Share it

Wednesday, 24 August 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்

வணக்கம் வாசகர்களே! இணையம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. இணையம் நன்மை, தீமை என இரண்டையும் இந்த உலகத்திற்கு வழங்கி வந்தாலும் இணையம் எனக்களித்த பரிசாக வெற்றிவேல் உடனான நட்பைக் காண்கிறேன். என் கடிதத்திற்கு வெற்றியின் பதில் கடிதம் கிட்டியுள்ளது. அக்கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு. பதில் கடிதம் விரைவில்........

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்


பேரன்புள்ள நண்பனுக்கு,
வணக்கம். நான் நலம் நண்பா. நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன்.
கடிதத்தைத் தொடங்கும் முன்பு எனது நல்வாழ்த்துகளை உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா. ‘செம் புலப் பெயல் நீர் போல; அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’  என்ற சங்கத் புலவனின் வாக்கினைப் போன்று தாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வாழ வாழ்த்துகிறேன். நீ உனது திருமணச் செய்தியை அனுப்பியபோது என்னால் வாழ்த்து மட்டுமே தெரிவிக்க முடிந்தது. நேரில் வந்து வாழ்த்த விரும்பியும், இயலாமல் போய்விட்டது. தொடர்பு கொண்டு பேசவும் இயலவில்லை. உனது இல்வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது நண்பா? முதலில் வாழ்த்து சொல்லி உனக்கு நான்தான் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், எனது நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஓயாத அலைச்சல், பணிச்சுமை என்று நினைத்ததை செயல்படுத்த இயலவில்லை. எதிர்பாராத நேரத்தில் கண்ட உனது கடிதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்பதை நான் கூறி நீ அறிந்துகொள்ள வேண்டியது இல்லை என்று கருதுகிறேன்.
நண்பா, முதல் முறையாக உனது கடிதம் கடல் கிடைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நீ தொடர்ந்து கடிதம் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.
விறல்வேல் வீரன். கேட்பதற்கே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா. விறல்வேல் வீரன் என்று அழைத்த நீ வானவல்லி உனது கரங்களைத் தழுவிய பிறகு செங்குவீரன் என்று அழைப்பாய் என்று கருதுகிறேன். வானவல்லி எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தவன் நீ. இரவின் புன்னகையில் வெளியிடுவதை நிறுத்திக் கொண்ட பிறகு பல முறை என்னிடம் வினவியிருக்கிறாய், ‘வானவல்லி எப்போது வெளியாகும் என்று?’ அப்போதெல்லாம் கூறுவேன், ‘விரைவில்’ என்று. வானவல்லி வெளியான உடனே ஆர்டர் செய்துவிட்ட உனது ஆர்வம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது நண்பா. இலங்கை மதிப்பில் நான்காயிரம் ரூபாய் என்பது பெரும் மதிப்பு என்பதை நான் அறிவேன். உன் எதிர்பார்ப்பை நிச்சயம் வானவல்லி நிறைவேற்றுவாள் என்று நம்புகிறேன். பொன்னியில் செல்வனில் கண்ட அதே எதிர்பார்ப்பு, அதைவிடவும் அதிகமாக உன்னை வானவல்லி திருப்திப் படுத்துவாள் என்பது எனது எதிர்பார்ப்பு. வானவல்லி வாசித்துவிட்டு உனது விமர்சனத்தை, உனது பார்வையை எதிர்பார்க்கிறேன். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் எழுத கல்கி எடுத்துக்கொண்ட காலம் ஆறு வருடங்கள் என்று. அவரது காலத்திற்கும், நமது காலத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது நண்பா. நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கிறோம். அவர் கையில் எழுதி மற்றவர்களுக்கு கொடுத்திருப்பார். அவர்கள் தட்டச்சு செய்து, மீண்டும் பிழை திருத்தம் என ஏகப்பட்ட வேலைகள். ஆனால் நான் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்கிறேன். அதிக நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டேன். பத்து பக்கங்களை காகிதத்தில் எழுத வேண்டும் என்றால் கிட்டத்தட்ட இரண்டிலிருந்து  மூன்று மணி நேரம் ஆகும். சில கிழமைகளில் கை வலி எடுத்துவிடும். என்னைப் போன்று எழுதும்போது சுண்டு விரலைத் தேய்ப்பவர்களாக இருந்தால் இரத்தம் வழியத் தொடங்கிவிடும். ஆனால், நேரடியாக கணினியில் எழுதினால் நேரத்தை கணிசமாக சேமிக்கலாம். உடல் உழைப்பும் அதிகம் தேவைப்படாது. என்னிடம் வினவினால் வானவல்லி எழுத இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதே அதிகம் என்பேன். முதல் பாகத்திற்கு மட்டுமே பத்து மாதங்களை எடுத்துக் கொண்டேன். அதன்பிறகு எழுதிய ஒவ்வொரு பாகத்தையும் முடிக்க அதிக பட்சம் மூன்று மாதங்களே ஆனது.
வானவல்லிக்குப் பிறகு எழுதும் புதினத்தை வலைதளத்தில் அல்லது ஏதேனும் சஞ்சிகையில் வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கிறாய். வலைதளத்தில் வெளியிட முயற்சி செய்கிறேன் நண்பா. வெளியிட்டால் யாரேனும் திருடி விடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. சஞ்சிகையில் வெளியிட முயற்சிக்கலாம். ஆனால், ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் இருக்கும் புதினத்தை சஞ்சிகைகளில் வெளியிட்டால் தொடர் முடிய பல வருடங்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் ஐந்து அல்லது ஆறு பக்கங்களை அளிப்பார்கள். அதற்குள் எழுத முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று?
கபாலி திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட நீதி போன்று வேறு எதற்கும் அதிவேகமாக வழங்கக்கப்படவில்லை என்று ஆதங்கப் பட்டிருக்கிறாய். அது இந்தியாவின் சாபக்கேடு. நிதி இருந்தால் தான் நீதி தேவதையும் இங்கே அதி வேகத்தில் தீர்ப்பினை வழங்குகிறாள். மனுநீதிச் சோழன் பிறந்த தேசத்தில் நீதியின் நிலை கேலிக்கூத்தாகிவிட்டது. நிதியினால் நீதியை விலைக்கு வாங்காத் தொடங்கிவிட்டார்கள் நண்பா. சாமான்ய மக்களின் கைப்பிடி தூரத்திலிருந்து நீதி வெகு உயரத்திற்கு சென்றுவிட்டாள். நாம் வேண்டுமானால் அதை பற்றி பேசலாம் நண்பா, ஆனால் எந்த மாற்றமும் நடக்காது.
வாழ்க்கை அப்படியே தான் சென்று கொண்டிருக்கிறது நண்பா. அதே வேலை, பின்னிரவு உறக்கம். காலை எட்டு மணிக்கு எழுந்து அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டிய நெருக்கடி.வானவல்லி வெளிவந்தால் அனைத்தும் மாறிவிடும் என்று எதிர்பாத்தேன். ஆனால் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. வானவல்லி வெளிவந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அம்மாவுக்கு நிரம்ப பெருமை. அதுவே எனக்கு பெரும் திருப்தியை அளித்தது நண்பா.
வானவல்லியை வாசித்தவர்கள் பதிப்பகத்திற்கு அழைத்தது எனது தொடர்பு எண்ணை வாங்கி என்னிடம் தொடர்பு கொண்டார்கள். அனைவருமே பாராட்டினார்கள். அதில் ஒரு வாசகர் என்னை வீட்டிற்கே அழைத்து விருந்து அளித்து பெருமைப் படுத்தினார். மற்றொருவர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வரலாற்றுப் புதினம் ஒன்றை வாசித்திருக்கிறேன்” என்று பாராட்டினார். இதுவரை நான் வாசித்த புதினங்களில் பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவனைத் தான் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், இனி எனக்கு செங்குவீரனைத் தான் பிடிக்கும்’ என்று சிலாகித்தார் மற்றொருவர். பொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு என நான் படித்த அனைத்து புதினங்களும் இனி வானவல்லிக்கு அடுத்து தான்’ என்று தெரிவித்தார் மற்றொரு வாசகி. இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன தேவை இருக்கிறது நண்பா. வானவல்லி இன்னும் பரவலாக அனைவருக்கும் சென்று சேரவில்லை. வாசகர்களின் முழு கருத்தை அறிந்துகொள்ள இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் நண்பா. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் அனைவரும் நேராகவே தொடர்புகொண்டு பேசி விடுகிறார்கள். இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை. வந்தால் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.
‘உங்கள் வான்வல்லி என்ன கூறினார்கள்? வானவல்லிக்கு வானவல்லி புடித்திருக்கிறதா?’ இது நல்ல கேள்வி நண்பா. இதற்கான பதில் இன்னும் என்னைச் சேரவில்லை. எதிர்காலத்தில் கிடைத்தால் நிச்சயம் உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இப்போது ‘வென்வேல் சென்னி’ எனும் வரலாற்று புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன் நண்பா. இது கரிகாலனின் தந்தை வெற்றிவேல் இளஞ்சேட் சென்னியின் கதை. தென்னாட்டைக் கைப்பற்ற முயன்ற மௌரியரைத் தோற்கடித்து விரட்டியடித்த சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னியின் கதை. 2018 சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல் அல்லது முதல் இரண்டு பாகங்களை வெளியிடலாம் என்று இருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அருள் துணைபுரிந்தால் அதற்குள்ளாகவே எழுதிவிட முயற்சிக்கிறேன்.
நீங்கள் ஆர்டர் செய்த வானவல்லி சம்பந்தமாக nammabooks.com ல் பேசினேன். அவர்கள் கொரியர் செய்யும் தொகையை சேர்க்க மறந்துவிட்டார்களாம். கொரியர் அனுப்ப எவ்வளவு ஆகும் என்று கேட்டிருக்கிறேன். விரைவில் புத்தகம் உனக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன் நண்பா.
நண்பா, திருமணத்திற்குப் பிந்தையை தங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? தங்கையை நான் நலம் விசாரித்ததாக தெரிவியுங்கள். வீட்டிலும் அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள். தங்களது உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து சிகரம் பாரதி வலைத்தளத்தில் எழுதுங்கள். அந்த கல்யாண வைபோகம் தொடர் என்ன ஆனது? அது ஏன் பாதியிலேயே நின்றுகொண்டிருக்கிறது? முடிந்தால் அதைத் தொடந்து எழுதுங்கள்.
அன்புடன்
சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி…

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts