Sunday, 9 October 2016

சிகரம் பாரதி 9/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

2016.10.08

இது எனக்கு வாட்ஸப்பில் வந்த ஒரு கதை. சுவாரசியமாக இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்!  

எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். 

மகனே... நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே . நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. 

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்துகத்தினான். 'அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே.. இங்க இருக்கார்..'என்று அலறினான்.அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். 
#பொண்டாட்டின்னா_எமனுக்கே_பயம்.

2016.10.09

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசு முதலாளிமார் பக்கமே பேசி வருகிறது. தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் பின் வருமாறு பேசியுள்ளார்.

''சம்பளத்தை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கேட்பது தற்போதைக்கு சாத்தியமற்றது உலக சந்தையில் தேயிலை, ரப்பர் ஆகிய பெருந்தோட்டத்துறையில் பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி கூறியிருந்தன. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கட்டாயம் தேவை என்ற கோணத்தில் பார்த்து தான் ரூ. 730 ஆக அதிகரிக்க செய்திருக்கின்றோம்'' என்று கூறினார்.

வேலை நாட்கள் எண்ணிக்கை பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. அது பற்றி இன்னமும் பேச வேண்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் இரு தரப்புடனும் பேசி முடிவொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் சம்பள அதிகரிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அவர்களுக்கு கிடைக்குமா? என்று அவரிடம் கேட்ட போது '' இந்த சம்பளம் அரசாங்கம் கொடுப்பது அல்ல. தோட்ட நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும். அதனை கொடுப்பதற்கு லாபம் இருக்க வேண்டும்'' என பதிலளித்தார் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன  - என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் தொழில் புரியும் மலையக உறவுகள் 2016.10.07 அன்று கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதுதவிர மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போவுக்கு சுமார் 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் இதுவரை நஷ்டத்தைத் தவிர இதுவரை வேறு எதையுமே தம் வாழ்நாளில் கண்டதில்லையே? தொழில் அமைச்சர் மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிய தெளிவுடன் தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு நாளைக்கு ரூ 730 சம்பளம். வாரத்திற்கு ஆறு நாள் கணக்குப்படி ஒரு மாதத்துக்கு பார்த்தாலே 26 x 730 = 18980 ரூபா. ஊழியர் சேமலாப நிதி ரூபா 1518.40 கழிக்கப்பட்டால் கைக்குக் கிடைக்கப் போவது ரூபா 17461.60 தான். குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் உழைப்பதாக எடுத்துக்கொண்டாலே 2 x 17461.60 = 34923.20 ரூபா மட்டுமே வருமானமாகக் கிடைக்கும். இது ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தின் செலவுக்குப் போதுமானதாக இருக்குமா? இதில் தொழிற்சங்க சந்தாக்கள் வேறு. இந்த நிலையில் மூன்று அல்லது நான்கு நாள் வேலை கொடுத்தால் சம்பளமாக கைக்கு எவ்வளவு தான் கிடைக்கும்? சிந்தித்துப் பாருங்கள். தனியார் நிறுவனங்களைப் போல மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு , போயா மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை. ஆகவே இந்த சம்பளம் போதுமானதா என நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளப்படி 26 நாட்களுக்கு குடும்பத்தில் இருவர் தொழில் புரிந்தால் ஊழியர் சேமலாப நிதி பிடித்தம் போக கைக்கு 47840 ரூபா கிடைக்கும். ஆனால் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஏனையோருக்கு சம்பளம் லட்சங்களில் இருக்கும். இது எந்த விதத்தில் நியாயம்? இப்போது சொல்லுங்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் நியாயமானது தானே? 

2 comments:

  1. கதையும் சுவாரஸ்யம் தொழிலாளர்கள் சார்பாக சொல்லியுள்ள நியாயம் மிகச்சரியானதே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...