Share it

Monday, 27 February 2017

தொடர்பு கொள்ளுங்கள்!

வணக்கம். 'சிகரம்' இணையத்தளம் விரைவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதே எமது கொள்கை. ஆகவே உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளமே 'சிகரம்' ஆகும். இது யாருடையதும் தனிப்பட்ட இணையத்தளமல்ல. மக்களின் பங்களிப்புடன் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு செல்லப்போகும் ஒரு ஊடகம். ஆகவே உங்கள் அனைவரினதும் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். பின்வரும் முறைகளில் உங்கள் படைப்புகளை எங்கள் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பி வையுங்கள். தமிழை வளர்க்க பங்களிப்போம் வாரீர்!

நமது இணையத்தளம்

நமது வலைத்தளம்

பேஸ்புக் பக்கம்

பேஸ்புக் தளம்

டுவிட்டர்

மின்னஞ்சல்

கூகிள் பிளஸ்

யூடியூப் அலைவரிசை

வாட்ஸப்
# விரைவில்

வைபர்
# விரைவில்

இமோ
# விரைவில் 

Saturday, 25 February 2017

சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு!

"சிகரம்" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக்கு மற்றும் இலக்கு ஆகியன முதன் முதலில் வரையறை செய்யப்பட்டன. 2006 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய போதிருந்தே அதனை நிறுவனமாக்கும் கனவையும் கொண்டிருந்தேன். ஆகவே அதற்கான ஒரு படியாக நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் கீழ்வரும் வாசகங்கள் உருவாக்கப்பட்டன. கையெழுத்துப் பத்திரிகை வலைத்தளமாகி இன்று https://www.sigaram.co/ என்னும் முகவரியில் ஒரு இணையத்தளமாக பரிணமிக்கும் இவ்வேளையில் இவ்வாசகங்களை நினைவு கூர்வது அவசியம் என்பதால் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். இவற்றில் காலத்தின் தேவை கருதி சில திருத்தங்கள் 2017.06.01 திகதிக்கு முன்பதாக மேற்கொள்ளப்படும். "சிகரம்" தனது பதினோராவது ஆண்டு நிறைவை ஜூன் மாதத்தில் கொண்டாடும் வேளையில் உலக அரங்கில் தமிழுக்கான தனித்துவமிக்க அடையாளமாக மிளிர்வதற்கான பாதையில் புதிய பரிணாமத்தில் "சிகரம்" பயணிக்கவுள்ளது என்பதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். 

எமது தூர நோக்கு :

சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்!

எமது இலட்சிய நோக்கு : 

* உலகின் முதற்தர செய்திச் சேவையாக தொழிற்படல்.

* உலகின் அதி உச்ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக திகழுதல்.

* சகல செயற்பாடுகளிலும் சரியானவற்றை சரியாகச் செய்து உலகின் உயரிய தரத்தைப் பேணுதல்.

* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதலும்.

* உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும். 

* மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதல். 

Friday, 17 February 2017

நாளைய தமிழக முதல்வர் யார்?

வணக்கம்! இன்றைய தமிழக அரசியல் சூழலில் #tn_sasikala #TamilnaduRevolution #RIPADMK #Enforce_President_Rule_in_TN #TnsaysNotoSasikala #TNneedsReElection போன்ற குறிச்சொற்கள் (Hashtags) சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது முதல் தமிழகம் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் தமிழக மக்கள் அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்வராகும் வாய்ப்பை அளித்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மரணப் படுக்கையில் வீழ்ந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதப்பட்டாலும் எதிர்த்துக் கேட்பாரில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்பது வெளியுலகுக்கு இன்னமும் தெரியாத வகையில் ரகசியம் பேணப்பட்டு வருகிறது. 

மாண்புமிகு தமிழக முதல்வர் திருமதி சசிகலா நடராஜன் வருகிறார்! பராக்! பராக்!! பராக்!!! - என்று கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் கூறிக் கொண்டிருந்தார்கள்.  இப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியுள்ளனர். நாளை யாரோ என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. சசிகலாவின் முதல்வர் கனவில் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் அடங்கியிருப்பதாக மக்களால் பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தன் முதல்வர் கனவிற்கான காய்களை படிப்படியாக நகர்த்தினார் சசிகலா. மக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஜெயாவின் மரணத்திற்குப் பின் உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் நாட்காலியில் அமர வைத்தார் சசிகலா. பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வைத்த குறி இப்போது தவறியிருக்கிறது. முதல்வர் ஆசனம் பறிபோனாலும் கட்சியையேனும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளிலீடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் சசிகலா தனது சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக தனக்கு பதிலாக முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதுவரை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை இழந்துள்ளார். ஆனாலும் பழனிச்சாமியும் தனது பெரும்பான்மையை நிரூபித்தால்தான் முதல்வராக எஞ்சிய ஆட்சிக்காலத்தைத் தொடர முடியும். தமிழ்நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வரும் சூழலில் உறுதியற்ற அரசியல் சூழல் தமிழ்நாட்டை செயல்படாத மாநிலமாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்பதாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைக்க செலுத்திய வாக்கின் மூலம் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இரு முதல்வர்களைப் பெற்றுள்ளனர். வாழ்க தமிழகம்.

ஜனநாயகம் என்பது மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. மக்களின் மனமறிந்து நடாத்தப்படுவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்கும். மக்களின் பிரதிநிதிகளால்தான் சட்டங்களும் இயற்றப்படுகின்றன. ஆனால் சட்டங்கள் வாக்களித்த மக்களுக்கு சார்பாக என்றுமே இருந்ததில்லை. மக்களிடம் வாக்குக் கேட்டு பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் பதவி கிடைத்த பின் அதிகாரத்தை தமது சுயநலனுக்காக பயன்படுத்திக் கொள்வதுடன் மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களையும் தமக்கு சார்பாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். அதிகார போதை மிகவும் ஆபத்தானது. கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிருந்து கொல்லும் கொடிய விஷம் அது. ஆனால் அந்த விஷத்தை அருந்தவே அரசு அதிகார நாற்காலியில் அமர்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். அரசாங்கத்தை தமது சொத்துக்களை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இன்றைய அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் தமது ஆதரவு அதிகரிக்கும் எனக்கணிப்பிட்டு அதன்படியே செயல்படுகிறார்கள். மாற்றத்தை மக்களே ஏற்படுத்த வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா??

Monday, 13 February 2017

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் உதயமாகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் 'சிகரம்' இணையத்தளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. வடிவமைப்புப் பணிகள் கடந்த மாதம் (தை 2048) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துர்முகி வருடம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் நான்காம் நாள் (2017.02.16) அன்று வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து எனது கைகளுக்கு இணையத்தளம் ஒப்படைக்கப்படும். மாசி மாதம் ஏழாம் நாள் (2017.02.19) அன்று உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வடிவமைப்புப் பணிகளில் ஏதேனும் தாமதங்கள் நேர்ந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள நேர்ந்தாலோ மாசி மாதம் இருபத்தோராம் நாள் (2017.03.05) உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். பதிவுகள் இடப்பட்டு முழுமையான பாவனைக்குரிய தளம் வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் (2017.06.01) அன்று உங்கள் எண்ணங்களுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது. 'சிகரம்' வலைத்தளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களாக நீங்கள் நல்கி வரும் பங்களிப்பை தொடர்ந்தும் வலைத்தளத்திலும் இணையத்தளத்திலும் வழங்குவீர்கள் எனத் திடமாக நம்புகிறேன். மேலும் 'சிகரம்' இணையத்தளத்திற்கு வாசகர் என்னும் நிலையைத் தாண்டி எழுத்தாளர்களாகவும் உங்கள் மேலான பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 'சிகரம்' இணையத்தளம் 'சிகரம்பாரதி (லெட்சுமணன்)' ஆகிய எனது தனிப்பட்ட தளமல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானது. இலக்கணம், இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் அழகு தமிழில் உங்கள் கரம் சேர்ப்பதே எங்கள் நோக்கம். எமது தூரநோக்கு "சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்" என 2009 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகையின் 75 ஆவது வெளியீட்டில் பிரகடனப் படுத்தப்பட்டது. அந்த அடிப்படையிலேயே இதுவரை செயற்பட்டுவருகிறேன். நீண்டகாலக் கனவான இணையத்தளம் உருவாக்கும் எண்ணமும் இதோ ஈடேறப் போகிறது. இனி முறையான வணிகமாக ஆரம்பித்து "சிகரம்" இன் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இன்னும் இரண்டாண்டுகளில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளாக "சிகரம்" இன் பல்வேறு வடிவங்களிலான பயணத்திற்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காய் அனைவரும் ஒன்றிணைவோமாக!

சிகரம் இன் பயணம் 2003 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமானது. சிறுசிறு கையெழுத்துப் பத்திரிகைகள் மற்றும் பல முயற்சிகளினூடாக பயணம் தொடங்கப்பட்டது. முழுமையான தேர்ந்த கையெழுத்துப் பத்திரிகையாக 2006 ஆம் ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "சரஸ்வதி" என்னும் இலக்கிய கையெழுத்து சஞ்சிகையை துவக்கினேன். இலக்கியத்தில் எனக்கும் ஆர்வம் இருந்ததால் நாளுக்கு நாள் சஞ்சிகையை மெருகேற்றி வந்தேன். ஆனால் இலக்கிய சஞ்சிகை மாணவர்களிடையே உரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆகவே சஞ்சிகையின் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் 2006.06.01 முதல் "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகையை பல்சுவை சஞ்சிகையாக துவக்கினேன். அன்று முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவு வரை 100 இதழ்களை வெளியிட்டேன். வாசகர் பற்றாக்குறை காரணமாக 2009 இல் இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. அதன் பின் தேசிய நாளேடுகளுக்கும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் வலைத்தளத்தில் காலடி பதித்தேன். இப்போது இணையத்தளத்திலும் கால் பதித்தாயிற்று. இனியென்ன? எல்லாமே வெற்றிதான்!

"சிகரம்" இணையத்தளம் உங்களின் பங்களிப்புடன்தான் முன்னேறப் போகிறது. 'சிகரம் பாரதி' ஆகிய எனது படைப்புகளில் "சிகரம்" இணையத்தளத்துக்குப் பொருத்தமானவை மட்டும் இணையத்தில் வெளியாகும். மற்றவை வலைத்தளத்தில் மட்டும் வெளியாகும். உங்கள் வலைத்தளங்களில் வெளியிடும் பதிப்புகளையும் எமது இணையத்தளத்தில் வெளியிடலாம். கடந்தகாலப் படைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்தும் உங்கள் சொந்தப் படைப்பாக இருந்தால் போதுமானது. இரு கை இணைந்தால் தான் ஓசை. வாசகர்களாகிய உங்களுடன் சேர்ந்து செய்தால் தான் அது சேவை. இணையத்தில் தமிழ்த் தொண்டு செய்ய விரும்பும் அனைவரும் எம்மோடு கைகோர்க்கலாம். தமிழ் மொழி எங்கள் மூச்சு. அதைக் காப்பதே எங்கள் நோக்கு!

உங்கள் படைப்புகளை அனுப்ப மற்றும் இதர தொடர்புகளுக்கு sigaramco@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை அல்லது SIGARAM CO என்னும் கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம். வாட்ஸப் போன்ற செயலிகளினூடாகவும் உங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சங்கங்களிலும் இணைந்துகொள்ளவுள்ளோம். இவ்வளவு ஏன் பிளாக்கரில் கூட கால் பதிக்கிறது நம் சிகரம்! தமிழால் இணைவோம்! தமிழுக்காய் இணைவோம்! தமிழை வளர்ப்போம்! தமிழைக் காப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

தொடர்புகளுக்கு :-

இணையத்தளம்    : https://sigaram.co/
மின்னஞ்சல்             : sigaramco@gmail.com
பிளாக்கர்                 : http://sigaramco.blogspot.com/
கூகிள் பிளஸ்          : https://plus.google.com/u/0/105797588665610856560
டுவிட்டர்                   : @sigaramco
பேஸ்புக்                   : sigaramco

Thursday, 9 February 2017

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 03

வணக்கம். ஏறு தழுவும் உரிமை மீட்க தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழக அரசு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ( பிப் 05 - 2017 ) மிகக் கோலாகலமாக, மிக வெற்றிகரமாக இளைஞர்களுக்கு நன்றி கூறி நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாலமேடு மற்றும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வாரம் ( பிப் 09, 10 - 2017 ) ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவுள்ளது. எந்தக்காலத்திலும் ஏறு தழுவும் விளையாட்டு நடாத்தப்படும் நேரத்தில் தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு அமைப்போ அல்லது தமிழக அரசோ ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் என்னும் இவ்வெற்றிக்கு உரிமை கோர முடியாது. தமிழக அரசு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றிய கருவி மட்டுமே. இளைஞர்களின் எழுச்சிக்கு தலைவணங்குகிறேன்!

 

ஏறு தழுவும் உரிமை மீட்க இலட்சக்கணக்கில் திரண்ட இளைஞர் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து போனது. பயன் தருமா என்ற ஐயம் இருந்தாலும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சியினால் உந்தப்பட்டு தத்தம் வாழிடங்களில் தொடர் போராட்டங்களை நடாத்தி உலகின் கவனத்தை ஏறு தழுவுதலின் பக்கம் ஈர்க்க ஆதரவளித்தனர். ஆனால் தமிழக அரசு ஏறு தழுவும் உரிமை மீட்க நடந்த தொடர் போராட்டத்தை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்தவிதம் அனைவரையும் தமிழக அரசின் மீது அதிருப்திகொள்ள வைத்தது. ஏழு நாட்கள் தொடர்ந்த அறவழிப் போராட்டத்தில் இறுதிநாளில் தமிழகக் காவல்துறை நடந்துகொண்டவிதம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கோரிய போராட்டக்காரர்கள் தமிழக அரசின் மந்தப் போக்கினால் நிரந்தர சட்டமே இறுதித் தீர்வு எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தின் ஏழாம் நாள் மாலையில் நிரந்தர சட்டம் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்படவிருந்த நிலையில் போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டிருந்தால் சட்டம் நிறைவேற்றப்பட்ட சிலமணி நேரங்களில் மாணவர்கள் தாங்களாகக் கலைந்து போயிருப்பார்கள். ஆனால் தமிழகக் காவல்துறை வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தப் பழியை மாணவர்கள் மீது சுமத்தி தீராத களங்கத்தைத் தேடிக் கொண்டது. 

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழக முதலமைச்சரும் அமைச்சர்களும் அவசர அவசரமாக போட்டியை நடாத்தி மக்கள் போராட்டத்தின் வெற்றியை தமதாக்கிக் கொள்ளத் துடித்தனர். ஆனால் மக்கள் முதலமைச்சரையே அவர் போட்டியைத் துவங்கி வைக்கத் திட்டமிட்டிருந்த மதுரை அலங்காநல்லூருக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தினர். தமது கோரிக்கையில் இறுதிவரை மக்கள் உறுதியாக இருந்தனர். ஏறு தழுவும் உரிமை மீட்க கிராமத்து விவசாயிகளுக்காக கிளர்ந்தெழுந்ததில் இருந்து தான் எப்போதும் கைப்பேசியின் அடிமை அல்ல என்றும் சமூக உணர்வு தனக்கும் உண்டு எனவும் இக்கால இளைஞன் நிரூபித்திருக்கிறான். மேலும் இலட்சக்கணக்கான மாணவர்களை நவீன கைப்பேசிகளே ஒன்றிணைத்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தம் கைப்பேசிகள் மூலம் மாணவர்களை ஒன்றிணைத்து மக்களின் அக இருளையும், மெரீனா கடற்கரை இருளில் மூழ்கிய போது மெரீனாவுக்கே ஒளியை வழங்கி புற இருளையும் போக்கி உலகையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தனர். போராட்டத்தின் இடையில் காவேரி பிரச்சினை, மீத்தேன் வாயு, மீனவர் பிரச்சினை மற்றும் அந்நிய குளிர்பான விற்பனை என சமகாலப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் குரல் கொடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் மாணவர்கள் ஈர்த்தனர், 


எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லியில் உள்ள பெண்கள் கூட தமிழக ஆண் மாணவர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டது குறித்து பெருமை கொள்ளும் அளவிற்கு கட்டுக்கோப்பாக நடந்துகொண்டனர். ஒரு தலைவன் இல்லாமல் இலட்சக்கணக்கில் ஒரு கூட்டம் கூட முடியும் என்பதையும் அத்தனை பேரும் ஒரே கோரிக்கைக்காய் ஓரணியில் திரள முடியும் என்பதையும் ஏழு நாட்களாக மனவுறுதியுடன் இறுதிவரை ஒன்றிணைந்து பயணிக்க முடியும்  என்பதையும் தமிழர்கள் உலகுக்கு பறைசாற்றியிருக்கிறார்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தைரியமாக இப்போராட்டத்தின் பின்னர் எவ்வித மன உறுத்தலும் இன்றி நம்மால் சொல்லிக்கொள்ள முடிகிறதென்றால் எல்லாப் புகழும் களமிறங்கிப் போராடிய ஒவ்வொரு மாணவனுக்கும் பொதுமகனுக்கும் மட்டுமே உரித்தாகும். ஏறு தழுவும் உரிமை மீட்ட போராட்டம் இந்த நூற்றாண்டு கண்ட நவீன சுதந்திரப் போராட்டம்!

Sunday, 5 February 2017

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!

அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை. 


காரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்! இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் கோடிகளைக் கொட்டி திரைப்படங்களை எடுக்கிறார்கள். அந்தத் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்றால் ஒருவன் தனது மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை வாரி இறைக்க வேண்டியுள்ளது. திரையரங்க உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண விலையை விட இருமடங்கிற்கும் மேல். தமது பல நாள் உழைப்பை ஒரு நாளில் வீணடித்துத்தான் இந்த ஞானவேல்ராஜாக்களின் தயாரிப்புக்களை மக்கள் ரசிக்க வேண்டியுள்ளது. 


மக்கள் இறுவட்டுக்களிலும் இணையத்தளங்களிலும் திரைப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் திரையரங்குகளில்தான் ரசிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இன்ன பிறரும் திரையரங்கக் கட்டணங்கள் குறித்து கவனம் செலுத்த மறுப்பதேன்? தயாரிப்பாளர்களுக்கு லாபம் லகரங்களில் வந்தால் சரி. மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று போய்விடுவீர்கள். வணிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்களுக்கு தேவையில்லாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துவீர்கள். திரைத்துறையில் அலுப்புத் தட்டினால் அரசியலுக்கு வந்து எங்களையே ஆள்வீர்கள். ஆனால் திரையரங்குகள் குறித்து உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. போங்கடா நீங்களும் உங்க நியாயமும்... 


மக்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்களையே குறை சொல்கிறார்களாம். ஒரு பொது நிகழ்ச்சிக்கு வழக்கறிஞரோ மருத்துவரோ வராவிட்டால் கேட்பதில்லையாம். நடிகர்கள் வராவிட்டால் கேள்வி கேட்கிறார்களாம். கேட்கத்தானே செய்வோம்? உங்களைத்தானே தமிழர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்? ரஜினி என்றால் உயிரையும் கொடுப்பவன் உங்கள் ரசிகன் தானே? நீங்கள் உருவாக்கும் திரைப்படத்துக்கு தன் சொந்த செலவில் விளம்பரம் தேடிக்கொடுக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? தன் வீட்டுப் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் உங்களை பாலால் அபிஷேகம் செய்வானே? நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களை முதல்வராகவும் ஆக்குவானே? வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் யாரேனும் இப்படிச் செய்ததுண்டா? இவ்வளவும் செய்துவிட்டு தனக்கு பொதுவெளியில் ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் வராத போது உங்களை கேள்வி கேட்டுத்தானே ஆகவேண்டும்? ரசிகர்களால் கோடீஸ்வரன் ஆன நீங்கள் ரசிகர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் நியாயம், தர்மம் எல்லாம். 


இறுதியாக தயாரிப்பாளர்களும் நடிகர்களும் திரைப்படம் என்னும் கலையை ஏழை எளியவர்களும் கண்டு ரசிக்கக் கூடியதாக ஆக்க முயற்சி எடுக்காதவரை தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கும் இறுவட்டுக்களுக்கும் மக்கள் மத்தியில் என்றுமே பேராதரவு இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் மக்களால் முன்னேறும் நீங்களும் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய கடப்பாடுகளோடு நடந்துகொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம். வாழ்க தமிழ் ராக்கர்ஸ்!

Saturday, 4 February 2017

இலங்கையின் 69வது சுதந்திர தினம்

இன்று (பிப்ரவரி 04 ) இலங்கை தேசத்திற்கு சுதந்திர தினமாம். 'நா இங்க இல்ல' என்ற வடிவேலு பாணியில் 'நா அடிமையா இல்ல' என்று வருடா வருடம் நம் நாட்டு மக்களைக் கூப்பிட்டு அறிவிக்கும் நாள். இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்தன. 1948 இல் ஆங்கிலேயர் விட்டுச் சென்றதை விட மோசமான நிலையிலேயே இன்று நம் நாடு உள்ளது. பொருளாதாரம், அரசியல் மற்றும்  கல்வி போன்ற அனைத்திலுமே பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்ற கருத்தும் இன்று நம்மில் பலரிடையே உள்ளது. ஆங்கிலேயர் சென்ற பின்புதான் இனவெறி, அரசியல் பகைமைகள் மற்றும் ஊழல்கள் ஆகியவை பல்கிப் பெருகி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தன. ஆங்கிலேயரின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
ஆனால் சிங்களவர்களின் கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமிழர்களை அழித்தொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுதந்திரம் பெற்ற கையோடு தனிச்சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். இன்று இலங்கையில் என்னதான் சமாதான சூழல் நிலவினாலும் இனத்துவேஷம் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக தமிழர்களோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கவே இலங்கை அரசு முயன்று வருகிறது. மீண்டும் ஆங்கிலேயர் கைகளிலேயே ஆட்சியை ஒப்படைத்தால் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. 

தற்போதைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவுக்கு கூறு போட்டு விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஆரம்பித்த இந்த மகத்தான பணி மைத்திரிபால சிறிசேன காலத்திலும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதி அபிவிருத்தியா, கட்டிட நிர்மாணமா அல்லது துறைமுக அபிவிருத்தியா அது எதுவாக இருந்தாலும் உடனே சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் சீனர்களுக்கு இலங்கையில் வாக்குரிமையும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்ற சீனாவிலிருந்து ஊழியப் படையும் அழைத்துவரப்படுகிறது. ஆங்கிலேயர்கள் யுத்தம் புரிந்து நாட்டைக் கைப்பற்றினார்கள். ஆனால் இலங்கை தானாக மனமுவந்து சீனாவின் காலடியில் நாட்டை வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

மலையகத் தமிழர்கள், யாழ் தமிழர்கள், முஸ்லிம்கள் என மூன்று சிறுபான்மையின மக்கள் இலங்கையில் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் சிறுபான்மையினரை நாட்டை விட்டு விரட்டிவிட்டு இலங்கையை தமக்கு மட்டும் உரியதாக்கிக் கொள்ள நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அது முடியவில்லை. ஆங்கிலேயர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் இலங்கையை சிங்கப்பூரை விடவும் அழகிய நாடாக மாற்றியிருக்கலாம். ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதிலேயே இலங்கையின் அரசாங்கங்கள் தனது 69 வருடங்களையும் செலவிட்டுவிட்டன. ஆதலால் கால மாற்றம் தானாகவே நிகழ்த்திக்கொண்ட அபிவிருத்தி தவிர வேறெந்த முன்னேற்றங்களும் இந்நாட்டில் நிகழவில்லை. இனி வரும் காலம் இன, மத பேதங்களற்ற ஒரு இலங்கை முன்னேற்றப் பாதையை நோக்கி நகரும் என நம்பியிருக்கலாம். எது எப்படியோ என் இலங்கை தேசத்திற்கு அறுபத்தொன்பதாவது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Wednesday, 1 February 2017

சிகரம் பாரதி - 0006

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று (2016.01.31) கே.டிவி யில் பள்ளிக்கூடம் திரைப்படமும் ராஜ் டிவி யில் பெண்மணி அவள் கண்மணி திரைப்படமும் ஒளிபரப்பானது. பள்ளிக்கூடம் திரைப்படம் நம்மை நம் பாடசாலைக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. நாமும் நமது பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிந்திக்கவைத்திருக்கிறது திரைப்படம். பெண்மணி அவள் கண்மணி திரைப்படம் நடிகர், இயக்குனர் விசுவினுடையது. விசுவின் திரைப்படங்களில் கருத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது. பெண் கொடுமை, மாமியார் கொடுமை எனப் பல கோணங்களில் பேசுகிறது திரைப்படம். சொல்வதற்கென்ன, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அருமையான திரைப்படம். பாடல்களும் அருமை. நீங்களும் ஒருதடவை பார்த்து ரசியுங்களேன்..

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts