பயணங்கள் பலவிதம் - 03

'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இது தான் முதல் இரவு' என்று அன்றைய தினம் இரவில் பாடியிருக்க வேண்டும். ஆனால் அப்போது பாடலும் நினைவுக்கு வரவில்லை, பாடுவதற்கு சூழ்நிலையும் அமையவில்லை. ஆம், அந்த முதலிரவுச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு (2018.05.05) நடந்தேறியது. ஆனால் நீங்கள் நினைப்பது போல திருமண முதலிரவு அல்ல. இது எனது முதலாவது இரவு நேரத் தொழில் (Night Shift) நாள். அட ஆமாங்க, நான் இந்த ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்து இந்த ஏழு வருட காலத்தில் இதுவரை இரவு நேரத் தொழில் முறைமையில் வேலை செய்ததேயில்லை. இப்போது தொழிலில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்திருக்கும் சூழலில் வேலைப்பளு காரணமாக இரவு நேரத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பகல் முழுவதும் விழித்திருந்து வேலை செய்து அதன் தொடர்ச்சியாக இரவிலும் வேலை செய்யும் கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது காலத்தின் கட்டாயம்.



நான் முடிக்க வேண்டிய வேலையில் கிட்டத்தட்ட 95%மான வேலையை முடித்துக்கொண்டு ஞாயிறு அதிகாலை 05.40 மணிக்கு வேலைத்தளத்தில் இருந்து (06.05.2018) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிப் புறப்பட்டேன். அதிகாலை 05.55க்கு பதுளை நோக்கிப் பயணிக்கும் புகையிரதத்தில் சொந்த ஊருக்குச் செல்வதற்காகவே நான் புகையிரத நிலையம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். ஆறாம் திகதி ஞாயிறு விடுமுறை மற்றும் ஏழாம் திகதி மே தின விடுமுறை (இலங்கையில் இந்த ஆண்டு மே 07ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்பட்டது.) ஆகிய இரண்டு விடுமுறை நாட்களும் வேலையில்லாத காரணத்தால் ஊருக்குச் செல்லத் தீர்மானித்திருந்தேன். சனிக்கிழமை இரவு நேர வேலை முறைமைக்கு வரும் போதே ஞாயிறு காலை பயணமாவதற்காக தயார் நிலையில் வந்திருந்தேன்.

முச்சக்கர வண்டியில் நூற்றைம்பது ரூபாய் கொடுத்து நான் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வந்து சேர்ந்த அதே நேரத்தில் புகையிரதம் புறப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நேரத்துடன் வந்திருக்க வேண்டும். அடுத்த புகையிரதம் காலை 08.30 மணிக்குத்தான் புறப்படும். அடுத்த புகையிரதம் வரும் வரைக்கும் காத்திருப்பதா அல்லது பேரூந்தில் புறப்படுவதா? என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை 05.55க்குப் புறப்படும் புகையிரதம் காலை 11.30க்கு எனது சொந்த ஊரான கொட்டகலைக்கு சென்று சேரும். அதனால் தான் அந்த நேரத்தில் பயணத்திற்குத் தயாரானேன். ஆனால் காலை 08.30க்குப் புறப்படும் புகையிரதம் பகல் 01.30க்கே கொட்டகலைக்குச் சென்று சேரும். மேலும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆகவே பேரூந்தில் பயணிப்பது என்று முடிவு செய்தேன்.



பேரூந்துப் பயணம் எனக்கு அவ்வளவாக ஒத்து வராது என்பதால் நான் பேரூந்தில் பயணிக்க தயங்கித் தயங்கி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் விரைவாகக் கடந்து கொண்டிருந்த நேரமும் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்ததனால் ஏற்பட்டிருந்த தூக்கக் கலக்கமும் எப்படியேனும் விரைவாக வீடு செல்ல வேண்டும் என்று நச்சரிக்க பேரூந்தில் சென்றால் பகல் பொழுதுக்கு முன்னதாக சென்று விட முடியும் என்று எண்ணி கொழும்பு புறக்கோட்டை பேரூந்து நிலையம் நோக்கிப் பயணித்தேன்.

காலை ஏழு மணிக்கு ஹட்டன் செல்லும் பேரூந்தில் ஏறினேன். காலை 07.15க்கு பேரூந்து தனது பயணத்தைத் துவங்கியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டேன். இடையிடையே விழித்துக் கொண்டாலும் உறக்கம் தொடர்ந்தது. கித்துல்கலையில் உணவு இடைவேளைக்காக பேரூந்து நிறுத்தப்பட்ட போது பனிஸ் (Bun) ஒன்றை சாப்பிட்டு விட்டு தேநீரை அருந்தினேன். அதன் பிறகு பெரிதாக உறக்கம் வரவில்லை. கினிகத்தேனை நிறுத்தத்தில் அண்ணாசி விற்பவர் ஏற அவரிடம் ஐம்பது ரூபாய்க்கு அண்ணாசிப் பொதி ஒன்றை வாங்கி சாப்பிட்டேன்.

பேரூந்து வட்டவளை நகரைத் தாண்டி பயணிக்கும் போது நான் தவறவிட்ட 05.55 மணி புகையிரதம் தூரத்தில் செல்வதை யன்னலினூடே கண்டேன். ஹட்டன் நகரத்தை பேரூந்து சென்றடைந்த போது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணி. நுவரெலியா பேரூந்தில் ஏறி கொட்டகலை நோக்கிப் பயணித்து எனது வீட்டுக்கு சென்று சேரும் போது மணி பன்னிரெண்டரை ஆகிவிட்டது. புகையிரதத்தில் வந்திருந்தால் இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் அல்லது ஒரு மணித்தியாலம் முன்னதாக வந்திருக்கலாம்.



வீட்டுக்கு சென்றதும் உறங்கலாம் என்று திட்டமிட்டிருந்தாலும் உறக்கம் வரவில்லை. பகல் உணவை முடித்துக்கொண்டு குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடிய பின் மாலை கொட்டகலை நகரில் உள்ள சதோச சிறப்புச் சந்தைக்கு (Super Market) சென்று வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வந்தோம். ஒரு பை கூட முழுதாய் நிறையாத நிலையில் பொருட்களின் பெறுமதி ரூபாய் இரண்டாயிரத்தைத் தாண்டியது. ம்ம்ம்... 'முன்பு சட்டைப் பையில் பணத்தைக் கொண்டு சென்று மூட்டைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர், இப்போது மூட்டைகளில் பணத்தைக் கொண்டு சென்று சட்டைப் பையில் பொருட்களை எடுத்து வருகிறோம்' என வேடிக்கையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது வேடிக்கை அல்ல, உண்மைதான்.

அடுத்த நாளான திங்கள் காலைப்பொழுது கரைந்து காணாமல் போய் மாலைப் பொழுது விரைவாக வந்து சேர்ந்தது. நான் மீண்டும் கொழும்பு நோக்கிப் புறப்பட வேண்டிய நேரமும் வந்தது. அவசர அவசரமாக பகல் உணவை வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புகையிரத நிலையம் நோக்கி விரைந்தேன். மாலை 3.50க்கு புகையிரதம் கொட்டகலைக்கு வர வேண்டும். நான் புகையிரத நிலையம் சென்று சேரும் போது நேரம் 3.40 மணி இருக்கும். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் புகையிரதம் வந்தபாடில்லை. இன்று வராமல் போய்விடுமோ என்றெண்ணிக் கொண்டிருக்கையில் மாலை 4.40 மணிக்கு புகையிரதம் வந்து சேர்ந்தது. ஐம்பது நிமிடங்கள் தாமதம். அன்று மழை நாளாகையால் இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்கக் கூடும். 



மலையக இரயில் பாதையில் ஓரளவு வேகத்திலேயே புகையிரதங்கள் பயணிக்கும். பாதை வளைந்து நெளிந்து செல்வதால் அதிக வேகத்தில் பயணிக்க முடியாது. மேலும் பாதை ஏற்றம் அல்லது இறக்கமாக இருக்குமென்பதாலும் வேகமாகப் பயணிப்பது கடினம். இவற்றுடன் மழையும் சேர்ந்து கொண்டால் வேகம் என்ற சொல்லே காணாமல் போய்விடும். அன்றும் அப்படித்தான். ஆங்காங்கே ஓரளவு வேகமாக புகையிரதம் பயணித்தது. நாவலப்பிட்டி நகரைத் தாண்டியதும் தனது வேகத்தை அதிகப் படுத்திக் கொண்டது. நாவலப்பிட்டி நகரை அண்மித்த போது இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த பொழுதில் புகையிரதத்தின் வேகம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. 



மலையக இரயில் பாதை முழுவதும் ஒற்றை வழியிலானது. இறம்புக்கணை நகரில் இருந்து கொழும்பு வரை இரட்டைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இறம்புக்கணை நகரில் இருந்து வேகம் இன்னும் அதிகரித்தது. இருளைக் கிழித்துக்கொண்டு கொழும்பை நோக்கி விரைந்தது புகையிரதம். இரவு 09.10க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வர வேண்டிய புகையிரதம் இரவு 10.35க்கே வந்து சேர்ந்தது.

ஒன்றரை மணி நேர தாமதம். ம்ம்ம்... பேரூந்தில் என்றால் நான் இவ்வளவு தூரம் பயணம் செய்வதற்குள் படாத பாடு பட்டிருப்பேன். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு விதமாக அமைந்து விடுகிறது. எல்லாம் வெவ்வேறு விதமான அனுபவங்கள். நினைத்துப் பார்த்தால் கசப்பான அனுபவங்கள் கூட இனிப்பாகத் தெரியும். அனுபவங்களை எழுத்தில் பகிர்ந்து ஒரு சுகம் என்றால் அதை சிறிது காலம் கழித்து நாமே வாசித்து மகிழ்வது தனிச்சுகம். அடுத்தடுத்த பயணங்கள் என் வாழ்க்கையில் என்ன அனுபவங்களை வழங்கும் என்று தெரியவில்லை. அவற்றை அறிந்து கொள்ள நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருங்கள். சந்திப்போம்...

#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

Comments

  1. பயணங்கள் எப்போதுமே அலுக்காதவை ,அதுவும் இலங்கையில் மலைநாட்டில் பயணம் என்றால் ஈசிகாதவர் இருக்கமாட்டார் .இலங்கை விலைவாசிகள் கேட்கவே தலை சுற்றவைக்கின்றன .நான் இலங்கையில் இருந்த காலங்களில் பாண் மூன்று ருபா ஜம்பது சதம் இப்து கிடத்தட்ட இருநூறு வீதம் அதிகம் என்று கேல்விப்படுகிறேன் .

    உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைகின்றன .இன்னும் நிறைய எழுதுங்கள் .சந்திப்போம் .

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!