Share it

Friday, 30 May 2014

சென்னைக்கு விசில் போடு!

                  ஐ.பி.எல். என்கிற இந்தியன் பிரிமியர் லீக் 20-இருபது கிரிக்கட் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். இன்னும் இரண்டே போட்டிகள். 7 வது தொடரின் மகுடம் யாருக்கென்று தெரிந்துவிடும்.

 

         என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில் இருந்தே சென்னைக்கு தான் ஆதரவு. முதல் காரணம் தோனி . அடுத்தது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதாலும் இன்னபிற காரணங்களாலும். இதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ஆட்டத்திற்கும் சென்னை தேர்வாகியிருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் சென்னை எதிர் பஞ்சாப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடவிருக்கிறது.

  
                              இந்த முறையும் ஐ.பி.எல் கிரீடத்தை சென்னை வெல்ல வேண்டும் என்பதே என் அவா. உங்களுக்கு?

                    இதுவரை ஒரு மகுடத்தையேனும் வென்றிராத கிங்ஸ் இலவன் பஞ்சாப் [Kings XI Punjab ] அணி தனது புதிய வரலாற்றை படைக்க தயாராகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் [Chennai Super Kings ] அணி தனது இரண்டு மகுடங்களுக்கு அருகில் இன்னுமொரு மகுடத்தையும் சேர்த்துக் கொள்ளத் துடிக்கிறது. வெல்லப் போவது யார்? வாருங்கள் பார்க்கலாம்!

Tuesday, 27 May 2014

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்!

 

* இந்த யுகத்தில் ஒளிபெற்ற பல விஷயங்களில், ஆத்மாவைப் பற்றிய உண்மை இது தான்:

மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா; அவனது எண்ணங்களின் தலைவன்.

* சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.

 

* ஆத்மா எதை ரகசியமாக அவாவுகிறதோ , அதை ஈர்க்கிறது. எதைக் காதலிக்கிறதோ அதைக் கவர்கிறது ; எதைக் கண்டு பயப்படுகிறதோ அதை அடைகிறது.

உள்மன நிலைக்கேற்ப வெளி உலக சூழ்நிலை உருவாகிறது.

சொன்னது யார்?
விரைவில்.........

Thursday, 22 May 2014

மீண்டும் அதிசயா.

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

இது ஒரு வித்தியாசமான - முக்கியமான பதிவு. அதிசயா. நாம் அறிந்த ஒருவர் தான் - வலைகளின் முட்கள் நிறைந்த பாதைகளில் நம்மோடு சில காலம் பயணித்தவர்தான் . அவர் தனது கல்வி செயற்பாடுகள் காரணமாக இப்போது வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லை. முகநூலில் மட்டும் அவ்வப்போது தனது குட்டிக் கவிதைகளை வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனாலும் அது அவரது வளர்ச்சியில் இத்தனை முக்கிய பங்கு வகித்த வலைத்தளத்தினூடாக வெளிவருவது தானே பெருமை?

நான் வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்டவர் தான் அதிசயா. நாங்கள் பல தடவைகள் கைப்பேசியினூடாக உரையாடியிருக்கிறோம். எங்கள் சுக துக்கங்களை பரிமாறியிருக்கிறோம் . எப்போது பேசினாலும் நான் அவரிடம் மறக்காமல் கூறும் ஒரு விடயம் உண்டு. அது, அடிக்கடி வலைத்தளத்தின் பக்கம் வாருங்கள் என்பது தான். ஆனால், அது அவரால் முடியவில்லை. அதனால் தான் நான் அவரது முகநூலில் அவரால் கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவிடப்பட்ட குட்டிக் கவிதைகளைத் தொகுத்து பதிவாக இங்கு வெளியிடுகிறேன்.

இதற்கு அனுமதியளித்த அதிசயாவுக்கு மிக்க நன்றி. இப்பதிவு அவருடனான எனது புனிதமான நட்புக்கும் அவரது "மழை கழுவிய பூக்கள்" வலைத்தளத்துக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

 மழை கழுவிய பூக்கள்

01.
பரவசப்புள்ளி ஒன்றைப் பற்றியபடி பறந்து கொண்டிருக்கிறேன்!
என் வானம் விசாலமானது! பறத்தல் இலகுவாக இல்லாவிட்டாலும் இறகுகள் முறியவில்லை.
என் வானம் ஆதலால் வலிப்பது கூட சுதந்திரச்சுகமே!

 02.
பெரும் காதல் ஒன்றைப்பரவ விட்டிருக்கிறாய் பரம்பொருளே.....உன் நேசம் தான்எனை அலங்கரிக்கிறது...

03.
விரல் பிடித்து ஓடி வருவேன்-உன்
ஏதேனின் தோட்டங்களுக்கு04.
மரணத்தின் அவசரங்களில் மானிடரை அனுமதியாதே!
மிகச்சொற்பமான அற்புதங்களையே வைத்திருக்கிறோம்..
எதையும் பிடுங்கிவிடாதே இறைவா!!!
சாவுதனை சாகடி இறைவா
தரவேமாட்டேன் என் அற்புதங்களில் ஒன்றையேனும்..!


05.
கம்பி விழிம்பில் சாய்ந்தபடி குடித்துக்கொண்டிருக்கிறேன் 
இந்த வரப்பிரசாதத்தின் தீர்த்தத்தை!!
துளித்துளியாய் தெறிக்கிறது சாரல் அதில்
கரைந்து தொலைகிறது சில கோபங்கள்!!
வானம் பொழியும் நேசங்களை சுதந்திரமாய்
நிரப்பிக்கொள்கிறேன்..!
அடுத்த கார் காலம் வரும் வரை.!!
காத்திருப்பது அழகு சாரல் மழைக்காக!


06.
மென்மை சொல்லும் அலங்காரங்களை விடவும் வீரம் விதைக்கும் வேகங்களே மனதிற்கு வலுவளிக்கின்றன.!
பொம்மை ஒன்றை கட்டியணைப்பதிலும் பார்க்க
பயம் தரும் பலம் மிக்க -உன்
ஒளிர் வாளையே தாங்கி நடக்க விரும்புகிறேன்....!
வாளேந்துவதை அடக்கமின்மை என்று யாரேனும் உரைப்பார்களோ...???
அதையிட்டான அச்சங்களை களைவேன்..!
என் நண்பா-நீ பரிசளித்த உன் ஆயுதங்களை மிகவே நேசிக்கிறேன்...!
ஆகாயம்வரை பாயும் உன் வெற்றித் தனுசு கொண்டு
சூரியப்புயல்களை நிறுத்துவேன்..!
நீர் பனித்த சிவப்பு ரோஜாக்களை விடவும்
வெற்றி தகிக்கும் உன் வீர வாள் கர்வம் பொருந்தியது..!அழகானது!!!
மீண்டும் பிறந்த கழுகுப்பறவையாய் நீ பூலோகம் எங்கிலும் நீ சிறகு விரித்திருக்கிறாய் நண்பா!!!!
இருளும் பயமும் கவிந்த இரவுப்பொழுது ஒன்றில்
உன் வாள் தரித்து பயணம் புறப்படுவேன்....!
அதுவே என் சிறப்புப் பயணமாக இருக்கும்..!
அதன் பின் எந்த கண்ணீரிலும் தோல்வி சுவை இருக்காது..!
எங்கும் ஜெயமே பிரகாசிக்கும்.


07.
இன்றைய புலர்தலை அழகாக்கினாய் நண்பா....
ஒரு கூடை நிறைய மழை அனுப்பியிருந்தாய்...
மேலிருந்து நேசமுத்தங்கள் பொழிகிறாய்...
பாதையின் வெப்பங்களை புன்னகையால் ஈரமாக்கினாய்..
இன்னும் மழையை அனுப்பிக்கொண்டே இருக்கிறாய்.. !
நீ என் ஆத்ம நண்பன்..!தேவா
தெய்வம் நீ தெய்வானுபவம் தருகிறாய்..!
 

 

08.
சிறு நூலிழை தா இறைவா....பற்றிப்பிடித்த படியே கடந்து விடுவேன் இந்த கரடுமுரடான பாதைகளை!!!!
நான் பேசிக்கொண்டிருக்கிறேன் பரம்பொருளே உன்னோடு.
உன் மடிமீது அமர்தி ஒவ்வொன்றாய் கேட்கிறாய்...
பிள்ளையை அணைப்பது போல் மார்போடு சேர்த்து அணைக்கிறாய்
என் உச்சிமுகர்கிறாய்..
மண்மூடி நான் கண்மூடி மரிக்கையிலும் உன் மடிமீது ஏந்துவாய்.!!
இருள் பொழுதொன்றில் நான் அழுதபடிஇருந்தேன்..!
உன் மிடுக்கான நடை கொண்டு என் பயம் தணித்தாய்...!உன் இருப்பில் கர்வம் கொள்கிறேன்.
என்றும் மாறாத என் தோழனனுபரம்பொருளே!!
 
 
 
 
 09.
கைநிறைய சேர்த்து வைத்திருக்கிறேன்...என் தோட்டத்திற்கான
வர்ணக்கலவைகளை
வருவாய்என் மகவே -எனை
தொட்டு உயிர் தீண்டி-மெதுவாய் உன் பஞ்சு விரல்களால்
என் கைதிறப்பாய்.
உனை சுமக்கவில்லை நான் என்ற போதும்
அடிக்கடி பிரசவித்திருக்கிறேன் என் நினைவுகளில்...!
அதற்காகவேனும் வருவாய் என் மகவே
தந்தையாய் தாங்குவேன் தாயாய் உனை வாங்குவேன்!
பதப்படுத்த தொடங்கிவிட்டேன் உனக்கான என்தோட்டத்தை
அதற்காகவேனும் வருவாய் என் மகவே-மயிலிறகு
இமைகளால் என் மனம் தொடவே..!
 


இப்பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. அவர் மீண்டும் வலைத்தளம் வர வேண்டும் என்பதே என் அவா. உங்களுக்கு??? 

அன்புடன்,
சிகரம்பாரதி. 

Sunday, 18 May 2014

இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி!

வணக்கம் வாசகர்களே!

மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. கட்சிகளும் மக்களும் அவரவர் பணிகளுக்கு திரும்பியாயிற்று. இனி? தொழிலாளர் உரிமைகள்? நலன்கள்?? எல்லாமே வெறும் மேடைப் பேச்சு தானா?


மே தினம் ஏன் உருவானது? வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் புரட்சி செய்து வென்றதன் அடையாளம் தான் மே தினம். ஆனால் இன்று நடப்பது என்ன? எல்லோரும் சரியாக எட்டு மணி நேரம் தான் வேலை செய்கிறோமா? உழைப்பதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா? நிறுவனங்கள் தொழிலாளர் நலன்களில் அக்கறையுள்ளவை தானா? இவை அனைத்தையும் உங்களோடு பேசுவது தான் இந்த நூறாவது சிறப்புப் பதிவின் நோக்கம். அதற்கு முன்பு என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய விஜய் தொலைக்காட்சியின் “ நீயா நானா – மே தின சிறப்பு நிகழ்ச்சி ” உங்களுக்காக இங்கே [இப்பதிவை வாசிக்க இந்நிகழ்சியை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை] :அல்லது https://www.youtube.com/watch?v=wYvyjSjyE-0 என்ற இணைப்பின் மூலம் பார்க்கலாம்.
என்ன பார்த்து விட்டீர்களா? வலைத்தளத்திலேயே பார்க்க முடியாதவர்கள் "Watch on youtube.com" என்ற இணைப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.           ஒரு சராசரி மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வது அவனது தொழில் வருமானம் தான். விவசாய யுகத்தில் மனிதனின் தேவைகள் மாறுபட்டவையாக இருந்தன. அவனது தேவைகள் அனைத்தும் விவசாயம் சார்ந்தே பூர்த்தி செய்யப்பட்டன. தொழிற் புரட்சி யுகத்தில் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். அதனால் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். மே தினம் உருவானது. தற்போது நவீன / கணினி யுகம் உருவாகியுள்ளது. இதில் தொழிலாளர்களின் நிலை என்ன?

