Sunday, 18 May 2014

இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி!

வணக்கம் வாசகர்களே!

மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. கட்சிகளும் மக்களும் அவரவர் பணிகளுக்கு திரும்பியாயிற்று. இனி? தொழிலாளர் உரிமைகள்? நலன்கள்?? எல்லாமே வெறும் மேடைப் பேச்சு தானா?


மே தினம் ஏன் உருவானது? வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் புரட்சி செய்து வென்றதன் அடையாளம் தான் மே தினம். ஆனால் இன்று நடப்பது என்ன? எல்லோரும் சரியாக எட்டு மணி நேரம் தான் வேலை செய்கிறோமா? உழைப்பதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா? நிறுவனங்கள் தொழிலாளர் நலன்களில் அக்கறையுள்ளவை தானா? இவை அனைத்தையும் உங்களோடு பேசுவது தான் இந்த நூறாவது சிறப்புப் பதிவின் நோக்கம். அதற்கு முன்பு என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய விஜய் தொலைக்காட்சியின் “ நீயா நானா – மே தின சிறப்பு நிகழ்ச்சி ” உங்களுக்காக இங்கே [இப்பதிவை வாசிக்க இந்நிகழ்சியை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை] :அல்லது https://www.youtube.com/watch?v=wYvyjSjyE-0 என்ற இணைப்பின் மூலம் பார்க்கலாம்.
என்ன பார்த்து விட்டீர்களா? வலைத்தளத்திலேயே பார்க்க முடியாதவர்கள் "Watch on youtube.com" என்ற இணைப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.           ஒரு சராசரி மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வது அவனது தொழில் வருமானம் தான். விவசாய யுகத்தில் மனிதனின் தேவைகள் மாறுபட்டவையாக இருந்தன. அவனது தேவைகள் அனைத்தும் விவசாயம் சார்ந்தே பூர்த்தி செய்யப்பட்டன. தொழிற் புரட்சி யுகத்தில் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். அதனால் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். மே தினம் உருவானது. தற்போது நவீன / கணினி யுகம் உருவாகியுள்ளது. இதில் தொழிலாளர்களின் நிலை என்ன?

            இந்த யுகத்தில் தொழிலாளர்கள் என்போர் யார்? விவசாயிகளா? இல்லை, கூலித் தொழிலாளிகளா? இவர்கள் இல்லை. என்ன தான் கணினி முன் அமர்ந்து தொழில் புரிபவராக இருந்தாலும் முதலாளிகள் வர்க்கத்தில் இணைத்துக் கொள்ளப் பட இயலாத எவரொருவருமே "தொழிலாளர்கள்" தான். தற்போதைய கால கட்டத்தில் அலுவலகங்களில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் தம்மை தொழிலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. "தொழிலாளர்கள்" [Workers]  என்பது படிக்காதவர்களை அடையாளப் படுத்தும் ஒரு சொல்லாகவே பார்க்கின்றனர்.
                 "அலுவலகப் பணியாளர்கள்" [Staffs] என்கிற விசேட பதத்தின் மூலம் தாங்கள் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர். சரி. இவர்களின் தொழில் நிலை என்ன? இக்காலத்தில் இவர்கள் மீதான சுரண்டல் எவ்வாறு இருக்கிறது? பார்க்கலாம்.

                  உதாரணத்திற்கு என்னுடைய தொழிலை எடுத்துக் கொள்வோம். எங்களுடையது தொழிற்சாலை. என்னுடைய வேலை நேரம் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை. அதாவது , காலை எட்டு மணி முதல் மாலை நான்கு முப்பது [04:30] மணி வரை சாதாரண வேலை நேரமாகவும் அதன் பின்பு மீதி மூன்றரை மணி நேரம் மேலதிக வேலை நேரமாகவும் கணிப்பிடப் படுகிறது. இங்கே மேலதிக வேலை நேரம் என்று குறிப்பிடப்படுவதற்கென்ன , அது எழுதப்படாத கட்டாய நேரமாகவே இருக்கிறது. இரவு நேர வேலை முறைமைக்கு [Night shift] வருபவர்களும் இதையே கடைப்பிடிக்க வேண்டும்.

                 காலை முதல் இரவு வரை வேலை. பின்பு உணவு - தூக்கம். பின்பு மறுபடியும் வேலை.எங்களுடைய அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள போதிய அவகாசம் கிடைப்பதில்லை. மேலும் விடுமுறைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படும். நிரந்தரமாக்கப்பட்ட ஒருவருக்கு வருடமொன்றுக்கு 22 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அதிலும் முகாமைத்துவத்தின் அனுமதியின்றி விடுமுறை எடுக்க முடியாது.

                   என்னைப்போலவே உங்களில் பலருக்கும் இருக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இது தான் நாம் வென்றெடுத்த தொழிலாளர் உரிமைகளா? நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாகத்தான் இருக்கிறதா? அதனால்தான் சொல்கிறேன் - இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி. உங்கள் பின்னூட்டங்களோடு மீண்டும் சந்திப்போம்.

இது எனது "சிகரம்" வலைத்தளத்தின் நூறாவது பதிவு. இப்பதிவை என் பெற்றோர், நண்பர்கள், எனக்கு ஊக்கமளித்த அன்புள்ளங்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் இன்றைய நவீன உழைப்பாளிகள் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

4 comments:

 1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இடம்பெற்ற கருத்துக்களும் மிக அருமை.

  எனது தளத்தில் ஓர் அரசியல் பதிவு

  நரேந்திர மோடி கடந்து வந்த பாதை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. நூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...