Monday, 5 December 2016

சிகரம் பாரதி 35 / 50 - ஏழு குற்றங்களும் ஒரு அரசும் நாட்டின் மக்களும் !

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இலங்கையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கெதிராக ரூ 25,000 தண்டப்பணம் அறவிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் தமிழ் நாளேடொன்று 'போதையில் சுக்கானை சுழற்றினால் ரூ.25,000 அபராதம்' என இச்செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது.

01. மதுபோதையில் வாகனம் செலுத்துதல் 

02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல் 

03. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் வாகனத்தை கையளித்தல் 

04. உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல் 

05. காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல் 

06. பாதுகாப்பற்ற வகையில் புகையிரதக் கடவை ஊடாக வாகனத்தை செலுத்துதல் 

07. இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல் 

ஆகிய ஏழு குற்றங்களுக்காகவே ரூ 25,000 தண்டப்பணம் அறவிடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீதிகளின் தரம் ஒருபுறமிருக்க தரமற்ற வாகன சாரதிகளால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. என்ன நடந்தாலும் இலஞ்சம் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணம் நம்மவர்களின் மனதில் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் தொடங்கி குற்றங்களில் இருந்து விடுபடுவது வரை இலஞ்சம். இதனால் ஏற்படும் கவனயீனம் விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்களைப் பலிவாங்கிவிடுகிறது. வீதிகள் தரமற்றவை என்றால் அதிவேக வீதியில் கூட விபத்துக்கள் இடம்பெற என்ன காரணம்? வீதி வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள தோட்டப்புறங்களில் கூட ஒழுங்காகப் போக்குவரத்து இடம்பெறுகிறதே? பிழை வீதிகளில் இல்லை, நம் சாரதிகளின் மீதுதான்.

மேற்படி ஏழு குற்றங்களுக்காகவும் விதிக்கப்படவுள்ள தண்டப்பண அதிகரிப்பைக் கண்டித்து 2016.12.01 நள்ளிரவு 12 மணிமுதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் பொதுப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கெமுனு விஜேரத்ன தலைமையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் ஒரு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தவிர்ந்த அனைவரும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இப்போராட்டம் குறித்த சுவரொட்டியைத் தாங்கிய தனியார் பேரூந்து ஒன்று போராட்ட தினத்திற்கு முன்தினம் சிவப்பு விளக்கு சமிஞ்சை ஒளிர்ந்த பின் அந்த சமிஞ்சையை மீறி பயணித்ததை தொலைக்காட்சிகளினூடாக காணக் கிடைத்தது. தனியார் பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பை சமாளிக்க சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேரூந்துகள் சேதமடைந்ததுடன் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. 

நீர்கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளால் புகையிரதம் வழிமறிக்கப்பட்டது. இதனால் அப்பாதையிலான அன்றைய புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. இப்பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளாமல் சேவையிலீடுபட்ட தனியார் பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதேசத்தில் தனியார் பேரூந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை நிறுத்தி வைத்துவிட்டு கிரிக்கெட் விளையாடினர். இப்பணிப்புறக்கணிப்பிற்கு மூன்று தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்க , ஆதரவு தராத கெமுனு விஜேரத்னவின் சொந்தப் பேரூந்து (வழி இலக்கம் - 176) வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. சாரதியும் நடத்துனரும் வராததால் குறித்த பேரூந்து ஓடவில்லை என்றும் அவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தன்னிடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எத்தனை தடைகள் வந்தாலும் இந்தத் தண்டப்பண அறவீட்டை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தனர். ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ரவி கருணாநாயக்க இப்போராட்டம் நீடிக்குமானால் போராட்டத்திலீடுபடும் பேருந்துகளின் வழி அனுமதிப்பத்திரங்கள் (Route Permit) இரத்துச் செய்யப்பட்டு புதிய அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்தார். 2016.12.03 காலையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இதில் மூவர் அடங்கிய குழுவொன்றை அமைத்த ஜனாதிபதி அக்குழுவின் பரிந்துரையின் பின்னர் தண்டப்பண அறவீட்டு அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வேகக் கட்டுப்பாட்டை மீறுதல் மற்றும் இடப்புறமாக வாகனத்தை முந்திச் செல்லுதல் ஆகிய குற்றங்கள் தவிர்ந்த ஏனைய நான்கு குற்றங்களிற்கு எதிராகவும்  நிச்சயம் தண்டப்பண அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் இம்மூன்று குற்றங்களும் காவல் துறையினரால் ஆதாரமின்றி ஒருவர் மீது சுமத்தப்படலாம். அல்லது அதிகபட்ச இலஞ்சம் கோரப்படலாம். வேகக் கட்டுப்பாடு மற்றும் முந்துரிமை போன்ற குற்றங்களைக் கண்காணிக்க சரியான தொழிநுட்பம் இலங்கை அரசிடம் இல்லை. நாட்டின் பெரும்பாலான வீதிகளில் கண்காணிப்புக் கருவிகள் இல்லை. எல்லா இடங்களிலும் உச்ச வேக வரம்பு குறித்த அறிவித்தல் பலகைகள் இல்லை. ஆதலால் இக்குற்றங்களை நிரூபணம் செய்வது கடினம். ஆனால் குற்றம் என்ற வகையில் ரூ 5000 தண்டப்பணமாக அறவிடப்படலாம். 

அரச தொலைக்காட்சியே 'இது முதுகெலும்பு உள்ள அரசாங்கமாக இருந்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி இத்தண்டப்பண அறவீட்டை அமுல்படுத்திக் காட்டட்டும்' என்று சவால் விடுமளவுக்கு அரசு பலவீனமானதாக இருக்கிறது. பணிப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்ட போதே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் வழி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று வர்த்தமானியில் அறிவித்திருந்தால் இப்பணிப்புறக்கணிப்பை அரசு தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அல்லது பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் பேரூந்துகள் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்திருந்தால் அந்த பயத்திலேயே எல்லாப் பேரூந்துகளும் ஓடியிருக்கும். மக்களின் அசௌகரியங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். 

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கின. ஆகவே மக்களும் இனி தனியார் பேரூந்துகளைப் புறக்கணிப்பார்களா? இல்லை. ஆனால் அவ்வாறு நடந்தால் இனி எக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. இவ்வாறான நிலைமைகளின் போது வசதியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். சாதாரண மக்களே துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். பணிப் புறக்கணிப்பு என்ற பெயரில் பேரூந்து உரிமையாளர்கள் அரசின் சட்டத்தை வளைக்க முயல்கின்றனர். அரசும் வளைந்து கொடுக்கிறது. இது ஏன்? பணம் படைத்தவர்களால் அரசைக் கட்டுப்படுத்த முடியுமெனில் சாமானிய மக்களான நமக்கு வாக்குரிமை எதற்கு?

மேலும் தனியார் வாகனங்கள் மட்டும்தான் சாலை விதிகளை மீறுகின்றனவா என்றும் வினவ வேண்டியுள்ளது. என் கண் முன்னாலேயே சாலை விதிகளை மீறிப் பயணித்த அரச பேரூந்துகளுக்கு காவல் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பும் அப்பேரூந்து ஓட்டுனர்கள் எச்சரிக்கையை மதிக்காமல் சென்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். காரணம் அரச பேரூந்து ஓட்டுனர்களை கைது செய்யவோ அல்லது பேரூந்துகளை பறிமுதல் செய்யவோ முடியாது என்பதாகும். சாலை விதி மீறல்கள் அரச வாகனங்களுக்கும் பொருந்தும். விதி மீறல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரச வாகன ஓட்டுனர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீதிப் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பழைய பாதைகளை புனரமைக்கவும் புதிய பாதைகளை உருவாக்கவும் வேண்டும். இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறை மேம்படுத்தப்பட வேண்டும். 

மொத்தத்தில் நல்லாட்சி அரசு மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகும். மக்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...