Share it

Saturday, 26 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்தம் 02 ]

1.2 தோழிகளின் சந்திப்பு 

"திவ்யா...."

"...................."

"அடியேய் திவ்யா...."

கை அனிச்சையாய் தேநீரை வாய்க்குள் ஊற்ற வாயும் அதே போல் தேநீரைப் பருக மனம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது யாரோ என் தோளைப் பிடித்து உலுக்குவதைப் போலிருக்க நினைவுகளில் இருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்தேன். தோழி நந்தினி சிரித்தபடி நின்றிருந்தாள். 

"என்னடி யோசனை?"

"ஒன்னுமில்ல"

"ஒன்னுமில்லாமலா கூப்பிடறது கூட வெளங்காம உட்கார்ந்திருக்க?"

"........................."

"நா சொல்லவா?"

"தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேக்குற?"

"இப்படியே எப்பப் பாத்தாலும் அதப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி?"

"மறந்துரச் சொல்றியா?"

"அப்படி இல்ல....."

"அப்போ நெனைச்சுக்கிட்டு தானே இருக்கணும்?"

"....................."

என் கேள்விக்கு நந்தினியால் மௌனத்தையே பதிலாய் அளிக்க முடிந்தது. என் மனம் படும் பாட்டை அவளும் அறிந்திருந்ததினால் அந்த மாடிக் குடியிருப்பின் இரண்டாம் தளத்திலுள்ள எனது வீட்டின் பலகணியில் என் அருகில் நின்றபடியே கையில் தேநீருடன் தானும் சிந்திக்கத் தொடங்கினாள். 

நந்தினியின் அத்தை மகளான நான் சிறு வயது முதலே அவளை அறிவேன். எனக்கு மிகவும் நெருக்கமான தோழிகளுள் நந்தினியும் ஒருத்தி. ஆனால் நந்தினியை என் நண்பர்கள் வட்டாரத்தில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் என்னோடு ஒன்றாகக் கல்வி கற்றதில்லை, என் நண்பர்களுடன் அவளை எங்கும் அழைத்துச் சென்றதுமில்லை. பள்ளி விடுமுறைக் காலங்களில் நந்தினியின் வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு வருவேன். மற்றபடி வீட்டுத் தொலைபேசியிலேயே தகவல்களைப் பரிமாறிக் கொள்வேன். இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்து வைத்திருந்தோம். 

நாளை நந்தினியைப் பெண் பார்க்க வருகிறார்கள். பெண்ணைப் பிடித்திருந்தால் நாளையே நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிடும். மாப்பிள்ளை யாரென்று தெரியவில்லை. நந்தினியின் அப்பாவின் நட்பு வட்டாரத்தில் ஒருவரின் குடும்பம் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிந்திருந்தது. பெண் பார்க்க வருவதால் என்னை அழைத்துப் போகவே நந்தினி வந்திருந்தாள். சில நிமிடங்களிலேயே அவரவர் சிந்தனைகளில் இருந்து விடுபட்டோம். பின்னர் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினியுடன் அவள் இல்லம் நோக்கி விரைந்தேன். 

கார் நந்தினியின் வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. கார் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க இருவருக்கிடையில் இன்னமும் மௌனம் நிலைகொண்டிருந்தது. காரின் ஜன்னலினூடே தெரிந்த புற உலகை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தோம்.  நந்தினியே முதலில் மௌனத்தைக் கலைத்தாள்.

"திவ்யா..."

நான் பதிலேதும் கூறாமல் 'என்ன?' என்று வினவுவதைப் போல அவளது முகத்தை நோக்கினேன். 

"இப்படிப் பேசாமலே வந்தா என்ன அர்த்தம்?"

"நா யோசிக்கிறேன்னு அர்த்தம்"

"சமாளிக்கிறீங்களோ?"

"இல்ல நந்தினி. உண்மையைத்தான் சொல்றேன்"

"இப்படி எப்பப் பாத்தாலும் யோசிச்சிக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கு?"

"எல்லாம் நல்லா இருந்தா நா ஏன் நந்தினி யோசிக்கப்போறேன்?'

"புத்திசாலிடி நீ"

"உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி"

"இந்த யோசனைக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா திவ்யா?"

"இருக்கு. கூடிய சீக்கிரம்"

"என்னடி புதிர் போடுற?"

"புதிர் இல்ல, நம்பிக்கை"

"............"

"என் காதல் மேல நா வச்சிருக்கிற நம்பிக்கை"

நான் என்னதான் காதலின் மீது அபாரமான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடையத் தொடங்கியிருந்தது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்பதை யாரறிவார்? சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதைப் போல நானும் காலத்தின் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பயணித்த காரும் ஓட்டுநரின் திறமையினால் கணிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நந்தினியின் வீட்டை வந்தடைந்திருந்தோம். 

Friday, 25 November 2016

சிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்!வணக்கம் வலைத்தள வாசகர்களே! வாட்ஸப் இன் புதிய பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த வசதி வந்தே விட்டது. மேலும் மடிக்கணினிகளிலும் இப்போது வாட்ஸாப்பை பயன்படுத்த முடியும். ஆனால் கணினியில் பயன்படுத்தும் அதே நேரம் கைப்பேசியும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் கணினியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. குரல் பதிவுகளை அனுப்ப முடியும். வைபர், இமோ போன்றவற்றின் கணினிப் பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அல்லோ, டுவோ, ஹேங்அவுட்ஸ், வாட்ஸப், வைபர், இமோ, பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் என எட்டு  செயலிகள் என் கைப்பேசியில் உள்ளன. இதில் கூகிள் அல்லோ எழுத்துக்களையும் குரல் பதிவுகளையும் மட்டுமே பரிமாற்றுகிறது. கூகிள் டுவோ வீடியோ அழைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.  மற்ற அனைத்திலும் எழுத்து, குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த அனைத்து செயலிகளுக்குமிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. நான் பயன்படுத்துவது எட்டு செயலிகள் என்றால் இன்னும் பல செயலிகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் சேர்த்தால் எப்படியும் நூறை தாண்டும். 

ஒவ்வொரு நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு செயலியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு செயலியை தேர்ந்தெடுத்துக் கொண்டால் மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிடலாம். இதனால் நமக்கு நேரம், இணைய பாவனை அளவு, கைப்பேசியில் நினைவகம் என எல்லாம் மிச்சமாகும். 

இது தவிர பேஸ்புக், டுவிட்டர், கூகிள் பிளஸ் என்று சமூக வலைத்தளங்கள் தனி ரகம். எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைத்தால் நலம். ஆயிரத்தெட்டு செயலிகள் நம் கைப்பேசியில் குடியிருப்பதால் கைப்பேசியின் நினைவக அளவு வெகுவாகக் குறைவடைந்து விடுகிறது. இதனால் நினைவக அட்டை வாங்க தனியாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 

செயலிகள் தான் இப்படியென்றால் கைப்பேசிகள் தினம் தினம் புதிது புதிதாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஐ போன் ஒரு வருடத்திற்கு இரண்டு கைப்பேசிகளையே வெளியிடுகிறது. அதே போல ஏனைய நிறுவனங்களும் ஐந்து அல்லது ஏழு வரையான கைப்பேசிகளை வெவ்வேறு விலை மட்டங்களில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வெளியிட்டால் போதுமானதாக இருக்கும். ஆனால் நிலை அப்படி இல்லை. இன்று 30,000 ரூபாய்க்கு வாங்கும் கைப்பேசியின் அடுத்த வார விலை 20,000 ஆக இருக்கும். 30,000 ரூபா விலைக்கு இன்னுமொரு புதிய கைப்பேசி வெளியாகியிருக்கும். கடுமையான வியாபாரப் போட்டியே இவற்றுக்கெல்லாம் காரணம். 

மக்களாகிய நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாளொரு கைப்பேசியும் பொழுதொரு செயலியுமாகத் திரிந்தால் நம் நிலை அதோ கதிதான். எந்தக் கைப்பேசியைப் பாவிக்க வேண்டும், எவ்வளவு காலத்திற்கு பாவிக்க வேண்டும், நமக்கு அவசியமான செயலிகள் எவை என்பதில் நமக்கு தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கைப்பேசி நிறுவனங்களின் வணிகப் போட்டியில் பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம்!

Thursday, 24 November 2016

சிகரம் பாரதி 31 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

பிளாக்கரின் டாஷ்போர்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்மனையில் http இலிருந்து https வசதியை வழங்கியது. இப்போது ஒருவர் தனது அனைத்து வலைப்பதிவுகளையும் இலகுவில் கட்டுப்படுத்தக் கூடியவாறு வடிவமைத்துள்ளது. இது கூகிள் வலைத்தள சேவையை பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்னும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இன்னும் பல மாற்றங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறேன். 

தொழிலுடன் எதிர்கால இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கையில் பல தடைகள் வந்துபோகின்றன. முக்கியமாக நேரமின்மை. காலை 6.30 மணிக்கு எழுந்து தயாராகி 8.00 மணிக்கு வேலைக்கு சமூகமளித்து பணிகளை நிறைவு செய்துவிட்டு நிமிர்ந்தால் இரவு 8.00 மணியாகியிருக்கும். பணி முடிந்து மீண்டும் இல்லத்தை வந்தடையும்போது இரவு 9.00 மணிக்கு மேலாகிவிடுகிறது. குளித்து, உணவு உண்டு முடிக்கையில் இரவு 11.00 மணி தாண்டி விடுகிறது. இடைப்பட்ட 11.00-06.30 நேரத்தில் தான் தூங்கவும் எழுதவும் வாசிக்கவும் வேண்டும். சில நாட்களில் தூங்குவதற்கு அதிகாலை 02.00 மணியாகிவிடும். நம்ம வாழ்க்கை அப்படி. 

நேர முகாமைத்துவத்தை என்ன முயன்றாலும் முறையாக அமுல்படுத்திட இயலவில்லை. குறுகிய கால எல்லைக்குள் எல்லாப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பது ஒரு விதத்தில் மன அழுத்தத்தையும் உண்டாக்கி விடுகிறது. மீள வழிதான் இல்லை. 

தமிழ்மணத்தில் 103வது இடம். எண்ணிக்கைகள் வெற்றிகள் அல்ல. அண்மைக்காலமாக தொடர்ந்து பதிவுக்கு ஒரு கருத்துரையேனும் பெற்றுவிடுகிறேன். பணத்தை விட வாசகர்களின் கருத்துக்களே முக்கியம். 

இன்னும் பேசலாம்...

Monday, 21 November 2016

சிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளின்டனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதே நேரம் நம் இந்திய மக்கள் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். உலக வல்லரசு நாட்டிலும் தெற்காசிய வல்லரசு நாட்டிலும் இருவேறு மாறுபட்ட நிகழ்வுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. 

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தொகுதிவாரி முறையின் காரணமாக ஹிலாரி கிளின்டனை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தாலும் வெற்றி வாகை சூடினார் டிரம்ப். இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. மேலும் அவரது கல்வி நிறுவனமொன்றின் மீது அதன் முன்னாள் மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நட்ட ஈடாகத் தர முன்வந்துள்ளார். அத்துடன் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே அதாவது அமெரிக்காவில் பிறந்து பூர்வீகமாக வாழ்பவர்களுக்கே சொந்தம் என்று கருத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டு வந்தார். பார்க்கலாம் ஒபாமாவைப் போல நல்லாட்சி செலுத்துவாரா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்று!

கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் நவம்பர் 8 ஆம் திகதி நள்ளிரவுக்கு 4 மணித்தியாலங்களே இருந்த நிலையில் ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நாட்டு மக்கள் பரிதவித்துப் போயினர். மோடி நிம்மதியாக உறங்கச் சென்ற நேரத்தில் பாரத மக்கள் வங்கிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலைமோதினர். நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க உல்லாசமாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார் மோடிஜி. செல்லாத நோட்டுகளின் விவகாரத்தால் இந்திய சனத்தொகை 45 பேரினால் குறைவடைந்துள்ளது. பத்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் மக்கள் பணத்துக்காகத் திண்டாடும் நிலை. சரியான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது. பணம் படைத்த கறுப்புப் பண உரிமையாளர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை. 

என்ன கொடுமை சரவணன் இது?

Saturday, 19 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 [ திருத்தம் 01 ]

04. குறுந்தகவல்


எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.

திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

"நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."

குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது. கடந்த கால நினைவுகள் மனதை பிசைந்தன. விழியோரத்தில் எட்டிப் பார்த்த துளி கண்ணீரை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டேன். 

நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

"ஹ... ஹலோ சு.. சுசி..."

"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"

"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."

"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"

"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."

"ஆனா....?"

"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"

"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."

"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"

"சரிடா... நா வர்றேன்."

சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன். ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.

"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."

"..................."

"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"

"விஷயமே வேற சுசி..."

"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."

"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."

Friday, 18 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தம் 01 ]

03. கண்டேன் காதலை

பயணங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. சிலரின் வாழ்வில் மறக்க முடியாதவை. நம் வாழ்க்கையில் பல நூறு பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நம்மால் மறக்கவியலாது. எனது இந்தப் பயணம் என் காதலைக் கொன்று இன்னொருத்தியை என் மனதிற்குக் காவல் வைக்கப்போகும் பயணம். என் வாழ்க்கைப் பாதையைத் திசை மாற்றப்போகும் பயணம். இந்தத் தமிழ்த் திரைப்படங்களைப் போல இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் நடக்கும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாதா என்றே என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தேன் நான். 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில்  ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.  வரவேற்பறையிலிருந்த வானொலி எங்களைக் கண்டதும் பாடத் துவங்கியது.

'சீதா கல்யாண .வைபோகமே...
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே...' 

இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.

மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"- எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?

கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.

என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

Wednesday, 16 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம் 01 ]

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது."ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்துவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்த சமயம் தற்செயலாய் நிலைக்கண்ணாடி மீது என் கவனம் விழ அதில் என்னைப் பார்த்த நான் ஒரு விநாடி சிலையாய் நின்றுவிட்டேன். அந்த விநாடியில் தோன்றி மறைந்த பழைய நினைவுகள் தான் அதற்குக் காரணம். ஒருமுறை உறவினர் திருமண வைபவம் ஒன்றுக்கு நான் பட்டுவேட்டி, சட்டை சகிதம் சென்றிருக்க அங்கு திவ்யாவும் வந்திருந்தாள். 

அப்போது என்னைப் பார்த்த மாத்திரத்தில் "மாமோய்... செமயா இருக்கீங்க... ம்... ம்... கலக்குங்க... கலக்குங்க..." என்றாள். அவள் சொன்னதும் எனக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் வித்தியாசமாகச் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அன்று எடுத்த புகைப்படத்தை இன்று பார்த்தாலும் அவளது அந்த வசனம் பசுமையாய் என் காதுகளில் கேட்கும். 

ஆமா... இந்த 'திவ்யா' யாரு? 'திவ்யா... திவ்யா... என்...' தெரியவில்லை. 'என் காதலி' என்று சொல்வதா அல்லது 'என் முன்னாள் காதலி' என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிச்சயதார்த்தத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பது திவ்யாவைப் பெண் பார்க்க இல்லை என்பது மட்டுமே எனக்குத் தெரியும். 

அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் வெளியே வந்தேன். சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

Monday, 14 November 2016

சிகரம் பாரதி 29 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

இவ்வாரம் எனது இணைய இணைப்பின் அனுமதிக்கப்பட்ட பொதியின் [Internet Package ] அளவு முடிவடைந்துவிட்டது. Dialog 4G Home Broadband இணைய இணைப்பை கடந்த மாதம் முதலாம் திகதி வாங்கியிருந்தேன். முதலில் 10GB பொதியை வாங்கியிருந்தேன். பிறகு 25GB பொதிக்கு மாறிவிட்டேன். இப்போது 25ஜிபி யும் முடிவடைந்து எல்லை மீறிக் கொண்டு போகிறது. இது போதாதென்று 1ஜிபி பொதியை மேலதிகமாக இணைத்திருந்தேன். அது போன இடம் தெரியவில்லை. அவ்வளவு வேகமாக முடிந்துவிட்டது. இப்போது இணைப்பு அவ்வளவு வேகமாக இல்லை. பல்வேறு இடையூறுகளும் தடங்கல்களும் வந்த வண்ணமுள்ளன. என்ன செய்ய? பேசாமல் குவைத் நாட்டுக்குப் போய்விடலாம்  என்றிருக்கிறேன். காரணம் அங்கு இலங்கை ரூபாய் 4900 க்கு [இந்திய ரூபாய் 2250 மட்டுமே] 1TB பாவனை அளவு கிடைக்கிறது. 1TB ன்னா எவ்ளோ தெரியுமா? 1024GB ! அம்மாடி!!! இப்பவே கண்ணைக் கட்டுதே! 
13.11.2016 இல் சன் டிவி யில்  பிச்சைக்காரன் திரைப்படம். முழுவதுமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை. இடைநடுவில் இருந்துதான் பார்க்கக் கிடைத்தது. இறுவட்டு வாங்கி முழுமையாகப் பார்க்க வேண்டும். எனக்குப் பொதுவாகவே விஜய் அன்டனியின் திரைப்படங்கள் பிடிக்காது. ஆனால் பிச்சைக்காரன் ரசிக்க வைத்தது. அருமையான திரைப்படம். திரைப்படக் குழுவிற்கு வாழ்த்துக்கள். சிறுவர்களுக்கு காண்பிக்கக் கூடிய திரைப்படங்களின் வரிசையில் இப்படத்தையும் சேர்த்துக்  கொள்ளலாம். ஆபாசம் இல்லாத அழகியல் இது. நமக்குப் பாடம் நடத்திவிட்டுப் போகிறான் 'பிச்சைக்காரன்'. 

இவ்வருடம் மொத்தம் 50 பதிவுகளை எழுதியாயிற்று. 45000 பக்கப் பார்வைகளையும் கடந்துவிட்டேன். தமிழ்மணம் திரட்டியில் 125வது இடம். மகிழ்ச்சி. ஆனாலும் எண்ணிக்கைகள் சாதனைகள் அல்ல நண்பர்களே!

இன்று கே.டிவியில் 'நிமிர்ந்து நில்' திரைப்படம். நமக்குள் ஒளிந்திருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டக் காரனை கோபமடையச் செய்து வெளியே கொண்டு வந்தது இத்திரைப்படம். ஆனால் நமக்கு இலஞ்சமாக சில பல அரைகுறை பாடல்களை இயக்குனர் அள்ளி வழங்கியிருக்கிறார். ஏறத்தாழ 'சிட்டிசன்' திரைப்பட இறுதிக் காட்சி. ஜெயம் ரவியின் இரட்டை வேடத்தை ஒப்புக் கொள்ள இயலவில்லை. படம் ரசிக்கும்படி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செதுக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

Sunday, 13 November 2016

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01

வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல்.

"வானவல்லி" - நமது தோழர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் உருவான சரித்திரப் புதினம். பல தடைகளைத் தாண்டி வெற்றிவேலின் கன்னி நாவல் களம் கண்டிருக்கிறது. பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினங்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் 'வானவல்லி'யை வெளியிட்டதன் மூலம் தனிச் சிறப்பை இந்நூலுக்கு வழங்கியுள்ளது எனலாம்.

தமிழர்களின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பல நூறு புதினங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஆனால் கதை நிகழும் கால அடிப்படையில் புதினங்களை யாரும் வகைப்படுத்தவில்லை. இதை ஒரு பெருங் குறையாகவே நான் காண்கிறேன். வானவல்லி கி.மு. 175 இல் நிகழும் கதை என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆகவே வானவல்லியை முதல் தகவலாக இணைத்துக் கொண்டு புதினங்களை அவற்றின் கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சித்து வருகிறேன். இயன்ற நண்பர்கள் உதவுங்கள்.

'வானவல்லி' கி.மு 175 இல் வாழ்ந்த கரிகால் வளவன் என்னும் சோழனின் வரலாற்றை புதினமாகப் படைத்துள்ளார் வெற்றி. இது வெற்றியின் முதல் புத்தகம்- முதல் புதினம். ஆனால் ஏனோ தானோவென்று எழுதாமல் தேர்ந்த எழுத்தாளரைப் போன்று தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இப்புதினத்தை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 2500 பக்கங்களை அண்மித்த இப்புதினம் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது. இப்புதினத்தைப் பற்றி நண்பர் வெற்றி பின்வருமாறு கூறுகிறார்:

'தமிழில் இதுவரை எழுதப்படாத 2195 ( கி.மு 175 ) ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாலனின் வீர வரலாறு:

கரிகாலன் பிறப்பதற்கு முன்பே தந்தையையும் பிறந்தபோது தாயையும் வளரும்போது நாட்டையும் இழந்தவன். எதிரிகளால் சிறைவைக்கப்பட்டு உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்டவன். சோழ நாட்டைக் கைப்பற்ற வந்த சேரர், பாண்டியர் மற்றும் பதினோரு வேளிர்களையும் தனியொருவனாக எதிர்த்துநின்று போரில் தோற்கடித்து தனக்குரிய உறைந்தை ஆசனத்தை மீட்டவன். காவேரிக்குக் குறுக்கே பெரும் அணை எழுப்பியவன். 

தென்னகத்தில் எதிர்த்த அனைவரையும் தோற்கடித்து வடக்கு நோக்கிப் படையெடுத்து இமயத்தில் புலிக்கொடியை நாட்டி சரித்திரத்தில் 'தனக்கு ஒப்பாரும் இல்லை ; மிக்காரும் இல்லை' எனப் பெரும் புகழ் பெற்றவன் கரிகாலன்.

அத்தகைய கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு இப்புதினம்.'

'பொன்னியின் செல்வன்' புதினத்தைப் போன்றே சோழர்களின் வீர வரலாற்றை அழகுடன் எடுத்துரைத்திருக்கிறது 'வானவல்லி'. ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள் வாசிப்பை இடையூறு செய்கின்றன. தொடரும் வெளியீடுகளில் வெற்றி இதனைத் திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். காணாமல் போயிருந்த எனது புத்தக வாசிப்பை 'வானவல்லி' மீட்டெடுத்திருக்கிறது. 'வானவல்லி'க்கு நன்றிகள் பல. ஆனால் 'வானவல்லி'யை இலங்கைக்குத் தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இணையத்தில் பணம் செலுத்தி அவர்கள் அனுப்பாமல் மௌனம் காத்து பின் தமிழகத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு தருவித்து அதனை எனது உறவினர் மூலமாக பெற்று.... அடடடா..... ம்ம்... ஒரு வழியாக வானவல்லி என் கரம் சேர்ந்துவிட்டாள். 

சரித்திர நாவல்கள் அல்லது புதினங்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியப் பங்குள்ளவை. தமிழர்களின் கடந்தகால வரலாற்றை ஆய்வுக் கட்டுரைகளாக மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது கடினம். ஆனால் புதினங்களாகவோ கதைகளாகவோ மக்களிடம் எளிதில் கொண்டு செல்லலாம். எனவே சரித்திரப் புதினங்களை எழுதுவோர் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே எழுதத் துவங்க வேண்டும். வெற்றிவேல் அவர்களின் வானவல்லி தகுந்த ஆய்வுகளின் பின்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை வாசிப்பவர்கள் இலகுவில் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உரிய அடிக்குறிப்புகள் இடப்பட்டுள்ளன. தனது கருத்து மட்டுமே சரியானது என வாதிடாமல் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் அவற்றுக்கும் மதிப்பளித்து அடிக்குறிப்புகளிலும் அத்தியாயங்களிலும் இணைத்துள்ளார். 

வானவல்லியின் முதல் பாகத்தை இப்போதுதான் வாசித்து முடித்திருக்கிறேன். பல வாசகர்கள் நான்கு பாகங்களையும் வாசித்து முடித்துவிட்டு வென்வேல் சென்னி புதினத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனர். பல பக்கங்களிலும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன. இன்னுமொரு பொன்னியின் செல்வன் புதினமாக வானவல்லியைக் கொண்டாடுகிறார்கள். மன நிறைவுடன் மிக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல புதினத்தை வாசிக்கக் கிடைத்திருக்கிறது. வானவல்லிக்கு நன்றிகள். வானவல்லியைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். முதலாம் பாகத்தைப் பற்றிய முழுமையான வாசிப்பு அனுபவத்தை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்...!

Saturday, 12 November 2016

சிகரம் பாரதி 28 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நமது வலைத்தளம் 45000 பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனாலும் இலக்கங்கள் வெற்றிகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை.

இன்றும் உங்களுடன் ஒரு திரைப்படம் பற்றிப் பேசலாம் என்றிருக்கிறேன். என்ன அது? அது இணையம் தந்த இன்னுமோர் உபயம். 'காஷ்மோரா'!. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியான திரைப்படம். படம் ரசிக்கும் படியாக இல்லை. நல்ல படங்களில் நடித்து வந்த கார்த்திக்கு இப்போது என்ன ஆயிற்று என்று வினவத் தோன்றுகிறது. நல்லவேளை இந்தத் திரைப்படத்தையெல்லாம் திரையரங்கிற்கு சென்று பார்த்து என் காசைக் கரியாக்கிவிட வில்லை என்பதை எண்ணி நிம்மதி கொள்கிறேன். 

இனி வர இருக்கும் திரைப்படங்களில் சிங்கம் 3, பாகுபலி 2 போன்ற திரைப்படங்களே எனக்குள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளன. இத்திரைப்படங்களை நிச்சயம் திரையரங்கில் சென்று பார்ப்பேன்!


Thursday, 10 November 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல்- அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல். 

உன் பதில் மடல் கண்டேன். மகிழ்ச்சி. இல்லற வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் அடியெடுத்து வைத்துள்ளது குறித்து உனது வாழ்த்துக்களுக்கு நன்றி. உனது அறிவுரைகள் பெறுமதி மிக்கவை. சவால் மிகுந்த எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைக்க நம் குழந்தைகளுக்கு நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. பழைமையைக் கற்றுக் கொடுக்கவும் புதுமையை பழக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தையும் அதன் சவால்களையும் தைரியத்துடன் முகம் கொடுக்கக் கற்றுத்தர வேண்டும். புத்தகக் கல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அனுபவக் கல்வியே வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்த வேண்டும். மேலும் முக்கியமாக தமிழைக் கற்றுத்தர வேண்டும். நம்மில் பலர் மறந்துவிடும் முக்கியமான விடயம் இது. தமிழில் எழுத, பேச, வாசிக்க மட்டுமல்லாமல் தமிழனாகவே வாழவும் கற்றுத்தர வேண்டும். சுயமாக இயங்கவும் முடிவெடுக்கவும் கற்றுத்தர வேண்டும். ஆண் - பெண் உறவைக் கற்றுத்தர வேண்டும். காதலைக் கற்றுத்தர வேண்டும். மீண்டும் உனது அறிவுரைகளுக்கு நன்றி.

நம் நட்பு என்றென்றும் தொடர வேண்டும். நாலடியார் பாடலைப் போல இணைபிரியாதிருக்க வேண்டும் தோழனே! எழுத்துக்களின் தரம் மிக முக்கியமானது. மொழியின் வளர்ச்சியை அதுதான் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் போலியான எழுத்துக்கள் அதிகம் வலம் வருகின்றன. அதுதான் கவலையளிக்கிறது. சமூக வலைத்தளங்கள் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழை சீரழிப்பது பெரும் வேதனைக்குரியது. காலம் தான் காப்பாற்ற வேண்டும். 'வானவல்லி' வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. நான் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாசிக்கும் புத்தகம் இது. எல்லோரும் கட்டாயம் இப்புதினத்தை வாசிக்க வேண்டும். சரித்திர ஆதாரங்களுடன் எழுதியிருப்பது நல்லது. வென்வேல் சென்னியின் முதல் இரண்டு பாகங்களை 2017 இல் எதிர்பார்க்கிறேன். வென்வேல் சென்னி சிறப்புற அமையவும் வானவல்லியைப் போல சிக்கல்கள் இன்றி வெளிவரவும் வாழ்த்துகிறேன். நன்றி நண்பனே! வானவல்லி தொடர்பில் சிறப்புக் கட்டுரைத் தொடர் ஒன்றை விரைவில் எதிர்பார்க்கலாம். உனது தொடர் உற்சாகம் எனக்குள் புது சக்தியை உருவாக்கியிருக்கிறது. அதனால் தற்போது நிறைய எழுதவும் வாசிக்கவும் செய்கிறேன். நன்றிகள் பல.

உனது தொழில் சூழல் பற்றி கடந்த கடிதத்தில் விசாரித்திருந்தேன். பதில் இல்லை. ஏன்? வாசுகி என்ன சொல்கிறார்? அவரைப் பற்றியும் கொஞ்சம் கூறேன்! உனது இலட்சியம் என்ன? உனது வாழ்க்கையை நீ எதை நோக்கி வழிநடத்திச் செல்கிறாய்? உனது இலட்சியப் பாதையில் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறாய்? உன் இலட்சியத்திற்காக நீ சந்தித்துவரும் சவால்கள் என்ன?

இந்தியாவில் 2016.11.09 முதல் ரூ 500 மற்றும் 1000 ஆகியன செல்லாக் காசாக்கப்பட்டமை தொடர்பில் சாமானியனாக உன் கருத்து என்ன? கறுப்புப் பணத்தை இவ்வாறான நடவடிக்கைகளால் ஒழித்துவிட முடியுமா என்ன? உங்கள் மோடிஜி இன்னும் என்னவெல்லாம் பண்ணக் காத்திருக்கிறாரோ? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமை குறித்து உனது கருத்தென்ன?

மூன்றாவது கடிதமும் உன் கையில். இத்தனை கடிதங்களை வலையில் உனக்கு எழுதியது நானாகத்தான் இருப்பேன். என் கடிதம் கேள்விகளால் நிரம்பி வழிகிறது என நினைக்கிறேன். இன்னும் பலநூறு கடிதங்கள் நமக்குள் பரிமாறப்பட வேண்டும். நமக்குள் அத்தனை பேச வேண்டியிருக்கிறது. இக்கடிதத்தில் உரிமைப் பிரச்சினை ஏதும் இருக்காதென நம்புகிறேன். உன் பதில் கடிதம் கண்டதும் இன்னும் பேசலாம்.

நன்றி

இப்படிக்கு
உடன் பிறவா நண்பன்
சிகரம் பாரதி. 

Monday, 7 November 2016

சிகரம் பாரதி 27 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். விஜய் சேதுபதி மீதான எனது நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போல 'றெக்க' திரைப்படத்தையும் இணையத்தின் உபயத்தில் தரவிறக்கிப் பார்த்தாயிற்று. ஒரு வாரத்திற்கு முன்னால் இலங்கையின் உள்ளூர்த் தமிழ்த் தொலைகாட்சி ஒன்றில் 'றெக்க' திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டது என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தர விரும்புகிறேன். சிவகார்த்திகேயனைப் போலவே விஜய் சேதுபதியும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவன் கட்டளை'யும் 'றெக்க'யும் மிக அருமை. 'றெக்க'யை விட 'ஆண்டவன் கட்டளை' தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அருமையான கதையம்சம். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாறும் சாமானிய மக்களே கதைக்கரு. காதலுக்கு அதிக இடம் கொடுத்துக் கொண்டிராமல் இயக்குநர் திரைக்கதையை வடிவமைத்துள்ளமை சிறப்பாகும். 'றெக்க' வழமையான அதே பழைய காதல் - மோதல் கதைதான் என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. 'ரெமோ'வுக்குப் பிறகு இயக்குநர் - நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம். 'ரெமோ'வை விட இதில் நடிக்க அதிக அவகாசம் கிடைத்திருக்கிறது இவருக்கு. 

விஜய் சேதுபதிக்கு எல்லாக் கதாபாத்திரங்களுமே அருமையாகப் பொருந்திப் போகின்றன. 38 வயதாகும் இவர் இதுவரை 30 படங்கள் அளவில் நடித்திருக்கிறார். எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான திரைக்கதைகள். எந்த வகையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி தன்னை அர்ப்பணித்து நடிப்பை வெளிப்படுத்துவதே இவரின் வெற்றிக்குக் காரணம். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி! 

Saturday, 5 November 2016

விதியை நம்புகிறீர்களா?

'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 

அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு  விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்?

மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா? அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன? நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்!

பதிவின் தலைப்பு :  விதியை நம்புகிறீர்களா?
                                          தூறல்  - 02                
வலைப்பதிவு           : தூறல்கள்
வெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.

Friday, 4 November 2016

சிகரம் பாரதி 26 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று எனக்கு வாட்ஸாப்பில் படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு ஒரு கதை வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

தினமும் நான் போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். அதில் "என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை. அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"

அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில்  கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா. என் காலடி சத்தம் கேட்டதும் 'யாருப்பா நீ?' என வினவினார்.  'அம்மா நான் இந்த வழியாக வந்தேன். எனக்கு 50 ரூபா கீழே கிடந்து கிடைத்தது. அதை உங்களிடம் தரலாம் என்று வந்தேன்' என்று கூறினேன். நான் கூறியதைக் கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 'தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது' என்று சொன்னார். நான் 'பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க' என்று சொல்லி கொடுத்துவிட்டு திரும்பினேன்.  'தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை மறக்காமல் கிழித்து போட்டு விடு' என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தை கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறிக்  கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்துக் கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். "அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?"

மனித நேயம் சாகவில்லை.

Thursday, 3 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம் 01 ]

'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்... 
நல்ல நாளில்....
கண்ணன் மணித் தோளில் ....
பூமாலை நான் சூடுவேன்....
பாமாலை நான் பாடுவேன்... 
என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை. 

இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை. 

சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத நட்பு. எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வந்திருந்தாலும் சில மணித்தியாலங்களுக்கு மேல் அவை நீடிப்பதில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இன்றும் நான் நன்றாக வாழ்வதற்கு சுசிதான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. பாடல்களுக்கு நடுவில் கைப்பேசி என்னை அழைத்தது. அப்பாதான்."சொல்லுங்கப்பா"

"ஜெய்... இன்னும் புறப்படலையா?"

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" 

"..................................."

"சரி விடு. நா பாத்துக்குறேன்...."

"பரவாயில்லப்பா.. நானும் வாறேன்..."

"சரி ஜெய்" 

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?"

"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட? அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...?"

"ம்....... நா எதுக்கு........"

"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப்  போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே."

"சரிடா."

"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்." பதிலுக்கு தலையை மட்டும்  ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...

Wednesday, 2 November 2016

சிகரம் பாரதி 25 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று காலை எட்டு மணிக்குத் துவங்கிய வேலை இரவு எட்டு மணிக்குத் தான் முடிவடைந்தது. இருப்புக் கணக்கெடுப்பு எதிர்பார்த்தது போலவே காலை துவங்கி மதியம் தான் நிறைவு பெற்றது. பணி முடிந்து இரவு வீடு திரும்புகையில் கடும் மழை. வெப்பம் கொளுத்தும் கொழும்பில் குளிரில் நடுங்கிய படியே வீடு வந்து சேர்ந்தேன். இடி மின்னலுடன் பெய்த கடும் மழை இரண்டு மணிநேரத்தில் அடங்கிப் போனது. 

கொழும்பைப் பொறுத்தவரை மழை அவ்வளவாகப் பெய்யாது. சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குக் கூட மழை வராது. அப்படியே பெய்தாலும் சில நிமிடங்கள் அல்லது ஓரிரு மணித்தியாலங்களில் நின்று விடும். வெயில் நேரங்களில் வெப்பம் பாடாய்ப் படுத்தும். எனது மண் மலையகத்துக்கு சென்றால் குளிர் தாங்க முடியாது. கொழும்பில் இரவு 12 மணிக்குக் கூட எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடும் நான் ஊருக்குப் போனால் மாலை 6 மணிக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. காரணம் குளிர். 

இந்தச் சிறு தீவுக்குள்ளேயே எப்படி இத்தனை காலநிலை வேறுபாடுகள்? எல்லாம் இயற்கையின் திருவிளையாடல்கள் அல்லவா? இப்போது எனக்கு உறக்கம் வந்துவிட்டது. நாம் மீண்டும் சந்திக்கலாம்!

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts