எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவாரோ?
இலங்கை மக்கள் தினசரி காலை எழுந்ததும் பத்திரிகையில் எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, இன்று என்ன பொருளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது என்று தான் தேடுகிறார்கள். திரை விமர்சனம் நிகழ்ச்சியில் 'இந்த வார புது வரவு' என்று அறிவிப்பதைப் போல இனி செய்திகளிலும் 'இந்த வார விலை அதிகரிப்பு' என்று அறிவிக்கும் நிலை தான் உருவாகப் போகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் வேகத்திற்கு உழைக்கும் மக்களின் வேதனங்கள் உயர்த்தப் படுவதில்லை என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. தற்போது வலைப் பதிவுகளிலும் சரி, இலங்கை மக்களின் மத்தியிலும் சரி பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் தான் இந்த விலை அதிகரிப்பு.
கடந்த வெள்ளிக் கிழமை (மே - 04) சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கி.கி எடை கொண்ட சமையல் எரிவாயு 350 ரூபாவினாலும் 1 கி.கி பால் மாவின் விலை 163 ரூபாவினாலும் சீமெந்து மூட்டை (50 கி.கி) ஒன்றின் விலை 70 ரூபாவினாலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேற்படி விலை அதிகரிப்பின் பிரகாரம் 1 கி.கி பால்மாவின் உச்ச பட்ச விலை 810 ரூபாவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதங்களில் எரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டிருந்தன. இதனை அடுத்து மாவின் விலை 9 ரூபாவினால் அதிகரிக்கப் பட்டு 98 ரூபாவாக மாற்றப் பட்டது. 98 ரூபா எனும் போது மா வாங்குவதற்கான பொலித்தீன் பைக்குமாக கடையில் அறவிடப் படுவது 100 ரூபா தான். மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாணின் விலை ரூ 3 முதல் 5 வரை அதிகரிக்கப் பட்டது. தற்போது பால்மா, எரிவாயு, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் மேற்படி விலை திருத்தம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் செவ்வாய்க் கிழமை குழந்தைகளுக்கான பால்மாவுக்கும் நிர்ணய விலையிடல் முறை அறிமுகம் செய்யப் படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான பால்மா விற்பனை மூலம் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவு இலாபத்தை அனுபவிப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதனாலேயே குறித்த பால்மா வகைக்கும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகப் படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏனைய சாதாரண பால்மா வகைகளுக்கான கட்டுப் பாட்டு விலையை அறிவிக்கும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபையிடமே உள்ளமை குறிப்பிடத் தக்கது.
கடந்த 2ம் திகதி ஹட்டன் நகரில் பால் உற்பத்தியாளர்கள் தமது பசும் பாலினை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாலினை வீதியில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கால் நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இது அரசியல் சதியின் பின்னணியில் நடந்த செயல் என்று கூறினார். வெள்ளியன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இனி வரும் காலங்களில் பால் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை முழுமையாக கொள்வனவு செய்து மில்கோ நிறுவன உற்பத்திக்கும் , மில்கோ நிறுவனத்தின் வாயிலாக மாணவர்களின் நலன் கருதி குறித்த பிரதேச மாணவர்களுக்கு ஒரு குவளை பாலினை பகிர்ந்தளிக்கவும் ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. அறிவிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. அமுலாக்கப் படும் போது தான் அதன் உண்மையான பெறுபேற்றை அறிய முடியும்.
மேலும் இறக்குமதி பால்மாவின் வரி 15% த்தினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. பால் மா விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வரி அதிகரிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இந்த வருட ஆரம்பம் முதலே மக்கள் விலை அதிகரிப்புகளால் திணறிப் போயுள்ளனர். இது எது வரை மக்களை கொண்டு சென்று விடும் என்று தெரியவில்லை. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இது இத்தோடு நிற்கிற விடயமாகப் படவில்லை. "அடுத்து எந்தப் பொருளுக்கு?" என்ற கேள்வி தான் எம் முன் எழுகின்றது. பார்க்கலாம். எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவாரோ?
Article posted at 06.05.2012 | Edited at 15.09.2018
அரசியல் | பொருளாதாரம் | மக்கள் | விலையேற்றம் | வாழ்க்கைச் செலவு | திண்டாட்டம் | இலங்கை | வியாபாரம் | பசி | பட்டினி | சிகரம் பாரதி | சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்