் திருநாளை அனைவரும் இனிதாக கொண்டாடினீர்களா? மகிழ்ச்சி. நான் விசேடமாகக் கொண்டாடவில்லை என்றாலும் சாதாரணமாகக் கொண்டாடினேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தீபாவளியை முடித்தாகிவிட்டது. ம்ம்.... அடுத்து? அடுத்தென்ன? வழமை போல் அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டியது தான். 

எனக்கான இணையத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என உங்களிடம் கூறினேன் அல்லவா? ஆனால் உதவி செய்வாரின்றி தவித்துக் கொண்டிருக்கிறேன். இணையத்தள முகவரியைத் தீர்மானித்து விட்டேன். ஆனால் தளத்தை எப்படி வடிவமைப்பது , எவ்வாறு பராமரிப்பது என்பதெல்லாம் தெரியாமல் விழி பிதுங்கிப் போயிருக்கிறேன். 2017 ஜனவரி 01 அன்று துவங்குவதற்கு ஏதுவாக முன்னேற்பாடுகளை செய்துவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். ஆனால் யாரிடம் கேட்பது? எவ்வாறு நிறைவேற்றுவது? தெரியவில்லையே! ஸ்ஸ்ஸப்பா..... இப்பவே கண்ணைக் கட்டுதே.......

Saturday, 29 October 2016

சிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்த இனிய நன்னாளில் கவலைகளை மறந்து பகைமையைக் கைவிட்டு உறவுகளுடன் இனிதே பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள். எல்லா நாளும் போல இதுவும் ஒரு நாளே. ஆயினும் இந்த நன்னாளில் இருந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் ஒளி வீச வாழ்த்துகிறேன். இனிப்புகளை மட்டுமல்லாது இனிய வார்த்தைகளையும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து தொடங்கும் மகிழ்ச்சி உலகெலாம் பரவட்டும். உங்கள் புன்னகையால் அனைவரையும் அரவணைத்திடுங்கள். இந்தத் தீபாவளித் திருநாள் உங்கள் வாழ்க்கையின் மற்றுமோர் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நன்னாளாக அமையட்டும். தொலைக்காட்சிகளையும் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகக் குப்பைகளையும் வாட்ஸப் , வைபர் போன்ற தொல்லைகளையும் கைவிட்டு முழு மனதுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிடுங்கள். அப்போது தான் அது உண்மையான பண்டிகையாக அமையும். சமூக வலைத்தளங்கள் என்னும் இணையக் குப்பைகளால் தான் நாம் இயந்திரத் தனமாக நமது பண்டிகைகளை கடமைக்காகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் உறவுகளுடன் இணையத்தினூடாக அல்லாமல் இதயத்தினூடாக உறவாடுங்கள். கைப்பேசியின் கைகளை விட்டுவிட்டு உறவுகளுடன் கரம் கோர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குள் இன்னும் மகிழ்ச்சியை வழங்கும். தொல்லைகளெல்லாம் மறந்து பிள்ளை உள்ளத்துடன் இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுங்கள். 

மீண்டும் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்! 

Friday, 28 October 2016

சிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்து தெய்வங்கள்! )

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

சிங்களவர்கள் களவெடுத்த இந்து தெய்வங்கள்!

பௌத்த மதம் புத்தரை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இலங்கையில் பௌத்தர்கள் அல்லது சிங்களவர்கள் இந்து தெய்வங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தமதாக்கும் முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். முருகன் அருள்பாலித்த கதிர்காம ஆலயத்தில் சிங்கள ஆட்சியே நடக்கிறது. சிவனொளி பாத மலை புத்தர் மலையாகிவிட்டது. விஷ்ணு கடவுளின் சிலையை விகாரைகளில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். காளியை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இவ்வாறாக படிப்படியாக இந்து தெய்வங்களை பௌத்த மதத்திற்குள் உள்வாங்க சிங்களவர்கள் முயற்சித்து வருகின்றனர். இலங்கைவாழ் இந்துசமய மக்கள் அனைவரும் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் கிண்ணியா ஏழு கிணறு நீரூற்றை புனரமைப்பு என்ற பெயரில் அழிக்கும் முயற்சிகளை பேரினவாத அரசு முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் பேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு இதோ:


கிண்ணியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது. இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால் பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்பதே.

இதனை நாம் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வோம். தனது தாயாரின் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்காக மன்னன் இராவணனால் உருவாக்கப்பட்ட ஏழு கிணறுகள் அமைந்த இடம்தான் கிண்ணியா என்பதுதான் வரலாறு. இயற்கையாகவே சுடுதண்ணீர் கிணறுகள் கொண்ட கிண்ணியா சைவத் தமிழ் மக்களின் புனிதமான பிரதேசமாக இராவண மன்னனின் காலம் முதலாக மதிக்கப்பட்டு வந்தது. இத்தகைய கிணறுகள் உலகின் எப்பகுதியிலும் அமையவில்லை என்பதே உண்மை. இதன் மூலமாக இராவண மன்னனின் தவவலிமையின் சக்தியை நாம் உணரமுடியும்.

ஏழு கிணறுகளையும் வகைப்படுத்தி தான் அனுபவித்த அனுபவங்களை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடல்களாக பாடியுள்ளார்கள். இப்பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுள்ளன. கிண்ணியாவின் பெருமைகளையும் தொன்மைகளையும் பல சைவத் தமிழ் பெரியார்கள் பல மேடைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பூர்வீக காலமாக திருகோணமலை இந்து மக்களே இதனைப் பராமரித்து வந்தார்கள். பின்னர் கிண்ணியா அமைந்துள்ள காணி அரசாங்க காணியெனவும் அதனால் இக்கிணறுகளை பராமரிக்கும் உரிமை உப்புவெளி கிராமசபைக்கு மட்டுமே உண்டு எனவும் கூறி நிர்வாகப் பொறுப்புகளை கிராமசபை பறித்துக்கொண்டது.

அதன்பின்னர் பல திருத்த வேலைகளைச் செய்து பல விதிமுறைகளையும் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கி இக்கிணறுகளை தனது உடமையாக மாற்றிக்கொண்டது. அதன் விளைவாக இதிகாச பெருமை பெற்ற இக்கிணறுகள் காட்சிப்படுத்தப்பட்டு உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடமாகவும் கிணறுகளில் நீராடி மகிழ்ந்து போகும் உல்லாசப்பயணிகளின் முக்கிய இடமாகவும் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் வருமானம் தேடும் கேந்திர நிலையமாக மாற்றமடைந்தது. சுற்றுலாப் பயணிகள் ஊடாக வரும் வருமானத்தை அவதானித்த வேறு சிலர் ஒன்றுகூடி தமது அரசாங்கத்தின் ஆதரவுடன் மீண்டும் அரசாங்க காணியென்ற உரித்துடன் வேறு ஓர் சரித்திரக் கதை கூறி கிண்ணியா நிர்வாகம் மாற்றமடைந்து விட்டது.

இத்தகைய அவலம் ஏற்படுத்தும் வழியைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்பதை தேடினால் நம்மவர்கள் தான் என்ற உண்மையான விடைவரும்.
கிண்ணியா சமயக் கிரியைகள் செய்யும் புனிதமான நிலம். தமிழர்களின் நிலம் என்பதை மறைத்து அதனூடாக வருமானம் தேட முனைந்தவர்கள் யார்? இ்பாதையைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார்? தமிழர்களே! இதுவே விடையாகும். பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்று இன்று கூறுபவர்கள் தமிழர்கள். அன்று அரச உடமை, அரச காணி என்று பறித்து எடுத்த பெருமையும் தமிழர்களுக்கே வந்து சேரும்.

உண்மையில் எமது சைவ சமய நிறுவனங்களோ, சைவசமய பெரியார்களோ கிண்ணியாவினை பிழையாக வழிநடத்திய காலத்தில் முன்வந்து கிண்ணியாவின் பெருமையினை எடுத்துக் கூறியிருக்க வேண்டும். தவறவிட்டார்கள். அதன் விளைவு கிண்ணியா பறிபோய்விட்டது.
கிணறுகள் சைவசமய கிரியைகளுக்கு மட்டுமே திறக்கப்படல் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்க வேண்டும். இறுதிக்கிரியைகள் செய்யும் புண்ணிய தலம் என்பதை உணரச் செயதிருக்க வேண்டும். அன்றே புனித பூமியாக காத்திருந்தால் இந்தக் கிணறுகள் இந்து மக்கள் இறுதிக் கிரியைகள் செய்யும் சமய கேந்திர நிலையமாக இன்றும் அமைந்திருக்கும். பாதுகாக்கப்பட்டிருக்கும்.

சமயக் கிரியைகளுக்கு மட்டுமே என்று அன்று தொடக்கம் பாதுகாக்கப்பட்டிருந்தால் இதன் மூலம் சைவசமய மக்களின் சொத்து என்பதை மக்கள் அனைவரும் அறிவு பூர்வமாக ஏற்று மதித்து வணங்கிச் சென்றிருப்பார்கள். பறிபோயும் இருக்காது. என்பதே உண்மை!

# இணையத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டது.

- இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவு சொல்கிறது.  தமிழர்களே , சிந்திப்பீர்! செயல்படுவீர்!

Thursday, 27 October 2016

சிகரம் பாரதி 20 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

2016.10.25

* நான் இப்போதெல்லாம் நிறைய எழுதுகிறேன். மனதில் புதுப்புது எண்ணங்கள் பிறக்கின்றன. வலைத்தளத்துக்காக அதிகளவு நேரம் செலவிடுகிறேன். காரணம் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்தது தான். பார்க்கவே மாட்டேன் என்றில்லை. முடியுமானவரை குறைத்துவிட்டேன். ஆகவே எனக்காக அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. நண்பர் வெற்றிவேல் எழுதிய 'வானவல்லி' புதினத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வாசித்து முடித்திட வேண்டும். அருமையான படைப்பு.

* நான் 2017 இல் சொந்த இணையத்தளத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் எப்படி நிறைவேற்றுவது என்று தான் தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் உதவினால் நலம்.


2016.10.26

* ஆப்பிள் நிறுவனம் அண்மையில் ஆப்பிள் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவற்றை வெளியிட்டது. கூகிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக தனது முழுக் கட்டுப்பாட்டிலான கூகிள் பிக்ஸல்  மற்றும் பிக்ஸல் எக்ஸ் எல் ஆகியவற்றை வெளியிட்டது. மேலும் கூகிள் இந்தியாவில் WIFI சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. போகிற போக்கில் ஆப்பிள் கைப்பேசிக்கும் கூகிள் இணைப்பைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டியேற்படும் போலும்!

Tuesday, 25 October 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02

பேரன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம் நண்பா!

உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

நீ கேள்விப் பட்டிருப்பாய். வயிற்றில் இருக்கும் குழந்தையின் செவிப்புலன்கள் இருபது வாரத்திற்குள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும் என்று. ஐந்து மாதம் கழித்து குழந்தையால் நாம் பேசுவதை நன்றாக கேட்க இயலும். இப்போதிலிருந்தே குழந்தைக்கு என்னென்ன புத்தகங்கள் வாசிக்கலாம், என்னென்ன கதைகளைக் கூறலாம் என்று சேகரித்து வைத்துக் கொள். இன்றைய குழந்தை பிறந்த அடுத்த தினமே ஸ்மார்ட் போனையும், டீ.வி ரிமோட்டையும் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை அதன் போக்கிற்கு போகோ சேனலைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தவறை நீ செய்யாதே. தினமும் குழந்தையுடன் பேசு. கதைகளைக் கூறு. புத்தகங்களைப் படி. நிறைய புது இடத்திற்கு அழைத்துச் செல். புது உலகைக் காட்டு. குழந்தை புரிந்துகொள்ளட்டும். குழந்தையை அதன் போக்கிற்கு வளர விடு. சுதந்திரமாக முடிவெடுக் கற்றுக்கொடு. அதற்காகக் கட்டுப்பாடு இல்லாமலும் வளர்க்கச் சொல்லவில்லை. உன்னைப் போன்றே குழந்தையும் பல கதைகளைக் கேட்டு வளரட்டும். நாம் கூறும் கதைகளில் அவனே ராஜாவாக வாழட்டும்.

தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது வேறு. பழக்குவது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

முதல் கடிதத்தில் நீ, வா, போ என்று உரிமையுடன் அழைத்திருந்தாய். ஆனால், கடந்த கடிதத்தில் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு என்று பெரும் மரியாதையுடன் தொடங்கியிருக்கிறாய். இந்த மரியாதை எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. சரி, அதை விடுவோம். நாம் இப்பொழுதே பழகத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் அதற்குள் பிரிவினைப் பற்றி கவலைப் படுகிறாய், அதற்கு அவசியமே இல்லை என்று கருதுகிறேன் நான். 

'கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் 
தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு'

என்ற நாலடியார் பாடலைப் போன்றே நம் நட்பும் வளரும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதில் உனக்கு அணுவளவும் ஐயம் வேண்டாம் நண்பா.

வரவர எழுத்தின் தரம் தாழ்ந்து கொண்டு வருவதாக வருத்தப்பட்டாய். ஒரு வரியை உடைத்துப் போட்டாலே அதுதான் கவிதை என்கிறார்கள். நாமும் தொடக்கத்தில் அப்படித்தான் எழுதினோம் என்பதை மறக்கக் கூடாது நண்பா. மனிதன் கூட ஒரு காலத்தில் ஆடையின்றி சுற்றித்தான் இன்றைய நாகரீகத்தினை கற்றுக்கொண்டான். எழுத்தும் அப்படித்தான். தொடக்கத்தில் அது அப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். வெளிப்படுத்த வெளிப்படுத்தத் தான் அது தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டு சிறப்பாக வெளிப்படும். ஆதலால் அதை பற்றி நீ கவலைப் படாதே. எதுவுமே எழுதாமல் இருப்பதற்குப் பதில் முகப்புப் புத்தகத்திலாவது ஏதாவது எழுதுகிறார்களே, அதுவரை நாம் மகிழ்ச்சி அடையவே வேண்டும். என்னைக் கேட்டால் ஓட இயலாத போது நடக்க வேண்டும். நடக்க இயலாத போது நகர வேண்டும். நகர இயலாத போது உருள வேண்டும். உருள இயலாத போது முயற்சிக்க வேண்டும். ஆதலால் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். எழுதுபவர்கள் தம் எழுத்தினை மேம்படுத்திக் கொண்டிருப்பது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம் எழுதுவதே உலகின் ஆகச்சிறந்த இலக்கியம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் தமிழ் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு சாரு நிவேதிதா. அவரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாய். மிகச் சிறந்த எழுத்தாளர். ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப் போய் விட்டார். அவர் கதை நமக்கு வேண்டாம்.

வேலைப்பளு வரவர அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆதலால்,வென்வேல் சென்னியின் வேகம் வானவல்லியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருந்தாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் நவம்பருக்குள் சென்னி முதல் பாகத்தை முடித்ததுவிடுவேன் என்று நம்புகிறேன். இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்னி மொத்தமாக வெளியிடப்படும்.

நீ பத்திரமாக இரு. எந்தச் சூழலிலும் எழுதுவதை நிறுத்தாதே. தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. மற்றவர்கள் வாங்கும் லைக்குகளை எண்ணி மயங்காதே... அது உனது வளர்ச்சியை பாதிக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று நமது தாத்தா கூறியிருக்கிறார். ஆதலால் எந்த முயற்சி மேற்கொண்டாலும் அது பெரியதாகவே இருக்கட்டும். வெற்றி உனதாகட்டும்.

அன்புடன்...
சி.வெற்றிவேல்.

  _________________________________________________________________________________

கடிதத்திற்கு நன்றி நண்பா. எனது பதில் கடிதம் விரைவில்...

இக்கடிதத்தை நண்பர் வெற்றிவேல் அவர்களின் தளத்தில் காண:


Monday, 24 October 2016

சிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 

2016.10.24

* 'ரெமோ' சிவகார்த்திகேயன் - கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம். இறுவட்டில் பார்த்தேன். திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்கப் போனால் சில ஆயிரங்கள் கரைந்து போகிற காரணத்தால் ஏழைகளுக்கு இறுவட்டே துணை. சரி, நமது பார்வைக்கு வருவோம். இத்திரைப்படம் Tootsie என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் பிரதி என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் தில்லு முல்லுகளே ரெமோ. சாமானிய ரசிகனை திருப்திகொள்ள வைத்துவிடுகிறது. சற்றே திரைப்பட நுணுக்கங்கள் தெரிந்தவர்களை கழுத்தை நெரிக்கிறது. சதீஷின் நகைச்சுவை கைகொடுக்கவில்லை. சிவாவுக்கு பராட்டா சூரி தான் பொருத்தம். கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் எதற்கு இந்தப்படத்தில்? இயக்குனர் வேடத்திலும் வேறு யாரையேனும் போட்டிருக்கலாமே? ஆங்கில மூலத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை முன்னைய சிவகார்த்திகேயனின் படங்கள் அளவுக்கு ரெமோ ஈர்க்கவில்லை. Tootsie - டூட்ஸி. மொழி புரியாவிட்டாலும் படம் பிடித்திருக்கிறது. நான்கு பாட்டு , இரண்டு சண்டை என எந்த சம்பிரதாயமும் இல்லாமல் அழகாக நகர்கிறது கதை. கதாநாயகன் நடிப்புக்காக பெண் வேடம் இடுகிறார். அருமையாக நடிக்கவும் செய்கிறார். ரெமோவில் சிவா முதன்முதலில் பெண் வேடமிடும் போது மட்டுமே இயக்குனரிடம் நடிக்க செல்கிறார். மீதி நேரமெல்லாம் கதாநாயகியிடம் தான் நடித்துக் காட்டுகிறார். திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் ஆனாலும் டூட்ஸி அருமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? 

Sunday, 23 October 2016

சிகரம் பாரதி 18 /50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இப்பதிவுடன் நமது 'சிகரம்' வலைத்தளம் 44,000 பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. அது மட்டுமில்லை, நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்ததால் 700 க்கு மேல் பின்தங்கிப் போயிருந்த தமிழ்மணம் தரவரிசை 186 க்கு முன்னேறியுள்ளது. 100க்குள் ஒரு வருடமேனும் வந்துவிட வேண்டும் என்பதே என் இலக்கு.

2016.10.22

* கோ-இல் தலைவன் வாழும் இல்லம் என்பதே கோயில் என்று மருவியுள்ளது. தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள கோயில்களைப் பற்றி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 க்கு உளவுப் பார்வையில் விவரித்தார்கள். நல்ல தேடல். தமிழர்களின் பழங்கால வரலாற்றுக்கு ஒரே ஆதாரமாய் இருப்பது இந்தக் கோயில்கள் தான். இவையும் அழிந்துவிட்டால் கதைகளில் மட்டுமே நம் வரலாறு இருக்கும். தமிழர்களே விழித்தெழுங்கள்!

2016.10.23

* ஆனந்த விகடன் இதழ் 90 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் விகடன். தமிழுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது விகடன். விகடன் உருவாக்கி விட்டவர்கள் பல நூறு பேர்! ஆனால் இப்போது தமிழின் சாபக் கேடாக உருவெடுத்துள்ளது விகடன். தமிழுக்குச் சேவை செய்தது போதும் என்று பணத்திற்குச் சேவகம் செய்யச் சென்றுவிட்டது நமது விகடன். இப்போதும் விகடனில் தரமான பல படைப்புகள் வெளிவந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அத்தனையிலும் ஆங்கிலக் கலப்படம்! 
எல்லாம் காலத்தின் கோலம். திரைப்படத் துறையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இலக்கியங்கள் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகைகளின் அரைகுறை படங்கள்தான் முன்னட்டையை அலங்கரிக்கின்றன. என்று மாறும் இந்த அவல நிலை? விழித்துக் கொள்ளுமா விகடன்???

* சன் குழுமத்தைச் சேர்ந்த கே.டிவிக்கு 16 வது பிறந்தநாள் ( நேற்று ) . இதுவரை இதைச் சாதித்திருக்கிறது? ஒன்றுமில்லை. தரமானது, தரமற்றது என எதனையும் தரம் பிரித்துப் பார்க்காமல் அத்தனைக் குப்பைகளையும் நம் வீட்டு வரவேற்பறைக்குள் கொண்டு வந்து கொட்டியது கே.டிவி.ஆனாலும் வாழ்த்துகிறோம். வாழ்க கே.டிவி. தமிழைக் கொல்வதில் இவர்களும் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எப்படா திருந்துவீங்க?

* சிகரம் வலை-மின் இதழ் 007 இன்று வெளியாகியுள்ளது. நீங்களும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களால் இதழை மேலும் வளப்படுத்துங்கள். 

Saturday, 22 October 2016

தமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

தமிழில் இதுவரை பல்வேறு வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை இப்பதிவு அக்கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 1895 முதல் வரலாற்றுப் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சுமார் 130 வருடகாலமாக வெளியிடப்பட்ட புதினங்களை கதைக்களத்தின் கால வரிசையில் வகைப்படுத்துவதே இப்பதிவாகும். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இத்தொகுப்பை மேலும் பயனுடையதாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் இந்தத் தொகுப்புக்காக தகவல்களைத் தேடிய போது ஒரே கதை ஒவ்வொருவராலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆகவே முதலில் தமிழர்களின் சரித்திரத்தை யாரேனும் காலங்களினால் வகைப்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரலாற்றுப் புதினங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்போது தொகுப்பு உங்களுக்காக இங்கே:

கி.மு 200 ( வானவல்லியை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலத்தை குறிப்பிடவில்லை)
கரிகால் வளவன் - சோழர்களின் வரலாறு - கி.வா.ஜ ( 1966 )

கி.மு 175
வானவல்லி - சோழர்களின் வரலாறு - சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் ( 2016 )

கி.பி.200
யவன ராணி - சோழர்களின் வரலாறு - சாண்டில்யன் ( 1960 )

கி.பி 700
பார்த்திபன் கனவு சோழர்களின் வரலாறு - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி

கி.பி 1000
பொன்னியின் செல்வன் - சோழர்களின் வரலாறு - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி

கி.பி 1075
கடல் புறா - சோழர்களின் வரலாறு - சாண்டில்யன் ( 1974 )

இப்பதிவு தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும். உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறேன்.

நன்றி! 

முதல் பதிப்பு : 2016.10.22
இற்றைப்படுத்தல் 01 : விரைவில்...

Friday, 21 October 2016

சிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களுக்காக டுவிட்டரில் நான் வாசித்து ரசித்த பதிவுகளின் தொகுப்பு இங்கே:

இந்திய கபடிவீரரின் மனைவி தற்கொலைனு தினத்தந்தி விளையாட்டு செய்திகள் பக்கத்துல போட்ருக்கான்... ஏன்டா! இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டாடா?

கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனினும் கொடிது மாசக் கடைசியில் வறுமை.!!

# சாவு வீட்டில் பசிக்கும் வயிற்றைப் போல் யதார்த்தத்தை உணர்த்துவது வேறெதுவுமில்லை!

# 730 !
#மலையகம்
1000க்கு இன்னும் காலம் இருக்காம் :(
#SriLanka
உழைப்பின் வியர்வையும், துயரத்தின் கண்ணீரும் போராட்டத்தின் குருதியும் வீண் !# நாம் செய்த தவறுகளை எச்சில் தொட்டு சிலேட்டில் அழித்தவரை வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமில்லை!!!

# எவ்வளவு அடக்கியும் வெளிவந்த கண்ணீரை தூசி விழுந்து விட்டதாய் பாவனை செய்தேன்.. எவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் இப்போது உறுத்துகிறது!

# கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது - வாலி

Thursday, 20 October 2016

சிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் !

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

இன்று கூகிள் தனது முதலாவது சொந்தக் கைப்பேசியை வெளியிட்டிருக்கிறது. கூகிள் இணையத் தேடலுக்காக உருவாக்கப் பட்டாலும் பின்னர் பல்வேறு சேவைகளை தன்னோடு இணைத்துக் கொண்டது. அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மிக முக்கியமானது. கையடக்கத் தொலைபேசிப் பாவனையில் முக்கியமான மாற்றத்தை இது உருவாக்கியது. ஆனால் கூகிள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 6.0 பதிப்பு வரை இயங்குதளத்தை மட்டுமே கூகிள் வழங்கி வந்தது. கையடக்கத் தொலைபேசிகள் வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வந்தன.அண்மையில் கூகிள் நோகட் 7.0 ( Google Android Nougat 7.0 ) வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளத்துடன் தனது முழுமையான கட்டுப்பாட்டிலான கைப்பேசியை கூகிள் அறிமுகம் செய்கிறது. 


HTC நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கூகிள் பிக்ஸெல் என்னும் கைப்பேசியை கூகிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஆப்பிள் ஐ போனுக்கு இணையாக இக்கைப்பேசி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான கூகிள் அல்லோ , டுவோ மற்றும் கூகிள் அசிஸ்டெண்ட் ஆகியவை கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கூகிள் பிக்ஸெல் கைப்பேசிகள் வழங்கும். 


அழகிய வடிவமைப்பு மற்றும் அசத்தும் வசதிகளுடன் கூகிள் பிக்ஸெல் வந்துள்ளது. 32 ஜிபி மற்றும் 128 ஜிபி நினைவகத் திறன் கொண்டுள்ளது. வெளியக நினைவக அட்டையை இணைக்க முடியாது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எல்லையற்ற கூகிள் நினைவகத்தில் இணைத்துக் கொள்ள முடியும். உங்கள் பழைய கைப்பேசியிலிருந்து இப்புதிய கைப்பேசிக்கு பழைய தகவல்கள் எதனையும் இழக்காமல் மாறிக்கொள்ளலாம். இப்படிப் பல வசதிகள் உள்ளன. 

நான் இதுவரை Samsung Galaxy S Duos 2, Huawei 3C 4G, Huawei P8 Lite மற்றும் Huawei GR5 ஆகிய கைப்பேசிகளை பாவித்துள்ளேன். GR 5 இனையே தற்போது பாவித்து வருகிறேன். எதிர்காலத்தில் எப்படியேனும் கூகிள் பிக்ஸெல் கைப்பேசியொன்றை வாங்கிட வேண்டும் என்று எண்ணுகிறேன். காலத்தின் கட்டளை எப்படியோ? பார்க்கலாம்!


சிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )

01. வாசிப்பு -  இன்னுமொரு வாழ்க்கை - இன்னுமொரு உலகம் -  இன்னுமொரு பிறப்பு . நமது வாழ்க்கைக்கு சுடரேற்றும் ஒளி முதல். அறிவின் ஊற்றை சுரக்க வைக்கும் அற்புத மந்திரம். ஒவ்வொரு எழுத்திலும் சொல்லிலும் நிதமும் புதுப்புது அனுபவங்களை அள்ளி வழங்குகிறது. வாருங்கள்! வாசிப்பால் ஒன்றிணைவோம்!

02. நம்மால் முடியுமா என்ற சந்தேகத்துடனேயே வலைப்பதிவில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் உங்கள் பேராதரவு என்னை நம்பிக்கையுடன் தொடர வைத்திருக்கிறது. தங்கள் வருகை மட்டுமல்ல, கருத்துக்களும் தான் என்னை வளப்படுத்தும் என்பதால் தங்கள் மேலான கருத்துரைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறேன்.

03. உங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.

04. என் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.


Wednesday, 19 October 2016

சிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)

நான் உன் குழந்தை
எனக்கு நீ குழந்தை
நமக்கு ஒரு குழந்தை
வேண்டும் அல்லவா?
கணவனே,
சொல் கணவனே
சொல்!

இது என் மனைவி எனக்கு எழுதிய கவிதை. மனைவி தாய்மையடைந்திருக்கிறார். ஆதலால் நான் இப்போது
குழந்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக
அவர் எழுதிய வரிகள் இவை. படித்தவர்கள் மட்டும் தான்
கவிதை எழுத வேண்டுமா என்ன? மனம் படைத்தவர்களும்
எழுதலாம் அல்லவா?

Tuesday, 18 October 2016

சிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!)

2016.10.18

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தோட்ட தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இன்று இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதேவேளை, இந்த ஒப்பந்தத்தின் படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கவும், தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது குளவித் தாக்குதலுக்கு இலக்கானால் மீள பணிக்கு வரும் வரை அவர்களுக்கான வேதனத்தை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டு ஒப்பந்தத்தின் படி அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகும். மேலும் வரவுக் கொடுப்பனவு ரூ 60, விலை பகிர்வுக்கான கொடுப்பனவு ரூ 30 , உற்பத்தியை அதிகரிப்பதற்கான கொடுப்பனவு ரூ 140 என மொத்தம் 730 ரூபாவாக அமைகிறது. முன்னைய சம்பளமாக ரூ 620 இல் இருந்து ரூ 110 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தமக்கு 1000 ரூபாவே வேண்டும் எனக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தரும் வரை தாம் ஓயப் போவதில்லை என இ.தொ.கா வெட்டி வீராப்பு பேசி வருகிறது. மக்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது!

Monday, 17 October 2016

சிகரம் பாரதி 12/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!


2016.10.16

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை. 

இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை.

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!  

2016.10.17

'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 2010 இல் வெளியானது. 'தொடரி' (2016) தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டேன். 'Unstoppable' ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு.ஆனால் அதிலும் சில விதி மீறல்கள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் 150 கி.மீ வேகத்தில் சென்றாலும் 70 கி.மீ வேகத்தில் செல்லும் Unstoppable ஐ தொடரியால் நெருங்கக் கூட முடியாது. 

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கட்டாயம் காதல் இருக்கவேண்டும். மேலும் வில்லன் இருக்கவேண்டும். இன்னும் நான்கு பாடல்கள் இருந்தாக வேண்டும். நகைச்சுவைக்கென்று தனியிடம் வேண்டும். கதாநாயகனை ஆகா ஓகோ வென்று புகழ்ந்து அறிமுகக் காட்சி அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களேனும் ஒதுக்கப்பட வேண்டும். கதாநாயகிக்குக் கதாநாயகனின் மேல் காதல் வந்த பிறகே கதை(?) துவங்கும். இப்படியாகவெல்லாம் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கும் போது பிரதான கதையை மிஞ்சும் சொற்ப நேரத்தில் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயம் நம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு. பாவம்!

நூற்றாண்டு கண்ட தமிழ்த் திரையுலகம் காதலைத் தவிர இன்னும் வேறு எதனையும் காணவில்லை. இதில் தொடரி மற்றும் ரெமோ போன்ற குப்பைகள் மூலக் கதையின் அழகையே சிதைத்து விடுகின்றன. 'என்னை வேலை செய்ய விடுங்கய்யா...' என்று சிவகார்த்திகேயன் போன்றவர்களின் நீலிக்கண்ணீர் வேறு . தேனீர் விற்பவரும் முக அலங்காரம் செய்பவரும் தொடரூந்தை ஓட்ட முடியுமாக இருந்தால் நமது தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக தொடரூந்துகளே பெரும் எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கும். என்ன கொடுமை சரவணன் இது? மொத்தத்தில் 'தொடரி' - தடம் புரண்டது!

Sunday, 16 October 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01


பகுதி - 02

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02
 


பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03
 


பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04
 


பகுதி - 05

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05


பகுதி - 06

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06
 


பகுதி - 07

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07பகுதி - 08 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 09
 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02


பகுதி - 10

அன்று மாலை. கடுமையாகப் பெய்து சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மழையும் ஓரளவு பனியும் மக்களை ஐந்து மணிக்கெல்லாம் வீடுகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. என் இல்லம் தேடி வந்திருந்த நண்பர்களுடன் பாடசாலை செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். பாடசாலையை நெருங்கியபோது எனக்கு திக்கென்றது. திவ்யா பாடசாலைச் சீருடையில் தனது தோழிகள் புடை சூழ மரத்தடியில் நின்றிருந்தாள். நாங்கள் எங்கள் நடையை மரத்தடியிலிருந்து சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டோம். 

நண்பர்கள் என்னை "போய்ப் பேசுடா மச்சான்" என்று தள்ளிவிட்டனர். அவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்காத நிலையில் நான் தள்ளிவிடப்பட்டதால் ஓரிரு அடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டேன். உடனே முன்தலை மயிரை இலேசாகக் கோதிவிட்டபடி அவர்களை நோக்கி வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மெதுவாகச் சென்றேன். 

அருகில் சென்றதும் " திவ்யா... நா... உ... உங்க... கிட்ட... கொஞ்சம் பேசணும்..." என்றேன்.

"இல்ல... குரூப் ஸ்டடி ... பஸ்சுக்காக நிக்கிறோம்" என்று மெல்லிய குரலில் சொன்னாள் திவ்யா.

"சரி... நாளைக்கு...?" 

"... ம் ..."

அவள் 'ம்' என்று சொன்னதுமே நான் பதிலுக்கு எதுவும் பேசாமல் திரும்பிக்கூட பார்க்காமல் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டத்துடன் ஐக்கியமானதும் விசாரணைகள் துவங்கின. 

"என்னடா பேசுன?" - விசு 

"நாளைக்கு பேசணும்னு சொன்னேன்"

"என்ன சொன்னாங்க எங்க அண்ணி?" - முரளி 

"சரின்னு சொன்னா"

"அப்படின்னா நாளைக்கு நீ போகும்போது நாங்க செஞ்சு தர்ற உன் 'காதல் பூங்கொத்தை'யும் எடுத்துக்கிட்டுப் போற. ஓகேவா?" - சுசி 

"காதல் பூங்கொத்தா? என்னடா உளர்ற? இப்பவே இதெல்லாம் தேவையா?"

"அதெல்லாம் முடியாது" - விசு 

"நீ 'காதல் பூங்கொத்து' குடுக்குற. அவ்வளவுதான்" - அனைவரும் ஒருமித்துச் சொன்னார்கள். நானும் நடப்பது நடக்கட்டுமென்று தலையாட்டி வைத்தேன்.


**********

"சரி" - திவ்யா இப்படிச் சொன்னதும் என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. மகிழ்ச்சி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. என் உடலின் வற்றிப்போன நதிகளெல்லாம் மகிழ்ச்சி நீரினால் செழிப்படைந்தன. மகிழ்ச்சியின் மிகுதியால் திவ்யாவை இறுகக் கட்டியணைத்து அவளது செவ்விதழ்களில் முத்தமிட்டேன். திவ்யா மறுக்கவில்லை. எனது இதழ்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தனது கோவைப்பழம் போன்று சிவந்த தனது இதழ்களுக்கு ஆணையிட்டாள் திவ்யா. அவளது உள்ளத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அவளது இதழ்கள் எனக்குத் தெரியப்படுத்தின.

"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற?" - என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்த ஓரிரு நிமிடங்கள் அனுபவித்த துன்பம் சூரியனைக் கண்ட பனி போல் அவளது பதிலால் நொடியில் விலகிப் போனது. ஆனால் அந்த மகிழ்ச்சி காலத்திற்குப் பொறுக்கவில்லையோ என்னவோ நெடுநேரம் நீடிக்கவில்லை. சில நொடிகள் முத்தப் பரிமாற்றத்திற்குப் பின் பேச வார்த்தைகள் இன்றி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருந்தோம். அப்போது திவ்யாவின் முகத்தில் தென்பட்ட மாற்றங்கள் என் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ரேகைகளை அழித்தன. 

திவ்யாவின் கண்கள் செருகுவதை அவதானித்த நொடியே அவள் நிலை தடுமாறுவதையும் அவதானித்த நான் அவள் சுயநினைவிழந்து மயங்கிக் கீழே விழும் நேரத்தில் என் இரு கரங்களினாலும் தாங்கிப் பிடித்தேன். இதைக் கண்டதும் சுசி எங்களை நோக்கி ஓடி வந்தான். அதேநேரம் திவ்யாவின் கார்க் கதவுகளும் திறந்து கொண்டன. அதிலிருந்து திவ்யாவின் பள்ளித்தோழி ரேவதி இறங்கி ஓடி வந்தாள். 

"மச்சான்... என்னாச்சு?" - சுசி 

"தெரியலடா... திடீர்னு மயங்கிட்டா..." - திவ்யாவை கைத்தாங்கலாக என் தோளில் சாய்த்தபடி பதிலளித்தேன்.

"சரி... கொஞ்சம் தண்ணீர் தெளிச்சுப் பாருங்க" - திவ்யாவின் தோழி ரேவதி சொன்னாள். 

உடனே திவ்யாவை எனது காரின் பின் இருக்கையில் கிடத்தினேன். ரேவதி கொடுத்த தண்ணீரை திவ்யாவின் முகத்தில் தெளித்தேன். அவளது கன்னங்களில் தட்டிப் பார்த்தேன். ஆனால் திவ்யா கண்விழிக்கவில்லை. 

"சரி... வா... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்" என்று சுசி சொன்னதும் எனது காரில் திவ்யாவை ஏற்றிக் கொண்டு சுசியுடன் வைத்தியசாலை நோக்கி விரைந்தேன். ரேவதி தான் வந்த காரில் எங்களைப் பின் தொடர்ந்தாள். சுசி காரை ஓட்டினான். பின் இருக்கையில் எனது மடியில் கிடந்தாள் திவ்யா.

மெதுவாக அவள் நெற்றியில் அலைமோதிக் கொண்டிருந்த கூந்தலை பக்கவாட்டில் எடுத்துவிட்டேன். அவளது தலையைக் கோதினேன். துன்பத்திலும் ஒரு இன்பமாக இன்னும் பல போராட்டங்களின் பின் என்மடி சேர வேண்டிய என் திவ்யா இப்போது என் மடியில் கிடந்தாள். இலேசாகப் புன்னகைத்துக் கொண்டேன் நான்.   

Saturday, 15 October 2016

சிகரம் பாரதி 11/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!  

2016.10.13

வர வர இந்த திரைப்பட விமர்சகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. திரைப்படம் வெளிவந்து அரை மணி நேரத்தில் செம மொக்கை என்கிறார்கள், ஆகா ஓகோ என்கிறார்கள். இந்த அலப்பறைகளை நம்மவர்கள் பேஸ்புக்கில் பார்த்துவிட்டுத்தான் படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முழுக்கதையையும் சொல்லி விட்டு மீதியை திரையில் பாருங்கள் என்கிறார்கள். இந்த மாதிரியான விமர்சனங்களால் ரசிகர்களின் ரசனை பாதிக்கப்படுகிறது. திரையரங்கில் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும் போதும் இந்த விமர்சனங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கும். ரசிகன் திரைப்படத்தை தடையின்றி ரசிக்க வேண்டுமானால் திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு விமர்சனம் வெளியிடத் தடை என்று அறிவித்தால் தான் முடியும் போல!

2016.10.14

'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 'தொடரி' தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். 

2016.10.15விஜய் டிவி யில் 'நண்பன்' திரைப்படம். எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். 'சாட்டை' மற்றும் ' அப்பா' போன்ற திரைப்படங்களின் வரிசையில் 'நண்பன்' திரைப்படத்தையும் வைக்கலாம். நடிகர் விஜய்யின் திரைப்படங்களில் மிகச் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. அண்மைக்காலமாக பல குப்பைகளில் நடித்து வரும் விஜய்யின் திரைப்படப் பட்டியலுக்கு இது அழகு சேர்க்கும். கல்விக்கு புது இலக்கணம் வகுத்த படங்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடிய திரைப்படம் இதுவாகும். ஷங்கரின் இயக்கத்தில் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. 'நண்பன்' - நமது நண்பன்!

Thursday, 13 October 2016

சிகரம் பாரதி 10/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 

2016.10.10 

கே.டிவி யில் இன்று 'சிங்கம்' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு அருமை. அவருக்கு மட்டுமே இம்மாதிரியான திரைப்படங்கள் பொருந்தும். மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு தான். நமக்கு முன்னால் நடக்கும் சமூக அநீதிகளைக் கண்டு நம் மனம் பொங்கும். அவ்வேளையில் அதற்குக் காரணமானவர்களை அடித்து நொறுக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனாலும் நாம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வோம். ஆனால் திரைப்படத்தில் சூர்யா நாம் பொறுத்துப் போகிறவர்களையெல்லாம் போட்டு வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது நம் மனம் 'சபாஷ்' எனச் சொல்லும். அதனால்தான் இம்மாதிரியான திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன். 'அஞ்சான்' கூட சூர்யாவின் திரைப்படம் தான். ஆனாலும் 'அஞ்சான்' தோற்றுப்போனது. காரணம் இவ்விரு திரைப்படங்களும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சிப் பிரதிபலிப்புகள் வெவ்வேறானவை. 'சிங்கம் 2' கூட இதேமாதிரியானதுதான். 'சிங்கம் 3' கூட விரைவில் வெளிவர போகிறதாம். நம் உணர்ச்சிகளை யாரோ ஒருவர் காசாக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். நாம் விழித்துக் கொள்ளும் வரை வியாபாரம் தொடரும்...

2016.10.11

நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.


இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன்.

தோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!

2016.10.12

தேயிலைத் துறையின் எதிர்காலம்.

இலங்கையின் தேயிலைத் துறையில் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் காணி உரிமை , கல்வி போன்ற சிக்கல்கள் தற்போது காணப்படும் அதே நேரம் மற்றுமொரு பேராபத்தும் நமது தேயிலைத் துறைக்குக் காத்திருக்கிறது. அதுதான் ஊழியர்படை. இது என்ன புதுப் படையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஒரு நாட்டின் ஊழியர்களை / தொழிலாளர்களை ஊழியப்படை என்றழைப்பர். தற்போது தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. சிலர் வியாபாரங்களைத் தொடங்கியிருக்கின்றனர். மரக்கறி உற்பத்தியாளர்களாயிருக்கின்றனர். சிலர் கொழும்பிலும் பிற மாவட்டங்களிலும் பணி புரிகிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு படிப்படியாக மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெவ்வேறு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி குறைவடையும். பின் நஷ்டமடைந்து மூடப்படும் அபாயம் உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளாய் மலையகத்தின் அடையாளமாய் விளங்குவது தேயிலை உற்பத்தியாகும். இலங்கையின் பொருளாதாரத்திலும் கணிசமான பங்கு தேயிலை உற்பத்திக்கு உண்டு. மேலும் உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல கேள்வி உள்ளது.


ஆகவே தேயிலைத் தொழிலாளர்களின் வீழ்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும். இலங்கையில் தேயிலைத் தொழிலை நவீன மயப்படுத்துவதனூடாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உள்ளீர்க்க முடியும். தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க வேண்டும். மேலும் இலங்கைத் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தேயிலைத் துறையை அழிவிலிருந்து காக்க முடியும். செய்வார்களா?

Tuesday, 11 October 2016

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.

இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன். அவரது தற்கொலை மரணம் தொடர்பில் இலங்கையின் செய்தி இணையத்தளமான 'கருடன் நியூஸ்' பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

# திருமணம் நடந்து 21 நாட்களில் இளம் பெண் தற்கொலை. ராகலையில் சம்பவம்!

திருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #

நமது காவல்துறை விசாரணையில் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. இனியும் சாதிக்கப் போவதில்லை. அவரது மரணத்தில் ஏதேனும் மர்மங்கள் இருந்தால் அதனை காலம் நிச்சயம் வெளிக்கொண்டுவரும். ஆனாலும் காலத்தால் நமது தோழி கவிஞர் கவீதாவை திருப்பிக் கொடுக்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது. 

தோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!

Monday, 10 October 2016

தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

தமிழாக்கம் - விரிவாகப் பேசப்படவேண்டிய விடயம். அதற்கு முதலில் நீங்கள் நமது முதலாவது பதிவை படித்துவிட்டு வரவேண்டும். இணைப்பு இதோ:


தமிழாக்கம் என்பது என்ன? பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்துவது. அதாவது பிறமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ப் பதத்தைக் கண்டறிவதாகும். எதையெதை மொழிபெயர்க்கலாம்? பெயர்ச்சொற்கள் தவிர்ந்த அனைத்தையும் மொழிபெயர்க்கலாம். ஏன் பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது? பெயர்ச்சொற்கள் குறிப்பிட்ட ஒருவரை அல்லது குறித்த ஒரு பொருளை விளிப்பதற்கு பயன்படுவது. பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்தால் சொல்லின் மூலம் சிதைந்து விடும். ஆகவே பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது.

தொடர்ந்து ஒருவிடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது கடந்த வருடம் (2015) டிசம்பர் மாதத்தில் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கும் எனக்குமிடையில் பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது குறித்து நடந்த உரையாடலை இங்கே தருகின்றேன். # கவிஞர் மகுடேசுவரன் : செய்கோள் தொலைக்காட்சிச் சேவைக்கு டாடா நிறுவனக் குடையைப் பயன்படுத்துகிறேன். அதில் ஒரேயொரு ஆங்கில இசைக்காட்சி வாய்க்காலுக்கு (Music Channel) இணைப்பைப் பெற்றுக்கொள்ள விருப்பம். எந்த வாய்க்காலைத் தேர்ந்தெடுக்கலாம் ? முன்னாளில் எம்டிவி போன்றவற்றில் கண்ட ஆங்கிலப் பாடல்களின் காணொளிகள் நற்களிப்பைத் தந்தன. பிற்பாடு அவை வெறுமனே விளம்பூது நிகழ்ச்சிகளாய் மாறிவிட்டன. நான் அவற்றைப் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டேன். பார்க்கத் தகுந்த பாடற்காணொளிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகின்ற ஒரேயொரு வாய்க்காலைப் பரிந்துரையுங்கள்.

நான்: டாடா என்பது தமிழ்ப் பெயரா? (Tata is the tamil name? ) - என்ற கேள்வியில் துவங்கி பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது வரையில் நீண்டது. பின்...

கவிஞர் மகுடேசுவரன் : என்னுடைய தமிழ்ப்பணி உனக்குக் கிண்டலாகத் தெரிகிறதா ?

வாசகர் செந்தாமரை கொடி : சகோதரர் சிகரம் பாரதி அவர்களே பெயர்ச் சொற்கள் வேறு , மனிதனை சுட்டும் அடையாளமாம் பெயர் என்பது வேறு. தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை.

கவிஞர் மகுடேசுவரன் : எல்லாப் பெயரையும் எம்மொழியாக்கும் உரிமை எமக்குண்டு. எம்மொழிப்பெயரையும் அந்தந்த மொழியினர் அவர்க்கேற்றபடி ஆக்கிக்கொள்ளலாம். இதை நான் உன்னிடம் ஏற்கெனவே தெளிவாகக் கூறியிருக்கிறேன். ஈஸ்ட்வுட் என்பது ‘கிழக்குகட்டை’ . சூரியநாரயணன் ‘பரிதிமால்’தான். வேதாசலம் ‘மறைமலை’தான். என்பெயரையே தமிழில் ‘கொடுமுடியரசன்’ என்று ஆக்கி அழைக்கும் உரிமை தமிழர்க்குண்டு. ஆள்பெயர் கடவுச்சீட்டுத் தன்மை பெறுவதால் அவ்வாறு செய்வதில்லை. அதாவது மொழி வளர்ப்பில் ஊக்கத்துடன் செயல்படவேண்டிய அருஞ்செயல்கள் பல உள்ளதால் இதைச் செய்யாதிருக்கிறோம், தேவை நெருங்கின் செய்வோம் அவ்வளவுதான். இவற்றையெல்லாம் நான் முன்னொரு பதிவில் விரிவாக எடுத்துரைத்தேன். அவற்றை ஏற்கவில்லை என்றால் சரி, அமைதிகாக்க வேண்டும். முகநூல் என்பதை இந்நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறியவும்.

வாசகர்  செந்தாமரை கொடி : நல்ல விளக்கம் கவிஞரே..

வாசகர்  கவிஞர் ஜெயதேவன் : தொடர்ந்து உங்கள் வாதங்கள் பார்க்கிறேன். ஆங்கில மக்கள் மதுரையை அவன் வசதிக்கு மெஜுரா என்று அழைத்தனர். பல ஊர்கள் இவ்வாறே. அதே சமயம் அவன் பெயரை சேக்ஸ்பியர் என்பதை செகப்பிரியர் ஆக்கினோம்.அதுவும் நிற்கவில்லை. ஆகவே சரி தவறு என்பதை விட தொடர வாய்ப்பு உண்டா இல்லையா என்பதே  என் ஐயம்.

வாசகர் ராதாகிருஷ்ணன் செல்வராஜ் : விளம்பூது?

கவிஞர் மகுடேசுவரன் : விளம்பு ஊது. விளம்பி ஒலிக்கின்றன.

வாசகர் அனோஜன் திருக்கேதீஸ்வரன் : எல்லாச் சொற்களையும் நேரடியாக மொழிபெயர்ப்பதில் இருக்கும் அபத்தத்திற்கு இந்த நிலைத்தகவல் ஒரு நல்ல உதாரணம்.

கவிஞர் மகுடேசுவரன் : நான் ஒன்றும் தனித்தமிழ் சர்வாதிகாரி அல்லன். ஆனால் நான் தனித்தமிழில் எழுதுவதும் எழுத முயல்வதும் அதை எண்ணற்றோர் விரும்புவதும் பலரின் உறக்கத்தைக் கெடுக்கிறது என்பது தெரியும். தனித்தமிழுக்கு எதிரான உங்களுக்கு இருக்கும் நியாயங்களைவிட, என்னுடைய நியாங்கள் என்ன எளிதானவையா ?

வாசகர் அனோஜன் திருக்கேதீஸ்வரன் : மொழி நவீனமாதல் என்பது இயங்கியல் வளர்ச்சியில் இன்றியமையாதது. அதேபோல மொழியில் ஜனநாயகத் தன்மை அதிகரிக்கவேண்டியது அம்மொழியின் நிலைப்புக்கு அவசியமானது.

கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். உருவாக்கப்படும் கலைச்சொல்லானது சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சாதாரண மக்களும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கவேண்டும். இல்லையேல் அக்கலைச் சொல்லும் அல்லது அதே பொருளைக் குறிப்பதற்காய் உருவாக்கப்படும் ஏனைய சொற்களும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு அதன் மூலச்சொல்லையே பயன்படுத்தும் நிலை ஏற்படும். எம்மிடம் இதற்கு நல்ல உதாரணங்கள் பல உள்ளன.

சைக்கிளுக்கு மிதிவண்டி என்ற எளிமையான கலைச்சொல்லும் இருந்தது , துவிச்சக்கரவண்டி என்ற சாதாரண மக்களின் மொழியில் இருந்து சற்றே அந்நியமான கலைச்சொல்லும் இருந்தது. எளிமையான சொல்லை விடுத்து அந்நியமான சொல்லை பரப்ப முனைந்ததன் விளைவு, இப்போது மக்கள் இரு கலைச்சொல்லையும் தூக்கியெறிந்துவிட்டு 'சைக்கிள்' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

கலைச்சொல்லுருவாக்கம் என்பதன் நோக்கம் மொழிக்கு ஒரு புதிய சொல்லைச் சேர்ப்பது மட்டும் அல்ல. அது மொழியின் நவீனத்துவத்துக்கும் ஜனநாயகத்தன்மை அதிகரிப்புக்கும் உதவவேண்டும். அவ்வாறு இல்லாத போது உருவாகும் அக் கலைச்சொல் மொழியை மெல்லக் கொலை செய்யும்.

நேரடி மொழிபெயர்ப்பினால் கலைச்சொல்லை உருவாக்குதல், புலமையைக் காட்ட கலைச்சொல் உருவாக்குதல், மொழியின் தூய்மை எனும் பெயரில் பெயர்களை மொழிபெயர்த்தல் போன்றவை மிகவும் ஆபத்தானதும் அபத்தமானதுமாகும். மொழியில் இயங்கியலை சிதைக்கும் செயலாகும்.

கவிஞர் மகுடேசுவரன் : அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போகலாம் !

வாசகர் கவிஞர் ஜெயதேவன் : மன்னிக்கவும் சார். மொழிச் சர்வாதிகாரன் அல்ல என்று சொன்ன தாங்கள் இப்படி பட்டென்று சொல்லியிருக்கக்  கூடாது. அந்தக் கருத்து நியாயம் இல்லையா? பிடிக்காவிடில் எளிய வழி விருப்பக்குறி போட்டு விலகி விடலாம். உங்கள் பணியை காலம் கொண்டாடும்.
வாசகர் மஹிந்தீஷ் சதீஷ் : சொற்களைத் தத்தெடுத்துக் கொள்வதால் ஒரு மொழி அழியுமா வளருமா...? தனி ஆங்கிலம் என்று அடம்பிடித்தி்ருந்தால் இன்று வரை அம்மொழி நிலைத்திருக்க முடியுமா..?

கவிஞர் மகுடேசுவரன் : பிள்ளை பெற வழியில்லாதவர்களுக்குத் தத்தெடுப்பு ஒரு நல்ல வழி.

வாசகர் venkalukam  :  பிறக்கின்ற குழந்தை நன்றாக இருந்தால் நலம்.

வாசகர் சங்கர் நீதிமாணிக்கம் : Musical channel - என்பதற்கு இசைக்காட்சி வாய்க்கால் என்பதற்கு பதில் வேறு சிறந்த சொல்லுருவாக்கம் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன். Channel - ஒளியலைவழி அல்லது தொலையொளிபாதை அல்லது ஒளிப்பாதை, Musical - பண்ணிசை, நல்லிசை.

வாசகர் கணேசன் நடராஜன் : இப்போது நான் உணர்கிறேன் , தந்தை பெரியார் ஏன் தமிழ் மொழியை விமர்சித்தார் என்று. ( Now I realized, Why "Thanthai Periyar" Criticized Tamil language". ) #

இது மிக நீண்ட நெடிய விவாதம். என்னுடைய ஆரம்பக் கேள்வி மட்டும் ஏன் இங்கு இருக்கிறதென்றால் இவ்வளவை மட்டுமே என்னால் மீட்டெடுக்க முடிந்தது. காரணம் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் என்னை அவரது பக்கத்தைப் பார்ப்பதில் இருந்து தடை செய்துவிட்டார். அதன் பின்னரே என்னால் இப்பதிவின் முதலாவது அத்தியாயம் எழுதி வெளியிடப்பட்டது. எந்தவொரு மொழிச் சொல்லையும் அது பெயர்ச் சொல்லாக அல்லது வர்த்தக நாமமாக இருப்பினும் கூட அதனை மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு செய்யும் உரிமை உண்டு என கவிஞர் மகுடேசுவரன் வாதிட்டார். ஆனால் நான் பெயர்ச் சொற்கள் மற்றும் வர்த்தக நாமங்களை மொழியாக்கம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என வாதிட்டேன். இந்தக் கருத்து மோதலே என்னை அவரது பேஸ்புக் நட்பு வட்டாரத்தில் இருந்து தடை செய்யக் காரணமாய் இருந்தது.

மேலும் நான் 2015, நவம்பர் 05 இல் இப்படியொரு பதிவை விட்டதாக பேஸ்புக் வரலாறு சொல்கிறது:

# தமிழாக்கம் மற்றும் அது சார்ந்த சிக்கல்கள். 

தற்போது தமிழில் பிறமொழி அல்லது ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருக்கிறது. நாம் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்தேனும் ஆங்கில வார்த்தையாக இருக்கிறது. பிறமொழிகளின் ஆதிக்கம் தமிழின் மீது அதிகமாகக் காரணம் தமிழில் பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ப் புத்தாக்கம் விரைந்து இடம்பெறாமையாகும். தற்போது உலகம் உள்ளங்கையில் சுருங்கிவரும் வேளையில் தமிழாக்க முயற்சிகள் பரவலாக இடம்பெற்று வருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள். தமிழாக்கம் என்னும் எண்ணக்கருவை ஓரிரு வரிகளில் விளக்கி உரையாடிவிட முடியாது. அது பாரியதொரு எண்ணக்கருவாகும். தமிழாக்கம் தொடர்பில் இவ்வேளை உரையாட வந்தது அது தொடர்பில் காணப்படும் பிரதான சிக்கல் ஒன்றுக்கு தீர்வு காணும் எண்ணமே.

பிறமொழிச் சொற்களை - அதாவது - அன்றாடப் பயன்பாட்டுக்குரியவை, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் , தொழினுட்பச் சொற்கள் போன்றவற்றை கட்டாயம் தமிழ்ப்படுத்த வேண்டும். இவை அகராதிகளில் இடம்பெறும். அன்றாடப் பயன்பாட்டுக்கு உள்ளாகும். கல்வித் தேவைகளுக்கு துணை புரியும். பிறமொழி அறிவு அற்றவர்களுக்கு விளங்கிக் கொள்ள உதவும். ஆனால் பிறமொழியில் அமைந்தது என்பதற்காக பெயர்ச் சொற்களை தமிழ்ப்படுத்துவது முறையாகுமா என்பதே என் கேள்வி. பேஸ்புக் - ஐ முகநூல் என்று சிலர் பயன்படுத்திவந்தனர். தற்போது வாட்சப் - ஐ என்வினவி என்று கவிஞர் மகுடேசுவரன் தமிழ்ப்படுத்தியுள்ளார். இது பிழை என்பது என் வாதம்.

கவிஞர் மகுடேசுவரன் தமிழில் புத்தாக்கச் சொற்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உண்ணீர், உழுநீர், இருப்பூர்தி, விரைவிருப்பூர்தி, விலைத்தண்ணீர் போன்று பல புதுத் தமிழ்ச் சொற்களை அளித்து தமிழுக்கு அழகு சேர்க்கும் இனியவர். ஆயினும் கவிஞர் வாட்சப் - ஐ என்வினவி என்று தமிழ்ப்படுத்தியதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

வாட்சப் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு வர்த்தக நாமம். அது ஒரு பெயர்ச்சொல். பெயர்ச்சொல் மொழிகளைக் கடந்தது என்பது என் கருத்து. ஒரு வர்த்தக நாமத்தை தமிழ்ப்படுத்த வேண்டுமானால் அதனை அதன் உரிமையாளரே மேற்கொள்ள வேண்டுமேயன்றி நாமல்ல. அப்படியே செய்தாலும் ஏர்டெல், ரிலையன்ஸ், லக்ஸ், சர்ப் எக்செல் , டிட்டோல் , விக்ஸ் , நோக்கியா, சோனி , லாவா என இருக்கும் வியாபார நாமங்களுக்கும் ஒவ்வொருவரின் பெயர்களுக்கும் தமிழாக்கம் செய்ய நேரிடும். அது சாத்தியமில்லை ; பொருத்தமில்லை. 

ஆகவே பெயர்ச் சொற்களை தமிழாக்கம் செய்வது தவறாகும் என்பது என் கருத்து. இது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

பி.கு: இது கவிஞர் மகுடேசுவரனுக்கு எதிரான பதிவல்ல. பெயர்ச் சொற்களை தமிழ்ப் படுத்துவதற்கு மாத்திரம் எதிரான பதிவாகும். ஆரோக்கியமான விவாதக் களத்தை எதிர்பார்க்கிறேன். #

அடடே, நான் நல்லாத்தான் எழுதியிருக்கேன். இதுல எதுனாச்சும் பிழை இருக்கிறதா மக்களே? 

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts