சிகரம் பாரதி 12/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!


2016.10.16

கிரிக்கெட். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நான் இலங்கையராக இருந்த போதிலும் எனக்கு இந்திய அணியைத்தான் பிடிக்கும். ஏன் இந்திய அணியைப் பிடித்துப் போனது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பிடிக்கும். நான் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் எனக்கு இந்திய அணியைப் பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சிலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய மண்ணை ஆதரிக்கிறேன் என்று குறை கூறுவார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறப்பால் இலங்கையன். இலங்கை நாட்டையும் தாய் பூமியான மலையகத்தையும் நேசிக்கிறேன். தனி ஈழத்தையோ அல்லது இந்தியாவையோ நான் நேசிக்கவில்லை. அல்லது வேறு நாடுகளை ஆதரிக்கவில்லை. 

இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் 200 ஆண்டுகள் கடந்தும் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள். இப்படியாக இலங்கை நாட்டுடன் நான் முரண்படக் கூடிய விடயங்கள் ஆயிரம் இருந்தாலும் ஒன்றிணைந்த இலங்கை தேசத்தையே நான் நேசிக்கிறேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியையே விரும்புகிறேன். நேசம் வேறு, விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இலங்கை அணியிலும் எனக்குப் பிடித்த வீரர்கள் இருந்தனர். முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று அவர்கள் அணியில் இல்லை. இப்போது உள்ள புதிய - இளைய இலங்கை அணியில் இவர்களைப் போல் திறமையை யாராயினும் வெளிப்படுத்தினால் அவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு. விருப்பங்கள் நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை நமது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சூழ்நிலை இந்திய அணியை விரும்ப வைத்துவிட்டது. ஆனால் இந்திய மண்ணை நான் ஒரு போதும் நேசிக்கவில்லை. இந்தியக் குடியுரிமையை ஒருபோதும் கனவு கண்டதில்லை. இந்தியாவில் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். என்றாலும் இலங்கை மண்ணை விட்டுச் செல்லப்போவதில்லை.

பலர் இலங்கையில் பிறந்துவிட்டு அந்நிய நாடுகளுக்கு தமது உழைப்பையும் அறிவையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் குற்றம். பணத்துக்காக சொந்த நாட்டுக்கு உழைப்பைத் தர மறுப்பது தான் தவறு. அந்நிய செலாவணியெல்லாம் ஒரு  பொருட்டல்ல. நமது நாடு வழங்கிய கல்விக்கான பிரதிபலனை நமது நாட்டுக்கே அளிப்பது தான் தர்மம் ஆகும். இது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது. இது வேறு, விளையாட்டு வேறு. எனது அறிவையும் உழைப்பையும் நான் ஒரு போதும் அந்நிய நாட்டுக்கு விற்க மாட்டேன். இதுதான் நான் இலங்கை மண்ணின் மீது கொண்டுள்ள நேசத்தின் அடையாளம். நாட்டுப் பற்றைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் நாம் பணத்துக்காக நமது அறிவையும் உழைப்பையும் அந்நிய நாடுகளுக்கு விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விளையாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுங்கள். அந்நியனிடம் பணத்துக்காக விலைபோகும் எவரும் இலங்கையராக இருக்க முடியாது! நான் இலங்கையன்!  

2016.10.17

'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 2010 இல் வெளியானது. 'தொடரி' (2016) தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டேன். 'Unstoppable' ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு.ஆனால் அதிலும் சில விதி மீறல்கள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் 150 கி.மீ வேகத்தில் சென்றாலும் 70 கி.மீ வேகத்தில் செல்லும் Unstoppable ஐ தொடரியால் நெருங்கக் கூட முடியாது. 

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கட்டாயம் காதல் இருக்கவேண்டும். மேலும் வில்லன் இருக்கவேண்டும். இன்னும் நான்கு பாடல்கள் இருந்தாக வேண்டும். நகைச்சுவைக்கென்று தனியிடம் வேண்டும். கதாநாயகனை ஆகா ஓகோ வென்று புகழ்ந்து அறிமுகக் காட்சி அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களேனும் ஒதுக்கப்பட வேண்டும். கதாநாயகிக்குக் கதாநாயகனின் மேல் காதல் வந்த பிறகே கதை(?) துவங்கும். இப்படியாகவெல்லாம் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கும் போது பிரதான கதையை மிஞ்சும் சொற்ப நேரத்தில் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயம் நம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு. பாவம்!

நூற்றாண்டு கண்ட தமிழ்த் திரையுலகம் காதலைத் தவிர இன்னும் வேறு எதனையும் காணவில்லை. இதில் தொடரி மற்றும் ரெமோ போன்ற குப்பைகள் மூலக் கதையின் அழகையே சிதைத்து விடுகின்றன. 'என்னை வேலை செய்ய விடுங்கய்யா...' என்று சிவகார்த்திகேயன் போன்றவர்களின் நீலிக்கண்ணீர் வேறு . தேனீர் விற்பவரும் முக அலங்காரம் செய்பவரும் தொடரூந்தை ஓட்ட முடியுமாக இருந்தால் நமது தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக தொடரூந்துகளே பெரும் எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கும். என்ன கொடுமை சரவணன் இது? மொத்தத்தில் 'தொடரி' - தடம் புரண்டது!

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!