ஐபிஎல் கிண்ணத்தை தனதாக்கியது சென்னை! #WhistlePodu #CSK
சென்னை மீண்டும் ஐபிஎல் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான சென்னை ரசிகர்களின் கனவு நனவாகியிருக்கிறது. இரண்டாண்டு கால தடைக்கு தக்க பதிலடியைத் தந்து தனது மீள்வருகையை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிறது சென்னை. ஐபிஎல் 2018 இன் முதல் போட்டியில் வெற்றி பெற்று பயணத்தைத் தொடங்கிய சென்னை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ஐபிஎல்லின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வைத்திருக்கிறது. சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்.

2013, 2015 மற்றும் 2017 ஆகிய பருவங்களில் ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது மும்பை அணி. இந்த சாதனையை 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றி சமன் செய்திருக்கிறது சென்னை. இந்த இரண்டு அணிகள் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு தடவை (2012 & 2014), ராஜஸ்தான் ஒரு தடவை (2008), டெக்கான் சார்ஜர்ஸ் ஒரு தடவை (2009) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு தடவை (2016) கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் 2008, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய பருவங்களில் இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. சென்னை அணி தான் விளையாடிய ஒன்பது பருவங்களிலும் அரையிறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்துள்ளது. சூதாட்ட தடைக் காலமான 2016 மற்றும் 2017 இல் சென்னை அணி பங்கேற்கவில்லை.
இம்முறையும் ஐபிஎல் சாதனைப் பட்டியலுக்கு கொஞ்சமும் குறைவில்லை. இந்த முறை ஐபிஎல்லில் கேன் வில்லியம்சன் மொத்தமாக 735 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிக பட்சமாக ரிஷப் பண்ட் 37 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிகூடிய தனிநபர் ஓட்டமான 128 ஓட்டங்களையும் ரிஷப் பண்ட் தான் பெற்றுள்ளார். அதிகூடிய நான்கு ஓட்ட சாதனையும் அவருக்கே உரியது. 68 நான்கு ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். அதிக பட்சமாக 24 விக்கெட்டுகளை அன்ரூ டை கைப்பற்றினார்.

சுரேஷ் ரெய்னா அனைத்து பருவங்களிலுமாக 4985 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். லசித் மலிங்க 154 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகூடிய ஆறு ஓட்டங்களாக கிறிஸ் கெயில் 292 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக கிறிஸ் கெயில் 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கவுதம் கம்பிர் 491 நான்கு ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

ஐபிஎல் பதினோராம் பருவமும் இனிதே நிறைவடைந்துள்ளது. இனி பன்னிரெண்டாம் பருவம் 2019 இல் இடம்பெறும் வரை நாம் காத்திருக்க வேண்டும். மினி ஐபிஎல் போட்டிகளை நடாத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஏதும் நடந்தால் கொண்டாட்டம் தான். வாழ்க ஐபிஎல்! வளர்க ஐபிஎல்!!
#சிகரம் #சிகரம்பாரதி #ஐபிஎல் #ஐபிஎல்2018 #சென்னைசூப்பர்கிங்ஸ் #IPL #IPL2018 #CSKvSRH #IPLFINAL #VIVOIPL #MSD #MSDhoni #SIGARAM #SigaramBharathi
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்