Wednesday, 16 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம் 01 ]

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.

என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.

இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது."ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்துவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்த சமயம் தற்செயலாய் நிலைக்கண்ணாடி மீது என் கவனம் விழ அதில் என்னைப் பார்த்த நான் ஒரு விநாடி சிலையாய் நின்றுவிட்டேன். அந்த விநாடியில் தோன்றி மறைந்த பழைய நினைவுகள் தான் அதற்குக் காரணம். ஒருமுறை உறவினர் திருமண வைபவம் ஒன்றுக்கு நான் பட்டுவேட்டி, சட்டை சகிதம் சென்றிருக்க அங்கு திவ்யாவும் வந்திருந்தாள். 

அப்போது என்னைப் பார்த்த மாத்திரத்தில் "மாமோய்... செமயா இருக்கீங்க... ம்... ம்... கலக்குங்க... கலக்குங்க..." என்றாள். அவள் சொன்னதும் எனக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் வித்தியாசமாகச் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அன்று எடுத்த புகைப்படத்தை இன்று பார்த்தாலும் அவளது அந்த வசனம் பசுமையாய் என் காதுகளில் கேட்கும். 

ஆமா... இந்த 'திவ்யா' யாரு? 'திவ்யா... திவ்யா... என்...' தெரியவில்லை. 'என் காதலி' என்று சொல்வதா அல்லது 'என் முன்னாள் காதலி' என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது நிச்சயதார்த்தத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பது திவ்யாவைப் பெண் பார்க்க இல்லை என்பது மட்டுமே எனக்குத் தெரியும். 

அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் வெளியே வந்தேன். சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...