உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள்
உள்ளூராட்சித் தேர்தல் இலங்கையில்
நடைபெற்ற நாள் முதல் ஆட்சி தளம்பலடைந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி
மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஜனாதிபதி இக்கட்சிதானா
என்று நானறியேன்) ஆகியவற்றுக்கிடையிலான கூட்டாட்சி (நல்லாட்சி என்றும்
சொல்லலாம்) எப்போது கவிழுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில்
தோற்றுவித்திருக்கிறது இத்தேர்தல். மக்களும் ஆட்சி கலைவதைத்தான்
எதிர்பார்க்கிறார்கள்.
முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேராசைப்படாமல் இருந்திருந்தால் அநேகமாக
இவ்வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பதில் இலங்கை பொதுத் தேர்தலைச்
சந்தித்திருக்கக் கூடும். நாடும் உறுதியான, நிலையான ஆட்சியைப்
பெற்றிருக்கும். ஆனால் நடந்தது என்ன? ஜனாதிபதி யார், பிரதமர் யார்,
ஆளுங்கட்சி எது, எதிர்க்கட்சி எது என்று அரசியல்வாதிகளே குழம்பிப் போகுமளவு
நாடு முன்னேறியிருக்கிறது.
கடந்த
நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பும் தனித்து ஆட்சியமைக்க முனைப்புக் காட்டியிருந்த போதும் அது
நிறைவேறவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி
பிரதமரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் வெளியேற்ற முனைந்தபோதும்
அதுவும் நடக்கவில்லை. அனைத்துத் தரப்பினரும் வெளிப்படையாகவே அதிகாரப்
போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
மக்களுக்குப்
பல்வேறு உறுதிமொழிகளை இக்கூட்டாட்சி வழங்கியிருந்தாலும் ஒரு சிலவற்றைத்
தவிர ஏனையவற்றை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் இந்த
மூன்றாண்டு காலமும் அதிகாரப் போட்டி மறைமுகமாக இடம்பெற்று வந்தது.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் முத்தரப்பு அதிகார மோதலாக
மாறியிருக்கிறது.
மைத்திரிபால
சிறிசேன ஜனாதிபதிப் பதவியைத் தக்க வைக்க கடுமையாகப் போராட
வேண்டியிருக்கிறது. ரணிலும் மகிந்தவும் ஜனாதிபதி நாற்காலியைக்
கைப்பற்றிவிடத் துடிக்கின்றனர். வழக்கம் போல சிறுபான்மைக் கட்சிகள்
ஆட்சியின் பக்கம் அணிவகுத்து நிற்கின்றன. மக்களோ தம் வாக்குகள் செய்த
புரட்சியை எண்ணி மனம் நொந்து வாடிப்போயுள்ளனர்.
நிலையற்ற
தன்மையில் நடைபெறும் இந்த அரசாங்கம் மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மையைத்
தரப்போவதில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை
செலுத்தும். ஆகவே இரு கட்சிகளும் தமது அதிகாரப் போட்டியைப் புறந்தள்ளி
பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்வதே நல்லாட்சி அரசாங்கமாக நாட்டுக்குச்
செய்யும் நன்மையாக இருக்கும்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்