சிகரம் வலைப்பூங்கா - 02
வலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். 'எனது கவிதைகள்' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் தனது கவிதைகளுடன் திரையிசைப் பாடல்களும் ஒலிபரப்பான 'கவிதையும் கானமும்' நிகழ்ச்சியை எழுத்து வடிவில் நமக்குப் படைத்தளித்திருக்கிறார். அவர் தனது 'நிழல் உலகம்' என்னும் கவிதையில் இப்படிக் கூறுகிறார்.
இளைப்பாறுதல்களும்
எல்லை மீறுதல்களும்
மலிந்து கிடக்கும்
இவ்வுலகில்
பொய் முகத்துடனும்
புனை பெயருடனும்
ஒரு வேளை
நீயுமிருக்கலாம்
என்ற எண்ணம்
வரும் போது மட்டும்
ஒரு கணம் நின்று - பின்
துடிக்கிறது இதயம்
இப்படியாக அவரது பல கவிதைகளை 'கவிதையும் கானமும்' பதிவில் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி வடிவிலும் கேட்டு மகிழலாம்.
ஒரு படைப்பை படைப்பாளனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் வாசகனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாசகனின் பார்வை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். எழுத்தாளன் சிந்திக்காத கோணத்தையெல்லாம் வாசகன் சிந்தித்து அறிவான். எழுத்தாளன் ஒரு படைப்பை ஒரு தடவை தான் எழுதுகிறான். ஆனால் வாசகர்களோ காலத்துக்குக் காலம் மாறுபட்ட சிந்தனைத் தளங்களிலிருந்து சிந்திக்கிறார்கள். இப்படியான ஒரு மாறுபட்ட சிந்தனைக் களத்திலிருந்து 'பொன்னியின் செல்வன்' நாவலை அணுகியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்.
அபிலாஷ் சந்திரன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 'மின்னற் பொழுதே தூரம்' என்னும் வலைப்பதிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர் கல்கி நம்மால் நன்கு அறியப்பட்டவர். அவரது 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு' என எத்தனை புதினங்கள் இருந்தாலும் 'பொன்னியின் செல்வன்' தான் கல்கியின் பிரதான அடையாளம். அந்த புதினத்தில் தன்னைக் கவர்ந்த ஓர் அத்தியாயத்தை திறம்பட அலசியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன். 'பொன்னியின் செல்வன் (1) - மதில் மேல் தலை' என்று மகுடமிட்டு 'பொன்னியின் செல்வனுக்கு' மகுடம் சூட்டியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்!
'வாழ்க்கையில் சாதிப்பது அவசியம் தான், திருப்தியும் கூட!' என்று சொல்கிறார் 'கனவும் கமலாவும்...' வலைப்பதிவர் கமலா ஹரிஹரன். 2011 ஆம் ஆண்டு முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். இயற்கை மனிதனுக்கு எத்தனையோ நல்ல விடயங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மனிதன் இயற்கைக்கு அந்த நன்றிக்கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அந்த அவசியத்தை உணர்த்தி நிற்கிறது பதிவரின் சிறுகதை.
காக்கைக்கும் மனிதனுக்கும் விட்ட குறை தொட்ட குறையான ஒரு உறவு இருக்கிறது. குழந்தைக்குச் சோறு ஊட்டுவதில் இருந்து பூஜைப் படையல்களை முதலில் வைப்பது வரை ஏராளம் சொல்லலாம். அந்தக் காக்கையை வைத்து மனிதன் மறந்து போன கடமையை 'நன்றிக் கரையல்கள்' என்னும் தனது சிறுகதை மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கமலா ஹரிஹரன்!
#064/2018/SigarambharathiLK
2018/05/22
சிகரம் வலைப்பூங்கா - 02
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா
பகிர்ந்தவைகளை பார்த்துட்டு வரேன்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ
அருமை
ReplyDeleteதொடருங்கள்