Share it

Tuesday, 31 July 2012

இன்னும் சொல்வேன் - 01

மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது. 

அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும். 

Image Credit : Google / The Hindu Tamil


அந்த விடயத்திற்கு வருவதற்கு முன் இந்தத் தொடர் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இது ஒரு கட்டுரைத் தொடர். ஆனால் ஒரு விடயத்தை பற்றி மட்டும் பேசப் போவதில்லை. நாம் பேசப் போகும் ஒவ்வொரு விடயமும் நமது மனம் சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக, உங்கள் பின்னூட்டங்களினால் வழங்கப் படும் ஆலோசனைகள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஆராயப்படும். இனி விடயத்திற்கு வருவோம்.

அன்பின் வரையரைகளுக்குட்பட்டு நாம் நடப்பது சரியா, தவறா? அதெப்படிங்க தப்புன்னு சொல்ல முடியும்? அன்புக்கு கட்டுப்படாதவங்க யார் இருக்காங்க? இப்படித் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அன்புக்கு கட்டுப் படுவது சரி. அதற்காக நம்முடைய சுயத்தை இழக்க வேண்டுமா என்பதே என் கேள்வி. இதே கேள்வியை என் வலைத் தளத் தோழி ஒருவரிடம் மின்னஞ்சல் மூலமாக முன்வைத்த போது அவர் தந்த பதில் இது: "அன்பிற்கு கட்டுப்படுவது சரியானதே.ஆனால் அதே அன்பு பேரம் பேசலுக்கு உட்படுகிறது அல்லது தான் செய்யும் தவறுகளையும் அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது என தோன்றினால் இடித்துரைக்கவேண்டும்.அங்கு கட்டுப்படுதல்களை தாண்டியதான கண்டிப்பு ஒன்று தேவை".

நிச்சயமாக. ஆனால் அந்தக் கண்டிப்பை அன்பு ஏற்க மறுத்தால்? அங்கே நமது சுயம் தொலைந்து போகிறது. நாம் நாமாக இருக்க அன்பு அனுமதிப்பதில்லை என்பதே என் கருத்து. எல்லா சந்தர்ப்பங்களிலுமே இவ்வாறு நிகழ்வதில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமைந்து போவது தான் வேதனைக்குரியது. நமது சுகத்தையோ துக்கத்தையோ பகிர்ந்து கொள்வதை எப்போது இன்னொருவருக்கு சுமை என்றெண்ண ஆரம்பிக்கிறோமோ அங்கு உண்மைத் தன்மை இழக்கப்படுவதுடன் நாம் சுயத்தையும் இழந்து விடுகிறோம். இதை மாற்றிக் கொள்ள நம்மால் முடியுமா? முடியாதா? வாங்க பேசலாம். நான் முதலிலேயே சொன்னது போல தங்கள் கருத்துரைகள் தான் இத்தொடரை வழிநடத்திச் செல்லப் போகின்றன. ஆகவே தங்கள் பதிலைக் கொண்டு தான் அடுத்த அத்தியாயத்தை எழுதப் போகிறேன். காத்திருங்கள். இன்னும் சொல்வேன்.

இன்னும் சொல்வேன் - 01 
#மனம் #உள்ளம் #உரையாடல் #அன்பு #சுயம் #மகிழ்ச்சி #துக்கம் #பாசம் #நலன் #புரிதல் #கட்டுரை #தொடர் #இன்னும்_சொல்வேன் 

Post Created: 31.07.2012 
Edited at 19.04.2019 

Thursday, 26 July 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

பகுதி - 01


பகுதி - 02


பகுதி - 03


பகுதி - 04

எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம். 

திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. "நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."

குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது.

நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

"ஹ... ஹலோ சு.. சுசி..."

"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"

"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."

"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"

"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."

"ஆனா....?"

"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"

"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."

"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"

"சரிடா... நா வர்றேன்."

சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.

ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.

"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."

"..................."

"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"

"விஷயமே வேற சுசி..."

"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."

"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி." 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Post Created at 26.07.2012 
Edited at 19.04.2019 

Thursday, 19 July 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03


அத்தியாயம் - 03 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.

பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.

மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"

எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?

கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.

என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

Post Date 19/07/2012 | Edit date 10/10/2018 

கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்

Thursday, 12 July 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02


அத்தியாயம் - 02 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன். 
Post Date 12/07/2012 | Edit date 19/09/2018 

கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்

Thursday, 5 July 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"
Post Date 05/07/2012 | Edit date 15/09/2018 

கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Tuesday, 3 July 2012

முக நூல் முத்துக்கள் பத்து

எனது முக நூலில் (பேஸ்புக்) என்னைக் கவர்ந்த சில பகிர்வுகளை இங்கே நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை இதோ:

01. #என்னிடம் 271 நண்பர்களுடன் (254 பெண்கள் நண்பிகள்) ஒரு பொய்யான fb account விட்பனைக்கி உண்டு தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும் .....#


02. #முகத்தை காணும் முன்பே நேசிக்கத் 
தெரிந்தவள் " தாய்" மட்டுமே#

03. #தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல

சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாய் ரெண்டு தாய் இருக்குதா 

Image Credit: Google / Facebook


04. #காதல்- காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி. தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது...#

05. #ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!!
-அப்துல் கலாம்-#

06. #நீங்கள் வாழக் கற்றுக்கொடுத்ததில்லை.. 
வாழ்ந்து காட்டினீர்கள்.. 
அப்பா உங்களை பார்த்தே வளர்ந்தோம்..
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!#

07. #எனக்கு என்று 
எதுவும் வேண்டாம் கடவுளே,
என் அம்மாவுக்கு மட்டும் 
ஒரு சூப்பர் figure 
மருமகளா வரணும்.
அது போதும் எனக்கு.#

08. #நான் என்னைக் கூட 
இழக்கத் தயார், 
என்னால் இழக்க முடியாத 
என் தன்னம்பிக்கைக்காக....#

09. #ஏறு!! ஏற!!
முன்னேறு!
மூச்சுப் பிடித்தேறு!
மூளை கொதிக்க ஏறு !
முகில் தாண்டி ஏறு !
மலை உச்சியை தொடு (அல்லது) மரணத்தை தொடு !
♥ ♥ ♥#

10. #இன்னமும் தமிழனாக பிறந்த நாம் அகதிகளாக தான் வாழ்கிரோம். தமிழனுக்கு எழுதி வைத்த தலையெழுத்து அகதி என்ற வாசகம். அகதி என்ற உடன் நினைவுக்கு வருவதுதான் "கண்ணீர்". அகதி "உறவுகளை விட்டு பெற்றெடுத்த தாய் தந்தையை விட்டு கூடப்பிறந்த உறவுகளை விட்டு" தமிழனின் வாழ்க்கை.# 

முக நூல் முத்துக்கள் பத்து 
#பேஸ்புக் #கருத்து #எண்ணங்கள் #பகிர்வு #எழுத்து #நட்பு #உணர்வு #தாய் #காதல் #தந்தை #வெற்றி #முன்னேற்றம் #fb #Share 

Post Created at 03.07.2019 
Post Edited at 19.04.2019 

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts