Share it

Thursday, 31 May 2018

மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01

மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர்.  'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.  'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார்.  'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.

'சாரல் நாடன்' - சில முக்கிய குறிப்புகள்:

* இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர் என்ற வகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 

* இலங்கை சமாதான நீதிவானாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

* 'சாரல் வெளியீட்டகம்' இன் உரிமையாளரான இவர் இதன் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

* இவரைப் பற்றிய தகவல்களோடு வெளியான நூல் 'சாதனையாளர் சாரல் நாடன்' என்பதாகும்.

* இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.

* நான்கு தடவை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது பெற்றுள்ளார்.

* இவரின் இயற்பெயர் கருப்பையா நல்லையா என்பதாகும்.எழுத்தாளர் 'சாரல் நாடன்' அவர்களைப் பற்றி இணையத்தில் வெளியாகியுள்ள சில குறிப்புகள்:
# வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும் - சை.கிங்ஸ்லி கோமஸ் - ஊடறு

# மறைக்கப்பட்ட ஆளுமைகள் - திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி - லெனின் மதிவானம் - இனியொரு

# மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் - லெனின் மதிவானம் - தேனீ இணையத்தளம்

# மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் - நமது மலையகம்

# மலையக இலக்கிய கர்த்தாக்கள் - தொகுதி 01 (நூல்) - என். செல்வராஜா - நூலகம்

# மலையக நாவல்கள் பற்றிய தகவல்கள் திரட்டுவதற்கு காலம் அரும்பியுள்ளது - சாரல் நாடன் - நமது மலையகம்
இவர் எழுதிய நூல்கள்:

01. சி. வி. சில சிந்தனைகள் (1986)

02. தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988)

03. மலையகத் தமிழர் (1990)

04. மலையக வாய்மொழி இலக்கியம் (1993) - மத்திய மாகாண சாகித்திய விருது பெற்ற ஆய்வு நூல்

05. மலைக் கொழுந்தி (1994) - சாகித்திய விருது பெற்றது

06. மலையகம் வளர்த்த தமிழ் (1997) - கட்டுரைகள்

07. பத்திரிகையாளர் நடேசய்யர் (1999) - ஆய்வு நூல்

08. இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999) - கட்டுரைகள்

09. மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் (2000)

10. பிணந்தின்னும் சாத்திரங்கள் - குறு நாவல் (2002)

11. மலையக தமிழர் வரலாறு (2004)

12. பேரேட்டில் சில பக்கங்கள் (2005)

13. கண்டி ராசன் கதை (2005)

14. புதிய இலக்கிய உலகம் (2006)

15. குறிஞ்சி தென்னவன் கவிதைச் சரங்கள் (2007)
மலையகத்தின் வரலாற்றில் தடம் பதித்த 'சாரல் நாடன்' அவர்களுடனான நேர்காணல்:

சிகரம் : வணக்கம் ஐயா!

சாரல் : வணக்கம்!

சிகரம் : உங்களுடைய கலைத்துறைப் பிரவேசத்திற்கான காரணம்?

சாரல் : மலைநாட்டின் மீதான பற்று

சிகரம் : உங்களது கலைத்துறைக்கு ஊக்கமளித்தோர்?

சாரல் : எனது ஆசிரியர்கள்.

சிகரம் : நீங்கள் சாரல் நாடன் எனும் புனைபெயர் வைத்துக்கொண்டதற்கான காரணம்?

சாரல் : கலித்தொகை படித்தேன். அதில் சாரல் நாடன் என்றொரு பெயர் வந்தது. சாரல் நாடன் என்பது மலைநாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக அமைகிறது. அதனாலேயே இந்த சாரல் நாடன் எனும் பெயரை வைத்துக் கொண்டேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பு எது?

சாரல் : 1960இல் படைத்தேன். அது 'ஐயோ பாவம்' என்னும் கவிதை.
சிகரம் : அதனைத் தொடர்ந்து உங்களது எழுத்துப் பணி எவ்வாறு அமைந்தது?

சாரல் : சில நூல்களை எழுதியிருக்கிறேன். எனது சாரல் வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பின் கரு?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்களைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது.

சிகரம் : அதனைத் தொடர்ந்து வந்த படைப்புகளில் எடுத்துக்கொண்ட கருப்பொருள்?

சாரல் : மலையகத்து வாழ்க்கையை எழுத்தாக்கி மக்களுக்கு உணர்த்த முயற்சித்தேன்.

சிகரம் : உங்களுடைய படைப்பின் மூலம் வாசகர்களுக்கு சொல்ல விழையும் கருத்து?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்கள்

சிகரம் : எழுத்துப் பணியில் நீங்கள் அடைந்த வெற்றி?

சாரல் : எழுத்துப் பணியில் வெற்றி அடைந்தேன் என்று கூற முடியாது. ஏனெனில் எனது கருத்துக்கள் எனது படைப்புக்களின் மூலம் வாசகர்களுக்கு சென்றடைந்திருக்குமானால் அதை ஒரு சிறு வெற்றியாகக் கருதலாம்.
(அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.

சாரல் : எனது படைப்புக்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?


சிகரம் : ஆம்


சாரல் : என்ன படைப்புகள்?


சிகரம் : மலைக்கொழுந்தி, மலையகத் தமிழ் இலக்கியம் முதலியவை.


தொடர்ந்து எனது வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.)


சிகரம் : இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகள்?

சாரல் : முதல் கவிதை 1960இல் படைத்தேன். முதலில்கூடச் சொன்னேன். 'ஐயோ பாவம்' என்ற கவிதை. அதுதான் என்னுடைய முதல் படைப்பு.

சிகரம் : உங்களுடைய கட்டுரைகள்?

சாரல் : கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

சிகரம் : உங்களுடைய சிறுகதைகள்?

சாரல் : பதினைந்து சிறுகதைகள் எழுதியிருந்தேன். அது மலைக்கொழுந்தி என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாக இந்தியா, சென்னையில் இருந்து வெளிவந்தது.

சிகரம் : நீங்கள் எழுதியுள்ள நாவல்கள் பற்றி...?

சாரல் : 'பிணம் தின்னும் சாத்திரம்' என்ற நாவலை எழுதியிருக்கிறேன். இது பற்றிய விபரம் 2002 வீரகேசரியில் வெளிவந்தது. மேலும் 'பலி' எனும் குறுநாவலையும் எழுதியிருக்கிறேன்.

இது ஒரு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டதொரு குறுநாவலாகும். அதன் முதல் அத்தியாயத்தை என்.எஸ்.எம் ராமையா எழுதினார். இரண்டாம் அத்தியாயத்தை தெளிவத்தை ஜோசப் எழுதினார். மூன்றாம் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஆனாலும் நாம் மூவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தபால் மூலம் தான் குறுநாவல் எழுதப்பட்டது. 

அதாவது முதலில் ராமையா முதல் அத்தியாயத்தை எழுதி ஜோசப்புக்கு தபால் மூலம் அனுப்பினார். அவர் இரண்டாம் அத்தியாயத்தை எழுதி எனக்கு அனுப்பினார். ஆக, மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த 'பலி' எனப்படும் குறுநாவல் மூவர் இணைந்து எழுதிய ஒரு குறுநாவலாக அமைந்தது. 

இது 1967 தைத்திங்கள் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட பொங்கல் விழா மலருக்கு அழகு சேர்ப்பதாகவும் அமைந்தது. இது 1997இல் 30 வருடங்களின் பின் 'கொழுந்து' சஞ்சிகையில் 11 மற்றும் 12ஆம் இதழ்களில் மீள்பிரசுரம் செய்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry 

Wednesday, 30 May 2018

பாஸ் என்கிற பிக்பாஸ் - 001

ஹாய்டா மச்சி!

ஹாய். வா மச்சி...

ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது?

நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி...

ஏன்டா சலிச்சுக்கிற?

வேற என்னடா பண்றது? நம்ம நெலமை அப்படி...
அதுசரி. மொபைல்ல என்னடா ரொம்ப நேரமா நோண்டிக்கிட்டிருக்க?

அதுவா? நம்ம பிக்பாஸ் இரண்டாவது சீஸனும் துவங்கப் போகுதில்ல?

ஆமா மச்சி, நானும் கேள்விப்பட்டேன். எப்போ ஆரம்பிக்குது?

ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்குதுன்னு சொல்றாங்க.

அப்படியா?

ஆமா, நம்மவர் கமல் தான் இந்த முறையும் தொகுத்து வழங்கப் போறார்!

அவர் தான் அரசியல் வாதியாகிட்டாரேடா?

ஏன் அரசியல் வாதின்னா நிகழ்ச்சி பண்ணக் கூடாதா என்ன?

பண்ணலாம்... பண்ணலாம்....

ம்ம்... இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரா இருக்கும்னு நெனைக்கிற?

இப்போ தானேடா நிகழ்ச்சியே அறிவிச்சிருக்காங்க? அதுக்குள்ளே எப்படித் தெரியும்?
தெரியுமே... அத தான் மொபைல் ல பாத்துக்கிட்டிருந்தேன். நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்துல போட்டிருந்தாங்க...

தகவல் உண்மைதானா?

அவங்களும் ஊகத்துல தான் போட்டிருக்காங்க. ஆனா, எப்படியாச்சும் தகவல் கிடைச்சிருக்கும்.

சரி, யார் யார் பேரெல்லாம் அதுல போட்டிருக்கு?

நம்ம சிம்ரன், நடிகை கஸ்தூரி இவங்க பேரெல்லாம் அடிபடுதாம்...

ஓகோ.. கதை அப்படிப் போகுதா? 

ஆமா, நம்ம ஓவியாவும் வருதாம்ல?

ஓவியாவா? அவங்கள போன முறை திரும்ப கூப்பிட்டப்போவே வர முடியாதுன்னு சொன்னாங்களே?

இந்த முறை அவங்க போட்டியாளரா வரலயாம். விருந்தினரா தான் வர்றாங்களாம்...

அப்போ நல்லது. சரி, பிக்பாஸ் பத்தி வேற ஏதாச்சும் தெரிஞ்சுதா? 

ம்ம்.... 15 போட்டியாளர்கள், 60 கேமராக்கள், 100 நாள் இவ்வளவு தான் தெரியும்....

போனமுறை 30 கேமரா, இந்த முறை 60ஆ?

ஆமா, இது சீஸன் 2 ல, அதான் இப்படி...

பிக்பாஸ் வேற மொழிகள்லயும் ஒளிபரப்பாகுதாமே?

ஆமா மச்சி, ஏப்ரல் 15 முதல் மராத்தி பிக்பாஸ் போய்க்கிட்டிருக்கு. ஜூன் மாசம் தெலுங்கு, மலையாளம் ரெண்டுலயும் ஆரம்பமாகப் போகுது. 

பிக்பாஸ்க்கு எங்க போனாலும் செம வரவேற்பு தான் போல?

இல்லாம? உலக அளவுல சக்கை போடு போட்டுக்கிட்டுருக்குற நிகழ்ச்சியாச்சே!

சரி மச்சி, பிக்பாஸ் பத்தி இன்னும் தகவல்களைத் தேடி வை, சந்திப்போம்.

சரி மச்சி, சந்திக்கலாம்!

வாழ்க பிக்பாஸ்!

வளர்க பிக்பாஸ்!!

மொபைல் - திறன்பேசி 
சீஸன் - பருவம் 
கேமரா - ஒளிப்படக் கருவி 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்தமிழ்2 #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #KamalHassan #Maiam #VijayTelevision #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK

ஐபிஎல் கிண்ணத்தை தனதாக்கியது சென்னை! #WhistlePodu #CSK

சென்னை மீண்டும் ஐபிஎல் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான சென்னை ரசிகர்களின் கனவு நனவாகியிருக்கிறது. இரண்டாண்டு கால தடைக்கு தக்க பதிலடியைத் தந்து தனது மீள்வருகையை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிறது சென்னை. ஐபிஎல் 2018 இன் முதல் போட்டியில் வெற்றி பெற்று பயணத்தைத் தொடங்கிய சென்னை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ஐபிஎல்லின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வைத்திருக்கிறது. சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். 2013, 2015 மற்றும் 2017 ஆகிய பருவங்களில் ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது மும்பை அணி. இந்த சாதனையை 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றி சமன் செய்திருக்கிறது சென்னை. இந்த இரண்டு அணிகள் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு தடவை (2012 & 2014), ராஜஸ்தான் ஒரு தடவை (2008), டெக்கான் சார்ஜர்ஸ் ஒரு தடவை (2009) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு தடவை (2016) கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் 2008, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய பருவங்களில் இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. சென்னை அணி தான் விளையாடிய ஒன்பது பருவங்களிலும் அரையிறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்துள்ளது. சூதாட்ட தடைக் காலமான 2016 மற்றும் 2017 இல் சென்னை அணி பங்கேற்கவில்லை. இம்முறையும் ஐபிஎல் சாதனைப் பட்டியலுக்கு கொஞ்சமும் குறைவில்லை. இந்த முறை ஐபிஎல்லில் கேன் வில்லியம்சன் மொத்தமாக 735 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிக பட்சமாக ரிஷப் பண்ட் 37 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிகூடிய தனிநபர் ஓட்டமான 128 ஓட்டங்களையும் ரிஷப் பண்ட் தான் பெற்றுள்ளார். அதிகூடிய நான்கு ஓட்ட சாதனையும் அவருக்கே உரியது. 68 நான்கு ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். அதிக பட்சமாக 24 விக்கெட்டுகளை அன்ரூ டை கைப்பற்றினார். சுரேஷ் ரெய்னா அனைத்து பருவங்களிலுமாக 4985 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். லசித் மலிங்க 154 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகூடிய ஆறு ஓட்டங்களாக கிறிஸ் கெயில் 292 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக கிறிஸ் கெயில் 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கவுதம் கம்பிர் 491 நான்கு ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் பதினோராம் பருவமும் இனிதே நிறைவடைந்துள்ளது. இனி பன்னிரெண்டாம் பருவம் 2019 இல் இடம்பெறும் வரை நாம் காத்திருக்க வேண்டும். மினி ஐபிஎல் போட்டிகளை நடாத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஏதும் நடந்தால் கொண்டாட்டம் தான். வாழ்க ஐபிஎல்! வளர்க ஐபிஎல்!!

#சிகரம் #சிகரம்பாரதி #ஐபிஎல் #ஐபிஎல்2018 #சென்னைசூப்பர்கிங்ஸ் #IPL #IPL2018 #CSKvSRH #IPLFINAL #VIVOIPL #MSD #MSDhoni #SIGARAM #SigaramBharathi

Sunday, 27 May 2018

ஐ.பி.எல் 2018 - சென்னை எதிர் ஹைதராபாத் - இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இரண்டு மாதங்கள் - 60 போட்டிகள் - எட்டு அணிகள் என நம்மை மகிழ்வித்த இருபது-20 கிரிக்கெட் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தருணம் வந்து விட்டது. ஐபிஎல் 2018 இல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களையும் கைப்பற்றிய இரண்டு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தப் போகின்றன. முதலாவது தகுதிகாண் போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுநர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த போட்டிக்குத் தேர்வானது. இரண்டாவது தகுதி காண் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தேர்வானது ஹைதராபாத்.

ஐபிஎல் 2018 இன் இறுதிப்போட்டி 2018.05.27 இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை அணி ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. சென்னை இரண்டு முறை ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் சன் ரைசர்ஸ் இதுவரை ஒரு தடவை மட்டுமே கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.  

இரண்டு அணிகளில் யார் வென்றாலும் கிண்ணம் தமிழ்நாடு, சென்னைக்குத் தான் வரப்போகிறது. ஏனெனில் சென்னை அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் சன் டிவி ஆகிய இருவரினதும் தலைமையகங்கள் சென்னையில் தான் இருக்கின்றன. 

எட்டு அணிகளாகப் பிரிந்திருந்த ஐபிஎல் ரசிகர்கள் இப்போது இரண்டாகப் பிரிய வேண்டிய தருணம் இது. வெற்றி யாருக்கு? சென்னைக்கா? ஹைதராபாத்துக்கா? தோனிக்கா? தவானுக்கா? பார்த்துவிடலாம், இன்று இரவு...

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #ஐபிஎல்இறுதிப்போட்டி #ipl #ipl2018 #iplfinal #iplfinal2018 #vivoipl #CSKvSRH #MSD #MSDhoni

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

பிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நமக்குக் கிடைத்த வண்ணமிருக்கின்றன. அவற்றின் தொகுப்பே இந்தப் பதிவு! வாங்க போகலாம்.

பிக் பாஸ் வீடு இப்படி இருக்குமோ?பிக் பாஸ் இப்படியா நடக்கும்?


இவிங்க தான் அவிய்ங்களா?ம்ம்... நடத்துங்க... நடத்துங்க....

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ்2 #கமல் #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #VijayTV #StarVijayTV #KamalHassan #Maiam #BiggBossTroll #BiggBossMemes #TamilMemes #Sigaram #SigaramCO #சிகரம் 

Saturday, 26 May 2018

நுட்பம் - தொழிநுட்பம் - 03

'மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது' என்கிற வார்த்தை தொழிநுட்ப உலகிற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும். தொழிநுட்ப உலகின் மீது பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டாலும் தீர்வுகளை நோக்கி நிதானமாக நகர்ந்து வருகிறது தொழிநுட்ப உலகம். தற்போது தொழிநுட்ப உலகில் நடைபெற்று வரும் மாற்றங்களின் தொகுப்பே இப்பதிவு. வாங்க போகலாம். 

விசா அட்டையின் புதிய அம்சம் 
விசா அட்டை (Visa Card) என்றாலே அனைவருக்கும் தெரியும். கடனட்டை, வரவட்டை இரண்டையும் விநியோகிப்பதில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் தான் விசா. இந்த விசா அட்டையில் தற்போது Pay Wave என்னும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது POS என்னும் இயந்திரத்தில் உங்கள் அட்டையை தேய்ப்பார்கள். அதன் பின்னரே உங்கள் பணம் விற்பனையாளருக்குச் சென்று சேரும். இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ததும் POS இயந்திரத்திற்கு அருகில் உங்கள் அட்டையை காட்டினால் போதும். உங்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டு விடும். எப்பூடி?

கூகுளின் goo.gl சேவைக்கு மூடு விழா!
கூகுளின் goo.gl சேவை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது இணையத்தள முகவரிகளை சுருக்கித்தரும் ஒரு சேவை ஆகும். எவ்வளவு பெரிய முகவரியையும் சுருக்கித் தந்து விடும் இந்த சேவை. 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவைக்கு 2018 ஏப்ரலுடன் மூடுவிழா நடத்தியிருக்கிறது கூகுள். ஏற்கனவே நீங்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி சுருக்கிப் பெற்ற முகவரிகளை தொடர்ந்தும் பயன்படுத்தலாம். கூகுள் goo.gl சேவைக்கு பதிலாக Firebase Dynamic Links (FDL) சேவையை துவங்கியுள்ளது. இது தொழிநுட்ப உலகில் புதிய மாற்றங்களை வழங்கும் என நம்பப்படுகிறது. 

வாட்ஸப் இலக்கத்தை மாற்றினால் தன்னியக்க அறிவிப்பு.
வாட்ஸப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நம் மத்தியில் வாட்ஸப் பாவனை அதிகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில் வாட்ஸாப்பும் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் நீங்கள் உங்கள் வாட்ஸப் இலக்கத்தை மாற்றினால் அது பற்றிய அறிவிப்பை உங்கள் நண்பர்களுக்குத் தன்னியக்கமாகவே வழங்குவது. இந்த வசதியை செயற்படுத்த Whatsapp Settings > Account > Change Number என்னும் வசதியைத் தெரிவு செய்து Next இனை சொடுக்குங்கள். பிறகு உங்கள் பழைய தொலைபேசி இலக்கத்தையும் புதிய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து Next இனை மீண்டும் சொடுக்குங்கள். பின்பு நீங்கள் இலக்கம் மாற்றியது குறித்த அறிவிப்பை யார் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யுங்கள். All Contacts, Contacts I Have Chats With மற்றும் Custom ஆகிய தெரிவுகள் உள்ளன. இவற்றில் நீங்கள் விரும்பும் தெரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

வருகிறது விண்டோஸ் XP 2018 பதிப்பு!
கணினி என்றால் அதில் விண்டோஸ் இருந்தாக வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தான் அன்றும் இன்றும் கணினிகளை இயக்கி வருகிறது. அதிலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் எத்தனை பதிப்புகள் வெளியானாலும் விண்டோஸ் XP தான் இன்னமும் உலகின் பல கணினிகளை இயக்கி வருகிறது. விண்டோஸ் XP இயங்குதளம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றன. தற்போது விண்டோஸ் XP இயங்குதளத்தினை மீளப் புதுப்பிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. வின்டோஸ் XP இயங்குதளத்தில் காணப்படும் காலத்துக்கு ஒவ்வாத வசதிகளை நீக்கி விட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஆனாலும் விண்டோஸ் XPயின் தோற்றம் உள்ளிட்ட முக்கிய வசதிகள் அப்படியே தான் இருக்கும். புதிய பதிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 

#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM

மலையகமும் மறுவாழ்வும்

இலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஐவர் மூன்று தசாப்தங்கள் கடந்து இலங்கை வந்திருந்தனர். கேகாலை மாவட்டத்தில் இருந்து தமிழகம் சென்ற (ஈழம் மலர் மன்னன்) தம்பிராஜா (தமிழகத்தில் கிராம அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), ஆகரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இருந்து சென்ற செவந்தி (இவர் நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), தலவாக்கலை பகுதியில் இருந்து சென்ற பூபாலன், நாவலப்பிட்டி பகுதியில் இருந்து சென்ற ஜெயசிங் (இவர்கள் இருவரும் வங்கி அதிகாரிகளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்) ஆகியோருடன் இரத்தினபுரி, லெல்லோபிட்டிய தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகன் (ராமச்சந்திரன்) ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

தெளிவத்தை ஜோசப்


திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழகன் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை திரும்பி பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்புகள் ஊடாக தனதும், இலங்கை மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் இணைத்ததாக மலையகமும் மறுவாழ்வும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை தொகுத்திருந்தார். திருச்சியில் வாழும் தாயகம் திரும்பியவரான டார்வின்தாசன் (இவர் களுத்துறை மாவட்டம் மத்துகமவை சேர்ந்தவர்) தனது அங்குசம் பதிப்பகத்தின் ஊடாக வெளியிட்டிருக்கும் இந்த நூலை இலங்கையிலேயே முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு இந்தக் குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

அ. லோரன்ஸ் 


எனினும் எதிர்பாராத விதமாக தமிழ்ச்சங்கத்திற்கு முன்பாகவே கேகாலை மாவட்ட கந்தலோயா பாடசாலையிலும், ஹட்டனில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்விலும் மேற்படி நூல் முதல் அறிமுகத்தை கண்டுவிட்டநிலையில் கொழும்புத் தமிழச்சங்க அறிமுக நிகழ்வு ஆரம்பமானது.

இரா.சடகோபன்


இலங்கை மலையக எழுத்தாளர்களான இரா.சடகோபன் எழுதிய மலையகத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, மல்லியப்புசந்தி திலகர் எழுதிய இலங்கை(யில்) தமிழர்கள், எம். வாமதேவன் எழுதிய தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, அ.லோறன்ஸ் எழுதிய மலையகத் தமிழர்களின் அடையாளம் தொடர்பான பிரச்சினைகள், மலையகத் தமிழ்த் தேசியம் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய கட்டுரைகளுடன் தமிழக மலையக மக்களின் வாழ்நிலையை விளக்கும் 'கடல்தாண்டி... கண்ணீர் சிந்தி...', இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுத் திட்டங்கள் ஒரு பார்வை ஆகிய தமிழகனின் இரு கட்டுரைகளையும் கொண்டதாக நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

சன் பிரபாகரன் 


மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளரான இரா.சடகோபனின் வரவேற்புரையுடன் கலந்த சுருக்க உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப் ஆற்றினார். ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா சென்ற மலையகத் தமிழ் மக்களுக்கும் ஈழயுத்தத்தினால் பாதிப்புற்று அகதிகளாகப் போன மலையகத் தமிழ் மக்களுக்கும் வேறுபாடு தெரியாது எல்லோரையும் அகதிகளாகப் பார்க்கும் நிலைமை தமிழ் நாட்டில் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில் வாழும் சுமார் 130000 ஈழ அகதிகளில் சுமார் 30000 ஆயிரம் அளவானவர்கள் மலையகத் தமிழ் மக்கள்.

தெளிவத்தை ஜோசப்


அவர்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து 70 களில் வன்னியில் குடியேறி பின்னர் யுத்தம் காரணமாக வாழ வழியின்றி படகுகளின் மூலமாக தமிழகம் சென்றவர்கள். ஆனால் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் முறையான அனுமதிகளுடன் தமிழகம் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் அங்கு தேடிக்கொண்டிருக்கும் மறுவாழ்வு பற்றியே தமிழகன் இந்த கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இன்னும் வாழ்வு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவே நிலைமை. இவர்களின் வாழ்வு பற்றியும் மறுவாழ்வு பற்றியும் அக்கறை கொண்டவர்கள் ஒன்று சேரந்து எடுக்கும் முயற்சியே இந்த தொகுப்பு என்று குறிப்பிட்டார்.

வேலு ஐயா 


நூலின் முதலாவது ஆய்வுரையை வழங்கியர் சமூக கலை இலக்கிய ஆய்வாளரும் அக்கறைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜ் மஷ்ஷுர். தனக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியே அதேநேரம் ஒட்டு மொத்த தொகுப்பையும் அதன் பலம் பலவீனங்களோடு ஆய்வுக்குட்படுத்தியிருந்தார். நூலின் முகப்பிலே மறுவாழ்வு எனும் சொல்லில் 'ழ்' இடதுபக்கமாக சரிந்து இருப்பதும் அது சிவப்பாக அச்சிடப்பட்டிருப்பதுமே அதன் உள்ளடக்கம் பற்றிய ஒரு பார்வையைத் தருவதாக தெரிவித்ததுடன் மலையக மக்களின் வரலாறு, பொருளாதார நிலை, அடையாளம், தேசியம் ஆகிவற்றோடு இலங்கைத் தமிழர்கள் எனும் பொருளில் அழைக்கப்படுபவர்களில் இருந்து மலையகத் தமிழர்கள் எவ்வாறு மாற்று அடையாளங்களுடன் வாழ்கின்றனர் என்பதை நிறுவும் இலங்கை(யில்) தமிழர்கள் ஆகிய கட்டுரைகள் முறையாகத் தொகுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நூலில் அடங்கியுள்ள கடைசி இரண்டு கட்டுரைகள் இரண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையக் தமிழர்களின் வாழ்வியல் குறித்ததாக அமைந்ததுடன் அவை தனக்கு முற்று முழுதான புதிய வாசிப்பு அனுபவமாகவும் புதிய தகவல்களாகவும் அமைந்ததாக குறிப்பிட்டார். அத்துடன் மலையகம் இன்று அடைந்திருக்கக்கூடிய சமூகத் தட்டின் மாற்றங்கள் குறித்து இந்த நூல் உள்ளடக்காமை ஒரு பலவீனம் என்பதை சுட்டிக்காட்டியதுடன் மலையகத்தில் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களான மலையக இலக்கியம் குறித்தும் மலையகத் தொழிற்சங்கங்கள் குறித்துமான கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். விரிவான ஆழ அகலங்களைக் கொண்டதான இவரது ஆய்வுரை தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.இரண்டாவது ஆய்வுரையை ஆற்றிய கலாநிதி ந.ரவீந்திரன் இந்த நூலின் அறிமுகவுரையை எழுதியிருக்கும் தெளிவத்தை ஜோசப் முதல் தொகுப்பாளர் தமிழகன் வரை குறிப்பிட்டிருப்பது போல இந்த நூல் தமிழ் நாட்டு சூழலுக்காக எழுதப்பட்டது மாத்திரமல்ல. இது இலங்கையிலும் சக சமூகங்களால் வாசிக்கப்படவேண்டிய நூல். ஏனெனில், இலங்கையில் சக சமூகங்கள் மலையக மக்கள் அவர்தம் பிரச்சினைகள் குறித்த சரியான புரிதல் இன்னும் சக சமூகங்களிடம் இல்லை. ஏற்கனவே 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருந்தாலும் பிரித்தானிய காலனிய ஆட்சிக்கு கீழான குடியுரிமையே அன்றி உள்ளுர் குடியுரிமை அல்ல. அவர்கள் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்தபோதும் பண்டாரநாயக்காவின் உள்ளுராட்சியில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுதேச அரசாங்கத்தில் பிரித்தானியர் வழங்கியிருந்த வாக்குரிமையும் பறிக்கப்பட்டனர். பின்னர் அதனை மீளப்பெற்றனர். இதுவே அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குரிமைக்கும் அவர்களின் இலங்கைக் குடியுரிமைக்கும் உள்ள வேறுபாடு ஆகும். தற்போதைய நிலையில் இலங்கையின் வேறு எந்த சமூகம் மீதும் அல்லாத வகையில் மலையக மக்களிடையே சிங்கள மேலாதிக்க சக்திகள் திணித்துவரும் மொழியாதிக்கம் இன்னும் ஒரு சவாலை அவர்களிடத்தில் தோற்றுவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இவரது ஆய்வுரையும் தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.ஏற்புரை வழங்கிய தமிழகன் தான் இத்தகைய தொகுப்பை வெளிக்கொணர எண்ணியதன் காரணம் பற்றிக் குறிப்பிட்டதுடன் தமிழகத்தில் பெரும்பாலாகவும் ஏனைய மாநிலங்களில் பரவியும் வாழும் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட உறவுகள் இன்று சுமார் 15 லட்சம் அளவில் இந்தியாவில் வாழ்வதாகவும் அவர்கள் அங்கு தாயகம் திரும்பியவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் தமது மறு வாழ்வைத் தேடிக்கொண்டிருப்பவர்களாக உள்ளனர்.

தமிழகன்


இன்று இலங்கையில் ஒரு மலையகம் இருப்பதுபோல இந்தியாவிலும் ஒரு மலையகம் இருக்கிறது. அவர்களுக்கும் அங்கு அடையாளப்படுத்தல் முதல் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் வரையான பிரச்சினைகள் பலவுண்டு. இந்த இரண்டு மலையகங்களும் உணர்வுடன் இணைந்து தமது மறுவாழ்வுக்காக திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

முத்துக்குமார் 


வாழ்த்துரை வழங்கிய மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உபதலைவர் மு.சிவலிங்கம் மறுவாழ்வு என்ற சொற்பிரயோகம் விதவைகள் மீண்டும் திருமணம் முடிப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டதுடன் மலையக மக்கள் தமது வாழ்வு மற்றும் அரசியல் குறித்த இன்னும் ஆழமாக சிந்தித்து முன்னகர வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வாமதேவன் 


நிகழ்வின் இறுதி ஒரு மணித்தியாலம் சபையோர் கலந்துரையாடலாக அமைந்தது. முத்துக்குமார், கே.ஜி, வி.எம்.ரமேஷ், போன்ற இளையவர்கள் எழுப்பிய தமிழ்நாட்டில் மலையக மக்கள் தொடர்பான தெளிவு இன்மை, மலையக மக்கள் முன்னெடுக்கப்படவேண்டிய போராட்ட வடிவம், தமிழக இலக்கிய இதழ்களில் மலையக இலக்கியம் இடம்பெறாமை போன்ற கேள்விகளுக்கு வழக்கறிஞர் தமிழகன், பூபாலன், பிரான்ஸிஸ், ஜெயசிங், அ.லோரன்ஸ், இரா.சடகோபன், தெளிவத்தை ஜோசப், ஆகியோர் பதிலளித்தனர். 

பூபாலன் 


வன்னியில் வாழும் மலையக மக்கள் குறித்தும் தலைநகரில் வாழும் மலையக இளைஞர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என சட்டத்தரணி சுதந்திரராஜாவும், மன்னார் மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் குறித்த பதிவுகளை முஜிபுர் ரஹ்மானும் முன்வைத்திருந்தனர். நிகழ்வுகளையும் கலந்துரையாடல்களையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர் தொகுத்தளித்திருந்தார். நூலின் சிறப்பு பிரதியினை மூத்த எழுத்தாளர் அந்தனிஜீவா வெளியிட்டு வைக்க ஞாயிறு தினக்குரல் பொறுப்பாசிரியர் பாரதி ராஜநாயகம் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு வருகை தந்த அனைவரும் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மண்டபம் நிறைந்த, மனம் நிறைந்த விழாவாக 'மலையகமும் மறுவாழ்வும்' அறிமுகமும் கலந்துரையாடலும் நிறைவுபெற்றது.

நன்றி: வீரகேசரி. 19.05.2018

பதிவர் : லுணுகலை ஸ்ரீ 

இப்பதிவு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற 'மலையகமும் மறுவாழ்வும்' நூல் அறிமுக விழா நிகழ்வுகளின் தொகுப்பாக பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களால் எழுதப்பட்டு 19.05.2018 திகதியிட்ட வீரகேசரி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இப்பதிவு பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது. புகைப்படங்கள் பதிவருக்கு உரித்தானவை ஆகும். வீரகேசரி பத்திரிகை மற்றும் லுணுகலை ஸ்ரீ ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

-சிகரம் 

#மலையகம் #நிகழ்வு #புத்தகவெளியீடு #கொழும்புதமிழ்ச்சங்கம் #மலையகமும்மறுவாழ்வும் #Malaiyagam #Event #BookLaunch #ColomboTamilSangam #MalaiyagamumMaruvaazhvum #LunugalaSri #Virakesari

வாழ்தலின் பொருட்டு - 05

கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்!

நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை !

ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்!

அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்!

எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...!

உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? !உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது !

கடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்பிக்கை ! 

காற்றடித்த திசையெல்லாம் அசைந்து ஆடினாலும் கிளைகளுக்கும் இலைகளுக்குமான பிரியத்துக்கு உயிர் நீர் வார்ப்பதென்னவோ உண்மையில் மண்மூடிய வேர்கள் தான்!

மொய்த்து அரிக்கும் ஈயாய் இடைவிடாது மண்டை ஓட்டுக்குள் நச்சரிக்கும் நினைவைப் புறந்தள்ளி மீண்டும் துளிர்க்க ஒரு கோப்பை தேநீரோடு ஊடுருவி உயிர்பருகி கொள்(ல்) என்விழிகளே !

வாழ்தலின் பொருட்டு - 05 - 01

வாழ்தலின் பொருட்டு - 05 - 02

#068/2018/SigarmbharathiLK
2018/05/26
வாழ்தலின் பொருட்டு - 05
https://newsigaram.blogspot.com/2018/05/VAAZHTHALIN-PORUTTU-05.html
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்

பயணங்கள் பலவிதம் - 04

மகிழ்ச்சி! மகிழ்ச்சி எதில் இருக்கிறது? எங்கே இருக்கிறது? மகிழ்ச்சி மனதிற்கு உள்ளேயா அல்லது வெளியேவா இருக்கிறது? அதை எப்படி அடைவது? எவ்வாறு கண்டுகொள்வது? நமக்குக் கிடைக்குமா, கிடைக்காதா? ஒரு மனிதனால் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட முடியுமா? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது கடினம். கண்டறிந்தால் அவனை விட மகிழ்ச்சியாக யாரும் வாழ்ந்து விட முடியாது.2018.05.19 ஆம் திகதி! ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தில் எனது ஏழு வருட சேவைக் காலத்தின் இறுதி நாள். கனத்த இதயத்துடன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். ஆறு வருடங்கள் இருப்புக் கட்டுப்பாட்டாளராகவும் (Material Controller) ஒரு வருடம் தரவு உள்ளீட்டாளராகவும் (Data entry Operator) பணி புரிந்திருக்கிறேன். மாறி வரும் வணிகச் சூழலில் நாம் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் நிறுவனங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. அவரவர் பைகளை நிறைத்துக் கொண்டால் அவரவருக்குத் திருப்தி தான். எனது மனைவியும் அதே நிறுவனத்தில் உதவியாளராக (Helper) நான்கு வருடங்கள் பணிபுரிந்து கடந்த 2018.04.28 திகதியில் சேவையை விட்டு விலகினார். அவருடைய சம்பளம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் என்னுடன் அவரது அண்ணாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். 2018.05.20 திகதி காலை நான், மனைவி, குழந்தை கிருத்திகா மற்றும் மனைவியின் தந்தை ஆகிய நால்வரும் கொழும்பில் இருந்து கொட்டகலை நோக்கிப் பயணிக்க ஆயத்தமானோம். காலை உணவை உட்கொண்ட பின் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி விரைந்தோம். சரியாக காலை 08.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் மூன்றாம் மேடைக்கு கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் S12 வகுப்பைச் சேர்ந்த (Class S12 MCG 924) 1015 என்னும் இலக்க புகையிரதம் வந்து சேர்ந்தது. நாங்கள் ஏற்கனவே ஆசன முன்பதிவு செய்திருந்ததால் மூன்றாம் வகுப்பில் எங்களுக்கான ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டோம். காலை 08.34க்கு புகையிரதம் தனது பயணத்தைத் துவங்கியது. கொழும்பில் இருந்து ஆங்காங்கே மழை பெய்த வண்ணமேயிருந்தது. போகப்போக மழை மறைந்து வெயில் தென்பட்டது. ஆரம்பத்தில் புகையிரதம் வழமையான வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தது. அளவ்வ (Alawwa) புகையிரத நிலையத்தை அண்மிக்கும் போது வேகமெடுத்தது புகையிரதம். என்றாலும் ஆங்காங்கே குறைவான வேகத்தை அவதானிக்க முடிந்தது. மலையக புகையிரத வழித்தடத்தில் கொழும்பில் இருந்து இறம்புக்கணை வரையில் மட்டுமே இருவழிப் புகையிரதப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இறம்புக்கணை முதல் பதுளை வரை ஒற்றை வழிப் பாதை தான் உள்ளது. ஆதலால் எதிர்ப்புறத்தில் இருந்து புகையிரதம் வரும் பட்சத்தில் இரண்டு புகையிரதங்களில் ஒன்று புகையிரத நிலையமொன்றில் தரித்து நின்று காத்திருக்க வேண்டும். மற்றைய புகையிரதம் குறித்த தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்த பின்னரே காத்திருக்கும் புகையிரதம் பயணத்தை துவங்க முடியும். இது பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமைகிறது. மழைக் காலத்திலும் குறைவான வேகத்திலேயே பயணிக்கும். கம்பளை புகையிரத நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தமான உலப்பனை நிறுத்தத்தில் நண்பகல் 12.20 முதல் 12.33 வரை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் (Class S12 - MCG 928) புகையிரத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மலையகத்தில் சகஜமானவை. மலையக புகையிரத வழித்தடத்தில் சுரங்கப் பாதைகள் நிறைய இருக்கின்றன. மழை காரணமாக நாவலப்பிட்டியில் இருந்து குறைவான வேகத்தில் புகையிரதம் பயணித்தது. மழை பெய்ததால் குளிராக இருந்தது. ஆகவே கொஞ்சம் உறங்கினேன்.றொசால்லை புகையிரத நிலையத்தில் பகல் 01.40 மணி முதல் 01.50 மணி வரை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மற்றுமொரு புகையிரதத்திற்காக (Class S12 MCG 930) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள் 


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனது திருமண விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மனைவியின் வீட்டில் இருந்து வருவதாகச் சொல்லியிருந்த தினம் நான் கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சிவப்பு நிற புகையிரதத்தில் பயணம் செய்தேன். அப்போது இதே றொசால்லை புகையிரத நிலையத்திற்கு சற்றுத் தூரத்தில் வைத்து நான் வந்த புகையிரதம் தடம் புரண்டது. இந்நிகழ்வு இணையத்தில் செய்தியாகக் கூட வெளியாகியுள்ளது. என்ஜினின் முன் சக்கரம் கழன்று தடம் புரண்டிருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் ஹட்டனில் இருந்து புகையிரதமொன்றை அனுப்பி வைத்தனர். 

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள்


அது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம். றொசால்லைக்கு அருகில் நாங்கள் வந்த புகையிரதம் தடம் புரண்டதால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் கொழும்பில் இருந்து வந்த பயணிகளை மாற்றி ஏற்றிவிட்டு நாங்கள் வந்த புகையிரதத்திற்கு நாவலப்பிட்டியில் இருந்து என்ஜினை வரவழைத்து பெட்டிகளை மட்டும் இணைத்து நாம் வந்த புகையிரதத்தை அப்படியே கொழும்பு நோக்கிப் பயணிக்கச் செய்தனர். நான் வீட்டை வந்தடைந்த போது பெண் வீட்டார் புறப்படத் தயாராகியிருந்தனர். நான் வந்ததும் சிறிது நேரம் அளவளாவி விட்டுச் சென்றனர். அந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள்


கொட்டகலை புகையிரத நிலையத்தை பகல் 02.20 மணிக்கு வந்தடைந்தோம். மழை பெய்து கொண்டிருந்தது. ஹட்டன் புகையிரத நிலையம் வரும்போதே முச்சக்கர வண்டி நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்தி கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்ததால் அவர் கொட்டகலை புகையிரத நிலைய வாயிலில் தயாராக இருந்தார். புகையிரதத்தில் இருந்து இறங்கியதும் முச்சக்கர வண்டியில் சென்று ஏறி வீட்டை நோக்கி விரைந்தோம்.

#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

Thursday, 24 May 2018

ஸ்டெர்லைட் - தூத்துக்குடி - அரசியல்

பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் கூட்டு வெறியாட்டத்தை உலகமே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில்? மக்கள் ஏன் இவ்வளவு கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்? அரசியல் வாதிகள் ஏன் மக்களுக்கு எதிராக இவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? தமிழகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்காத மத்திய அரசு தமிழகத்துக்கு இப்போது மட்டும் ஏன் உதவிக்கரம் நீட்டுகிறது? 

ஸ்டெர்லைட் என்னும் ஆலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் பெரிய கதை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு என்று அரச அமைப்புகளின் கூட்டுக்கு முன்னால் இருக்கும் அரசியல் கதை மிகப் பாரியது. 

ஆனால் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மரணத்தைப் பரிசளிப்பது தான் அரசின் அணுகுமுறையா? முதல் நாள் மக்கள் போராட்டத்தின் போது பதினோரு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. மரணமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் வாங்க மறுத்தவர்களின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி தனது வெறியாட்டத்தை காவல்துறை தொடர்ந்தது. 

இதன் மூலம் மக்களுக்கு அரசு தெரிவிக்கும் செய்தி என்ன? தமிழக மக்களுக்கு தற்போது ஸ்டெர்லைட் மட்டுமல்ல முக்கியமான பிரச்சினை. நீட், காவிரி, எரிவாயு திட்டம் என நீண்ட பட்டியல் தமிழக மக்களுக்கு முன்னால் கிடக்கிறது. இவற்றுக்கெல்லாம் அரசின் ஒரே பதில் மக்களின் மரணம் தான் என்பதா? இது தான் தமிழக அரசின் உறுதியான இறுதியான பதிலா? 

ஆங்கிலேயனுக்கெதிராக ஒன்றுபட்ட தமிழ்ச்சமூகம் ஸ்டெர்லைட்டுக்காக பிரிந்து நிற்பது ஏன்? வணிக நிறுவனங்களின் கைக்கூலிகளாக அரசியல்வாதிகள் மாறிப்போனதன் மாயம் என்ன? மோடியை பின்வாசல் வழியாக ஓடவிட்ட தமிழக மக்களால் தமிழக அரசை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாததன் காரணம் தான் என்ன? மக்களின் இப்போதைய கோபம் இனிவரப்போகும் தேர்தல்களில் பிரதிபலிக்குமா? அல்லது இனியும் இருக்கும் இருபெரும் மக்கள் விரோதக் கட்சிகளிடம் தான் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறோமா? 

நம் கண்முன்னே ஆயிரமாயிரம் கேள்விகள் பதில்களின்றி காத்துக்கிடக்கின்றன. அவற்றுக்கெல்லாம் மக்களின் பதில் என்ன? மக்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் அரசை எதிர்த்து எதிர்த்து களைப்படைந்து போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? மக்களின் நலனை மதிக்காத எந்த அரசும் மக்களை ஆட்சி செய்ய அருகதையற்றது என்று நாம் பதிலுரைக்க வேண்டாமா? 

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவர்களின் கைக்கூலிகளுக்கும் மக்கள் தகுந்த பதிலடி வழங்க வேண்டும். மக்கள் வழங்கும் பதிலடி அரசியல்வாதிகளால் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்கும் முன்னுதாரணமாக மக்களின் தீர்ப்பு இருக்க வேண்டும். செய்வீர்களா? மக்களே, செய்வீர்களா?

#ஸ்டெர்லைட் #ஸ்டெர்லைட்டைதடைசெய் #தூத்துக்குடி #பழனிச்சாமிபதவிவிலகு #Sterlite #BanSterlite #SterliteProtest #SaveThoothukudi #BanTNGovernment #EncounterEdappadi #ThoothukudiShooting #ThoothukudiPoliceFiring

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts