விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல்.

நண்பா இப்படியும் ஒரு நண்பனா என்று சிந்திக்க வைத்த ஒரு நண்பன் நீ. நம் நட்பு முகம் பாராது எழுத்தைப் பார்த்து வந்த நட்பு. எழுத்துக்களைப் பற்றிய விடயங்களைப் பகிர ஆரம்பித்து இப்போது தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நீண்டிருக்கிறது எம் நட்பு. வைபரின் புண்ணியத்தில் முகம் பார்த்துக் கொண்டோம். வாட்ஸப்பின் உபயத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இணையம் தந்த இணையற்ற நட்பு உன் நட்புதான். உன்னைப் போன்றே இலங்கைக்குள் எனக்குக்  கிடைத்த நட்புதான் 'அதிசயா'. நினைவிருக்கும் என நம்புகிறேன். அவரையும் இன்னும் நேரில் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. நான் தமிழகம் வரும் வேளை முதலில் உன்னைத்தான் சந்திக்க விரும்புகிறேன். இவ்வளவு நெருக்கமாய் நம் நட்பு அமையக் காரணம் எது? தெரியவில்லை. ஆனால் பிரிவொன்று நேர்ந்துவிடக் கூடாது என்பது மட்டுமே என் பிரார்த்தனை.

இல்வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அண்மைக் காலங்களில் தங்கையுடன் உரையாடினாயல்லவா? கல்விப் பிண்ணனி குறைவாக இருந்தாலும் குணத்தில் நிறைவாக இருக்கிறார். மகிழ்ச்சி. இப்போது வானவல்லியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். செங்குவீரனை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறேன். வானவல்லியுடனான பயண அனுபவத்தை உன்னோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். வானவல்லி எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாகவே இருக்கிறது. சங்ககால வரலாற்றை கட்டுரை வடிவில் வாசித்து நினைவிலிருத்திக் கொள்வது கடினம். மேலும் எல்லோரும் வரலாற்று ஆய்வுகளை வாசிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் வரலாற்றுப் புதினம் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சிறுவயதில் பல ராஜா கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். ஆகவே எதிர்காலத்தில் சங்ககால வரலாற்றுக்கான ஆதாரமாக வானவல்லி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வென்வேல்சென்னி சிறப்பாக அமைய என் முன் கூட்டிய வாழ்த்துக்கள். வானவல்லிக்கு முன்னைய காலகட்டத்தில் நிகழும் கதை என்பது இன்னும் எதிர்பார்ப்புக்குரியதாகிறது. வானதி பதிப்பகத்தில் வானவல்லி வெளியானது புதினத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும் நண்பனின் வானவல்லிக்கு முன்னால் நான்காயிரம் ரூபாயெல்லாம் ஒரு பொருட்டல்ல. வென்வேல் சென்னி பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் நிச்சயம் வாங்குவேன். ஏனெனில் என் நண்பன் நீ!  புதினங்களை வாசித்து நாளாகிவிட்டது. என் வாசிப்புத் திறனை வானவல்லிக்காய் தூசு தட்டி எழுப்பியிருக்கிறேன்.

நம் நட்பு வலைத்தளம் பரிசளித்தது. உன் வேலைப்பழுவுக்கு மத்தியிலும் வென்வேல் சென்னியின் எழுத்துப் பணியையும் முன்னெடுத்துச் செல்கிறாய். ஆயினும் நம் நட்பை பரிசளித்த வலைத்தளத்தை மறந்ததேனோ? பேஸ்புக்கில் எழுதுவதை பிரதி செய்து போட்டேனும் வலைத்தளத்தை தொடரவும். இடுகையின் அளவு ஒரு பொருட்டல்ல. மேலும் நீ தனி இணையத்தளத்தை தொடங்கியதற்குப் பின் எழுதுவதை நிறுத்தியது ஏன்? மீண்டும் வலைத்தளத்தில் வெற்றியைக் காண ஆவலுடன் உள்ளேன். பேஸ்புக், வைபர், வாட்ஸப் எனப்பலவும் வந்த பின்னர் வலைத்தளங்களில் எழுதும் நம்மவரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். காரணம் தரமற்ற எழுத்துக்கள் சமூகத்தை ஆக்கிரமித்துவிடும். பத்து சொற்கள் கொண்ட வசனத்தை நான்கு வரிகளுக்கு உடைத்துப் போட்டால் அதுதான் கவிதையென நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு ஆயிரம் லைக்குகளும் (விருப்பம்) பலநூறு கருத்துக்களும் வேறு. இந்த ஆபத்தான நிலைக்கு மேலும் வலு சேர்ப்பவர்களாக நாமும் இருந்துவிட வேண்டாமே? தமிழ் வலையுலகை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடப்பாடு நமக்கும் உண்டு என்பதை மறவாதே.

நிற்க உன் தொழில் நிலவரங்கள் எப்படி? வரவு - செலவு நிலை எப்படி? வீட்டாரை நலம் விசாரித்ததாகச் சொல்லவும். விரைவில் இருபத்தோராம் நூற்றாண்டின் வானவல்லியைக் கரம்பிடித்து நமது வருத்தப்படாத திருமணமான வாலிபர் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். அண்டை மாநிலத்தில் சென்று தொழில் செய்கிறாய். அங்குள்ள சூழல் எவ்வாறு இருக்கிறது? ஓய்வு நேரம் கிடைக்கிறதா? சக பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? தமிழக தொழில் சூழலுக்கும் கர்நாடக தொழில் சூழலுக்குமிடையில் ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளனவா? கர்நாடகத்தில் தமிழ் எழுத்துக்கான களம் இருக்கிறதா? அங்குள்ள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?

என் கடிதம் கேள்விகளால் நிரம்பி வழிகிறது என்று நினைக்கிறேன். முடியுமானவற்றுக்கு பதில் தரவும். விரைவில் மற்றுமொரு நேர்காணலை உன்னுடன் நடத்த விரும்புகிறேன். முதல் நேர்காணல் வானவல்லியுடன் மட்டும் தொடர்பு பட்டதாக இருந்தது. இரண்டாவது நேர்காணல் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

மேலும் இக்கடிதம் முழுவதையும் கைப்பேசியினூடாகவே எழுதினேன். பதில் கடிதம் கண்டதும் அடுத்த கடிதத்தில் இன்னும் பேசலாம்.

இப்படிக்கு
சிகரம்பாரதி.

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!