சரிகமபா ரமணியம்மாள்
வணக்கம் நண்பர்களே! இந்த ரியாலிட்டி ஷோ எனப்படும் வணிக நோக்குள்ள மெய்நிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் சிலவற்றை ரசிப்பதுண்டு. சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கும்.
என்னதான் நிகழ்ச்சிகளை ரசித்தாலும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு நிகழ்ச்சியிலும் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நடத்தும் திட்டம் மற்றும் அனுசரணையாளர்களின் எண்ணம் ஆகியவை வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.
ஜீ தமிழ் (ZEE TAMIL) தொலைக்காட்சியை நான் அதிகம் பார்ப்பதில்லை. ஜீ தமிழின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நான் அறவே வெறுக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியே ஜீ தமிழை என்னைப் பார்க்க விடாமல் தடுத்தது என்று கூட கூறலாம்.
ஜீ தமிழில் 'சரிகமபா' என்னும் சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது நீங்கள் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி 2017.04.14 சனிக்கிழமை அன்று இடம்பெற்றது. இறுதிப்போட்டிக்கு ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ரமணியம்மாள் என்பவரும் உள்ளடக்கம்.
அறுபத்தைந்து வயதிலும் தனது அற்புதமான குரல் வளத்தினால் அனைவரையும் கவர்ந்திருப்பவர். ரமணியம்மாளை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்ததில் என்ன வியாபார யுக்தி பின்னணியில் இருந்திருந்தாலும் அவரது திறமையை யாராலும் மறுக்க முடியாது. தனது சிறுவயதில் இருந்தே பழைய பாடல்களைக் கேட்டு தனக்குத்தானே பாடிப்பாடி திறமையை வளர்த்துக் கொண்டவர் ரமணியம்மாள்.
கணீரென்ற குரல். அபாரமான ஞாபக சக்தி. அபாரம். அற்புதம். ஆரம்பத்தில் நானும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. மனைவிதான் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தார். அவர் ரமணியம்மாளை பற்றி சொன்ன பின்பு தான் நானே நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினேன். அன்று முதல் ரமணியம்மாளின் ரசிகன் நான்.
திறமைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டியிருக்கும் மற்றுமோர் ஆளுமை. மனமிருந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். வீட்டு வேலை செய்து பிழைக்கும் சாதாரண பெண்ணாக இருந்தாலும் வயது அறுபத்தைந்தென்றாலும் எதையும் பொருட்படுத்தாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள் ரமணியம்மாள்!
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!