Share it

Friday, 27 December 2013

நீ - நான் - காதல் - 04

கருவிழியிரண்டு 
கண்கொட்டாமல் 
பார்க்குதென்னை
பலப் பல கனவுகள் 
காண்கின்றேன் 
கயல்விழிகளில் 


ஒரு பார்வைக்குள் 
ஓராயிரம் பிரிவுகள் 
வெட்கப் பார்வை 
மோகப் பார்வை 
அன்புப் பார்வை என 
இன்னும் பல 

எத்தனை தடவை 
எப்படிப் பார்த்தாலும் 
அத்தனையிலும் தெரிவது 
அகத்தினில் தேங்கிக்கிடக்கும் 
கற்கண்டு உள்ளத்தாள்
கன்னியவள் காதல்!

Tuesday, 24 December 2013

சிகரம்பாரதியின் பிறந்தநாளும் நத்தாரும்!

                        
   

                   வணக்கம் வாசக நெஞ்சங்களே! முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ் இனிய நத்தாரில் உங்கள் மனதிலிருக்கும் கவலைகள் நீங்கி இன்பங்கள் பெருகவும் எண்ணியவை எண்ணியபடி கைகூடவும் வருகின்ற நாட்கள் இனிமையாக அமையவும் மனதார வாழ்த்துகிறேன்.

 
 
அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று எனது பிறந்தநாளும் கூட. முதலில் எனக்கு நானே "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறிக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை மட்டுமல்ல, ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.
 
 
 
உங்கள் 
அன்பின் 
சிகரம்பாரதி.

Sunday, 22 December 2013

முக நூல் முத்துக்கள் பத்து - 04

01. ♦என் தாத்தா பூமியை தோண்டிய போது

அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம்

♦என் அப்பா பூமியை தோண்டிய போது


அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம்

♦நான் பூமியை தோண்டிய போது

எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது

♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு

நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்.....


02. கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு..

எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு
உன்னைமட்டும் முத்தமிடுகிறது.. 

#சுட்டவை

03. வாழ்வில் நீ 
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி 
நினைவுக்கு வந்தால்
உன்னை வெல்ல யாராலும் முடியாது.

04. நீ
படிக்கிற அழகை
நினைத்து நினைத்து
எழுத முடியாமலே போய்விட்டது
உனக்கான கடிதத்தை
-பழநிபாரதி
(முத்தங்களின் பழக்கூடை)

05.
 Atshan Maddox's photo.

06. நீ
வெள்ளாடை
அணியும்
நாட்களெல்லாம்
வேண்டுமொரு
வங்கக்கடலின்
தாழ்வு மண்டலம்...


07.ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது இன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
ஆய்வதும் இல்லை பேருக்கும்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறவா!? இவ்வாறே
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்

08.
Kirishna Thileepan's photo.

09. 'சே'வின் மோட்டார் சைக்கிள் டையறியிலிருந்து...
"ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை என்பதுதான் உண்மை. இவர் இல்லாவிட்டால் இன்னொருவர. பெயர்தான் மாறுமே ஒழிய அரசு அமைப்பு மாறாது. ஒடுக்குடமுறை மாறாது. இருந்தாலும் தேர்தல் என்றொரு சடங்கு நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மக்களும் வேறு மாற்று இல்லாததால் இந்த ஏமாற்று நடைமுறையைத்தான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவர் சரியில்லை என்று பட்டால் அவரைக் கொண்டு வருகிறார்கள். அவர் சரியில்லாது போனால் மீண்டும் இவர் அல்லது, இன்னொருவர்."

10.
ஆசிரியர் பக்கம்'s photo.
 


Wednesday, 6 November 2013

மரண வீதி!

வணக்கம் வாசகர்களே! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மகிழ்ச்சியான செய்தியுடன் சந்திக்க முடியவில்லை. ஒரு விபத்து மற்றும் இரு கொலைகளால் நிகழ்ந்த மரணங்களைப் பற்றிப் பேசுவதே பதிவின் நோக்கம்.

முதலாவது பேரூந்து விபத்து பற்றியது. இலங்கையின் பண்டாரவளை - பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பத்துப் பேர் மரணமடைந்துள்ளதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளனர். பதினாறு வயது மாணவி முதல் ஐம்பத்தைந்து வயது முதியவர் வரை பாகுபாடின்றி காலன் காவு கொண்டுள்ளான். பேரூந்தானது கடந்த நான்காம் திகதி மாலை ஏழு மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இரண்டாவது ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அபகரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அடுத்தது, யாழில் இளம் பெண்ணொருவர் ஐந்து பேரினால் கடுமையான பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டு கிணற்றில் வீசப்பட்டமையினால் மரணமடைந்துள்ளார். பெற்றோர், ஊரார் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். குறித்த பெண் நீச்சல் தெரிந்தவர் என்றும் அவரால் எதுவுமே செய்ய முடியாதளவில் வன்புணர்வுக்குள்ளாக்கப் பட்டுள்ளார் என்றும் அறிய முடிகிறது.

ஒவ்வொருவருக்கும் அவரது பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்க முடிவதில்லைதான். அதற்காக இப்படியா இறக்க வேண்டும்?

இவை தொடர்பான இலங்கையின் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான சக்தி யின் பிரதான செய்தி அறிக்கையின் ஒரு பகுதி இதோ:


Sunday, 22 September 2013

கந்தசாமியும் சுந்தரமும் - 01

"கந்தசாமி அண்ணே ஏன் அமைதியா உக்காந்திருக்கீங்க?" - வீட்டு முன்றலில் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கந்தசாமியிடம் வினவினான் சுந்தரம்.

"யாரு சுந்தரமா? வாப்பா... அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு உலக அமைதி தினமில்லையா? அதான்." - என்று குசும்பாகக் கூறினார் கந்தசாமி.

"உலக அமைதி தினம் - மாகாண சபைத் தேர்தல்! ஆஹா என்ன ஒரு பொருத்தம்?"

"ஆமா சுந்தரம். நானும் அத தான் யோசிச்சேன். நீயே சொல்லிட்ட."

"ஆமாண்ணே யாருக்கு வாக்களிச்சீங்க?"

"தேர்தல் முடிவு வரட்டும், சொல்றேன்."

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"செவுத்துக்குக் கூட காதிருக்கும். யார் காதுல சரி விழுந்தா விவகாரமாகிப் போகுமடா."

"அதுவும் சரிதாண்ணே! இந்த மாகாண சபைத் தேர்தல் பத்தி என்ன நினைக்கிறீங்க?"
 

 "ஒரு முடிவோட தான் வந்திருக்க போல?"

"நம்ம என்ன முடிவெடுக்குறது? மக்கள் அவங்களோட முடிவ சொல்றதுக்கான 9 மணித்தியால கால அவகாசம் முடிஞ்சு போச்சு. நம்ம மன ஆறுதலுக்காக எதுனாச்சும் பேசலாமேன்னு தான் கேட்டேன்."

"நீ சொன்னது ரொம்ப சரி. இந்த முறை தேர்தல்ல 3 மாகாணங்களிலுமே 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு நடந்திருக்குன்னு செய்திகள்ல சொன்னாங்க."

"ம்... நல்ல முன்னேற்றம்னு சொல்லுங்க."

"முன்னேற்றம்தான். முடிவும் மக்களுக்கு சாதகமா வந்தா முழுமையான முன்னேற்றமா இருக்கும்."

"ஆமாண்ணே. யாழ்ப்பாணத்துல ஏதோ பத்திரிகை ஒன்னு போலியா வெளியாகியிருக்காமே?"

"ஆமா சுந்தரம். எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு சம்பவத்த கேள்விப்பட்டதில்ல. தேர்தல் தினத்துல தமிழர்களுக்காக குரல் கொடுக்குற உதயன் பத்திரிகையைப் போலவே அதன் பெயரைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் போட்டு ஒரு பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டிருக்காங்க."

"உண்மையிலேயே இது ஒரு தரக்குறைவான செயல்தாண்ணே. பண்ணுனது யாராயிருக்கும்ணே?"

"நானா பக்கத்துல இருந்தேன்? எல்லா சிக்கலான கேள்வியையும் என்கிட்டயே கேளு!"

"பக்கத்துல வேற யாருண்ணே இருக்கா?"

"சரி.. சரி.. வழக்கம்போல விசாரணை, வழக்குன்னு கொஞ்ச காலத்துக்கு செய்திகள் வெளிவரும். அப்புறம் சம்பந்தப்பட்டவங்களே மறந்துட வேண்டியது தான்."

