Thursday, 10 November 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல்- அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல். 

உன் பதில் மடல் கண்டேன். மகிழ்ச்சி. இல்லற வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் அடியெடுத்து வைத்துள்ளது குறித்து உனது வாழ்த்துக்களுக்கு நன்றி. உனது அறிவுரைகள் பெறுமதி மிக்கவை. சவால் மிகுந்த எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைக்க நம் குழந்தைகளுக்கு நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. பழைமையைக் கற்றுக் கொடுக்கவும் புதுமையை பழக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தையும் அதன் சவால்களையும் தைரியத்துடன் முகம் கொடுக்கக் கற்றுத்தர வேண்டும். புத்தகக் கல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அனுபவக் கல்வியே வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்த வேண்டும். மேலும் முக்கியமாக தமிழைக் கற்றுத்தர வேண்டும். நம்மில் பலர் மறந்துவிடும் முக்கியமான விடயம் இது. தமிழில் எழுத, பேச, வாசிக்க மட்டுமல்லாமல் தமிழனாகவே வாழவும் கற்றுத்தர வேண்டும். சுயமாக இயங்கவும் முடிவெடுக்கவும் கற்றுத்தர வேண்டும். ஆண் - பெண் உறவைக் கற்றுத்தர வேண்டும். காதலைக் கற்றுத்தர வேண்டும். மீண்டும் உனது அறிவுரைகளுக்கு நன்றி.

நம் நட்பு என்றென்றும் தொடர வேண்டும். நாலடியார் பாடலைப் போல இணைபிரியாதிருக்க வேண்டும் தோழனே! எழுத்துக்களின் தரம் மிக முக்கியமானது. மொழியின் வளர்ச்சியை அதுதான் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் போலியான எழுத்துக்கள் அதிகம் வலம் வருகின்றன. அதுதான் கவலையளிக்கிறது. சமூக வலைத்தளங்கள் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழை சீரழிப்பது பெரும் வேதனைக்குரியது. காலம் தான் காப்பாற்ற வேண்டும். 'வானவல்லி' வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. நான் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாசிக்கும் புத்தகம் இது. எல்லோரும் கட்டாயம் இப்புதினத்தை வாசிக்க வேண்டும். சரித்திர ஆதாரங்களுடன் எழுதியிருப்பது நல்லது. வென்வேல் சென்னியின் முதல் இரண்டு பாகங்களை 2017 இல் எதிர்பார்க்கிறேன். வென்வேல் சென்னி சிறப்புற அமையவும் வானவல்லியைப் போல சிக்கல்கள் இன்றி வெளிவரவும் வாழ்த்துகிறேன். நன்றி நண்பனே! வானவல்லி தொடர்பில் சிறப்புக் கட்டுரைத் தொடர் ஒன்றை விரைவில் எதிர்பார்க்கலாம். உனது தொடர் உற்சாகம் எனக்குள் புது சக்தியை உருவாக்கியிருக்கிறது. அதனால் தற்போது நிறைய எழுதவும் வாசிக்கவும் செய்கிறேன். நன்றிகள் பல.

உனது தொழில் சூழல் பற்றி கடந்த கடிதத்தில் விசாரித்திருந்தேன். பதில் இல்லை. ஏன்? வாசுகி என்ன சொல்கிறார்? அவரைப் பற்றியும் கொஞ்சம் கூறேன்! உனது இலட்சியம் என்ன? உனது வாழ்க்கையை நீ எதை நோக்கி வழிநடத்திச் செல்கிறாய்? உனது இலட்சியப் பாதையில் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறாய்? உன் இலட்சியத்திற்காக நீ சந்தித்துவரும் சவால்கள் என்ன?

இந்தியாவில் 2016.11.09 முதல் ரூ 500 மற்றும் 1000 ஆகியன செல்லாக் காசாக்கப்பட்டமை தொடர்பில் சாமானியனாக உன் கருத்து என்ன? கறுப்புப் பணத்தை இவ்வாறான நடவடிக்கைகளால் ஒழித்துவிட முடியுமா என்ன? உங்கள் மோடிஜி இன்னும் என்னவெல்லாம் பண்ணக் காத்திருக்கிறாரோ? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமை குறித்து உனது கருத்தென்ன?

மூன்றாவது கடிதமும் உன் கையில். இத்தனை கடிதங்களை வலையில் உனக்கு எழுதியது நானாகத்தான் இருப்பேன். என் கடிதம் கேள்விகளால் நிரம்பி வழிகிறது என நினைக்கிறேன். இன்னும் பலநூறு கடிதங்கள் நமக்குள் பரிமாறப்பட வேண்டும். நமக்குள் அத்தனை பேச வேண்டியிருக்கிறது. இக்கடிதத்தில் உரிமைப் பிரச்சினை ஏதும் இருக்காதென நம்புகிறேன். உன் பதில் கடிதம் கண்டதும் இன்னும் பேசலாம்.

நன்றி

இப்படிக்கு
உடன் பிறவா நண்பன்
சிகரம் பாரதி. 

1 comment:

  1. அவருடைய தளத்தில் இந்தப் பதிவின் இணைப்பை கொடுத்து விடுங்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...