சிகரம் பாரதி 27 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். விஜய் சேதுபதி மீதான எனது நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போல 'றெக்க' திரைப்படத்தையும் இணையத்தின் உபயத்தில் தரவிறக்கிப் பார்த்தாயிற்று. ஒரு வாரத்திற்கு முன்னால் இலங்கையின் உள்ளூர்த் தமிழ்த் தொலைகாட்சி ஒன்றில் 'றெக்க' திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டது என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தர விரும்புகிறேன். சிவகார்த்திகேயனைப் போலவே விஜய் சேதுபதியும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 



'ஆண்டவன் கட்டளை'யும் 'றெக்க'யும் மிக அருமை. 'றெக்க'யை விட 'ஆண்டவன் கட்டளை' தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அருமையான கதையம்சம். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாறும் சாமானிய மக்களே கதைக்கரு. காதலுக்கு அதிக இடம் கொடுத்துக் கொண்டிராமல் இயக்குநர் திரைக்கதையை வடிவமைத்துள்ளமை சிறப்பாகும். 'றெக்க' வழமையான அதே பழைய காதல் - மோதல் கதைதான் என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. 'ரெமோ'வுக்குப் பிறகு இயக்குநர் - நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம். 'ரெமோ'வை விட இதில் நடிக்க அதிக அவகாசம் கிடைத்திருக்கிறது இவருக்கு. 

விஜய் சேதுபதிக்கு எல்லாக் கதாபாத்திரங்களுமே அருமையாகப் பொருந்திப் போகின்றன. 38 வயதாகும் இவர் இதுவரை 30 படங்கள் அளவில் நடித்திருக்கிறார். எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான திரைக்கதைகள். எந்த வகையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி தன்னை அர்ப்பணித்து நடிப்பை வெளிப்படுத்துவதே இவரின் வெற்றிக்குக் காரணம். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி! 

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்