Share it

Saturday, 30 July 2016

வெள்ளித்திரை-தோழா!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

# "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்"
"தமிழ்ல சொல்லுங்க"
"நா சொன்னது தமிழ்தான்டா"

# "உன் பெட்ரூமை காட்டுறேன் வா"
"இது பெட்ரூமா?"
"ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு.

#விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை. 

# வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை. 

# கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது.

# நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது.

# பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் தனத்துடன் மகிழ்ச்சிப்படுத்துவது அருமை.

# "என்ன நெனச்சி இந்த ஓவியத்தை வரைஞ்ச?"
"ஓவியத்தோட அர்த்தத்தை ஓவியன்கிட்ட கேட்கக்கூடாது. ரசிகன்தான் புரிஞ்சிக்கணும்"

 


திரைப்படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. என்னால் குறைகள் எதனையும் காண முடியவில்லை. அன்பைப் பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கார்த்தி சிறையில் இருந்து மீண்டு வருவதும் நான்கு மாதத்திற்கு மட்டும் தான் நல்லவன் என்று  போலியாக நீதிமன்றத்திடம் நிரூபிக்க சேவை செய்யும் வேலை தேடி அலையும் காட்சிகள் அலட்டல். மற்றபடி அருமை. விறுவிறுப்பான காட்சிகளும் சிறப்பான கதைக்களமும் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.

இறுதிப்பகுதியில் ஏனைய திரைப்படங்களைப் போல மகிழ்ச்சியின் மிகுதியில் நாகார்ஜூனா நோய் குணமாகி எங்கே  எழுந்து நடந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

அங்கங்கள் செயலிழந்தாலும் மனதில் மகிழ்ச்சி இருந்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம் என்பது திரைப்படம் நமக்குத் தரும் பாடம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அன்பினால் எதையும் வெல்லலாம் , அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என நிரூபித்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற திரைப்படங்கள் இன்னும் வெளிவர வேண்டும். வாழ்த்துக்கள் தோழா!

Wednesday, 27 July 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல்!

                           அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.

                    முதலில்  உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா? மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே!

                            விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் புதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண  செய்ய வேண்டுகிறேன்.

                         கடிதம் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல. அது ஒரு அழகிய கலை. சில சரித்திரங்களின் பின்னால் பல கடிதங்கள் உள்ளன. இன்று பலருக்கு 'வாட்ஸப்' தெரிந்திருக்கும் அளவுக்கு கடிதங்கள் பற்றித் தெரியாது. மிக நீண்ட சிந்தனைக்குப் பின்னரே இக்கடிதம் உன்விழிகளைச் சேர்கிறது. இதற்கு முந்திய பந்திகள் இரண்டும் 'வானவல்லி' வெளியாவதற்கு முன் எழுதப்பட்டவை. இப்போது திருத்தங்களுடன் இங்கே. கடிதம் எழுதுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்றாலும் இதுவரை ஒன்றிரண்டு கடிதங்களுக்கு மேல்  எழுதியதில்லை. முதல் முறையாக கடல் கடக்கிறது என் கடிதம். மகிழ்ச்சி!  வேலை வேலை என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வது மிகச் சிரமமான காரியமாகிவிட்டது. அதுவே இக்கடிதத்தின் தாமதத்திற்கு காரணம்.

                    இந்தியாவில் திரைத்துறைக்கு இருக்கும் சக்தி வேறெதற்கும் இல்லை போலும். கபாலி திரைப்பட வழக்கில் 'நீதி' வழங்கப்பட்ட வேகத்தில் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமாயின் நீதித்துறை சக்திமிக்க துறையாக மாறும் என்பதில் ஐயமில்லை. சென்னையில் காலை வேளையில் மக்கள் முன்னிலையில் சுவாதி என்னும் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சுவாதியின் புகைப்படங்களை இணையத்தளங்களில் பகிர வேண்டாம் என்றோ அல்லது சுவாதி தொடர்பில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றோ நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லை. மாறாக 'கபாலி' திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை விதித்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது?

                       நிற்க, உங்கள் வாழ்க்கை நிலவரங்கள் எப்படி? எழுத்துப்பணிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன? 'வானவல்லி' புதினம் குறித்து உங்கள் நண்பர்களின் அபிப்பிராயங்கள் என்ன? பெற்றோரின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்தது? புதினத்தை வாசித்தார்களா? வாசகர்களின் எண்ணங்கள் என்ன சொல்கின்றன? மடல்கள் ஏதும் இல்லம் தேடி வந்ததா? கடிதங்கள் என்ன சொல்கின்றன? உங்கள் வானவல்லி என்ன சொன்னார்கள்? வானவல்லிக்கு வானவல்லி பிடித்திருக்கிறதா? இதென்ன இத்தனை கேள்விக்கணைகளா என்று திகைக்க வேண்டாம். இன்னும் இருக்கிறது. வானவல்லி சிறப்பு நேர்காணலுக்காக சில பல கேள்விகள்  மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.வானவல்லியைத் தொடர்ந்து எழுத்தில் இருக்கும் அம்சம் என்ன? அது தொடர்பில் தகவல்களை எதிர்பார்க்கிறேன். கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருளவும். வரும் மடல்களில் பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன். பதில் கடிதத்தின் பின் மறுமொழி மூலம் சந்திக்கிறேன். நன்றி.

இப்படிக்கு,
நண்பன்
சிகரம்பாரதி.

Tuesday, 26 July 2016

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]


பகுதி - 01பகுதி - 02

'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும்.  1. பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை.
  2. ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை.
  3. பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல்.
சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது.
தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம்.

இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் சிலவும் தமது வாசகர் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்காக இணையத்தளம் ஊடாக வெளிவரும் பண்பினைக் காண்கிறோம்.

இணைய சிற்றிதழ்கள் முதலில் ஆங்கில  கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியாகின. தற்போது தமிழ்க் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இணைய சிற்றிதழ்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் இணைய சிற்றிதழ்களின் தோற்றத்தில் இலங்கையின் யுத்த சூழல் ஏற்படுத்திய தாக்கம் ஒரு தூண்டுகோலாக அமைந்திருந்தது. இணையத் தளம் இன்றும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவே காணப்படுகின்றது.

ஆக, தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிற்றிதழ்களுக்கு உரிய பங்கானது பாரியது என்பதை யாராலும் மறுக்கவியலாது. நாள்தோறும் பல்வேறு சிற்றிதழ்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் சிறியதொரு தாக்கத்தையேனும் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்படுத்திச் செல்கின்றன. எனவே சிற்றிதழ் துறைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்துறையில் சீரான வளர்ச்சியை அடைய முடியும் என்பது திண்ணம்.

நன்றி.
சிகரம்பாரதி.

சூரியன் பண்பலைக்கு அகவை பதினெட்டு!

வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல்.

இலங்கையின் தமிழ் வானொலிகளில் முக்கியமான இடத்தை வகிக்கும் சூரியன் பண்பலைக்கு ஜூலை-25 இன்று அகவை பதினெட்டு பூர்த்தியாகிறது. எத்தனை போட்டிகள், எத்தனை தடைகள் வந்தாலும் இன்னும் தமிழ் வானொலி ஊடகத் துறையில் நிலைத்திருப்பது ஒரு பெரிய விடயம்தான். நான் கொழும்பில் வானொலிப்பெட்டி ஒன்று வாங்கி மூன்று மாதங்களாகிறது. இதுவரை சூரியன் அலைவரிசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் சூரியன் அளவுக்கு வேறு எந்த வானொலியும் என்னைக் கவர்ந்ததில்லை.

2006 ஆம் ஆண்டு தவறான செய்தியொன்றை ஒலிபரப்பியமைக்காக சூரியன் பண்பலை தடை செய்யப்பட்டு சில மாதங்களுக்குப் பின் தடையில் இருந்து மீண்டது. தடைக்கு முன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த வானொலி தடைக்குப் பின் தன் பொலிவை இழந்தது. பல்வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாமல் போயின. வெறும் பொழுதுபோக்கு வானொலியாக மாறிப்போனது. தடைக்கு முன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக ஏ.ஆர்.வி.லோஷன் இருந்தார். தடை அமுலில் இருந்த காலத்தில் வெற்றி என்னும் வானொலி உதயமானது. வெற்றி வானொலியின் முகாமையாளராக லோஷன் பொறுப்பேற்றார். லோஷனுக்கு அடுத்த இடத்தில் இருந்த நவனீதன் சூரியனின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியானார். ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வெற்றி வானொலியும் காலப்போக்கில் நிர்வாக மாற்றம் மற்றும் பல காரணிகளால் தன் அடையாளம் இழந்து வர்ணம் வானொலியாக மாறிப்போனது.

லோஷன் மீண்டும் சூரியன் வானொலிக்கு முகாமையாளராக அழைக்கப்பட்டார். ஆனாலும் சூரியன் புதுப்பொலிவு பெறவில்லை. ஆயினும் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாடல் தெரிவுகளில் சூரியன் தான் சிறப்பு.

 

இன்று சூரியன் பண்பலை தொடங்கி  18       ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. எத்தனை குறைகள் இருந்தாலும் மக்கள் அபிமானமே சூரியனை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது. மீண்டும் சூரியன் தரமான நிகழ்ச்சிகளோடு வலம் வர வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான சூரியன் பண்பலை ரசிகர்களினதும் அவாவாகும். இன்னும்  பேசலாம். 
சூரியன் பண்பலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, 20 July 2016

மனிதநேயம் - 3நிமிடக்கதை.

 

வணக்கம் நண்பர்களே! மனிதநேயம்! தொலைந்து போய் காலங்கள் கடந்த பின்பு இக்காலத்தில் அதிகம் தேடப்படும் பொருள். அது இக்காலத்திலும் ஒரு மனிதனிடத்தில் காணப்படுமாயின் அது பாராட்டத்தக்கதே. இது பேஸ்புக் மூலம் எனக்கு கிடைத்த மூன்று நிமிட கதை. இக்கதையைப் பற்றி நான் வார்த்தைகளால் வர்ணிப்பதை விட நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். நன்றி நண்பர்களே!  

Monday, 18 July 2016

கனரக வாகனத்தில் வந்த காலன்!

பிரான்ஸ் கனரக வாகன தாக்குதல்

பிரான்ஸ்  தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், உணவகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தீவிரவாத செயற்பாடுகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் 'மனிதாபிமானம் மடிந்து விட்டதா?' என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. கேட்கப்பட்ட வேகத்திலேயே கேள்வி மறைந்து போய்விடுகிறது. ஐ.எஸ் அமைப்பு தமது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளை அச்சுறுத்த நீஸ் நகர கனரக வாகன தாக்குதல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. அண்மைக்காலத்தில் பல்வேறு நாடுகள் ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. ஐ.எஸ் அமைப்பினை ஒழித்துக்கட்ட பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. உலகம் முழுவதும் இஸ்லாமிய அரசைத் தாபிப்பதே இவர்களின் நோக்கமாகும்.

தீவிரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை உலக நாடுகள் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இத்தகைய தாக்குதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலியெடுத்துத் தான் இஸ்லாமிய இராச்சியத்தைத் தாபிக்க வேண்டுமா? நேரடியாக யுத்தத்துக்கு அழைப்பு விடுத்து தங்களை எதிர்க்கும் அரசுகளுடன் மோதாமல் அப்பாவிகளின் உயிர்களைக் குறிவைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? தங்கள் எண்ணத்தை நனவாக்க மனிதத்துக்கு விரோதமாக செயல்படுதல் முறையா?

இஸ்லாம் என்னும் சமயமானது பல்வேறு நற்பண்புகளை மையமாகக் கொண்டதாகும். இது மனிதப் படுகொலைகளை ஆதரிக்கவில்லை. மனிதாபிமானத்தையே வலியுறுத்துகிறது.

இஸ்லாம் குறித்து விக்கிபீடியா பின்வருமாறு தகவல் தருகின்றது:

"இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.

எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்."

இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை. ஆனால் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாத்தின் புனிதத் தன்மைக்கு சேறு பூசும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கெதிரான அரச செயற்பாடுகளுக்கப்பால் மக்களின் மாபெரும் எழுச்சி அவசியமாகிறது. அந்த எழுச்சி ஏற்படும் நாளில் ஐ.எஸ் போன்ற அமைப்புகள் இல்லாதொழிக்கப்படும் என்பது உறுதி.

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts