Thursday, 24 May 2012

2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01

                              இந்த இடுகைக்கு செல்லும் முன்னர் வாசகர்கள் தயவு செய்து எனது முன்னைய வலைப்பதிவான 'தூறல்கள்' வலைப்பதிவிற்கு சென்று உலக அழிவு தொடர்பில் நான் ஏற்கனவே இட்ட இரு இடுகைகளையும் வாசித்துக் கொள்ளவும்.

இடுகை - 01

இடுகை - 02
                                                             

      arvloshan.com

12. 2012-ல் உலகம் அழியுமா?
      envazhi.com

13. 2012 இல் அழியுமா உலகம்?
      panncom.netஉயிர்மை என்னும் இணையத்தள சஞ்சிகையின் உயிரோசை பக்கத்தில் '2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்கிற தலைப்பிலான தொடர் கட்டுரையின் தொகுப்பு உங்களுக்காக இதோ.

8. பகுதி - 8
9. பகுதி - 9
10.பகுதி - 10
11.பகுதி - 11
12.பகுதி - 12
13.பகுதி - 13
14.பகுதி - 14
15.பகுதி - 15
16.பகுதி - 16
17.பகுதி - 17
18.பகுதி - 18
19.பகுதி - 19
20.பகுதி - 20


'உலக அழிவு' தொடர்பில் இணையத்தில் தேட ஆரம்பித்த பின்னர் தான் இத்தனை தகவல்களா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்னால் முடிந்தவரை தேடி தகவல் மூலங்களை பட்டியல் படுத்தியிருக்கின்றேன். இவற்றை வாசித்து உங்கள் மூளையை பட்டை தீட்டி வையுங்கள். இந்தப் பதிவின் தொடர்ச்சியுடன் மீண்டும் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்.......................!


Wednesday, 16 May 2012

வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு....

 
                         இது எனது 16வது திரைப்படம். (என்னாது? நீங்க படமெல்லாம் எடுக்குறீங்களா சார்? - இது என்ன உங்க புதுப் பட தலைப்பா? - அப்படின்னெல்லாம் அவசரப்பட்டு கேள்வி கேட்கக் கூடாது. அதாவது நான் திரையரங்கில் பார்க்கும் 16வது படம்னு சொல்ல வந்தேன்.) சினிசிட்டி திரையரங்கு - மருதானை , கொழும்பு -10. நுழைவுச்சீட்டின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. (எந்த விலைதான் கூடாமல் இருக்கிறது?) அரங்கம் நிறைந்த காட்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். முன்வரிசை 
ஆசனங்கள் அப்படியே கிடந்தன. படம் வந்து ஒரு  மாசமாயிருச்சில்ல? ( நான் படம் பார்த்தது 2012/05/13 - ஞாயிற்றுக் கிழமை - மாலை 06:30 மணி )

                                        இப்ப எந்த படத்தைப் பத்தி பேசப் போறேன்னு தலைப்பை
வச்சே நீங்க புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பத்தி தான் பேசப் போறேன்.

 கதையே இல்லாமல்
 வெற்றி கரமாக ஓடிய திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. வலுவான திரைக்கதைப் பின்னணி ஏதும் இதற்கு இல்லை.
நகைச்சுவைத்  திரைப்படம் என்றாலும் கூட திரைக்கதை மனதில் ஓட்ட வேண்டும். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சற்று ஏமாற்றம் தந்ததாகவே உணர முடிகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை. கதாநாயகன் கதாநாயகியிடம்
( + பார்க்கிற எல்லாப் பெண்களிடமும் ) உருகி 'வழியும்' காட்சிகள் தான் இருக்கின்றன. 'வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு' பாடலைத் தவிர வேறு எந்தப் பாடலுமே கதையுடனோ மனதுடனோ ஒட்டவே
இல்லை.


                  சினேகா, ஆர்யா இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தங்கள் பங்களிப்பை இருவரும் சிறப்பாகவே வழங்கியிருக்கிறார்கள். சாமியார் நகைச்சுவைக் காட்சி, விமானத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி, இறுதிப் பகுதியில் உதயநிதியும் சந்தானமும் பட்டாம் பூச்சி கதை சொல்லும் காட்சி ஆகியன வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. பார்த்தாவினால் தான்
(சந்தானம்) படமே ஓடியது என்று சொன்னால் கூட தவறே இல்லை. கலகலப்பு @ மசாலா cafe என்கிற சுந்தர் சி.யின் புத்தம் புதிய திரைப்படமொன்றிலும் சந்தானம் கலக்கியிருப்பதாக அறிந்தேன். இப்போது 'சந்தான திசை' நடக்கிறது போலும்.
                                                                               

                   பாடல்கள் விடயத்தில் என்னைப் பொறுத்தவரை
ஒரு பாடலைத் தவிர எல்லாமே சொதப்பல் தான். அது 'வேணா மச்சான்' பாடல்தான்.
படம் வருவதற்கு முன்பே பலராலும்
முணுமுணுக்கப் பட்ட ஒரு பாடல்.
இப்பாடலைக் கேட்கும் போது 'கழுகு' திரைப்படத்தின்
'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' பாடலும்
நினைவுக்கு வந்து போகிறது.

                       மீரா (ஹன்சிகா) அழகுப் பதுமையாக படம்
முழுவதும்  வலம் வருகிறார். சட்டென்று உணர்ச்சி வசப்படும் கதாபாத்திரம் இவருக்கு. நன்றாகவே நடித்திருக்கிறார். சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. சரவணனின் (உதயநிதி) அம்மா - அப்பா கதா பாத்திரம் தொடர்பிலும் சொல்லியே ஆக வேண்டும். சரவணனின் அம்மா - அப்பா இருவரும் 20 வருடமாக பேசிக் கொள்வதே இல்லையாம். காரணம் சரவணனின் அம்மா தான் ஒரு பட்டதாரி என்று சொல்லி கல்யாணம் செய்து கொண்டது தான். அதனால் அம்மா என்றைக்கு பட்டம் வாங்குகிறாரோ அன்று தான் அவருடன் பேசுவது என்று வைராக்கியம் பூண்டிருக்கிறார் அப்பா. இதில் எந்தளவு யதார்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கணவன் - மனைவி எந்த வகையான ஏற்றத் தாழ்வும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற கருத்தை சமூகத்துக்கு சொல்லிச் செல்கிறது.பெத்தவங்க இப்படி இருந்தா புள்ளைங்க சரவணன் (உதயநிதி) மாதிரி  தறுதலைகளாகத்  தானே வளரும்?

               
                  'தயாரிப்பாளர் உதய நிதி' , சந்தானம் , நகைச்சுவைத் திரைப்படம் போன்ற வாசகங்கள் ரசிகர்களைத் திரையரங்கிற்கு ஈர்த்திருந்தன. ஆனால் அவர்கள் எதிர் பார்த்த திருப்தியை 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வழங்கியதா என்பதே எமது கேள்வி. எனக்கும் என்னுடன் படம் பார்க்க வந்திருந்த 'ஹரி' என்கிற நண்பருக்கும் 'திருப்தி போதாது' என்ற பதிலே தேர்வாக அமைகிறது. 'பிரியா' என்கிற தோழி ஒருவர் உதயநிதி தன் பங்கை சிறப்பாகவே செய்திருப்பதாகவும் படம் ரசிக்கும் படியாக அமைந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் கொடுத்த பணத்திற்குரிய பெறுமதி படத்தில் கிட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

                            படத்தில் என்ன தான் குறைகள் இருந்தாலும் படம் நன்றாகவே ஓடியிருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை செலுத்தி இருக்க வேண்டும் என்பதே எமது கருத்தாக அமைகிறது. உதயநிதி இனி தொடர்ந்து நடிப்பாரா என்று தெரியவில்லை. நடித்தால் எமது (ரசிகர்களின்) ஆலோசனையையும் கருத்திற் கொள்வார் என நம்புகிறோம். ( நா போன் பண்ணி சொன்னேன். அதுக்கு அவுரு ஓகே ஓகே -  னுசொன்னாரு.)

'ஒரு கல் ஒரு கண்ணாடி' - 'சிகரம்' தரப்படுத்தலில் - " பார்க்கலாம்".

'சிகரம்' தரப்படுத்தல் முறை.
* படு மோசம்
* மோசம்
* பரவாயில்லை
* பார்க்கலாம்
* நன்று
* மிக நன்று
* 'சிகரம்' விருது


Friday, 11 May 2012

உங்கள் உள்ளம் திறந்து நண்பனிடம் சொல்லுங்கள்

          


                          இலங்கை மக்களின் மனங் கவர்ந்த "வெற்றி" வானொலியில் திங்கள் - வெள்ளி இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிவரும்'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி பற்றி 
தான் இந்தப் பதிவு பேசப் போகிறது. 
உங்கள் மனதில் கஷ்டமா? துக்கம் தாளாமல் அவதிப் படுகிறீர்களா?
 என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு நல்ல நண்பன் இல்லையே என்று 
கவலைப் படுகிறீர்களா? உடனே 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சிக்கு
அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

                           உங்கள் சோகத்தை முழுமையாக, சரியாக பகிர்ந்து கொள்வதற்கு இது  மிகச்சிறந்ததொரு  களமாகத் திகழ்கிறது. ஏனைய வானொலிகளைப் போல 
ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் துயரங்களை அடக்க வேண்டிய
 அவசியமில்லை. மனம் திறந்து என்னவெல்லாம் 
ஹிஷாம்
 பேச நினைக்கிறீர்களோ அத்தனையையும் பேச 
'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி மிகப் 
பொருத்தமானது. மிக நீண்ட காலமாக ஏராளமான 
நண்பர்கள் தங்கள் மனதை அடைத்துக் கொண்டிருந்த 
துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள்.
நிகழ்ச்சியைக் கேட்டாலோ , தொடர்பு கொண்டு 
உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொண்டாலோ 
உங்களுக்கும் நிச்சயம் ஆறுதலும் 
தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்பது உறுதி. 

            தொலைபேசி மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்களைப் பற்றிய விபரங்களை "வெற்றி" வானொலிக்கு
வழங்கிய பின்னர் அவர்களே உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள்
சோகங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வானொலி வரலாற்றில் இதுவரை எந்தவொரு
 வானொலியும் இப்படியொரு முயற்சியை 
மேற்கொண்டதில்லை என்று கூறும் அளவுக்கு 
இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
தற்போது 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியை
இணையத்தளத்தில் podcasting வடிவில் மீண்டும்
கேட்கவும் , குறித்த தளத்திலேயே எழுத்து மூலம்
உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளவும்  
வழி  சமைக்கப் பட்டிருக்கிறது.

                  'ஹிஷாம் முஹமட்' எனும் இளம் அறிவிப்பாளனுக்குள் இத்தனை 
ஆளுமைகளா என்று ஆச்சரியப்பட வைக்கிறது இந்நிகழ்ச்சி. 
சோகங்களை              
பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கு இவர் 
ஆறுதலும் அறிவுரையும் சொல்லும் விதம் அலாதியானது.  
"வெற்றி" வானொலியின் படைப்புகளுக்கெல்லாம்
மகுடம் சூட்டினாற் போல  இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மேலும் வெள்ளி இரவு சிறப்பு  'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியைப்
பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.


                       வெள்ளி இரவு சிறப்பு நிகழ்ச்சியில் நண்பர்களின் மனதுக்கு தைரியமும் 
ஆறுதலும் மன உறுதியும் வழங்கும் வகையில் சுகி சிவம் போன்றோரின் 
சுய முன்னேற்ற உரைகள் ஒலிபரப்பப் படுகின்றன.
இவ்வாறான உரைகளைக் கேட்கும் போது மனம் சாதிக்க வேண்டும் என்று
உறுதி கொள்கிறது. கவலைகளை மறந்து புத்துணர்ச்சி கொள்கிறது. இப்படி
 ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்குவதற்காக "வெற்றி" வானொலிக்கும்
அறிவிப்பாளர் ஹிஷாமுக்கும் எமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
உலகளாவிய தமிழ் வானொலி ரசிகர்களே, நீங்களும் "வெற்றி" வானொலியின்
'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சியை கேட்டு ரசிக்க வேண்டும். ரசிப்பதோடு
 நில்லாது உங்கள் சோகங்களையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சிக்கு
மேலும் வலு சேர்க்க வேண்டும் என மனதார கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளம் திறந்து 'நண்பனிடம் சொல்லுங்கள்'.

வானொலியில் கேட்க : கொழும்பு 99 .6 FM
                                                  ஊவா / தென் கிழக்கு 93 .6 FM
                                                  நாடு முழுவதும் 106 .7 FM
                                                  கண்டி / யாழ்ப்பாணம் 101.5 FM
                                                  வடக்கு / கிழக்கு 93.9 FM
இணையத்தில் கேட்க : "வெற்றி" இணையத்தளம்
PODCASTING இல் கேட்க : 'நண்பனிடம் சொல்லுங்கள்'
தொடர்பு கொள்ள : தொ.பே. +94112304343
                                        குறுஞ்செய்தி : +94718996996


                                            Monday, 7 May 2012

துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!


                                       

பெண்                :துக்கமென்ன துயரமென்ன?
                             எங்கிட்ட சொல்லு சொல்லு ....!
                                                           (துக்கமென்ன)
                             கஷ்டமிந்த வாழ்க்கையில
                             யாருக்கிங்கு இல்ல... இல்ல..?


                              ஒனக்கென நானிருக்க
                              எனக்கென நீயிருக்க
                               உள்ளுக்குள்ள வச்சு வெதும்பிட
                                வேணா எம் மாமா... எம் மாமா....
                                                            (துக்கமென்ன)

ஆண்                  : சொந்தம் விட்டு மந்தையில
                              நின்ன கத சொல்லட்டுமா?
                              பெத்தவள வேதனையில்
                              விட்ட கத சொல்லட்டுமா?

பெண்                  : அப்பஞ் சொல்லு ஆறுதலு
                                அத்தனையும் நாந் தருவேன்
                                பச்ச மண்ணா நீயழுதா
                               தாய் மடியா நானிருப்பேன்


ஆண்                  : தூக்கி என்ன வளத்த சொந்தம்
                               தூரமென ஆனதம்மா

பெண்                  : தொப்புள் கொடி அத்தத தான்
                                சொந்தம் விட்டுப் போயிடுமா?


ஆண்                   : ஏனிந்த பாடு?
                                 தாங்காது கூடு


பெண்                  :காலம் இனி மாறும் எம் மாமா
                                                                  (துக்கமென்ன)
                                                                  (ஒனக்கென)
                                                                  (துக்கமென்ன)

 ஆண்                    : காகிதத்தில் கப்பல் கட்டி
                                   மண் தரையில் விட்டுப் புட்டேன்
                                  காவித்துணி வேசமுன்னு
                                  கேலி செய்யக் கேட்டுக்கிட்டேன்


பெண்                   : நரம்பில்லா நாக்குக்கெல்லாம்
                                 நல்ல வார்த்த வந்திடுமா?
                                 பேசிப்புட்டு போன சனம்
                                 வாசல் வர வந்திடுமா?

ஆண்                    : சின்னப்புள்ள வெள்ளாம
                                  வீடு வந்து சேர்ந்ததில்ல

பெண்                   : கடுகது சிறுத்தாலும்
                                 காரமது போவதில்ல

ஆண்                     : வேணாண்டி வெளக்கம்
                                  இது தானே தொடக்கம்
                                  ஒளி வீசும்  எதிர்காலம் உருவாகும்
                
                                  துக்கம் என்ன துயரம் என்ன
                                  நமக்கது இல்ல இல்ல...
                                 கஷ்டமுன்னு வாழ்க்கையில
                                  என்றும் வரப் போவதில்ல

பெண்                     :  ஒனக்கென நானிருக்க 
                                    எனக்கென நீயிருக்க
                                    கொஞ்சிக் கொஞ்சிப்
                                    பேசி மகிழ்ந்திடலாமா
                                   எம் மாமா .. எம் மாமா...

ஆண்                      :  துக்கம் என்ன துயரம் என்ன 
                                  நமக்கது இல்ல இல்ல...
                                 கஷ்டமுன்னு வாழ்க்கையில
                                  என்றும் வரப் போவதில்ல
                                              ********
திரைப்படம்        : மயிலு
இயக்குனர்          : ஜீவன்
 இசை                    : இசை ஞானி இளைய ராஜா
நடிப்பு                    : ஸ்ரீ , ஷம்மு
தயாரிப்பு              : பிரகாஷ் ராஜ்
பாடியவர்கள்      : ரீட்டா , ஸ்ரீ ராம் பார்த்த சாரதி
                                      (துக்கமென்ன துயரமென்ன)
வரிகள்                   : ஜீவன்
பாடலை கேட்க : youtube
பாடலை தரவிறக்க:  Tamilwire
                                            Beemp3

                                                                                                                                                            இப் பாடலைக் கேட்கும் போதே மனதுக்கு இதமாகவும் இனிமையாகவும்  இருக்கின்றது. வரிகளும் குரலும் அருமை. இசைஞானி இளைய ராஜாவின் இசை பாடலை மேலும் மெருகூட்டுகிறது. இசைஞானியின் பாடல் வரிசையில் இது   மேலும் ஒரு மகுடம் சூட்டினாற் போல அமைந்திருக்கிறது. 'மயிலு' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பில் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள
முடியவில்லை. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள பிரகாஷ் ராஜின் தயாரிப்பில்
இத்திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீங்களும் ஒரு தடவை இப் பாடலை கேட்டுத் தான் பாருங்களேன்!
Sunday, 6 May 2012

எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவாரோ?

                          இலங்கை மக்கள் தினசரி காலை எழுந்ததும் பத்திரிகையில் எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, இன்று என்ன பொருளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது என்று தான் தேடுகிறார்கள். திரை விமர்சனம் நிகழ்ச்சியில் 'இந்த வார புது வரவு' என்று அறிவிப்பதைப் போல இனி செய்திகளிலும் 'இந்த வார விலை அதிகரிப்பு' என்று அறிவிக்கும் நிலை தான் உருவாகப் போகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் வேகத்திற்கு  உழைக்கும்   மக்களின் வேதனங்கள் உயர்த்தப் படுவதில்லை என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. தற்போது வலைப் பதிவுகளிலும் சரி, இலங்கை மக்களின் மத்தியிலும் சரி பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் தான் இந்த விலை அதிகரிப்பு.

                           கடந்த வெள்ளிக் கிழமை (மே - 04) சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. 12.5 கி.கி எடை கொண்ட சமையல் எரிவாயு 350 ரூபாவினாலும் 1 கி.கி பால் மாவின் விலை 163 ரூபாவினாலும் சீமெந்து மூட்டை (50 கி.கி) ஒன்றின் விலை 70 ரூபாவினாலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேற்படி விலை அதிகரிப்பின் பிரகாரம் 1 கி.கி பால்மாவின் உச்ச பட்ச விலை 810 ரூபாவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

                         ஏற்கனவே கடந்த மாதங்களில் எரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டிருந்தன. இதனை அடுத்து மாவின் விலை 9 ரூபாவினால் அதிகரிக்கப் பட்டு 98 ரூபாவாக மாற்றப் பட்டது. 98 ரூபா எனும் போது மா வாங்குவதற்கான பொலித்தீன் பைக்குமாக கடையில் அறவிடப் படுவது 100 ரூபா தான். மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாணின் விலை ரூ 3 முதல் 5 வரை அதிகரிக்கப் பட்டது. தற்போது பால்மா, எரிவாயு, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.

                               குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் மேற்படி விலை திருத்தம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் செவ்வாய்க்  கிழமை குழந்தைகளுக்கான பால்மாவுக்கும் நிர்ணய  விலையிடல்  முறை அறிமுகம் செய்யப் படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான பால்மா விற்பனை மூலம் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவு இலாபத்தை அனுபவிப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதனாலேயே குறித்த பால்மா  வகைக்கும்   கட்டுப்பாட்டு  விலையை அறிமுகப் படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏனைய சாதாரண பால்மா வகைகளுக்கான கட்டுப் பாட்டு  விலையை அறிவிக்கும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபையிடமே உள்ளமை குறிப்பிடத் தக்கது.

                           கடந்த 2ம் திகதி ஹட்டன் நகரில் பால் உற்பத்தியாளர்கள் தமது பசும் பாலினை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்  கூறி பாலினை வீதியில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கால் நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இது அரசியல் சதியின் பின்னணியில் நடந்த செயல் என்று கூறினார். வெள்ளியன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இனி வரும் காலங்களில் பால் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை முழுமையாக கொள்வனவு செய்து மில்கோ நிறுவன உற்பத்திக்கும் , மில்கோ நிறுவனத்தின் வாயிலாக மாணவர்களின் நலன் கருதி குறித்த பிரதேச மாணவர்களுக்கு ஒரு குவளை பாலினை பகிர்ந்தளிக்கவும் ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. அறிவிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. அமுலாக்கப் படும் போது  தான் அதன் உண்மையான பெறுபேற்றை அறிய முடியும்.

                 மேலும் இறக்குமதி பால்மாவின் வரி 15% த்தினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. பால் மா விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வரி அதிகரிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

                    இந்த வருட ஆரம்பம் முதலே மக்கள் விலை அதிகரிப்புகளால் திணறிப் போயுள்ளனர். இது எது வரை மக்களை கொண்டு சென்று விடும் என்று தெரியவில்லை. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இது  இத்தோடு நிற்கிற விடயமாகப் படவில்லை. "அடுத்து எந்தப் பொருளுக்கு?" என்ற கேள்வி தான் எம் முன் எழுகின்றது. பார்க்கலாம். எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவாரோ?

Wednesday, 2 May 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

கொழும்புத் தமிழ் சங்கம் தனது 70வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இலக்கிய மாநாடொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 2012 ஜூன் மாதம் 1,2,3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் இவ்விலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. "தமிழ் இலக்கியமும் , சமூகமும் - இன்றும், நாளையும்" என்ற தொனிப் பொருளிலேயே இம்மாநாடு நடை பெற உள்ளது. 2, 3, மற்றும் 4 ஆகிய  மூன்று நாட்களும் மாநாட்டு தொனிப் பொருளுக்கு அமைவான  கருத்தரங்குகள் இடம் பெற உள்ள அதே வேளை  முதல்  நாள் சென்னை பாரதியார் சங்கத்துடன் இணைந்து "பாரதி விழா" நடத்தப் பட உள்ளது.

                            மாநாட்டில் பங்கு பற்றுவதற்கான மற்றும் ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் சங்க இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சங்கத்தில் இடம்பெற உள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" கொழும்பு தமிழ் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. குறித்த மாநாட்டிற்குப் பிறகு நடைபெறும் மாபெரும் விழாவாக இதனைக்  கருத முடியும். 
                            ஜூன் மாதம் நடை பெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாடு  சிறப்புற அமைய "சிகரம்" தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இவ்விலக்கிய விழாவில் உங்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக இலங்கையில் இவ்வாறான இலக்கிய விழாக்கள் இடம்பெறுவது மிகக் குறைவு. எனினும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது நமது கடமை அல்லவா? எனவே, அனைவரும் வருக. தமிழ்ச் சுவை பருகிச் செல்க.

வணக்கம் வலைத்தளம்!

             அன்பார்ந்த வலைப்பதிவுலக நண்பர்களே! இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவுலகில் இணைந்து கொள்ளப் போகிறேன். ஏற்கனவே வலைப் பதிவுலகிற்கு சற்றே அறிமுகமானவன் தான் நான். "தூறல்கள்".இப்படி ஒரு வலைப் பூவின் பெயரை அறிந்தவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். சிற்சில பிரச்சினைகள் காரணமாக  "தூறல்கள்" வலைப் பதிவினை என்னால் தொடர முடிய வில்லை.

                              எனவே தான் இந்த "சிகரம்" என்ற புதிய வலைப் பதிவினை தொடங்கி உள்ளேன். இப் புதிய வலைப் பதிவினை தொடர்ந்து நடத்திச் செல்ல உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கிறேன். நிகழ்காலத்தில் பயனுள்ள பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்க "சிகரம்" தயாராக உள்ளது. வலைப் பூவுலகில் ஆயிரக் கணக்கான வலைப் பூக்கள் வலம் வருகின்றன. அத்தனைக்குள்ளும் எனது வலைப் பூவும் வாசகர்களின் மனம் கவர்ந்த வலைப் பூவாக திகழ வேண்டும் என்பதே எனது பேரவா.
                          
                              எனது பெயர் சிகரம்பாரதி. இது எனது புனை பெயர் தான். இப் பெயரிலேயே நான் புகழ் பெற வேண்டும் என எண்ணுகிறேன். இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். தற்போது கொழும்பில் தொழில் புரிகின்றேன். தொழிலுக்கும் நடுவில் வலைப் பதிவை தொடர்ந்து நடத்திச் செல்வது என்பது மிகக் கடினமான பணி என்ற போதிலும் சவாலை ஏற்றுக் கொண்டு முன் செல்லத் தீர்மானித்திருக்கிறேன். ஆகவே, தொடர்ச்சியான உங்கள் ஆதரவை எதிர் பார்த்து எனது சிகரத்தை தொடங்குகிறேன். நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...