மலையகமும் மறுவாழ்வும்

இலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஐவர் மூன்று தசாப்தங்கள் கடந்து இலங்கை வந்திருந்தனர். கேகாலை மாவட்டத்தில் இருந்து தமிழகம் சென்ற (ஈழம் மலர் மன்னன்) தம்பிராஜா (தமிழகத்தில் கிராம அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), ஆகரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இருந்து சென்ற செவந்தி (இவர் நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), தலவாக்கலை பகுதியில் இருந்து சென்ற பூபாலன், நாவலப்பிட்டி பகுதியில் இருந்து சென்ற ஜெயசிங் (இவர்கள் இருவரும் வங்கி அதிகாரிகளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்) ஆகியோருடன் இரத்தினபுரி, லெல்லோபிட்டிய தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகன் (ராமச்சந்திரன்) ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

தெளிவத்தை ஜோசப்


திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழகன் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை திரும்பி பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்புகள் ஊடாக தனதும், இலங்கை மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் இணைத்ததாக மலையகமும் மறுவாழ்வும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை தொகுத்திருந்தார். திருச்சியில் வாழும் தாயகம் திரும்பியவரான டார்வின்தாசன் (இவர் களுத்துறை மாவட்டம் மத்துகமவை சேர்ந்தவர்) தனது அங்குசம் பதிப்பகத்தின் ஊடாக வெளியிட்டிருக்கும் இந்த நூலை இலங்கையிலேயே முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு இந்தக் குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.

அ. லோரன்ஸ் 


எனினும் எதிர்பாராத விதமாக தமிழ்ச்சங்கத்திற்கு முன்பாகவே கேகாலை மாவட்ட கந்தலோயா பாடசாலையிலும், ஹட்டனில் இடம்பெற்ற மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்விலும் மேற்படி நூல் முதல் அறிமுகத்தை கண்டுவிட்டநிலையில் கொழும்புத் தமிழச்சங்க அறிமுக நிகழ்வு ஆரம்பமானது.

இரா.சடகோபன்


இலங்கை மலையக எழுத்தாளர்களான இரா.சடகோபன் எழுதிய மலையகத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, மல்லியப்புசந்தி திலகர் எழுதிய இலங்கை(யில்) தமிழர்கள், எம். வாமதேவன் எழுதிய தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, அ.லோறன்ஸ் எழுதிய மலையகத் தமிழர்களின் அடையாளம் தொடர்பான பிரச்சினைகள், மலையகத் தமிழ்த் தேசியம் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய கட்டுரைகளுடன் தமிழக மலையக மக்களின் வாழ்நிலையை விளக்கும் 'கடல்தாண்டி... கண்ணீர் சிந்தி...', இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுத் திட்டங்கள் ஒரு பார்வை ஆகிய தமிழகனின் இரு கட்டுரைகளையும் கொண்டதாக நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

சன் பிரபாகரன் 


மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளரான இரா.சடகோபனின் வரவேற்புரையுடன் கலந்த சுருக்க உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப் ஆற்றினார். ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா சென்ற மலையகத் தமிழ் மக்களுக்கும் ஈழயுத்தத்தினால் பாதிப்புற்று அகதிகளாகப் போன மலையகத் தமிழ் மக்களுக்கும் வேறுபாடு தெரியாது எல்லோரையும் அகதிகளாகப் பார்க்கும் நிலைமை தமிழ் நாட்டில் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில் வாழும் சுமார் 130000 ஈழ அகதிகளில் சுமார் 30000 ஆயிரம் அளவானவர்கள் மலையகத் தமிழ் மக்கள்.

தெளிவத்தை ஜோசப்


அவர்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து 70 களில் வன்னியில் குடியேறி பின்னர் யுத்தம் காரணமாக வாழ வழியின்றி படகுகளின் மூலமாக தமிழகம் சென்றவர்கள். ஆனால் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் முறையான அனுமதிகளுடன் தமிழகம் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் அங்கு தேடிக்கொண்டிருக்கும் மறுவாழ்வு பற்றியே தமிழகன் இந்த கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இன்னும் வாழ்வு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவே நிலைமை. இவர்களின் வாழ்வு பற்றியும் மறுவாழ்வு பற்றியும் அக்கறை கொண்டவர்கள் ஒன்று சேரந்து எடுக்கும் முயற்சியே இந்த தொகுப்பு என்று குறிப்பிட்டார்.

வேலு ஐயா 


நூலின் முதலாவது ஆய்வுரையை வழங்கியர் சமூக கலை இலக்கிய ஆய்வாளரும் அக்கறைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜ் மஷ்ஷுர். தனக்கேயுரிய பாணியில் ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியே அதேநேரம் ஒட்டு மொத்த தொகுப்பையும் அதன் பலம் பலவீனங்களோடு ஆய்வுக்குட்படுத்தியிருந்தார். நூலின் முகப்பிலே மறுவாழ்வு எனும் சொல்லில் 'ழ்' இடதுபக்கமாக சரிந்து இருப்பதும் அது சிவப்பாக அச்சிடப்பட்டிருப்பதுமே அதன் உள்ளடக்கம் பற்றிய ஒரு பார்வையைத் தருவதாக தெரிவித்ததுடன் மலையக மக்களின் வரலாறு, பொருளாதார நிலை, அடையாளம், தேசியம் ஆகிவற்றோடு இலங்கைத் தமிழர்கள் எனும் பொருளில் அழைக்கப்படுபவர்களில் இருந்து மலையகத் தமிழர்கள் எவ்வாறு மாற்று அடையாளங்களுடன் வாழ்கின்றனர் என்பதை நிறுவும் இலங்கை(யில்) தமிழர்கள் ஆகிய கட்டுரைகள் முறையாகத் தொகுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நூலில் அடங்கியுள்ள கடைசி இரண்டு கட்டுரைகள் இரண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையக் தமிழர்களின் வாழ்வியல் குறித்ததாக அமைந்ததுடன் அவை தனக்கு முற்று முழுதான புதிய வாசிப்பு அனுபவமாகவும் புதிய தகவல்களாகவும் அமைந்ததாக குறிப்பிட்டார். அத்துடன் மலையகம் இன்று அடைந்திருக்கக்கூடிய சமூகத் தட்டின் மாற்றங்கள் குறித்து இந்த நூல் உள்ளடக்காமை ஒரு பலவீனம் என்பதை சுட்டிக்காட்டியதுடன் மலையகத்தில் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களான மலையக இலக்கியம் குறித்தும் மலையகத் தொழிற்சங்கங்கள் குறித்துமான கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். விரிவான ஆழ அகலங்களைக் கொண்டதான இவரது ஆய்வுரை தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.



இரண்டாவது ஆய்வுரையை ஆற்றிய கலாநிதி ந.ரவீந்திரன் இந்த நூலின் அறிமுகவுரையை எழுதியிருக்கும் தெளிவத்தை ஜோசப் முதல் தொகுப்பாளர் தமிழகன் வரை குறிப்பிட்டிருப்பது போல இந்த நூல் தமிழ் நாட்டு சூழலுக்காக எழுதப்பட்டது மாத்திரமல்ல. இது இலங்கையிலும் சக சமூகங்களால் வாசிக்கப்படவேண்டிய நூல். ஏனெனில், இலங்கையில் சக சமூகங்கள் மலையக மக்கள் அவர்தம் பிரச்சினைகள் குறித்த சரியான புரிதல் இன்னும் சக சமூகங்களிடம் இல்லை. ஏற்கனவே 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருந்தாலும் பிரித்தானிய காலனிய ஆட்சிக்கு கீழான குடியுரிமையே அன்றி உள்ளுர் குடியுரிமை அல்ல. 



அவர்கள் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களித்தபோதும் பண்டாரநாயக்காவின் உள்ளுராட்சியில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுதேச அரசாங்கத்தில் பிரித்தானியர் வழங்கியிருந்த வாக்குரிமையும் பறிக்கப்பட்டனர். பின்னர் அதனை மீளப்பெற்றனர். இதுவே அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குரிமைக்கும் அவர்களின் இலங்கைக் குடியுரிமைக்கும் உள்ள வேறுபாடு ஆகும். தற்போதைய நிலையில் இலங்கையின் வேறு எந்த சமூகம் மீதும் அல்லாத வகையில் மலையக மக்களிடையே சிங்கள மேலாதிக்க சக்திகள் திணித்துவரும் மொழியாதிக்கம் இன்னும் ஒரு சவாலை அவர்களிடத்தில் தோற்றுவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இவரது ஆய்வுரையும் தனியாக பதிவு செய்யப்படவேண்டியது.



ஏற்புரை வழங்கிய தமிழகன் தான் இத்தகைய தொகுப்பை வெளிக்கொணர எண்ணியதன் காரணம் பற்றிக் குறிப்பிட்டதுடன் தமிழகத்தில் பெரும்பாலாகவும் ஏனைய மாநிலங்களில் பரவியும் வாழும் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட உறவுகள் இன்று சுமார் 15 லட்சம் அளவில் இந்தியாவில் வாழ்வதாகவும் அவர்கள் அங்கு தாயகம் திரும்பியவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் தமது மறு வாழ்வைத் தேடிக்கொண்டிருப்பவர்களாக உள்ளனர்.

தமிழகன்


இன்று இலங்கையில் ஒரு மலையகம் இருப்பதுபோல இந்தியாவிலும் ஒரு மலையகம் இருக்கிறது. அவர்களுக்கும் அங்கு அடையாளப்படுத்தல் முதல் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் வரையான பிரச்சினைகள் பலவுண்டு. இந்த இரண்டு மலையகங்களும் உணர்வுடன் இணைந்து தமது மறுவாழ்வுக்காக திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

முத்துக்குமார் 


வாழ்த்துரை வழங்கிய மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உபதலைவர் மு.சிவலிங்கம் மறுவாழ்வு என்ற சொற்பிரயோகம் விதவைகள் மீண்டும் திருமணம் முடிப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டதுடன் மலையக மக்கள் தமது வாழ்வு மற்றும் அரசியல் குறித்த இன்னும் ஆழமாக சிந்தித்து முன்னகர வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வாமதேவன் 


நிகழ்வின் இறுதி ஒரு மணித்தியாலம் சபையோர் கலந்துரையாடலாக அமைந்தது. முத்துக்குமார், கே.ஜி, வி.எம்.ரமேஷ், போன்ற இளையவர்கள் எழுப்பிய தமிழ்நாட்டில் மலையக மக்கள் தொடர்பான தெளிவு இன்மை, மலையக மக்கள் முன்னெடுக்கப்படவேண்டிய போராட்ட வடிவம், தமிழக இலக்கிய இதழ்களில் மலையக இலக்கியம் இடம்பெறாமை போன்ற கேள்விகளுக்கு வழக்கறிஞர் தமிழகன், பூபாலன், பிரான்ஸிஸ், ஜெயசிங், அ.லோரன்ஸ், இரா.சடகோபன், தெளிவத்தை ஜோசப், ஆகியோர் பதிலளித்தனர். 

பூபாலன் 


வன்னியில் வாழும் மலையக மக்கள் குறித்தும் தலைநகரில் வாழும் மலையக இளைஞர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என சட்டத்தரணி சுதந்திரராஜாவும், மன்னார் மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் குறித்த பதிவுகளை முஜிபுர் ரஹ்மானும் முன்வைத்திருந்தனர். நிகழ்வுகளையும் கலந்துரையாடல்களையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர் தொகுத்தளித்திருந்தார். நூலின் சிறப்பு பிரதியினை மூத்த எழுத்தாளர் அந்தனிஜீவா வெளியிட்டு வைக்க ஞாயிறு தினக்குரல் பொறுப்பாசிரியர் பாரதி ராஜநாயகம் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு வருகை தந்த அனைவரும் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மண்டபம் நிறைந்த, மனம் நிறைந்த விழாவாக 'மலையகமும் மறுவாழ்வும்' அறிமுகமும் கலந்துரையாடலும் நிறைவுபெற்றது.

நன்றி: வீரகேசரி. 19.05.2018

பதிவர் : லுணுகலை ஸ்ரீ 

இப்பதிவு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற 'மலையகமும் மறுவாழ்வும்' நூல் அறிமுக விழா நிகழ்வுகளின் தொகுப்பாக பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களால் எழுதப்பட்டு 19.05.2018 திகதியிட்ட வீரகேசரி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இப்பதிவு பதிவர் லுணுகலை ஸ்ரீ அவர்களின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது. புகைப்படங்கள் பதிவருக்கு உரித்தானவை ஆகும். வீரகேசரி பத்திரிகை மற்றும் லுணுகலை ஸ்ரீ ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

-சிகரம் 

#மலையகம் #நிகழ்வு #புத்தகவெளியீடு #கொழும்புதமிழ்ச்சங்கம் #மலையகமும்மறுவாழ்வும் #Malaiyagam #Event #BookLaunch #ColomboTamilSangam #MalaiyagamumMaruvaazhvum #LunugalaSri #Virakesari

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!