Monday, July 18, 2016

கனரக வாகனத்தில் வந்த காலன்!

பிரான்ஸ் கனரக வாகன தாக்குதல்

பிரான்ஸ்  தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், உணவகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தீவிரவாத செயற்பாடுகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் 'மனிதாபிமானம் மடிந்து விட்டதா?' என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. கேட்கப்பட்ட வேகத்திலேயே கேள்வி மறைந்து போய்விடுகிறது. ஐ.எஸ் அமைப்பு தமது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளை அச்சுறுத்த நீஸ் நகர கனரக வாகன தாக்குதல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. அண்மைக்காலத்தில் பல்வேறு நாடுகள் ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. ஐ.எஸ் அமைப்பினை ஒழித்துக்கட்ட பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. உலகம் முழுவதும் இஸ்லாமிய அரசைத் தாபிப்பதே இவர்களின் நோக்கமாகும்.

தீவிரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை உலக நாடுகள் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இத்தகைய தாக்குதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலியெடுத்துத் தான் இஸ்லாமிய இராச்சியத்தைத் தாபிக்க வேண்டுமா? நேரடியாக யுத்தத்துக்கு அழைப்பு விடுத்து தங்களை எதிர்க்கும் அரசுகளுடன் மோதாமல் அப்பாவிகளின் உயிர்களைக் குறிவைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? தங்கள் எண்ணத்தை நனவாக்க மனிதத்துக்கு விரோதமாக செயல்படுதல் முறையா?

இஸ்லாம் என்னும் சமயமானது பல்வேறு நற்பண்புகளை மையமாகக் கொண்டதாகும். இது மனிதப் படுகொலைகளை ஆதரிக்கவில்லை. மனிதாபிமானத்தையே வலியுறுத்துகிறது.

இஸ்லாம் குறித்து விக்கிபீடியா பின்வருமாறு தகவல் தருகின்றது:

"இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.

எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்."

இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை. ஆனால் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாத்தின் புனிதத் தன்மைக்கு சேறு பூசும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கெதிரான அரச செயற்பாடுகளுக்கப்பால் மக்களின் மாபெரும் எழுச்சி அவசியமாகிறது. அந்த எழுச்சி ஏற்படும் நாளில் ஐ.எஸ் போன்ற அமைப்புகள் இல்லாதொழிக்கப்படும் என்பது உறுதி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?