Share it

Saturday, 31 December 2016

போய்வா 2016ஆம் ஆண்டே!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இதோ நாம் 2016 ஆம் ஆண்டின் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதி நிமிடங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம். பிறக்கப் போகும் 2017 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்  கொள்கிறேன். இந்த ஆண்டில் நமக்கு விருப்பமான நிகழ்வுகள் பல நடைபெற்றிருக்கலாம். அதே போலவே நாம் விரும்பாதவைகளும் நடைபெற்றிருக்கலாம். நடந்தவை எதுவாக இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு அவை தந்த படிப்பினைகளை மட்டும் மனதில் கொண்டு 2017 ஆம் ஆண்டை எதிர்கொள்ளத் தயாராகுவோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு நமது இலக்கை நோக்கி முன்னேறுவோம். வரும் ஆண்டு நிச்சயம் நம் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும் என்று வாழ்த்தி 2016 ஆம் ஆண்டில் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி. 

சிகரம் பாரதி 50 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம் , நலமறிய ஆவல். நமது தொடர் பதிவின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறோம். 2016 ஆம் ஆங்கில வருடத்திற்கு விடை கொடுக்கும் நேரமும் நெருங்கி விட்டது. இந்த ஆண்டு நாம் எண்ணியது பல. நடந்தது சில. வரும் ஆண்டு எண்ணங்கள் எல்லாம் சிறப்புற ஈடேறும் ஆண்டாக அமையட்டும். கடந்த காலம் தந்த படிப்பினைகளைக் கொண்டு 2017 ஆம் ஆண்டை நம்முடையதாக்குவோம். எனது நீண்ட நாள் கனவான 'சிகரம்' இணையத்தளம் 2017 இல் சாத்தியமாகவுள்ளது. உங்கள் அனைவரினதும் பங்களிப்புடனேயே 'சிகரம்' இனை வெற்றிபெறச் செய்ய எண்ணியுள்ளேன். நண்பர்கள் அனைவரும் 'சிகரம்' இணையத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நமது படைப்புகளை வெளியிட , வாசிக்க மற்றும் கருத்திடக்கூடிய வசதிகளுடன் மட்டும் வரவுள்ள 'சிகரம்' இணையத்தளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொண்டு உங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவுள்ளது. ஆகவே வெற்றி உங்கள் கையில். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!

Wednesday, 28 December 2016

சிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்

வணக்கம் வலைத்தள வாசகர்களே! கூகிள் பிளஸ் செயலியில் காணக் கிடைத்த ஒரு செய்தியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல முயற்சிகளுக்கு 'சிகரம்' எப்போதுமே துணையிருக்கும்.

*********************************

சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்:-
அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.

எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும்.

குரல் பதிவிடாதவர்கள் தொடர்ந்து பார்வையாளர்களாக நீடித்து பேசுகின்ற பிற நண்பர்களை ஊக்கப்படுத்தலாம்.

பேச்சுக் கலையை-சுய படைப்புத்திறனை வளர்க்க விரும்பும் 100 க்கும் மேலான நண்பர்களின் முயற்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் வேறு வழியின்றி நிர்வாகக் குழுவால் வேதனையுடன் தற்காலிகமாக நீக்கப்படுவார்கள்.

உங்கள் குரலை தினமும் ஒரு முறையாவது கேட்க ஆர்வமாக உள்ளோம். ஒத்துழைப்பு நல்கி குழுவில் நீடிக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். தனி மரம் என்றுமே தோப்பாகாது. இணைந்தே இருப்போம். இயன்றதை செய்வோம்.

சிவகிரி ரேடியோ குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.

நிர்வாகக் குழுவுக்காக
கு.முருகபூபதி, அமைப்பாளர்,
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம். 9865046197. k.murugaboopthy@gmail.com

*******************

சிகரம் பாரதி 48 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இணையத்தளம் வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2017 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் பகுதியில் வெளியிட எதிர்பார்க்கிறேன். உங்கள் பேராதரவை எதிர்பார்த்தே களத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் தோழர்களே! எனது பெருங்கனவு, நீண்டகால எண்ணம் ஈடேறப் போகிறது என்பதை எண்ணும்  போது மனம் உற்சாகத்தில் அலைபாய்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று இணையத்தளமாக உருவெடுக்கும் காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருக்கும் நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. இந்த நட்பு என்றென்றும் நமக்குள் நீடிக்க வேண்டும். அதுவே நமது வெற்றியாகும்!

Monday, 26 December 2016

சிகரம் பாரதி 47 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே! 'சிகரம்' இணையத்தளம் உருவாக்கும் முதற்கட்டப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். வடிவமைப்பாளர் முதலில் ஒரு வடிவமைப்பை பரிந்துரைத்தார். அதனை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பை வழங்கி இன்று மாலை வடிவமைப்பாளருடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன். எனது வடிவமைப்பில் சில திருத்தங்கள் தேவைப்படுகிறது. அதனை செய்து மீண்டும் அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வேலைகளிலேயே நான் ஈடுபட்டுள்ளேன். 

2016 வருடத்தின் இறுதி வாரத்தை வந்தடைந்துவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன 2017 ஐ வரவேற்க. 2017 இல் 'சிகரம்' என்னும் இணையத்தளக் கனவு நனவாகப் போகிறது. வாருங்கள் நண்பர்களே கைகோர்த்து முன்னேறிச் செல்லலாம். ஜனவரி 2017 முதல் 'சிகரம்' இணையத்தளத்திற்கு உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம். நீங்களே எங்கள் உலகம் தோழர்களே!

மீண்டும் இன்னும் தகவல்களுடன் சந்திக்கலாம். 

Friday, 23 December 2016

சிகரம் பாரதி 46 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நான் எனது 'சிகரம்' இணையத்தளத்தை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருகிறேன். நண்பர்களாகிய நீங்கள் பல்சுவை அம்சங்கள் நிரம்பிய , அழகிய வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றைப் பரிந்துரைக்க முடியுமா? எனது இணையத்தளத்திற்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நான் பெரும் குழப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன். நண்பர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் பரிந்துரைகளைக் கவனித்து இறுதி முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். உதவுவீர்களா?

Wednesday, 21 December 2016

சிகரம் பாரதி 45 / 50

🌺  யதார்த்தமான ஏழு வரிகள்

👉உங்களை ரொம்ப பிடிச்சவங்ககிட்ட  ம்ம்... சரின்னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺

👉உங்களுக்கு  என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால்  பதில்  எதிர்பார்க்காதீங்க..🌺

👉உங்கமேல ரெம்ப  அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺

👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் Sorry ( மன்னிப்பு ) சொல்லாதீங்க..🌺

👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க  ..🌺

👉யாரு உங்க  மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன்  இருக்காங்களோ அவங்களுக்கு 'நன்றி'  சொல்லாதீங்க..🌺

👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, உங்க உயிர் உள்ளவரை  மறந்து விடாதீங்க..🌺

உபாயம் : வாட்ஸப்.

சிகரம் பாரதி 44 / 50

வணக்கம்  வலைத்தள வாசகர்களே! இதோ 2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். நாம் நினைத்ததில் இந்த ஆண்டு நடந்தது எத்தனை, நடக்காதது எத்தனையோ? வரும் ஆண்டாவது நமது வாழ்வில் ஒளியேற்றும் என நம்பியிருப்போமாக. 

'சிகரம்' இணையத்தளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவரை சந்தித்து அவரிடம் பணியை ஒப்படைத்துள்ளேன். ஜனவரியில் 'சிகரம்' இணையத்தளத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களும் பங்களிக்கும் வகையில் இணையத்தளம் அமையவுள்ளது. பேஸ்புக் போன்றதொரு சமூக வலைத்தளமாக வடிவமைக்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அதற்கான முதலீடு மிக அதிகம் என்பதால் எளிமையான வடிவமைப்பில் அதே நேரம் நண்பர்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் வகையில் 'சிகரம்' உங்களை நாடி வரவுள்ளது. உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவைத் தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் களம் புகுகின்றேன். வெற்றித் திலகமிடுங்கள்!

Tuesday, 20 December 2016

சிகரம் பாரதி - 43 / 50 ஊடகத்துறையும் நாமும்!

தி இந்து இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியராக உள்ள சுஹாசினி ஹைதர் WORLD MEDIA ASSOCIATION-ஐ சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:

ஊடகத்துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது ஊடகத்துறையில் நிலைமை சரியில்லை என்பதையும், இங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கலாம். அவை உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.

நான் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஊடகத்துறையில் நுழைய கனவுகளோடு காலடி எடுத்து வைத்தேன். அப்பொழுதும் நிலைமை மோசமாகத் தான் இருந்தது. தொலைக்காட்சியில் வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது.

என்னை ஏழு நிராகரிப்புக் கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், "அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்." என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, "இனிமே தயவு செய்து அழைக்காதீர்கள்." என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்து போனது எனத் தோன்றிய , இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத்துக்குச் சென்றேன். அது செய்தி நிறுவனமில்லை, ஒரு ஆவணப்பட நிறுவனத்தில் விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களோடு இந்த வேலையாவது கிடைத்து விடாதா என. ஆவலோடு நான் நேர்முகத்துக்குச் சென்றேன்.

என்னுடைய இதழியல் பட்டத்தைப் பாஸ்டன் பல்கலையில் நான் பெற்றிருந்தேன். ஐநாவில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சிலகாலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு வேலையை விட்டு விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கி சொன்னார்,

"நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராகத் தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஒரு ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை."

என்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பை சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக ஆயிரம் காரணங்கள் கொட்டிக் கிடக்கும், ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம் உங்களை அந்தப் பணியில் இயங்க வைக்கும்.

நான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்குமட்டும் ஆசைப்படவில்லை. 'கேட்டேன், கேட்டேன்' என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.

1. உங்களுக்கு மோசமான பாஸ் கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து,முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா? நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஒரு ஏணியை விட்டு தலைகுப்புற தள்ளப்பட்டது தான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமிராமேன் துளிகூடக் கருணை காட்டவில்லை. "சீக்கிரம் எழுந்து வந்து வேலையை முடிம்மா!" என்று அவர் கத்தினார்.

அப்பொழுது தான் நான் ஒரு அடிப்படை பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவற விட்டதற்காக உங்களுடைய பாஸ் கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதைச் செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டு அடுத்தப் போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். "பரவாயில்லை, அடுத்தவாட்டி பாத்துக்கலாம்.." என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.

2. உச்சி வெய்யிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்த வேலையில் யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்பொழுது வேகாத வெய்யிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிற பொழுது பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெய்யிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்து கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல்? சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம் ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை, மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன்.

3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம் போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய் அது நம் கைக்கு வரும் பொழுது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக்கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிர வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள்.

4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிடவேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தை தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, 
வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரம்மாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்!

5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்பொழுதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள்.

6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போகமுடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்து செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல் தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகையில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. "நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்." என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடைய பாஸ் ஆப்கானில்அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று பணியாற்ற சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாகப் புரிந்துகொள்ளும் கணவன்/மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாகக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு பதினான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன்.

7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியைப் பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னு டைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்து கொண்டேன். "ஏன் அப்படி?" என அவரிடம் கேட்டேன். "என் அம்மாவுக்கு ராணுவ சீருடை பிடிக்கும்." என்றார்.

நரேந்திர மோடியின் அம்மா தன் மகன் திருமணம் செய்து கொள்ளவிட்டால் அவருடன் வாழமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல் தான் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். மன்மோகன் சிங் இறுதியாகக் குடும்பத்தோடு சுற்றுலா சென்று நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலை பயன்படுவதுவது இல்லை. அதைக் கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார்.
இதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறையப் பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை, முன்மாதிரிகள் இல்லை, ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில் கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்

தமிழில் : பூ.கொ. சரவணன்

இந்த உரையில் நான் சேர்க்க விரும்பும் 
ஒரே வரி(லி) :
இந்த துறையில் சாதனைகளென்று எதுவுமில்லை ! பயணிப்பது மட்டுமே இங்குள்ள ஒரே சாதனை !

                                   *************************************

இக்கட்டுரை பேஸ்புக்கில் 'பெருமாள்சாமி சுப்புராஜ்' என்பவரின்  பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். நன்றி தோழரே!

Monday, 19 December 2016

சிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )

தமிழ் மொழியின்
தலைமகன்
தாய்மொழியை
தனக்குச் சுமையென்று
முதியோர் இல்லத்தில்
மூத்த குடிமக்களுடன்
மிகுதிக் காலத்தைக்
கழித்திருக்கட்டும்
என்றெண்ணி
விண்ணப்பப் படிவத்தில்
கையொப்பமிட்டுவிட்டு
'தேங்க்ஸ்' என்று
கைகுலுக்கிப் பிரிந்தான்
கடைசித் தமிழன்
விக்கித்து நின்றாள்
தமிழ்த்தாய்!

- இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.


Saturday, 17 December 2016

சிகரம் பாரதி 41 / 50

சொர்க்கத்தில் எம்.ஜி.ஆர்  ஜெயலலிதாவை சந்தித்த வேளை அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்னும் சிறு கற்பனை. எல்லாம் வாட்ஸப் உபயம்!

எம்.ஜி.ஆர் : வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?

ஜெ                : புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்
குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.

எம்.ஜி.ஆர் : மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?

ஜெ                :  உடல்நிலை சரியில்லை என்று!!!

எம்.ஜி.ஆர் : அமெரிக்கா சென்றாயா?

ஜெ : அப்பல்லோவுக்கு சென்றேன்!

எம்.ஜி.ஆர் : அதுபோதுமே சொர்க்கத்துக்குவர...

ஜெ : (சோகமாக) மக்களின் பாரமும்குறையவில்லை, என் மனபாரமும் குறையவில்லை, புறப்பட்டு வந்து விட்டேன்.

எம்.ஜி.ஆர் : நம்கட்சி?

ஜெ : கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா.

எம்.ஜி.ஆர் : நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்....

ஜெ           : ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று , நான் இல்லாத வேதனையில் இன்று.

எம்.ஜி.ஆர்: நண்பர் கருணாநிதி?

ஜெ                : ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.

எம்.ஜி.ஆர் : நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?

ஜெ : முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார். நான்விடவே இல்லை.

(அப்போது சோ  வருவதைப்பார்த்து)
எம்.ஜி.ஆர் : அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா?  ஏற்கனவே இங்கே ஒரு நாரதர் இருக்கிறாரே?

சோ       : (சிரித்தபடி) நாரதர் கலகம் நன்மையில் முடியும். (ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு அங்கென்ன வேலை?

எம்.ஜி.ஆர் : அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!

சோ      : நாடோடி மன்னா ...இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?

எம்.ஜி.ஆர் : (சோ முதுகில் தட்டிக்கொடுத்து) இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது . அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.

                                              *****************************

நன்றி : வாட்ஸப்.

சிகரம் பாரதி 40 / 50 - புரிந்துகொள் புயலே...

புரிந்துகொள் புயலே...


ஒவ்வொரு மரமும்
ஒரு ‘பச்சை’க் குழந்தையென்று சொன்னபின்னும்
எப்படித்தான்
பிள்ளைக்கறி யுண்டாயோ பெரும்புயலே!

இலை விழுந்தாலும்
இழவு கேட்கும் சமூகம் நாங்கள்
வனமே பிணமாயின் தாங்குவ தெங்ஙனம்?

எங்கள் குடும்ப அட்டைகளில்
குறிக்காத உறுப்பினர்க்கு
மரங்கள் என்று பெயர்

இன்று
ஒவ்வொரு தெருவிலும் ஒப்பாரி

விருட்சங்களின் பட்சிமொழி
புயலுக்குப் புரியாமலும்
புயலின் ஓநாய்மொழி
விருட்சங்கள் அறியாமலும்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு
தொடங்கிற்று யுத்தம்

முகிலினம் இடிபட
பகல்வெயில் இருள்பட
பெருமழை தரைதொட
பேய்ப்புயல் கரைதொட

வேர்கள் பிரிந்தன மண்ணை;
வீழ்ந்து கிடந்தது சென்னை

கவிதையைத் தப்புத் தப்பாய்
வாசிக்கிறாயே வார்தாவே

போரிடும் உலகத்தை
வேரொடு சாய்க்கச் சொன்னால்
வேரிடும் உலகத்தைப்
போரொடு சாய்த்துப் போய்விட்டாயே

பிராணன் பறித்ததும் காற்றுதான்
பிராண வாயுவும் காற்றுதான்
வெறுக்க மாட்டோம்; வெற்றி கொள்வோம்
ஒரு மரமிழப்பின் இருமரம் நடுவோம்

நாய்கள் கனவுகண்டால்
எலும்புமழை பொழியும்
நாங்கள் கனவுகண்டால்
விதையோடு மழைபொழியும்

வீதிகள் தோறும் வனம் செய்குவோம்
ஊரெங்கும் இந்த
ஒற்றைக்கால் தவங்களை
உற்பத்தி செய்குவோம்

புரிந்துகொள் புயலே
வீழ்த்துவதுன் விளையாட்டென்பதையும்
எழுவது எம் பொழுதுபோக்கென்பதையும்

                               *******

 இக்கவிதை வைரமுத்துவின் டுவிட்டர் பக்கத்தில் காணக் கிடைத்தது. அது அப்படியே இங்கே. காலத்திற்கேற்ற அருமையான கவிதை.

Friday, 16 December 2016

சிகரம் 200!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல்!

'சிகரம்' வலைத்தளத்தின் 200வது பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வலைத்தளத்தை ஆரம்பித்து ஐந்தாவது வருடத்தில் 200 என்னும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. ஆயினும் எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை. கையெழுத்து சஞ்சிகையாகத் துவங்கிய 'சிகரம்' இனை இணையத்தளமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளேன். தொடர்ந்து 'சிகரம்' நிறுவனத்தைத் தொடங்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். 'சிகரம்' கையெழுத்துப் பத்திரிகையாக இருந்தபோதே குறிக்கோள் , தூரநோக்கு என அனைத்தையும் வரையறை செய்துவிட்டேன். இனி 'நிறுவனம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது மட்டுமே இலக்காக இருக்கப் போகிறது. இதுவரை என்னுடன் துணைவந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் அனைவரும் இனிவரும் காலங்களிலும் உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எழுத்துப் பணியிலீடுபட்டு வருகிறேன். 'சிகரம்' துவங்கி 10 ஆண்டுகளாகப் போகின்றன. இதுவரை தனி மனித முயற்சியாகவே நடாத்தி வந்துவிட்டேன். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தனிமனித முயற்சியிலேயே காலத்தைக் கடத்துவது? சமூகத்தை ஒன்றிணைத்து வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. 2017 ஜனவரியில் இணையத்தளம் பரிசோதனை அடிப்படையில் மக்கள் பார்வைக்கு வழங்கப்படும். உத்தியோகபூர்வமாக 01.06.2017 இல் 'சிகரம்' இணையத்தளம் துவங்கும். 2018 / 2019 காலப்பகுதியில் 'சிகரம்' நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டு 2020க்குள் நிறுவன ரீதியான செயல்பாடுகள் துவங்கும். இதுவே இப்போதைய என் திட்டம். முடிவு காலத்தின் கையில்.

நாளை நமதே!

Wednesday, 14 December 2016

சிகரம் பாரதி 39 / 50

தாயா……. ?
ஆம் “தாய் தான்”
கர்நாடாகாவில் பிறந்”தாய்”
தமிழகத்திற்குள்புகுந்”தாய்”
சர்ச் பார்க்கில் படித்”தாய்”
சினிமாவில் நடித்”தாய்”
எம்ஜிஆரை கவிழ்த்”தாய்”
ஏதேதோ செய்”தாய்”
பல பேரை கெடுத்”தாய்”
பதவியை பிடித்”தாய்”
நரி வேலை செய்”தாய்”
நல்லோரை அழித்”தாய்”
கட்சியை உடைத்”தாய்”
ஆட்சியை பிடித்”தாய்”
அடிமைகளை வளர்த்”தாய்”
ஆணவமாய் திரிந்”தாய்”
தோழியை சேர்த்”தாய்”
கோடியை குவித்”தாய்”
ஊழல் புரிந்”தாய்”
உள்ளே இருந்”தாய்”
நிதியை கொடுத்”தாய்”
நீதியை வளைத்”தாய்”
ஏரியை திறந்”தாய்”
எமனாய் வதைத்”தாய்”
செயல்பட மறந்”தாய்”
சென்னையை சிதைத்”தாய்”
வானிலே பறந்”தாய்”
வாட்சப் கண்ணீர் வடித்”தாய்”
முடங்கிக் கிடந்”தாய்”
முன்னேற்றம் தடுத்”தாய்”
குடிக்க வைத்”தாய்”
குடியைக் கெடுத்”தாய்”
தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”⁠⁠⁠⁠

// உபயம்: வாட்ஸப்.

Sunday, 11 December 2016

சிகரம் பாரதி 38 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களுக்காக ஒரு குட்டிக் கதை:

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள்.

நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள். அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள். அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.

அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள்.

ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர்.

பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார்.

அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்........ 

உபயம்: வாட்ஸப்.

Thursday, 8 December 2016

சிகரம் பாரதி 37 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்! - 02


வணக்கம் வாசகர்களே! தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 75 நாட்களாக சென்னை அப்போலோ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 05 ஆம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டது. இங்கே 'அறிவிக்கப்பட்டது' என்னும் சொல்லைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஏனெனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தபோதுதான் கட்சியினர் கடைசியாக அவரைக் கண்ணால் கண்டார்கள். அதன் பின் டிசெம்பர் 05 ஆம் திகதி பிணமாகத்தான் அவரைக் காணக் கிடைத்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணமானதாகச் சொல்லப்படும் நாள் வரை 75 தினங்களாக தமிழக முதல்வரை உயிருடன் வைத்திருந்தது அப்போலோ அறிக்கைகள் தான். 

மரணம் தொடர்பில் நிலவிவரும் சர்ச்சைகளுக்கு ஒரு முடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் வினவுவது 75 நாட்களாக என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு? உண்மையில் அவர் 05 ஆம் திகதி தான் மரணமானாரா? இரகசியமாக அவரை வைத்திருந்தது ஏன்? என்னும் கேள்விகளைத்தான். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் தேசிய மட்ட அரசியல்வாதிகளும் கூட ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஆனால் அவர்களால் தோழி சசிகலாவைத்தான் சந்திக்க முடிந்ததே தவிர ஜெயலலிதாவை தூரத்தில் இருந்து காணும் வாய்ப்புக் கூடக் கிடைக்கவில்லை. பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி என்பவர் 02.10.2016 அன்று பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினார்:

அப்பலோ நாடகம் முடியும் நேரம். 
காட்சிகள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-வது நாளான இன்று ஓரே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.

ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்...

ராம்குமார் இறுதி சடங்கு இன்று நடைபெறும் நேரத்தில் இந்த நாடகத்தை குறித்து பேசுவதென்பது மிக துன்ப நிகழ்வியல்.
ஒரு அப்பாவி இளைஞனின் படுகொலையைவிட, மாபீயா அரசியல் கூட்டம் செய்யும் சூழ்ச்சியான நகர்வுகள்கள் மட்டும் எத்தனை முக்கியத்துவமாக்கப்படுகிறது இந்த நாசமாய் போன சமூகத்தில்?
#தமிழச்சி
02/10/2016

பதிவர் தமிழச்சி சொல்வது போல ஜெயலலிதா இறந்து 70 நாட்கள் ஆகிறதா? பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக தமிழச்சி மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  தொடர்ந்து 04.12.2016 இல் இவ்வாறு ஒரு பதிவையும் வெளியிட்டார். 

ஜெயலலிதா 2வது முறையாக இன்று இறந்துவிட்டார். இதயத்துடிப்பு நின்று (முடங்கி) விட்டதாக அப்போலோ அறிவித்துள்ளது.
அதிமுக அடிமைகளே!
இப்போது ஒப்பாரி மட்டும் தானே வைக்க முடியும்?
'அம்மா'வின் உண்மை நிலை என்ன என்பதை அப்போதே அப்போலோவிற்குள் நுழைந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதையாவது கண்டுபிடித்து இருக்கலாமே?

இதைப் போலவே  இன்றும் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஒரு பகுதி உங்களுக்காக இங்கே. 

// முதலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று தானே சொன்னீர்கள்..! பின் நுரையீரலில் பிரச்னை என்றீர்கள். சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றீர்கள். அதன் பின், ஜெயலலிதா வீடு திரும்புவதை, ஜெயலலிதாவே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். உண்மையில் சொல்லுங்கள்!  இந்த 75 நாட்களில் என்ன நடந்தது ஜெயலலிதாவுக்கு...?

மேலுள்ள பத்தியில் ‘சொன்னீர்கள்’... ‘என்றீர்கள்’... போன்ற பதங்கள் இருக்கின்றன அல்லவா... அது எதுவும் அரசு நிர்வாகத்தைக் குறிப்பவை அல்ல. அனைத்தும் அப்போலோவை குறிப்பவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர்கள் உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசா... இல்லை அப்போலோவா...? மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள். நிச்சயம் அப்போலோவுக்கு இல்லைதானே...?!  ஏன் அரசு மெளனியாக இருந்தது. அதிகாரிகளை தடுத்தது எது... இல்லை யார்...?

அப்போலோவில் ஜெயலலிதாவை நலம் விசாரித்தேன் என்று சொன்னவர்கள் அனைவரும் சந்தித்தேன் என்றுதான் எல்லாம் சொன்னார்களே அன்றி... ’ஜெயலலிதாவைச் சந்தித்தேன்’ என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் ஜெயலலிதாவைச் சந்தித்தது யார்...? அவரை கவனித்துக் கொண்டது யார்...? சசிகலாதான் என்றால்... மத்திய, மாநில மந்திரிகளை தடுக்கும் அளவுக்கு, அவர் மாநில நிர்வாகத்தில் உயரிய பொறுப்பை வகிக்கிறாரா..? இல்லை, அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழுவில் இருக்கிறாரா அவர்...?   

இந்த 75 நாட்களில் ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டவில்லை, ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டவில்லை... எதை மறைக்கப் பார்க்கிறார்கள்... யார் மறைக்கப் பார்க்கிறார்கள்...?

ஜெயலலிதா மரணம் என்ற செய்தி டிசம்பர் 5, திங்கட்கிழமை மாலையே தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அதுவும் ஜெயா தொலைக்காட்சியில்... அந்தச் செய்தியை ஒளிபரப்பியது யார்...?

’எங்கள் ‘அம்மா’வை... தமிழக முதல்வரை... மன்னார்குடி குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்னரும் கூட, அவர்களிடமிருந்து மீட்க... இந்த அரசமைப்பும், அதிகாரிகளும் தவறி விட்டார்கள்!’ என்று கதறுகிறானே அ.தி.மு.கவின் சாமான்ய தொண்டன். உண்மையா...? உண்மையென்றால், வார்டு மெம்பராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு  மந்திரிகளும், அதிகாரிகளும் அஞ்சி நடுங்குவது ஏன்...?

ஜெயலலிதா இருக்கும் வரை நடராஜனை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இன்று அவர் அனைத்திலும் முன்னால் நிற்கிறார். இறுதி ஊர்வலத்திலும் செல்கிறார். மோடி அவரிடம் பேசுகிறார். என்ன நடக்கிறது இங்கே...? யார் அவர்...? மாநில அமைச்சரா... இல்லை, அரசு அதிகாரியா...? இல்லை, இன்னும் மக்கள் தொடர்பு இணை இயக்குனரா...?

ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான், தன் உடன்பிறவா சகோதரி என்றாரே தவிர... திவாகரனை, மஹாதேவனை, வெங்கடேசனை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், நேற்று அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றார்கள்.  ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா பாவமாக ஒரு ஓரத்தில் ராஜாஜி அரங்கத்தில் நிற்கிறார். அவரை ஓரங்கட்டுவது ஏன்...? எதனால்...? // (நன்றி : விகடன் , கட்டுரை : ‘என்ன ஆச்சு எங்கள் ‘அம்மா’-வுக்கு?’ அ.தி.மு.க. அதிகார மையத்துக்கு ஒரு சாமான்ய தொண்டனின் கடிதம்!)

ஜெயலலிதா இயற்கையாக மரணம் ஆனாரா? அல்லது கொல்லப்பட்டாரா? மரணம் மர்மம் நிறைந்ததா? பெரும் அரசியலை உள்ளடக்கியதா? மோடி இதன் மூடியா? இவ்வாறான மக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? 

காலம் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!

Wednesday, 7 December 2016

சிகரம் பாரதி 36 / 50 - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்!

வணக்கம் நண்பர்களே! தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். அவரை நேசித்த , எதிர்த்த அனைவரின் மனங்களிலும் சோகம். அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்கள். செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அத்தனைக்கும் முன்னால் 2016.12.06 அன்று ஆனந்த விகடன் தளத்தில் வெளியான 'எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?' என்னும் இக்கட்டுரையைச் சற்றுப் படித்துப் பாருங்கள்.

// நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். 

அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே  வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர்,  'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்

அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என  பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர்.  உண்மை அது.  ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண். 

ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார்.  எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது. 

ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான்.  அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள். 

சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா?  ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர்.  ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே,  இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்? 

‛ஆணவக்காரி’  என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர்.  , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர். 

பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர்  இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

‛ஜெயலலிதாவைச்  சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

எது எப்படியோ,  அவர்  மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”


நன்றி : விகடன் - //

இக்கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும் நிஜம். நமக்குத் தெரியாமலே நாம் நேசித்த அரசியல் ஆளுமை என்றால் அது செல்வி ஜெ.ஜெயலலிதா தான். இலங்கையில் கூட பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழில் கடைகள் மூடப்பட்டன. இலங்கை ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார். ஊவா மாகாண பதில் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். உலக நாடுகள் பலவும் கூட அஞ்சலி செலுத்தியுள்ளன. இது ஜெயலலிதாவின் புகழுக்கு சாட்சி. என்றென்றைக்கும் தமிழர்களின் மனதில் ஜெயலலிதாவுக்கு நீங்காத இடம் உண்டு என்பது மட்டும் உண்மை. இன்னும் பேசலாம் ... 

Monday, 5 December 2016

சிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும் நாட்டின் மக்களும் !

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இலங்கையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கெதிராக ரூ 25,000 தண்டப்பணம் அறவிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் தமிழ் நாளேடொன்று 'போதையில் சுக்கானை சுழற்றினால் ரூ.25,000 அபராதம்' என இச்செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது.

01. மதுபோதையில் வாகனம் செலுத்துதல் 

02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல் 

03. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் வாகனத்தை கையளித்தல் 

04. உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல் 

05. காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல் 

06. பாதுகாப்பற்ற வகையில் புகையிரதக் கடவை ஊடாக வாகனத்தை செலுத்துதல் 

07. இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல் 

ஆகிய ஏழு குற்றங்களுக்காகவே ரூ 25,000 தண்டப்பணம் அறவிடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீதிகளின் தரம் ஒருபுறமிருக்க தரமற்ற வாகன சாரதிகளால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. என்ன நடந்தாலும் இலஞ்சம் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணம் நம்மவர்களின் மனதில் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் தொடங்கி குற்றங்களில் இருந்து விடுபடுவது வரை இலஞ்சம். இதனால் ஏற்படும் கவனயீனம் விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பலிவாங்கிவிடுகிறது. வீதிகள் தரமற்றவை என்றால் அதிவேக வீதியில் கூட விபத்துக்கள் இடம்பெற என்ன காரணம்? வீதி வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள தோட்டப்புறங்களில் கூட ஒழுங்காகப் போக்குவரத்து இடம்பெறுகிறதே? பிழை வீதிகளில் இல்லை, நம் சாரதிகளின் மீதுதான்.

மேற்படி ஏழு குற்றங்களுக்காகவும் விதிக்கப்படவுள்ள தண்டப்பண அதிகரிப்பைக் கண்டித்து 2016.12.01 நள்ளிரவு 12 மணிமுதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் பொதுப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கெமுனு விஜேரத்ன தலைமையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் ஒரு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தவிர்ந்த அனைவரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இப்போராட்டம் குறித்த சுவரொட்டியைத் தாங்கிய தனியார் பேரூந்து ஒன்று போராட்ட தினத்திற்கு முன்தினம் சிவப்பு விளக்கு சமிஞ்சை ஒளிர்ந்த பின் அந்த சமிஞ்சையை மீறி பயணித்ததை தொலைக்காட்சிகளினூடாக காணக் கிடைத்தது. தனியார் பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பை சமாளிக்க சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேரூந்துகள் சேதமடைந்ததுடன் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. 

நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளால் புகையிரதம் வழிமறிக்கப்பட்டது. இதனால் அப்பாதையிலான அன்றைய புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. இப்பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளாமல் சேவையிலீடுபட்ட தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதேசத்தில் தனியார் பேரூந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை நிறுத்தி வைத்துவிட்டு கிரிக்கெட் விளையாடினர். இப்பணிப்புறக்கணிப்பிற்கு மூன்று தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்க , ஆதரவு தராத கெமுனு விஜேரத்னவின் சொந்தப் பேரூந்து (வழி இலக்கம் - 176) வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. சாரதியும் நடத்துனரும் வராததால் குறித்த பேரூந்து ஓடவில்லை என்றும் அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தன்னிடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எத்தனை தடைகள் வந்தாலும் இந்தத் தண்டப்பண அறவீட்டை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தனர். ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ரவி கருணாநாயக்க இப்போராட்டம் நீடிக்குமானால் போராட்டத்திலீடுபடும் பேருந்துகளின் வழி அனுமதிப்பத்திரங்கள் (Route Permit) இரத்துச் செய்யப்பட்டு புதிய அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்தார். 2016.12.03 காலையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இதில் மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்த ஜனாதிபதி அக்குழுவின் பரிந்துரையின் பின்னர் தண்டப்பண அறவீட்டு அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல் மற்றும் இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல் ஆகிய குற்றங்கள் தவிர்ந்த ஏனைய நான்கு குற்றங்களிற்கு எதிராகவும்  நிச்சயம் தண்டப்பண அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் இம்மூன்று குற்றங்களும் காவல் துறையினரால் ஆதாரமின்றி ஒருவர் மீது சுமத்தப்படலாம். அல்லது அதிகபட்ச இலஞ்சம் கோரப்படலாம். வேகக் கட்டுப்பாடு மற்றும் முந்துரிமை போன்ற குற்றங்களைக் கண்காணிக்க சரியான தொழிநுட்பம் இலங்கை அரசிடம் இல்லை. நாட்டின் பெரும்பாலான வீதிகளில் கண்காணிப்புக் கருவிகள் இல்லை. எல்லா இடங்களிலும் உச்ச வேக வரம்பு குறித்த அறிவித்தல் பலகைகள் இல்லை. ஆதலால் இக்குற்றங்களை நிரூபணம் செய்வது கடினம். ஆனால் குற்றம் என்ற வகையில் ரூ 5000 தண்டப்பணமாக அறவிடப்படலாம். 

அரச தொலைக்காட்சியே 'இது முதுகெலும்பு உள்ள அரசாங்கமாக இருந்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி இத்தண்டப்பண அறவீட்டை அமுல்படுத்திக் காட்டட்டும்' என்று சவால் விடுமளவுக்கு அரசு பலவீனமானதாக இருக்கிறது. பணிப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்ட போதே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் வழி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று வர்த்தமானியில் அறிவித்திருந்தால் இப்பணிப்புறக்கணிப்பை அரசு தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அல்லது பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் பேரூந்துகள் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்திருந்தால் அந்த பயத்திலேயே எல்லாப் பேரூந்துகளும் ஓடியிருக்கும். மக்களின் அசௌகரியங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். 

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கின. ஆகவே மக்களும் இனி தனியார் பேரூந்துகளைப் புறக்கணிப்பார்களா? இல்லை. ஆனால் அவ்வாறு நடந்தால் இனி எக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. இவ்வாறான நிலைமைகளின் போது வசதியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். சாதாரண மக்களே துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். பணிப் புறக்கணிப்பு என்ற பெயரில் பேரூந்து உரிமையாளர்கள் அரசின் சட்டத்தை வளைக்க முயல்கின்றனர். அரசும் வளைந்து கொடுக்கிறது. இது ஏன்? பணம் படைத்தவர்களால் அரசைக் கட்டுப்படுத்த முடியுமெனில் சாமானிய மக்களான நமக்கு வாக்குரிமை எதற்கு?

மேலும் தனியார் வாகனங்கள் மட்டும்தான் சாலை விதிகளை மீறுகின்றனவா என்றும் வினவ வேண்டியுள்ளது. என் கண் முன்னாலேயே சாலை விதிகளை மீறிப் பயணித்த அரச பேரூந்துகளுக்கு காவல் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பும் அப்பேரூந்து ஓட்டுனர்கள் எச்சரிக்கையை மதிக்காமல் சென்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். காரணம் அரச பேரூந்து ஓட்டுனர்களை கைது செய்யவோ அல்லது பேரூந்துகளை பறிமுதல் செய்யவோ முடியாது என்பதாகும். சாலை விதி மீறல்கள் அரச வாகனங்களுக்கும் பொருந்தும். விதி மீறல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரச வாகன ஓட்டுனர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீதிப் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பழைய பாதைகளை புனரமைக்கவும் புதிய பாதைகளை உருவாக்கவும் வேண்டும். இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறை மேம்படுத்தப்பட வேண்டும். 

மொத்தத்தில் நல்லாட்சி அரசு மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகும். மக்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Sunday, 4 December 2016

சிகரம் பாரதி 34 / 50

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள் இறுதியாக பெண்ணைப் படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள் இரு நாள் அல்ல,தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள் “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 

அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். 

சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. 

ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள் “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். 

அது மட்டுமல்ல அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். 

கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். 

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. 

தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்” என்றார்.

“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” - தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றியும் யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்” என்று விவரித்தார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது” என்று பதிலளித்தார் கடவுள்.

ஆச்சரியமான தேவதை “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது” என்று கடவுள் பதிலளித்தார். 

எல்லாப் பெண்களையும் மதிப்போம்!

உபாயம் : வாட்ஸப்.

Saturday, 3 December 2016

சிகரம் பாரதி 33 / 50

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். 

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். 

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். 

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள். 

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். 

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை. 

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். 

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. 

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?"
என்று கணவர் கேட்டபோது 'இருந்திருக்காது' என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள். 

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். 

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்...

நல்லதையே செய்வோம்... நல்லோராய் வாழ்வோம்...!!!


நல்லனவற்றை பகிர்வோம்!

உபயம்: வாட்ஸப்.

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts