Thursday, 13 October 2016

சிகரம் பாரதி 10/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 

2016.10.10 

கே.டிவி யில் இன்று 'சிங்கம்' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு அருமை. அவருக்கு மட்டுமே இம்மாதிரியான திரைப்படங்கள் பொருந்தும். மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு தான். நமக்கு முன்னால் நடக்கும் சமூக அநீதிகளைக் கண்டு நம் மனம் பொங்கும். அவ்வேளையில் அதற்குக் காரணமானவர்களை அடித்து நொறுக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனாலும் நாம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வோம். ஆனால் திரைப்படத்தில் சூர்யா நாம் பொறுத்துப் போகிறவர்களையெல்லாம் போட்டு வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது நம் மனம் 'சபாஷ்' எனச் சொல்லும். அதனால்தான் இம்மாதிரியான திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன். 'அஞ்சான்' கூட சூர்யாவின் திரைப்படம் தான். ஆனாலும் 'அஞ்சான்' தோற்றுப்போனது. காரணம் இவ்விரு திரைப்படங்களும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சிப் பிரதிபலிப்புகள் வெவ்வேறானவை. 'சிங்கம் 2' கூட இதேமாதிரியானதுதான். 'சிங்கம் 3' கூட விரைவில் வெளிவர போகிறதாம். நம் உணர்ச்சிகளை யாரோ ஒருவர் காசாக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். நாம் விழித்துக் கொள்ளும் வரை வியாபாரம் தொடரும்...

2016.10.11

நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணமாக நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.


இன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன்.

தோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!

2016.10.12

தேயிலைத் துறையின் எதிர்காலம்.

இலங்கையின் தேயிலைத் துறையில் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் காணி உரிமை , கல்வி போன்ற சிக்கல்கள் தற்போது காணப்படும் அதே நேரம் மற்றுமொரு பேராபத்தும் நமது தேயிலைத் துறைக்குக் காத்திருக்கிறது. அதுதான் ஊழியர்படை. இது என்ன புதுப் படையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஒரு நாட்டின் ஊழியர்களை / தொழிலாளர்களை ஊழியப்படை என்றழைப்பர். தற்போது தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. சிலர் வியாபாரங்களைத் தொடங்கியிருக்கின்றனர். மரக்கறி உற்பத்தியாளர்களாயிருக்கின்றனர். சிலர் கொழும்பிலும் பிற மாவட்டங்களிலும் பணி புரிகிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு படிப்படியாக மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெவ்வேறு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி குறைவடையும். பின் நஷ்டமடைந்து மூடப்படும் அபாயம் உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளாய் மலையகத்தின் அடையாளமாய் விளங்குவது தேயிலை உற்பத்தியாகும். இலங்கையின் பொருளாதாரத்திலும் கணிசமான பங்கு தேயிலை உற்பத்திக்கு உண்டு. மேலும் உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல கேள்வி உள்ளது.


ஆகவே தேயிலைத் தொழிலாளர்களின் வீழ்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும். இலங்கையில் தேயிலைத் தொழிலை நவீன மயப்படுத்துவதனூடாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உள்ளீர்க்க முடியும். தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க வேண்டும். மேலும் இலங்கைத் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தேயிலைத் துறையை அழிவிலிருந்து காக்க முடியும். செய்வார்களா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...