Saturday, 26 November 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்தம் 02 ]

1.2 தோழிகளின் சந்திப்பு 

"திவ்யா...."

"...................."

"அடியேய் திவ்யா...."

கை அனிச்சையாய் தேநீரை வாய்க்குள் ஊற்ற வாயும் அதே போல் தேநீரைப் பருக மனம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது யாரோ என் தோளைப் பிடித்து உலுக்குவதைப் போலிருக்க நினைவுகளில் இருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்தேன். தோழி நந்தினி சிரித்தபடி நின்றிருந்தாள். 

"என்னடி யோசனை?"

"ஒன்னுமில்ல"

"ஒன்னுமில்லாமலா கூப்பிடறது கூட வெளங்காம உட்கார்ந்திருக்க?"

"........................."

"நா சொல்லவா?"

"தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேக்குற?"

"இப்படியே எப்பப் பாத்தாலும் அதப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி?"

"மறந்துரச் சொல்றியா?"

"அப்படி இல்ல....."

"அப்போ நெனைச்சுக்கிட்டு தானே இருக்கணும்?"

"....................."

என் கேள்விக்கு நந்தினியால் மௌனத்தையே பதிலாய் அளிக்க முடிந்தது. என் மனம் படும் பாட்டை அவளும் அறிந்திருந்ததினால் அந்த மாடிக் குடியிருப்பின் இரண்டாம் தளத்திலுள்ள எனது வீட்டின் பலகணியில் என் அருகில் நின்றபடியே கையில் தேநீருடன் தானும் சிந்திக்கத் தொடங்கினாள். 

நந்தினியின் அத்தை மகளான நான் சிறு வயது முதலே அவளை அறிவேன். எனக்கு மிகவும் நெருக்கமான தோழிகளுள் நந்தினியும் ஒருத்தி. ஆனால் நந்தினியை என் நண்பர்கள் வட்டாரத்தில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் என்னோடு ஒன்றாகக் கல்வி கற்றதில்லை, என் நண்பர்களுடன் அவளை எங்கும் அழைத்துச் சென்றதுமில்லை. பள்ளி விடுமுறைக் காலங்களில் நந்தினியின் வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு வருவேன். மற்றபடி வீட்டுத் தொலைபேசியிலேயே தகவல்களைப் பரிமாறிக் கொள்வேன். இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்து வைத்திருந்தோம். 

நாளை நந்தினியைப் பெண் பார்க்க வருகிறார்கள். பெண்ணைப் பிடித்திருந்தால் நாளையே நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிடும். மாப்பிள்ளை யாரென்று தெரியவில்லை. நந்தினியின் அப்பாவின் நட்பு வட்டாரத்தில் ஒருவரின் குடும்பம் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிந்திருந்தது. பெண் பார்க்க வருவதால் என்னை அழைத்துப் போகவே நந்தினி வந்திருந்தாள். சில நிமிடங்களிலேயே அவரவர் சிந்தனைகளில் இருந்து விடுபட்டோம். பின்னர் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினியுடன் அவள் இல்லம் நோக்கி விரைந்தேன். 

கார் நந்தினியின் வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. கார் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க இருவருக்கிடையில் இன்னமும் மௌனம் நிலைகொண்டிருந்தது. காரின் ஜன்னலினூடே தெரிந்த புற உலகை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தோம்.  நந்தினியே முதலில் மௌனத்தைக் கலைத்தாள்.

"திவ்யா..."

நான் பதிலேதும் கூறாமல் 'என்ன?' என்று வினவுவதைப் போல அவளது முகத்தை நோக்கினேன். 

"இப்படிப் பேசாமலே வந்தா என்ன அர்த்தம்?"

"நா யோசிக்கிறேன்னு அர்த்தம்"

"சமாளிக்கிறீங்களோ?"

"இல்ல நந்தினி. உண்மையைத்தான் சொல்றேன்"

"இப்படி எப்பப் பாத்தாலும் யோசிச்சிக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கு?"

"எல்லாம் நல்லா இருந்தா நா ஏன் நந்தினி யோசிக்கப்போறேன்?'

"புத்திசாலிடி நீ"

"உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி"

"இந்த யோசனைக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா திவ்யா?"

"இருக்கு. கூடிய சீக்கிரம்"

"என்னடி புதிர் போடுற?"

"புதிர் இல்ல, நம்பிக்கை"

"............"

"என் காதல் மேல நா வச்சிருக்கிற நம்பிக்கை"

நான் என்னதான் காதலின் மீது அபாரமான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடையத் தொடங்கியிருந்தது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்பதை யாரறிவார்? சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதைப் போல நானும் காலத்தின் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பயணித்த காரும் ஓட்டுநரின் திறமையினால் கணிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நந்தினியின் வீட்டை வந்தடைந்திருந்தோம். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...