            இந்த யுகத்தில் தொழிலாளர்கள் என்போர் யார்? விவசாயிகளா? இல்லை, கூலித் தொழிலாளிகளா? இவர்கள் இல்லை. என்ன தான் கணினி முன் அமர்ந்து தொழில் புரிபவராக இருந்தாலும் முதலாளிகள் வர்க்கத்தில் இணைத்துக் கொள்ளப் பட இயலாத எவரொருவருமே "தொழிலாளர்கள்" தான். தற்போதைய கால கட்டத்தில் அலுவலகங்களில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் தம்மை தொழிலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. "தொழிலாளர்கள்" [Workers]  என்பது படிக்காதவர்களை அடையாளப் படுத்தும் ஒரு சொல்லாகவே பார்க்கின்றனர்.
                 "அலுவலகப் பணியாளர்கள்" [Staffs] என்கிற விசேட பதத்தின் மூலம் தாங்கள் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர். சரி. இவர்களின் தொழில் நிலை என்ன? இக்காலத்தில் இவர்கள் மீதான சுரண்டல் எவ்வாறு இருக்கிறது? பார்க்கலாம்.

                  உதாரணத்திற்கு என்னுடைய தொழிலை எடுத்துக் கொள்வோம். எங்களுடையது தொழிற்சாலை. என்னுடைய வேலை நேரம் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை. அதாவது , காலை எட்டு மணி முதல் மாலை நான்கு முப்பது [04:30] மணி வரை சாதாரண வேலை நேரமாகவும் அதன் பின்பு மீதி மூன்றரை மணி நேரம் மேலதிக வேலை நேரமாகவும் கணிப்பிடப் படுகிறது. இங்கே மேலதிக வேலை நேரம் என்று குறிப்பிடப்படுவதற்கென்ன , அது எழுதப்படாத கட்டாய நேரமாகவே இருக்கிறது. இரவு நேர வேலை முறைமைக்கு [Night shift] வருபவர்களும் இதையே கடைப்பிடிக்க வேண்டும்.

                 காலை முதல் இரவு வரை வேலை. பின்பு உணவு - தூக்கம். பின்பு மறுபடியும் வேலை.எங்களுடைய அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள போதிய அவகாசம் கிடைப்பதில்லை. மேலும் விடுமுறைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படும். நிரந்தரமாக்கப்பட்ட ஒருவருக்கு வருடமொன்றுக்கு 22 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அதிலும் முகாமைத்துவத்தின் அனுமதியின்றி விடுமுறை எடுக்க முடியாது.

                   என்னைப்போலவே உங்களில் பலருக்கும் இருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இது தான் நாம் வென்றெடுத்த தொழிலாளர் உரிமைகளா? நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாகத்தான் இருக்கிறதா? அதனால்தான் சொல்கிறேன் - இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி. உங்கள் பின்னூட்டங்களோடு மீண்டும் சந்திப்போம்.

இது எனது "சிகரம்" வலைத்தளத்தின் நூறாவது பதிவு. இப்பதிவை என் பெற்றோர், நண்பர்கள், எனக்கு ஊக்கமளித்த அன்புள்ளங்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் இன்றைய நவீன உழைப்பாளிகள் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts