Sunday, 13 November 2016

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01

வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல்.

"வானவல்லி" - நமது தோழர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் உருவான சரித்திரப் புதினம். பல தடைகளைத் தாண்டி வெற்றிவேலின் கன்னி நாவல் களம் கண்டிருக்கிறது. பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினங்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் 'வானவல்லி'யை வெளியிட்டதன் மூலம் தனிச் சிறப்பை இந்நூலுக்கு வழங்கியுள்ளது எனலாம்.

தமிழர்களின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பல நூறு புதினங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஆனால் கதை நிகழும் கால அடிப்படையில் புதினங்களை யாரும் வகைப்படுத்தவில்லை. இதை ஒரு பெருங் குறையாகவே நான் காண்கிறேன். வானவல்லி கி.மு. 175 இல் நிகழும் கதை என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆகவே வானவல்லியை முதல் தகவலாக இணைத்துக் கொண்டு புதினங்களை அவற்றின் கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சித்து வருகிறேன். இயன்ற நண்பர்கள் உதவுங்கள்.

'வானவல்லி' கி.மு 175 இல் வாழ்ந்த கரிகால் வளவன் என்னும் சோழனின் வரலாற்றை புதினமாகப் படைத்துள்ளார் வெற்றி. இது வெற்றியின் முதல் புத்தகம்- முதல் புதினம். ஆனால் ஏனோ தானோவென்று எழுதாமல் தேர்ந்த எழுத்தாளரைப் போன்று தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இப்புதினத்தை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 2500 பக்கங்களை அண்மித்த இப்புதினம் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது. இப்புதினத்தைப் பற்றி நண்பர் வெற்றி பின்வருமாறு கூறுகிறார்:

'தமிழில் இதுவரை எழுதப்படாத 2195 ( கி.மு 175 ) ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாலனின் வீர வரலாறு:

கரிகாலன் பிறப்பதற்கு முன்பே தந்தையையும் பிறந்தபோது தாயையும் வளரும்போது நாட்டையும் இழந்தவன். எதிரிகளால் சிறைவைக்கப்பட்டு உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்டவன். சோழ நாட்டைக் கைப்பற்ற வந்த சேரர், பாண்டியர் மற்றும் பதினோரு வேளிர்களையும் தனியொருவனாக எதிர்த்துநின்று போரில் தோற்கடித்து தனக்குரிய உறைந்தை ஆசனத்தை மீட்டவன். காவேரிக்குக் குறுக்கே பெரும் அணை எழுப்பியவன். 

தென்னகத்தில் எதிர்த்த அனைவரையும் தோற்கடித்து வடக்கு நோக்கிப் படையெடுத்து இமயத்தில் புலிக்கொடியை நாட்டி சரித்திரத்தில் 'தனக்கு ஒப்பாரும் இல்லை ; மிக்காரும் இல்லை' எனப் பெரும் புகழ் பெற்றவன் கரிகாலன்.

அத்தகைய கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு இப்புதினம்.'

'பொன்னியின் செல்வன்' புதினத்தைப் போன்றே சோழர்களின் வீர வரலாற்றை அழகுடன் எடுத்துரைத்திருக்கிறது 'வானவல்லி'. ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள் வாசிப்பை இடையூறு செய்கின்றன. தொடரும் வெளியீடுகளில் வெற்றி இதனைத் திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். காணாமல் போயிருந்த எனது புத்தக வாசிப்பை 'வானவல்லி' மீட்டெடுத்திருக்கிறது. 'வானவல்லி'க்கு நன்றிகள் பல. ஆனால் 'வானவல்லி'யை இலங்கைக்குத் தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இணையத்தில் பணம் செலுத்தி அவர்கள் அனுப்பாமல் மௌனம் காத்து பின் தமிழகத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு தருவித்து அதனை எனது உறவினர் மூலமாக பெற்று.... அடடடா..... ம்ம்... ஒரு வழியாக வானவல்லி என் கரம் சேர்ந்துவிட்டாள். 

சரித்திர நாவல்கள் அல்லது புதினங்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியப் பங்குள்ளவை. தமிழர்களின் கடந்தகால வரலாற்றை ஆய்வுக் கட்டுரைகளாக மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது கடினம். ஆனால் புதினங்களாகவோ கதைகளாகவோ மக்களிடம் எளிதில் கொண்டு செல்லலாம். எனவே சரித்திரப் புதினங்களை எழுதுவோர் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே எழுதத் துவங்க வேண்டும். வெற்றிவேல் அவர்களின் வானவல்லி தகுந்த ஆய்வுகளின் பின்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை வாசிப்பவர்கள் இலகுவில் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் உரிய அடிக்குறிப்புகள் இடப்பட்டுள்ளன. தனது கருத்து மட்டுமே சரியானது என வாதிடாமல் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் அவற்றுக்கும் மதிப்பளித்து அடிக்குறிப்புகளிலும் அத்தியாயங்களிலும் இணைத்துள்ளார். 

வானவல்லியின் முதல் பாகத்தை இப்போதுதான் வாசித்து முடித்திருக்கிறேன். பல வாசகர்கள் நான்கு பாகங்களையும் வாசித்து முடித்துவிட்டு வென்வேல் சென்னி புதினத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனர். பல பக்கங்களிலும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன. இன்னுமொரு பொன்னியின் செல்வன் புதினமாக வானவல்லியைக் கொண்டாடுகிறார்கள். மன நிறைவுடன் மிக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல புதினத்தை வாசிக்கக் கிடைத்திருக்கிறது. வானவல்லிக்கு நன்றிகள். வானவல்லியைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். முதலாம் பாகத்தைப் பற்றிய முழுமையான வாசிப்பு அனுபவத்தை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்...!

1 comment:

  1. விரைவில் வெளியிடுங்கள் நண்பா... நான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...