முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 01
முனைவர்
 இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், 
தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. 
குணசீலன். 'வேர்களைத் தேடி' 
என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் 
கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு 
கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் 
தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்'
 இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ 
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணல் உங்களுக்காக:
சிகரம் : உங்களை நமது வாசகர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
குணசீலன்
 : முனைவா் இரா.குணசீலன் சங்க இலக்கியத்திலும், கணினித் தமிழ் 
வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ்த்துறையில் 
எம்.ஏ., எம்.ஏ.எம்.பில்., பி.எச்டி., முடித்து, யுஜிசி நடத்தும் நெட் 
தேர்விலும் தேர்ச்சியடைந்தவர். பத்து ஆண்டுகளாக தமிழ்த்துறைப் 
பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி வருபவர். 
சங்க ஓவியங்கள், உயிருள்ள பெயர்கள் என சங்க இலக்கியங்கள் தொடர்பாக இரண்டு 
நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் 30 
கட்டுரைகள் வழங்கியதோடு இணையத்தமிழ் மாநாட்டிலும் கட்டுரை 
வழங்கியிருக்கிறார்.
www.gunathamizh.com
 என்ற வலைப்பதிவின் வழியாக 10 ஆண்டுகளாக சங்கஇலக்கியம் தொடர்பான செய்திகளை 
வெளியிட்டு வருகிறார். இந்த இணையதளத்தைப் பாராட்டி தினமணி, ஆனந்தவிகடன் 
இதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இவ்விணையதளத்துக்கு 
அமெரிக்காவில் இயங்கும் தமிழ்மணம் என்ற இணையதளம் விருது வழங்கியுள்ளது. 
தமிழில் சங்க இலக்கியப் பொன்மொழிகளைக் குறுஞ்செயலிகளாகவும் 
வெளியிட்டிருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்துறையுடன் இணைந்து தொடர்ந்து 
இரண்டு ஆண்டுகளாக ஒப்பிலக்கிய நோக்கில் பன்னாட்டுக் கருத்தரங்குகளின் 
ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். 
சிகரம் : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் எத்தகைய பங்கை வகிக்கிறது?
குணசீலன்
 : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் அடித்தளமாகவே அமைகிறது. 
ஏனென்றால் ஒரு மனிதன் இன்றைய பணியை இன்றைய கருவிகொண்டு செய்யவேண்டும். 
இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்க்கை 
நலிவடையும். காலத்திற்கேற்ற தொழில்நுட்பம் அதற்கேற்ற கலைச்சொல்லாக்கம் என 
ஒரு மொழியை வளப்படுத்தவேண்டும். அறிவியல் துறைகள் யாவும் தாய்மொழியிலேயே 
படிக்கவேண்டும். 
மொழி என்பது ஒரு இனத்தின், பண்பாட்டின் அனுபவத்தின் 
அடையாளம். அதை உணராமல் நம்மைச் சுற்றி நிகழும் தொழில்நுட்பங்களை ஆங்கில 
மொழியைக் கொண்டே பயன்படுத்துவதால் மீண்டும் நாம் ஆங்கிலேயருக்கு 
அடியாகத்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். நான் கணினி, இணையம், 
சமூகத்தளங்கள், திறன்பேசி என நுட்பியல் பயன்பாடுகள் யாவும் தமிழிலேயே 
பயன்படுத்துகிறேன். நாம் எல்லோரும் இந்த மனநிலைக்கு வந்தால் தமிழ் 
வையத்தலைமை கொள்ளும்.
சிகரம் : புதுக்கவிதைகளின் வருகை மரபுக்கவிதைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக உணர்கிறீர்களா? 
குணசீலன்
 : காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து 
வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை 
என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் 
இருக்கும். பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல 
பாவடிவங்களைக் கையாண்டனர். அதனால் புதுக்கவிதை என்பது காலத்திற்கேற்ற 
வடிவம் என்று கருதுகிறேன். இதை ஆதிக்கம் என்று கருதவில்லை. 
மரபுக்கவிதைகளில் இலக்கண எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு கருத்துக்கள் 
முழுமையாக சென்று சேர இயலாத நிலை ஏற்படுகிறது. இருந்தாலும் திருக்குறளோ, 
சங்கஇலக்கியமோ இன்னும் நிறைய மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் தொட இயலாத 
உயரங்களைத் தொட்டு காலத்தை வென்று நிற்கின்றன. அதனால் எத்தனை காலங்கள் 
ஆனாலும் புதுக்கவிதைகளால் மரபுக்கவிதைகளை ஆதிக்கம் செய்ய இயலாது. ஏனென்றால்
 மரபுக்கவிதைகளின் இன்றைய வடிவமே புதுக்கவிதை என்பது என் கருத்து.
சிகரம்
 : "தற்போது தமிழ் மொழியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கூகிள், 
மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் என எல்லாம் தமிழில் கிடைக்கிறது. நாமும் 
மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறோம். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது. 
அதாவது இவர்கள் பயன்படுத்தும் சொற்களை முறைமைப்படுத்த முறையான அமைப்பு 
ஒன்று இல்லை. ஆகவே ஏதாவதொரு சொல்லுக்கு அவர்கள் வழங்குவதே இறுதியான 
தமிழாக்கமாக இருக்கும். இது நம் மொழியை மேல் நாட்டவர்களின் கைகளுக்கு 
கொண்டு சேர்த்துவிடும்! தமிழ் மொழியை சத்தமின்றி அடிமையாக்கும் பணியை 
பெருவணிக நிறுவனங்கள் செய்து வருகின்றன." - இக்கூற்றை 
ஒப்புக்கொள்கிறீர்களா? 
குணசீலன்: தற்போது மென்பொருள்கள், 
குறுஞ்செயலிகள், சமூகத்தளங்கள் என பல நிலைகளிலும் தமிழ் வளர்ந்து வருவது 
மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தாலும் அதை எத்தனை தமிழர்கள் 
பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விக்கிப்பீடியாவில்
 தமிழ் இப்போதுதான் ஒரு லட்சம் கட்டுரைகளைக் கடந்துள்ளது. ஆங்கிலத்தில் 
இலட்சக்கணக்கில் கட்டுரைகள் உள்ள நிலையில் தமிழில் கோடிக்கணக்கில் 
எழுதுவதற்கான களங்கள் உள்ளன. காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் 
மொழி தமிழ். அதனால் எக்காலத்திலும் தமிழை யாரும் 
அடிமைப்படுத்திவிட முடியாது. தமிழ் மொழியை உணர்ந்த யாரும் தமிழுக்கு 
அடிமையாவார்களே தவிர தமிழை அடிமைப்படுத்த மாட்டார்கள். 
இன்று பன்னாட்டு 
வணிக நிறுவனங்கள் பார்வையில் தமிழர்களை நல்ல சந்தையாகப் (மந்தையாக) 
பார்க்கிறார்கள். “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாரவண்டி இழுக்கிறது கொம்பை 
மறந்த மாடு” என்பார் காசியானந்தன். அதுபோல தமிழ் மொழியின் பெருமையை உணராத 
தமிழர்களால் தான் தமிழின் பெருமை இன்னும் பெரிய உயரத்தை அடையாமல் 
இருக்கிறது. தொழில்நுட்பத்தால் தமிழை அடிமையாக்கவேண்டும் என யார் 
நினைத்தாலும் அது பகல் கனவாகவே இருக்கும். ஏனென்றால் தமிழ் மொழியின் இயல்பு
 அது. 
ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் கொண்ட மொழி அது. 
வேர்ச்சொற்களின் பெருமையை மொழிஞாயிறு பாவாணர் தம் கட்டுரைகளில் அழகுபட 
மொழிந்துள்ளார். இப்போது தமிழர்க்குத் தேவை விழிப்புணர்வு. அந்த 
விழிப்புணர்வு இல்லாமையால்தான் கணினி, இணையம், திறன்பேசி என பல்வேறு 
நுட்பங்களிலும் அமெரிக்கா, சீனா, கொரியா என பல நாடுகளின் ஆதிக்கம் உள்ளது. 
தமிழர்கள் யாவரும் தமிழிலேயே நுட்பியல் கருவிகளைப் பயன்படுத்துவோம். தமிழ் 
நுட்ப வசதியில்லாத எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் தமிழர்களிடம் வரவேற்பு 
இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தமிழின் நிலையை உலகு அறியும்.
சிகரம் : 
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழர்கள் வாழ்வில் மட்டுமல்லாது உலக 
மக்களின் வாழ்க்கையிலும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முக்கிய 
இடத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் புத்தாண்டு உள்ளிட்ட 
கொண்டாட்டங்கள் வெவ்வேறாகவே இருந்து வருகின்றன. வணிக நிறுவனங்கள் கூட 
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கே முக்கியத்துவம் அளித்து 
வருகின்றன. இது மொழி ரீதியான கலாச்சாரத்தை ஒரு காலகட்டத்தில் இல்லாதொழித்து
 விடும் அபாயமல்லவா? 
குணசீலன் : ஒரு மொழியை அழித்தால் இனம் தானாகவே
 அழிந்துவிடும். அவ்வாறு தமிழை அழிக்கும் முயற்சியே இது. ஆங்கிலம் அறிவு 
என்றும் சிவப்பு என்பது அழகு என்றும் மூளைச் சலவை செய்யப்பட்டது போலத்தான் 
இந்த புத்தாண்டு தொடர்பான நிகழ்வுகளும் நடக்கின்றன. ஏப்ரல் மாத முதல்நாளை 
முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவதுபோல வரலாற்றில் எதிர்காலத்தில் இந்த 
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்களாகவே பார்க்கும் நிலை வரும்.
சிகரம் : 'தொழிநுட்ப வளர்ச்சி கலாச்சார அழிவிற்கு வித்திடும் காரணி' என்னும் கூற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
குணசீலன்
 : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரம் என்பது தன்னைப் 
புதுப்பித்துக்கொள்கிறது என்பது தான் எனது பார்வை. தம்மின் தம்மக்கள் 
அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிதல்லவா. இவ்வளவு நுட்பியல் 
வளர்ச்சியிலும் ஏறுதழுவுதல் என்ற மரபுக்காக ஏன் போராடுகிறார்கள். அந்தப் 
போராட்டத்துக்கு சமூக தளங்களும் நுட்பியல் வளர்ச்சிகளும் எவ்வளவு 
துணைநின்றன என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் பற்றியும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றியும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 
குணசீலன்
 : அறிவு மொழி எல்லைகளைக் கடந்தது. எல்லா மொழிகளிலும் அறிவுச் செல்வங்கள் 
உள்ளன. மொழிபெயர்ப்பு வழிதான் பிற மொழிகளின் அறிவுச் செல்வங்களை 
அறிந்து கொள்ளமுடிகிறது. சீனம், கிரேக்கம், இலத்தீன் என பல்வேறு மொழிகளுடனும்
 தமிழ் மொழி இலக்கியங்களை ஒப்பிட்டு நோக்கமுடிகிறது. மொழிபெயர்ப்பு 
இலக்கியங்கள் எந்த அளவுக்கு ஒரு மொழியில் பெருகுகின்றனவோ அந்த அளவுக்கு 
அம்மொழி வளம்பெறுகிறது.
சிகரம் : புத்தக வாசிப்பு குறைந்து வருவது தொழிநுட்ப வளர்ச்சியா அல்லது மொழியறிவின் வீழ்ச்சியா? 
குணசீலன்
 : புத்தக வாசிப்பு குறைவது தொழில்நுட்ப வளர்ச்சியே தவிர மொழியறிவின் 
வீழ்ச்சி அல்ல. ஒலிநூல், மின்னூல், காணொளி என அறிவுத்தளம் 
விரிவடைந்துள்ளது. நூல்களே அறிவு என்ற எல்லை இன்று விக்கிப்பீடியா, கூகுள் 
தேடல், வர்டுவல் ரீடிங் ரூம், வீட்டில் என மாறினாலும் வாசிப்பு மாறவில்லை 
என்பதை நாம் உணரவேண்டும் 
சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா?
குணசீலன்
 : நல்ல வாக்காளர்களால் தான் நல்ல அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். நல்ல 
அரசியல்வாதிகளால்தான் நல்ல சமூகம் உருவாகிறது. நல்ல சமூகத்தில் தான் மொழி 
வளர்ச்சியடைகிறது. ஒன்றைச்சார்ந்துதான் இன்னொன்று அமைகிறது. இதை 
ஒவ்வொருவரும் உணரவேண்டும், உணர்த்தவேண்டும். சாதாரண மக்களால் சாதாரண 
அரசியல்வாதிகளைத் தான் உருவாக்க முடியும். மாற்றத்தை விரும்பும் 
ஒவ்வொருவரும் முதலில் தாம் முழுமையாக மாறவேண்டும். இருள் இருள் என 
சொல்லிக்கொண்டே இருப்பதைவிட ஒரு சிறு விளக்கேற்றிவைப்பது மேலானது. 100 
சாதாரணமானவர்களை மாற்ற ஒரு நல்ல சிந்தனையாளர் போதும். உலக புரட்சியாளர்கள் 
வரலாறுகளை வாசித்தால் இவ்வுண்மை புலப்படும்.
சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாடு குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. அது குறித்து சற்று விளக்க முடியுமா? 
குணசீலன்
 : மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த 
இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட 
இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும்
 கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை 
வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றை 
வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற 
முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று 
அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் 
கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். வளர்ந்துவரும் 
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் 
காலத்தின் தேவையாகிறது.
சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் இயந்திரங்களுக்கு அறிவை வழங்குவது ஆபத்தான செயலல்லவா? 
குணசீலன்
 : ஒருமுறை அப்துல் கலாம் அவர்களிடம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கணினிகள் 
எப்படி இருக்கும் என்ற வினா கேட்கப்பட்டது . அதற்கு அவரளித்த பதில், 'இன்றைய
 கணினிகளைவிட 20 மடங்கு ஆற்றலுடையதாக இருக்கும் என்றும் அன்றைய மனிதனின் 
மூளை அக்கணினியை விட 20 மடங்கு ஆற்றலுடன் இருக்கும்' என்றும் பதிலளித்தார். 
அக்கருத்தையே நானும் தங்களுக்குப் பதிலாக வழங்குகிறேன் 
சிகரம் : செயற்கை நுண்ணறிவுத் திறன் தமிழ் மொழி மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் எத்தகைய பங்கை வகிக்கக் கூடும்? 
குணசீலன்
 : செயற்கை நுண்ணறிவுத்திறன் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை 
இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகள் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில்
 சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக 
இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் 
காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி 
அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும்
 அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், 
ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த 
தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ 
தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் 
இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை 
அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் 
மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது. சுருக்கமாக 
சொன்னால், அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவையும் தமிழ் மொழியிலேயே 
பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். 
சிகரம் : தமிழ் மொழி எதிர்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்நோக்கக் கூடும்?
குணசீலன்
 : கணினியில் ஒருங்குறி என்னும் எழுத்துரிமை பெற்றாலும் அதை முழுமையாக 
உள்வாங்காத தமிழ் தலைமுறையினரால் தமிழ் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும்
 நிலை ஏற்பட்டுள்ளது. வர்டுவல் கம்யுட்டிங் போன்ற சமகால தொழில்நுட்ப 
மாற்றங்களுக்கு ஏற்ப கணினிக்கு தமிழ் பயிற்றவேண்டிய பெரும் சவால் நம் முன் 
உள்ளது. உலகமயமாக்கலால் ஆங்கிலத்தையே நம்பி வாழும் தமிழர்களுக்கு தமிழ் 
பயிற்றவேண்டிய அவல நிலையும் நம் மிகப்பெரும் சவாலாகவே அமையும் என்று 
கருதுகிறேன். 
சிகரம்: சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?
குணசீலன்
 : சமூகத்தளங்களைத் தாய்மொழியில் சரியான வழியில் பயன்படுத்துபவர்களுக்கு 
வரம்! பிறமொழியில் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சாபம்!
நட்பு வட்டம் விரிவடைய, துறைசார் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள, எதிர்வினைகளை உடனே அறிய, என பல நிலைகளில் சமூகத்தளங்கள் வரமாகவே உள்ளன. நேரத்தை மறந்து இதில் நாம் நம்மைத் தொலைக்கும்போதும் தவறான நட்பு வட்டம் விரிவடையும்போதும், இவை சாபமாகவும் அமைகின்றன.
சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா? 
குணசீலன்
 : மிக மிக எளிதானது. மொழியின் சிறப்பையும், தேவையையும் உணர்ந்தால் 
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது குறையும். பிறமொழிப் பயன்பாடு குறையக் 
குறைய தனித்தமிழ் சொற்களின் பயன்பாடு மிகும். அழகிய தனித்தமிழ் இயல்பாகவே 
வரும். 
சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன? 
குணசீலன்
 : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் காரணிகளாக நான் கருதுவது 
மைக்ரோசாப்ட், கூகுள், முகநூல், கட்செவி என பன்னாட்டு நுட்பியல் 
நிறுவனங்கள் யாவும் தமது எல்லா தயாரிப்புகளிலும் தமிழ் மொழிக்கு சிறப்பிடம்
 வழங்கி வருவதே. மக்கள் வளமுள்ள மொழி என்பதால் இவ்வாய்ப்பு 
வழங்கப்படுகிறது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சீனா, கொரியா போல 
எல்லா நிலைகளிலும் தமிழ் உயர்வடையும் என்பது என் எண்ணம். 
சிகரம்
 : மேலைத்தேய கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆழ ஊடுருவிவிட்டது. இது நம் 
கலாச்சாரத்தை அடியோடு அழித்து விடும். இதனை தடுத்து தமிழர் கலாச்சாரத்தை 
மீள நிலைநிறுத்துவது சாத்தியமா? சாத்தியமாயின் எவ்வாறு? 
குணசீலன்
 : தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் தான் உள்ளது. 
ஏறுதழுவல் பெயரால் கூடிய இளைஞர் கூட்டம் கூடியது அதற்காக மட்டுமல்ல, 
தமிழர் பண்பாட்டின் மீட்புக்கான போராட்டமாகவே கருதுகிறேன். கலாம் கனவு 
கண்டதுபோல, இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கவேண்டும். 
முனைவர் இரா.குணசீலன் அவர்களுடனான நேர்காணலின் இரண்டாம் பகுதியை அடுத்த வாரம் எதிர்பாருங்கள் - சிகரம் 
#092/2018/SIGARAMCO
2018/04/13
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE



 
 
 
 
 
 
 
 
நல்ல முறையிலெடுக்கப்பட்ட செவ்வி. வாழ்த்துகள் குணா
ReplyDeleteநன்றி முனைவரே
Deleteமுனைவருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteவாழ்த்துகளும் பாராட்டுகளும் அப்பா..மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்..
ReplyDeleteநன்றி வைசாலி
Deleteவிரிவான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. முனைவர். குணசீலனின் நேர்காணலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete