முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02

முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். 'வேர்களைத் தேடி' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக: 



சிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி?
குணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், திறன்பேசி என பேசுவதைப்பார்த்து வியந்த, சிரித்தவர்கள் இப்போது அவர்களே அச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு ஆசிரியர்களுடன் நான் நின்றால் பிற ஆசிரியர்களிடம் குட் மார்னிங் என்று கூறும் மாணவர்கள் என்னைப் பார்த்து காலை வணக்கம் ஐயா என்றுதான் கூறுவார்கள். கலைச்சொல்லாக்கங்களைப் பயன்படுத்துவதில் தமிழ் விக்சனரி பெரும் உதவியாக உள்ளது.

https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்  - தற்பொழுதுள்ள சொற்கள் = 3,54,597

சிகரம் : பேஸ்புக், வாடஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா?

குணசீலன் : விக்சனரி போன்ற பல தளங்கள் மட்டுமின்றி இணையத் தமிழ் மாநாடுகளிலும் கலைச்சொல்லாக்கங்கள் குறித்த விவாதங்கள் நடந்துதான் வருகின்றன. இருந்தாலும் முகநூல் போன்ற பல கலைச் சொல்லாக்கங்களை தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகப் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்வது தவறு என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் உலவுவது எப்படி சரியாகும்? அது அவர்களது விருப்பம் என்றால் இது தமிழுணர்வாளர்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே?

சிகரம் : பெயர்ச் சொற்கள் ஒரு மனிதனை, ஒரு பொருளை அல்லது ஏதேனும் ஒன்றை அடையாளப்படுத்துபவை. அதனை மொழிக்கு ஒரு பெயரில் வைத்தால் சிக்கல் அல்லவா ஏற்படும்? பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா? சிகரம் என்னும் தமிழ் இணையத்தளத்தை எந்த மொழியிலும் சிகரம் என்றே அழைக்க வேண்டும். அது போலத்தானே பேஸ்புக்கும் வாட்ஸப்பும்?

குணசீலன் : தங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே. ஆனால் எனது பார்வை என்னவென்றால் ஆங்கிலத்திலிருக்கும் வார்த்தைகள் யாவும் அம்மொழிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. கிரேக்கம், இலத்தீன் என பலமொழிகளின் கலவையே அம்மொழி. ஆனால் அம்மொழி இன்று உலகையே ஆள்கிறது. இன்றைய நிலையில் அறிவு மனித இனத்தின் பொதுவான சொத்து. அப்படியிருக்கும்போது எந்தவொரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை அவரவர் தாய்மொழியிலேயே பயன்படுத்துவது என்பது மொழிசார்ந்த உணர்வு. இன்று சூப்பர் கம்யுட்டர்களை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அந்நாடு அமொிக்காவையே முந்திவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் சீனர்களின் மொழி உணர்வு. கலைச்சொல்லாக்கத்தின் தொடக்கநிலையிலிருக்கும் நாம் இதுபோன்ற பல தடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும். 

முதலில் எந்வொரு அறிவியல் துறையாக இருந்தாலும் அதனை தமிழில் புரியவைக்க கலைச்சொல்லாக்கங்கள் அடிப்படையாக அமைகின்றன. எந்த மொழிச்சொல்லாக இருந்தாலும் அச்சொல்லின் மூலச் சொல் எது என்று அறிவதற்கே வேர்ச்சொல் ஆய்வு என்ற துறை உள்ளது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல்களை வாசித்தால் நமக்கு ஒன்று புரியும். எந்தவொரு அறிவியல் மரபுகளையும் நாம் அழகுத் தமிழில் விளக்கமுடியும் என்பதே அது. கணினிக்கு 01 என்பதுதானே மொழி. அப்படியிருக்க அதை அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்த இயலவில்லை...? என்பதே எனதுகேள்வியாக உள்ளது. 



தங்கள் கேள்வி கலைச்சொல்லாக்க நெறிமுறை சார்ந்தது. எனது கருத்தோ தமிழ்மொழி சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கலைச்சொல்லாக்கத்தின் தற்காலத் தேவை குறித்தது. கூகுளில் பணியாற்றும் சுந்தர் பிச்சை போல இன்னும் மிகச்சிறந்த அறிவாளர்கள் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவு ஆங்கிலமொழியைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி. இந்த நிலையும் மாறும். ஒருநாள் கலைச்சொல்லாக் வரலாற்றில் இதுபோன்ற கருத்தாடல்களும் வாசிக்கப்படும்.

சிகரம் : நல்லது. எனது சொந்தக் கருத்தை இந்த இடத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். எனது கருத்தானது பேஸ்புக் என்னும் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால் பேஸ்புக்கின் டைம்லைன், ஸ்டேட்டஸ், லைக் போன்ற செயல்பாடுகளை / பதங்களை தமிழ்ப்படுத்தினால் தவறில்லை. பேஸ்புக் என்பதை தமிழ்ப்படுத்தினால் இன்னும் நோக்கியா, சோனி, மைக்ரோசாப்ட் என்று நீளும் ஆயிரமாயிரம் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்ய நேரும். பின் பெயர்ச் சொற்களை கலைச்சொல்லாக்கம் செய்வது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் பெயர்ச் சொல்லுக்கு அதன் மதிப்பை வழங்குவது தான் நியாயம். இது எனது கருத்து மட்டுமே. நேர்காணலோடு தொடர்பில்லை.

சிகரம் : அரசியல் குறித்த தங்கள் பார்வை என்ன?

குணசீலன் : 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை என்று வைக்கப் படும்' என்றார் வள்ளுவர். ஒருகாலத்தில் சேவையாகக் கருதப்பட்ட அரசியல் இன்று வணிகமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசங்களுக்கு விலைபோவதும் இன்றைய மக்களின் இயல்பாகவுள்ளது.

சிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது?

குணசீலன் : ஊடகங்களின் வளர்ச்சியால்தான் மொழித்தாக்கம் மிகுந்து வருகிறது நண்பரே.

சிகரம் : இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் தமிழை ஆங்கிலம் கலந்து பயன்படுத்தும் போக்கு மிக அதிகமாக உள்ளதே?

குணசீலன் : ஆம் நண்பரே. கவிஞர் காசியானந்தன் அவர்கள் சொல்வது போல இது லன்டன் டங் என்னும் நோய். அவர்கள் பேசுவது தமிங்கிலம்.

மொழியை விடவும் மேலானது மொழி உணர்வு. எனவே தமிழை விடவும் தலையாயது தமிழுணர்வு. மொழி உணர்வு இறந்த தேசத்தில் மொழியும் இறந்துபடும். தமிழுணர்வு இழக்கும் நாட்டில் மிஞ்சுவது தமிழின் சவமே. மொழி உணர்வைக் கழித்துவிட்டு மிச்ச உணர்வுகளை ஊட்டுவது பிணத்துக்கு ஏற்றும் ஊசி மருந்துகளே. மொழி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன அடிமைகளாவது இயல்பு. தமிழுரிமை பறிகொடுத்த மக்களைத் தளைப்படுத்துவது எளிது.

சிகரம் : உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன?

குணசீலன்: கணினியை முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தவேண்டும். இயங்குதளம் தொடங்கி மென்பொருள் வரை. காலத்துக்கு ஏற்ற எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு என்னால் இயன்றவை தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள் உருவாக்குதல், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துதல் ஆகியன என் அடிப்படையான இலக்கு. திருக்குறளின் பெருமைகளை உரையாசிரியர்களைக் கடந்து குறளின் மெய்யான பொருளை உணரும் நுட்பத்தை என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு.

சிகரம் : இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளிலேயே இணைய முகவரியைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தனர். ஆனால் அறிமுகக் கட்டத்தைத் தாண்டி உலக நாடுகளில் அமுல்படுத்தப்படவோ அல்லது அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படவோ இல்லையே? இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?



குணசீலன் : இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத்தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் (IP Address) உலாவிக்குக் கிடைக்கும். இது இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP – Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல்கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப்பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இது ஒரு தொடர் செயல்பாடு.

இந்த நுட்பியல் பின்புலத்தில் இப்போது தங்கள் சிகரம் தளத்தை தேடவேண்டுமானால் https://www.sigaram.co என்றுதான் தேடவேண்டும் என்று இல்லையே. தற்போது சிகரம் என்று தேடினாலும் கிடைக்கும். ஆனால் இதில் என்ன நடைமுறைச் சிக்கல் என்றால், எது தாங்கள் தேடும் சிகரம்? அது திரைப்படமா, இயற்கைவளமா? இணையதளமா? என்பதுதான். இதற்குத்தான் இப்போது கணினிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் போதிக்கப்பட்டுவருகிறது. ஒருங்குறி என்னும் எழுத்துமுறை கணினியுடன் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இணையதளங்களுக்கான பெயர்களை தமிழிலேயே வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றே கருதுகிறேன்.

சிகரம் : நமது எல்லாத் தேவைகளும் இணையத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளங்கள் மீதான வைரஸ் தாக்குதல்கள் தனி மனித பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலல்லவா? இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நம்பிக்கையோடு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும்?

குணசீலன் : ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்தமூல மென்பொருள்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. வைரஸ் எனப்படும் நச்சுநிரல்கள் இவற்றில் பரவுவதில்லை. இணையவெளியில் இன்று தனிஉரிமை என்பதும், தகவல் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ப நுட்பங்களை சராசரி மனிதர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்துகொள்ள முயலாதவர்கள் ஏமாற்றமடைவதும், பாதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும். அல்லன செத்து மடியும். இது இணையஉலகத்துக்கும் ஏற்புடையதாகத் தான் உள்ளது.

சிகரம் : திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? அதன் பயன்பாடுகள் யாவை?

குணசீலன் : திறந்த மூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள். அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.


மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்குவது இதன் தனிச்சிறப்பாக அமைகிறது. இம்மென்பொருள்கள் பற்றியும் இதன் பயன்பாடுகள்பற்றியும் யுடியுப்பிலும், விக்கிப்பீடியாவிலும் நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

சிகரம் : "தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்" - இது சிகரம் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் (எனது பதினாறாம் வயதில்) சிகரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய நோக்கம். இதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் நிகழ்த்துவது சாத்தியமா?

குணசீலன் : நுட்பியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை தகவமைத்துக்கொள்ள முதலில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விமுறையை மாற்றவேண்டும். உலகத் தரத்திலான கல்வியை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு திறனறிந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். தமிழ் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் பங்காற்றவேண்டும். கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழ்ச் சமூகத்துக்கு சவாலாக உள்ளது. அறிவு எந்தமொழிக்கும் சொந்தமானதல்ல, மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். பொறியியல் படிப்புக்கு இன்றைய நிலைதான் கலை அறிவியல் படிப்புக்கு நாளை ஏற்படும். இன்று தேவை இளம் விஞ்ஞானிகள் மட்டுமல்லை, இளம் விவசாயிகளும்தான். கலாம் விதைத்த விதைகள் அறுவடையாகும் காலம் 2020. நம்பிக்கையோடு நடைபயில்வோம். இன்றைய இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல. பயன்படுத்தப்படாதவர்களே. இருள் இருள் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட நாம் விளக்கேற்றிவைப்போம்.

சிகரம் : உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

குணசீலன் : தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், கல்கி, சுஜாதா, மு.வரதராசனா், கி.ராஜநாராயணன், அறிஞர் அண்ணா, இறையன்பு, கண்ணதாசன், வைரமுத்து, இராஜேஷ்குமார்.

சிகரம் : பிடித்த புத்தகங்கள்?

குணசீலன் : திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல்

சிகரம் : சஞ்சிகைகள் வாசிப்பதுண்டா?

குணசீலன் : தமிழ்க் கம்யுட்டர், வளர்தொழில், தடம் ஆகியவை தொடர்ந்து வாசிப்பதுண்டு. இணையத்தில் முத்துக்கமலம், இனம், பதிவுகள், வரலாறு வாசிப்பது வழக்கம்

சிகரம் : தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்கள் பலர் இன்னமும் அடிப்படைத் தொழிநுட்ப வசதிகளையே பெற்றுக் கொள்ளாதிருக்கும் நிலையில் முழுமையான தொழிநுட்ப அடிப்படையிலான தினசரி வாழ்க்கை சாத்தியமாகுமா?

குணசீலன் : இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஜி சேவை அறிமுகமாகவுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டில் பல தொழில்நுட்ப வசதிகளை தனியார்தான் வழங்கி வருகிறது. bsnl என்னும் அரசு சேவையகம் மாட்டுவண்டி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.

இன்றைய தனியார் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ரோபோட்டிக் பொறியியல் நுட்பம் கற்றுத்தரப் படுகிறது. ஆனால் அரசுக் கல்லூரியில் கணினிக்கல்வி என்பது போதுமானதாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்கும் வரை சராசரி மக்களுக்கும் தொழில்நுட்ப வசதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.



சிகரம் : சிகரம் இணையத்தளம் குறித்த தங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா?

குணசீலன் : சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்குச் சமமானது. 'தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!' என்ற தங்கள் நோக்கும், அதற்கான தங்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. தெளிவான நோக்குடன் சரியான பாதையில் செல்லும் இந்த இணையம் எதிர்காலத்தில் திட்டமிட்ட இலக்குகளை அடையும் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.

சிகரம் : சிகரம் இணையத்தளத்தின் குறைபாடுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

குணசீலன் : குறைபாடு என்றும் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் தாங்கள் கேட்பதால்... பிற இணையதளங்களில் காணக்கிடைக்கும் சராசரி செய்திகளும் தங்கள் தளத்தில் கிடைப்பதை குறையாகக் கருதுகிறேன். சிகரம் தளம் சென்றால் புதிய செய்தி பிற இணையதளங்களில் காணக்கிடைக்காத செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்தைப் பார்வைாயாளர்களிடம் உருவாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்

சிகரம் : இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி?

குணசீலன் : சமூகத் தளங்களின் வழியாக தமிழ் மொழியை வளர்ப்பதுடன், சமூக மாற்றத்துக்கும் வித்திடமுடியும் என்ற கருத்தையும் சமூகத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற சிந்தனையையும் பதிவுசெய்யவிரும்புகிறேன்.

சிகரம் இணையத்தளத்துடனான நேர்காணலுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி பொறுமையாகவும் முழுமையாகவும் திறமையாகவும் பதிலளித்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். 

093/2018/SIGARAMCO 
2018/04/25
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP 
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம் 
 

Comments

  1. இணையவழி நிகழ்ந்த இந்த நேர்காணலில் தாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளும் என்னை ஆழமாக சிந்திக்கச் செய்வனவாக அமைந்தன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு நாள் என கேட்டபோது அதற்கான தேவை என்ன என்ற கேள்வி தோன்றியது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது அவ்வாறு செய்தது சரிதான் என்றே தோன்றுகிறது. எனது வலையுலக அனுபவத்தில் இந்த நேர்காணல் மிகச்சிறந்த பதிவு என்று கருதுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  2. முதலில் சிகரம் இணையத்தளத்துக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்..

    நான் அடிக்கடி தங்களுக்கு மட்டும் சொல்லும் பொன்மொழியை இன்று நினைவுப்படுத்த விரும்புகிறேன் அப்பா..

    குருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை..

    ஆம் பா தங்களுடன் கணினித்தமிழ் பயணத்தில் மூன்று ஆண்டுகள் பயணித்தேன் அதன் மூலம் நான் கற்றுக் கொண்டதை விட எடுத்துக் கொண்டவை அதிகம் என்று நினைக்கிறேன்.தங்களின் இந்த நேர்காணல் பற்றி என்னிடம் சொல்லும் போது நான் தங்களின் தமிழ்த்துறை சார்ந்த ஐயங்கள் இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் முழுமையாக படிக்கும் போது தான் தெரிகிறது தங்களின் மொழியின் துணையுடன் கணினியின் மீது தாங்கள் கொண்ட காதலின் எல்லையை அறிந்து கொண்டேன் அப்பா..

    அன்று முதல் இன்று வரை தமிழ்த்துறை ஆசிரியர்கள் என்றாலே தமிழில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்கள் என்று எண்ணினேன். ஆனால் ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியர் கணினியின் மொழியை கூட தமிழில் சொல்ல முடியும் என்றில்லாமல் செயலாற்றவும் முடியும் என்று தங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

    ஒவ்வொரு வரியையும் வாசிக்க வாசிக்க இல்லை சுவாசிக்க சுவாசிக்க நான் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளேன் என்று அறிந்து கொண்டேன்.. ஒரு சிறந்த ஆசிரியர் என்பவரின் அடையாளமாக நான் கருதுவது நாளை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் இன்றைய தலைமுறைகளாக எங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் நபரே ஆசிரியர்கள்.. அவ்வகையில் தாங்கள் தலைச்சிறந்தவர் என்பதில் ஐயமில்லை..

    தங்களுடன் இருக்கும் நேரத்தில் பலவற்றையும் எடுத்து கொண்டேன் அதில் முதல் விசயம் தங்களின் பொன்னான நேரங்கள்.. அதை எவ்வளவு பயன்படுத்தினேன் என்று தெரியவில்லை.. தங்களின் இலட்சியப் பாதையில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை இந்நேர்காணலை பார்த்தவுடன் என்னுள் எழுந்தது ஐயம் தான் இது அப்பா..

    தாங்கள் பலமுறை என்னிடம் சொல்லும் வார்த்தை நான் ஆசிரியராக வழிக்காட்டுவதை விட வாழ்ந்து காட்டவே விரும்புகிறேன் என்று..ஆம் பா கணம் கணம் கனம் என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில் கணம் கணம் கற்றுக் கொண்டு அதனை வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ விரும்பும் அதிசய மனிதர் தான் நீங்கள் அப்பா.

    தங்களுடன் இருந்த இந்த மூன்று ஆண்டுகள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் நிறைந்த சுவடுகள் தான் பா..

    தங்களின் கணித்தமிழ் ஈடுபாட்டை முழுவதுமாக நான் அறிவேன் அப்பா.. எனது நிகழ்கால கலாம் அல்லவா தாங்கள். உங்கள் இலக்கை அடைய எனது அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றுமே தங்களுக்கு முதலில் சொல்லுவேன்.. ஒரு சிறிய வருத்தமே இனி அருகில் இருந்து கற்றுக் கொள்ள இயலாது என்பது மட்டுமே..

    தொலைவில் இருந்தாலும் வைரஸாக பின் தொடர்வேன் தங்களின் நச்சுநிரலாக அப்பா..

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அன்பரே.. வாழ்க நலமுடன் வளமுடன்..

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!