"தேர்தல் வன்முறைகள் குறைவு போல?"

"குறைவா? இன்னிக்கு மட்டும் 202 முறைப்பாடுகள் கிடைச்சிருக்கு. இன்னும் முறைப்பாடுகள் கிடைக்காதது எத்தனையோ?"

"நா வாற வழிலயும் ரெண்டு கட்சிக்கு ஆதரவா நம்ம கிராம மக்களுக்குள்ள ஒரு சின்ன மோதல்..."

"தேர்தல் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுதே தவிர, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய வாய்ப்பாக யாராலயுமே பாக்கப்படுறதில்ல. அதான் பிரச்சினை."

"ஆமாண்ணே. தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவழிக்கப் படுற பணத்தில் மக்களுக்கு ஏதாச்சும் செஞ்சா நல்லாருக்கும்ல?"

"சரியா சொன்ன சுந்தரம். ஆனா நம்ம ஜனநாயக நாட்டுல எங்க அப்படியெல்லாம் நடக்குது? மக்கள்கிட்ட இருந்து பணத்தைப் புடுங்கப் பாக்குறாங்களே தவிர, அவங்களுக்கு குடுக்கணும்னு யாரும் யோசிக்கிறதில்ல."

"எல்லாருமே அப்துல் கலாம் மாதிரி இருப்பாங்களா?"


"ஓ . உனக்கு அவரையெல்லாம் தெரியுமா?"

"ஆமாண்ணே. அவர தெரியலன்னா எப்படி? சரிண்ணே, நா போய்ட்டு அப்புறமா வாறேன்."

"என்ன, திடீர்னு கெளம்புறாப்ல?"

"நேரமாச்சுண்ணே. ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பி தேர்தல் விசேட ஒளிபரப்பைப் பாக்கணும்."

"இன்னும் அந்த பழக்கத்த நீ விடலையா? நாளைக்கு பகல் செய்தி அறிக்கையைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது."

"மீண்டும் நாளை சந்திப்போம்ண்ணே!"

"சரிடா சுந்தரம்!" 

Sunday, 15 September 2013

கற்பிழந்தவள்

வணக்கம் நண்பர்களே!

நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.01. நலம் தானா தோழர்களே?

02. வேலைக்கு போறேன்!.

03. குருவியின் பயணம்

04. நட்சத்திர நிலவுகள்

05. நீ-நான்-காதல் - 01

06. நீ-நான்-காதல் - 02

07. நீ-நான்-காதல் - 03

08. மறுபடியும் வருவேன்

09. கற்பிழந்தவள்

10. பிரிவோன்றே முடிவல்ல

11. காத்திருப்பு

உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
அன்புடன்,
சிகரம் பாரதி.

Saturday, 14 September 2013

நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா?

வணக்கம் வாசகர்களே!

இந்த வாரம் புதன் கிழமையன்று [2013-09-11] மாலை மூன்று மணி. எமது தொழிற்சாலையின் தேநீர் இடைவேளை. தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த தருணம். அந்த இடத்தில் தமிழன் என்ற வகையில் நான் மட்டுமே இருக்க, மீதமிருந்த நான்கு பேரும் சிங்களவர்கள். அப்போது அவ்விடத்தில் நவநீதம்பிள்ளை குறித்த பேச்சொன்று எழுந்தது.

 

அப்போது கருத்துரைத்த 60 வயது மதிக்கத்தக்க சக அலுவலர் கூறிய கருத்து "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி" என்பதாகும். மேலும் அவர் கூறுகையில் "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி. அதனால் தான் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழர்களுக்கு அரசு எத்தனை சலுகைகளை வழங்கியுள்ளது? சொகுசு பேரூந்துகள், தொலைக்காட்சித் திரையுடன் கூடிய புகையிரதம், பாதை, கல்வி என பல விடயங்களை அரசு வழங்கி வருகிறது. புலிகள் காலத்தில் கஷ்டப்பட்ட மக்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? மக்கள் இன்னும் உண்மையை உணராதவர்களாக உள்ளனர்." - என்று குறிப்பிட்டார். நான் பதிலேதும் சொல்லாமல் மௌனம் சாதித்தேன்.

 

இதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புலனாகிறது. தமிழர்களின் அரசியல் ரீதியான தேவை என்ன என்பதை சிங்கள மக்களில் பெரும்பாலானோர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டும் ஒரு இனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றனர். அல்லது அரசு வழங்குகின்றவற்றை மட்டும் வாயை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு போக வேண்டும் என நினைக்கின்றனர். சக மக்களின் மனங்களையும் புரிந்து கொள்ளும் போது தான் நாட்டில் சமாதானம் பிறக்கும். நவநீதம்பிள்ளை வருவதாலோ அல்லது ஐ.நா சபைத் தீர்மானங்களாலோ இலங்கையில் ஒரு போதும் சமாதானம் வரப்போவதில்லை.

இதனை சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளும் சரி, ஐ.நா சபையும் சரி தனக்கு இலாபமில்லாதவிடத்து எந்தவொரு நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் தலையிடப் போவதில்லை. ஆகவே அவர்களின் தேவைக்காக நமது நாட்டை தாரை வார்த்துக் கொடுக்க முயலாமல் சக மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வழி வகைகளை ஆராய வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இலங்கையில் சமாதானம் ஏற்படப் போவதில்லை.

http://www.tea.co.uk/images/sri_lanka_map.jpg 

எனது முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். மேலேயுள்ள வரைபடத்தில் இலங்கையில் தமிழர்கள் பரவலாக வாழும் பிரதேசத்தை மாகாண ரீதியாகக் குறிப்பிட முடியும். வடமாகாணம் (North Province), கிழக்குமாகாணம் (Eastern Province), மத்திய மாகாணம் (Central Province), சப்ரகமுவ மாகாணம் (Sabragamuwa Province) மற்றும் ஊவா மாகாணம் (Uva Province) ஆகியவையே தமிழர்கள் பரவலாக வாழும் மாகாணங்களாகும். 

தமிழர்களுக்கான சுயாட்சி கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் போராடிய போது வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை மட்டுமே "தமிழீழம்" என்று வரையறுத்தனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் "மலையக மக்கள்" வாழும் "மலையகம்" என்று அழைக்கப் படக் கூடிய மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களை தங்கள் தமிழீழ எல்லைக்குள் இணைக்கவோ அல்லது அங்கு வாழும் தமது சகோதரத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவோ இல்லை. சர்வதேசமும் சரி, சக தமிழ் மக்களும் சரி, இலங்கை அரசும் சரி மலையக மக்கள் மீது பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.

தாங்கள் இணைத்துக் கொள்ளப் படவில்லை என்பதற்காக மலையக மக்கள் ஈழத் தமிழர்களை வெறுக்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை. காரணம், மனிதாபிமானம். ஆனால் இன்றளவிலும் ஈழத் தமிழர்கள் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சரித்திரம் எங்குமே இல்லை. மலையக மக்களும் ஈழ மக்களும் ஒன்றிணையும் போது தான் உண்மையான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பது திண்ணம்.

இப்படிக்கு,
சிகரம்பாரதி.

Wednesday, 11 September 2013

புகையிரதப் பேரூந்து‘Train bus’ to Madhu Road stationed at Medawachchiya  
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். மேலேயுள்ள புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து புகையிரதமாக்கியுள்ள புதுமையே அது. ஆம், இலங்கையின் "மதவாச்சி" என்னும் இடத்திலிருந்து "மடு றோட்" என்னும் இடத்திற்கே இப் புகையிரதப் பேரூந்து பயணிக்கிறது.

மதவாச்சியிலிருந்து புறப்பட்டு செட்டிகுளம் வழியாக மடு றோட் நோக்கிப் பயணிக்கிறது. புறப்படும் இடம், நிறுத்துமிடம் அடங்கலாக மொத்தமே மூன்று தரிப்பிடங்கள் மட்டுமே.

 

 
மே  மாதம் 14 ஆம் திகதி, 2013 இலேயே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ தூரம் கொண்ட பயணப் பாதைக்கான பயணக்கட்டணம் ரூ 45 மட்டுமே. மணிக்கு 90 கி.மீ என்ற வேகத்தில் "புகையிரதப் பேரூந்து" பயணிக்கிறது. 

புகையிரதப் பேரூந்தின் உட்புறம் 

தற்போது அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான போக்குவரத்துத் தேவையினை இது பூர்த்தி செய்து வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் வீதம் மதவாச்சி மற்றும் மடு வில் இருந்து செயற்படுகிறது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள இந்த புகையிரதப் பாதையானது எதிர்காலத்தில் மன்னார் வரை விஸ்தரிக்கப் படவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது. அறியாதவர்களுக்கு இதுவும் ஓர் அதிசயம் தான். வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்!

 
கட்டுப்பாட்டுத் தொகுதி 
நன்றி:
தகவல்கள் மற்றும் படங்கள்: EXPLORE SRILANKA மாதாந்த சஞ்சிகை.
இணையத்தளம்:http://exploresrilanka.lk
மேலதிகத் தகவல்கள் மற்றும் படங்களுக்கு: ஆக்க இணைப்பு:

‘Train Bus’ to Madhu

 அன்புடன்,

சிகரம்பாரதி .

Monday, 9 September 2013

தேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எத்தனை தான் புதிது புதிதாக பாடல்கள் வந்து கொண்டே இருந்தாலும் பழைய பாடல்கள் என்றால் அதற்கு நிகர் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் புதிய பாடல்களிலும் பல அருமையான பாடல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் எப்படியோ நான் அறியேன். ஆனால் நான் பழைய பாடல்களின் பரம ரசிகன்.


இந்தப் பதிவானது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேடிப்பார்க்கும் ஒரு பதிவாகும். கருப்பொருளாக பின்வரும் பாடலடிகளில் இருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

                                                                                                 (பாரப்பா )
(திரைப்படம் : பெரிய இடத்துப் பெண் )


ஆம். உள்ளம் பற்றி வெளிவந்துள்ள பாடல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வரிகளை இங்கே பார்க்கப் போகிறோம். பாடல் வரிகளைத் தொடர்ந்து பாடல் வரிகளுக்கான எனது விளக்கமும் இடம்பெறும். முடிந்தவரை பாடல்களுக்கான YOUTUBE இணைப்பை வழங்கியிருக்கிறேன்.

                                                                    (திரைப்படம் : ஆசை முகம்)
அடுத்தவர் எப்படிப் போனால் என்ன நம் வேலை நடந்தால் சரி என்றிருப்பவர்களைத்தான் இன்றைய சமூக சூழலில் நாம் காண்கிறோம். வசதி வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்ட மனமானது மனிதத் தன்மையை இழந்து விடுகிறது. விலங்குகளுக்குள் இருக்கிற ஒற்றுமை கூட நமக்குள் இல்லையே? மனம் போன போக்கிலெல்லாம் போகாது உங்கள் இலட்சியப் பாதையைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு அந்த வழியில் சென்றால் என்றும் வெற்றி நிச்சயமே.

[2] "கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
..............................................
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
                                                                          (திரைப்படம் : பணம் படைத்தவன்)
ஏதோ பிறந்தோம், எப்படியோ வாழ்ந்தோம், காலம் முடிந்ததும் இறந்தோம் என்றில்லாமல் நமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். நம்மைப் போல் வாழ்ந்தவர் யாரும் இல்லை என்று ஊர் மெச்சும் வகையில் வாழ்வது தான் உண்மையான வாழ்வு. நம்மில் சிலருக்கு கொஞ்சம் புகழைக் கண்டவுடனேயே கடந்து வந்த பாதை மறந்து போய் விடும். அவ்வாறானவர்கள் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போன வரலாறுகள் உலகில் நிறையவே உள்ளன. ஆகவே லட்சியப் பிடிப்புடன் வாழ்ந்து இவனல்லவா மனிதன் என்ற புகழோடு மரித்துப் போக வேண்டும். ஒரு மனிதனுக்கு மறுபிறப்பென்று ஒன்று உண்டென்றால் அது சாதனையால் வருவதாக மட்டுமே இருக்க முடியும் என்பது திண்ணம்.

[3] "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா [2]
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா.[அஞ்சி] நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா.ஹேய்.... [நெஞ்சம்] . உண்டு உண்டு என்று நம்பி காலை எடு. இங்கு உன்னை விட்டால் பூமி ஏது , கவலை விடு. [உண்டு] ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து. [ரெண்டில்] அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து......
                                                                        [திரைப்படம் : என் அண்ணன் ]
நம்முடைய செயல்கள் அனைத்திற்குமே உள்ளம் தானே காரணம்? நெஞ்சில் துணிவிருந்தால் எது தான் நடக்காது? நேர்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு ஆயிரம் சோதனை வரலாம். ஆனால் முடிவில் வெல்லப் போவதும் அவர்களே. உதாரணத்திற்கு ஒரு திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.
#பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் 
நீங்கா நிலனாள் பவற்கு 
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

இக்குறளானது நாட்டை ஆள்பவர்களுக்கு மட்டுமல்ல, தன்னைத் தானே ஆள்பவர்களுக்கும் பொருந்தும். தன்னை ஆளத் தெரிந்தவன்தானே நாட்டையும் ஆளத் தகுதி உடையவன் ஆகிறான்? உள்ளத்தில் துணிவிருந்தால் உண்மைக்கு அழிவில்லை.

இறுதியாக தலைப்புப் பாடலையும் ஒரு கை பார்த்து விடுவோமே?

[4]
                                                                                                 (பாரப்பா )
(திரைப்படம் : பெரிய இடத்துப் பெண் )
எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான அருமையான பாடல். பெண்களுக்கு அறிவுரை சொல்வது போல அமைந்துள்ளது. நகரமயமாகிப் போன தற்கால வாழ்க்கையில் மேற்கண்ட நான்கு வரிகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

என்ன வாசகர்களே, தொகுப்பு நன்றாக இருக்கிறதா? மூன்று பாடல்களே ஆனாலும், மூன்றும் முத்துக்கள் என்பதை மறுப்பார் யாருமில்லை. முடிந்தவரை தொகுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வேறு பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன்,
சிகரம்பாரதி.

Sunday, 8 September 2013

காத்திருப்பு!

பள்ளிக்கூடம் போகணும்
பாதை சரியில்லே
குண்டும் குழியுமாயிருக்கு
குதிரையோடிய தடமிருக்குகல்விக்கு வழியில்லே
கவனிக்க யாருமில்லே
அமைச்சர் சாமிகளெல்லாம்
அருளும் குடுக்கலே

ஐயா கனவான்களே
ஐயமின்றி நம்புங்களே
பாதையை செஞ்சித்தாங்க - விழி
பார்த்திருக்கேன் நானுங்க!

குறிப்பு: கவிதை எழுதப்பட்டது - 2010.05.30
பாதை சீரின்மை காரணமாக கல்வி கேள்விக்
குறியாகிப் போன ஒரு பிஞ்சு உள்ளத்தின் குமுறலாக
இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
அன்புடன்,

சிகரம்பாரதி.

Tuesday, 3 September 2013

ஒரு கனவு நனவாகிறது.

வணக்கம் வலைத்தள வாசகர்களே! ஒரு குறுகிய பதிவொன்றினூடாக எனது
வலைத்தள மீள் பிரவேசத்திற்கு அடியிட்டுச் செல்ல வந்திருக்கிறேன்.

http://renewmoonyoga.files.wordpress.com/2012/11/moon-and-man-image.jpg 

2013.09.01 ஞாயிறன்று எனக்கான மடிக்கணினியை இலங்கை ரூபாய் மதிப்பில் 86000 க்கு கொள்வனவு செய்துள்ளேன். இதன் மூலம் தொடர்ந்து வலைப்பதிவுகளை இடவும் நண்பர்களின் தளங்களுக்கு கருத்துரை இடவும் வசதியாக அமையும். இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


மாதாந்த தவணை முறையில் தான் கொள்வனவு செய்துள்ளேன். கட்டணத்தை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை திருப்திப் பட்டுக் கொள்ள இயலாது என்றாலும் முழுமையாக செலுத்தி முடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.


ஆகவே, இனி தொடர்ந்து என்னிடமிருந்து நீங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதை கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுவது,
சிகரம்பாரதி.

Sunday, 2 June 2013

சாதனைகளும் சோதனைகளும்......


அன்பார்ந்த வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிட்ட போது நீங்கள் தந்த உற்சாக வரவேற்பு என்னை இன்றும் பதிவுலகின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது. நேற்று நான் ஊடகப் 
பாதையில் பயணிக்க ஆரம்பித்து 7 வருடங்கள் பூர்த்தி ஆனதையிட்டு பதிவிட்டிருந்தேன். அதன் போது குறிப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இன்னுமொரு மைல்கல்லை மறந்துவிட்டேன். இந்த "சிகரம்" வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த மே மாதம் இரண்டாம் திகதியோடு பூர்த்தி ஆகியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவும் ஆசிகளும் எனக்குத் தேவை.


மனதில் எத்தனை எத்தனையோ ஆசைகளும் கனவுகளும்.... அத்தனையையும் நிறைவேற்ற எண்ணினால் திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல்கள். சிக்கல்களைத் தீர்த்துவிட்டு நிமிர்ந்தால் காலம் எல்லை கடந்து விட்டிருக்கும். எதிர்காலத்தை நினைத்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் எதனையும் விட்டுவிட முடியாது. போராடவேண்டும். போராடலாம்..... எத்தனை காலத்திற்கு? மாற்றுத் திறனாளிகளே எவ்வளவோ சாதிக்கும் போது நம்மால் முடியாதா என்ன? அதுவும் உங்களைப் போன்றோர் துணையிருக்கும் போது?

நான் எண்ணியிருக்கும் சில விடயங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றிவிட வேண்டும். ஆனால் அதன் முன்னாலிருக்கும் சவால்கள் அநேகம். ஒரு நல்ல துணையிருந்தால் எதையும் இலகுவாகச் சாதித்து விடலாம் அல்லவா? வாழ்க்கையும் ஒரு வியாபாரம் தான். இருக்கும் குறுகிய வளங்களைக் கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நம்மை முந்திக் கொண்டு முன்னேறக் காத்திருக்கின்றனர் பலர். கடந்த வருடம் பாடுபட்டதில் தமிழ்மணத்தில் 300 அளவிலான இடத்தைப் பிடித்திருந்தேன். நேற்று பார்க்கும் போது 900 க்கும் அதிகமான இடத்தில் இருத்தப்பட்டுள்ளேன். வரும் காலங்களில் இடையிடையே பதிவிட்டேனும் என்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியமெனப் படுகிறது.


கடந்த காலங்களில் அநேகமான தவறுகளை இழைத்திருக்கிறேன். முக்கியமானது கல்வி மற்றும் சேமிப்பு. நான் பாடசாலைக் கல்வியை 2009 ஆகஸ்ட் இல் நிறைவு செய்தேன். 2010 நவம்பரில் தற்போதைய தொழிலில் இணைந்தேன். இரண்டரை வருட தொழில் அனுபவம் கிடைத்திருக்கிறது. ஆனால் என்னுடைய சேமிப்பு மிகச் சொற்பமே. அதனை வைத்துக் கொண்டு எந்தவொரு முக்கியமான செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. கல்வியைப் பொறுத்தவரையில் 3 மாத கணினிக் கற்கை நெறியொன்றை (Photoshop) நிறைவு செய்தது மட்டுமே.

குடும்பத் தேவைகளையும் எனது தேவைகளையும் இணைத்துக் கொண்டு பயணிப்பது மிகச் சிரமமாக உள்ளது. அதேவேளை குடும்பத்தை தவிர்த்து விட்டும் என்னால் பயணிக்க முடியாது. சரியாக ஆலோசனை தந்து வழிகாட்ட யாரும் இல்லாதிருந்தமையே எனது தோல்விக்குக் காரணம் என்று எண்ணுகிறேன். ஆம். வாழ்க்கையில் சிறு தோல்வியை சந்தித்திருக்கிறேன். மீண்டெழ வேண்டும்.


இதுவரை வாழ்க்கை எனக்கு பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. எதிர்கால சாதனைகளுக்கான மூலதனங்கள் அவை. என்னுடைய பதிவைப் படித்ததும் உங்களுக்குள் சில ஆலோசனைகள் தோன்றியிருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!

மீண்டும் மற்றுமொரு பதிவில் இனிதே சந்திப்போம்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

Saturday, 1 June 2013

அகவை எட்டில் தடம் பதிக்கும் "சிகரம்" !


"சிகரம்" வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் சிகரம்பாரதியின் பணிவான மற்றும் அன்பான வணக்கங்கள் உரித்தாகட்டும். பொருளாதார சிக்கல் மற்றும் பல காரணிகள் காரணமாக வலைத்தளத்தினை இடைவிடாது நடாத்திச் செல்ல இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 2013 ஆம் ஆண்டுக்கு இது தான் இரண்டாவது பதிவு. அதுவும் முக்கியமான பதிவு.

இதே போன்றதொரு ஜூன் - முதலாம் நாளில் தான் எனது சுய முயற்சியில் உருவான "சிகரம்" கையெழுத்துச் சஞ்சிகை ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. இந்த வலைத்தளம் உருவாகவும் அதுதான் அடிப்படை. ஆகவே "சிகரம்" அகவை ஏழினை நிறைவு செய்து அகவை எட்டில் கால் பதிக்கிறது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் இங்கு கூற விழைகிறேன். அந்த நாளை நினைவு கூர்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான். இதே நாளில் "சிகரம்" வலைத்தளத்தில் கடந்த வருடம் நான் இட்ட பதிவு இதோ:


அந்த பதிவில் நான் முக்கியமான தவறொன்றை இழைத்திருப்பதை நான் தற்போது தான் அவதானித்தேன். பாடசாலைக் காலத்தில் சரியாக 100 இதழ்களை கையெழுத்திலேயே தயாரித்து வெளியிட்டிருந்தேன். "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையின் முதலாவது இதழ் மட்டும் "ஆனந்த கேசரி" என்ற மகுடத்தில் வெளியாகியிருந்தது. இரண்டாம் இதழில் இருந்தே "சிகரம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. கடந்த ஆண்டு வெளியிட்ட பதிவில் "ஆனந்த கேசரி" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "உதய சூரியன்" என்று குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்க வேண்டும் தோழர்களே.

என் சாதனைகள் அனைத்திற்கும் இதுவரை காலமும் நீங்கள் அனைவரும் உறுதுணையாய் இருந்தமைக்கு நன்றிகள் பல. எதிர்காலத்திலும் என் கனவுகளெல்லாம் நிஜமாகும் நேரத்தில் என்னோடிருந்து வாழ்த்த வேண்டுமென்று உளமார வேண்டுகிறேன். பேச வேண்டியவை அதிகமிருந்தாலும் நேர நெருக்கீடு என் வார்த்தைகளைக் குறுக்கீடு செய்கிறது. ஆகவே மேலதிக விபரங்களுடன் உங்களை நாளை வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

Sunday, 10 March 2013

அன்புடன் பாரதி!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! அனைவரும் நலமா? என்னடா இது, பாரதிய இவ்ளோ நாளா காணோமேன்னு நீங்கல்லாம் தேடிருப்பீங்க. எனது நிதிநிலைமை அதல பாதாளத்தில் வீழ்ந்ததனால் என்னால் வலைப்பதிவுக்கு வரமுடியாது போய்விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். நண்பன் ஒருவனுக்கு உதவி செய்யப் போனதால் தான் எனக்கு இவ்வளவு கஷ்டமும் வேதனையும் வந்து சேர்ந்தது. பணம் இன்று வரும், நாளை போகும். ஆனால் நமது மனிதத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை அந்த நண்பர் செய்யத் தவறிவிட்டார். பரவாயில்லை. காலம் தன் கடமையைச் செய்யும். அதுவரை நலம் வாழ வாழ்த்துக்கள்.


இந்தப் பதிவை நான் ஒரு கணினி மையத்தில் (Net Cafe) தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணத்தில் கணினி மையத்திற்கு அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றது. முச்சக்கர வண்டியொன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதிக் கொண்டன. யார் மீது தவறென்பதை விட வாகனங்களிலும் பாதையிலும் பயணிக்கும் பாதசாரிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால் நாம் இதற்காக "இனி வாகனங்களில் பயணிக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நம் பயணத்தை நம் பாட்டில் தொடரத்தான் போகிறோம். இரண்டு நாட்களுக்கு மட்டும் வீதியில் எச்சரிக்கையாய் பயணிப்போம். மூன்றாம் நாள் எதையும் கணக்கெடுக்கப் போவதில்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்?

நம் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் சோதனைகள் வந்தாலும் நம்மோடு தோள் கொடுத்து நிற்க யாரேனும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை என்றுமே சிறப்பாக அமையும். ஏதாச்சும் சொல்லனும்னு தோணிச்சு. அதான் இத சொன்னேன். இனி அடிக்கடி சந்திப்போம். வணக்கம் உள்ளங்களே!

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts