குளோபல் இ-20 கனடா - 2018 | கிரிக்கெட் திருவிழா!
ஐபிஎல் என்னும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல்-மே மாதங்களில் இவ்வருடம் இந்தியாவில் வெகு சிறப்பாக இடம்பெற்று முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. இந்த கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து ஜூன்-ஜூலை மாதங்களில் குளோபல் இருபது-20 கனடா - 2018 கிரிக்கெட் திருவிழா இடம்பெறவுள்ளது.
குளோபல் இருபது-20 கனடா - 2018 (GLOBAL T-20 CANADA) கிரிக்கெட் திருவிழாவின் முதலாம் பருவம் ஜூன் மாதம் 28 ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் நான்கு கனேடிய கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவார்கள். ஆறு அணிகள், 96 வீரர்கள், 22 போட்டிகள் இத்தொடரில் இடம்பெறும். ஜூலை 16 மேலதிக நாளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகள் அனைத்தும் கனடா, டொரொண்டோவில் (CANADA, TORONTO) அமைந்துள்ள மாப்பிள் லீப் கிரிக்கெட் கிளப் (MAPLE LEAF CRICKET CLUB) மைதானத்தில் இடம்பெறும். இம்மைதானத்தில் 7000 பேர் போட்டியை ரசிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட் பேரவை, மேற்கிந்திய கிரிக்கெட் சபை மற்றும் கனேடிய கிரிக்கெட் சபை ஆகியன குளோபல் இருபது-20 கனடா கிரிக்கெட் திருவிழாவை நிர்வகிக்கின்றன. இப்போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றும் இடம்பெற்றுள்ளது.
குளோபல் இருபது-20 கனடா - 2018 கிரிக்கெட் திருவிழாவில் டொரொண்டோ நேஷனல்ஸ் (Toronto Nationals), மொன்றியால் டைகர்ஸ் (Montreal Tigers), எட்மன்டன் ராயல்ஸ் (Edmonton Royals), வான்கூவர் நைட்ஸ் (Vancouver Knights) மற்றும் வின்னிபெக் ஹவ்க்ஸ் (Winnipeg Hawks) ஆகிய அணிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் பிரதிநிதித்துவ அணியும் பங்குபற்றவுள்ளன.
குளோபல் இருபது-20 கனடா - 2018 கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்றில் 15 போட்டிகளும் இரண்டாம் சுற்றில் 03 போட்டிகளும் பிளேஆப் சுற்றில் 03 போட்டிகளும் இறுதிப்போட்டியுமாக மொத்தம் 22 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இப்போட்டித்தொடரில் டொரொண்டோ நேஷனல்ஸ் (Toronto Nationals) அணிக்கு பில் சிம்மன்ஸ், வான்கூவர் நைட்ஸ் (Vancouver Knights) அணிக்கு டோனோவன் மில்லர், வின்னிபெக் ஹவ்க்ஸ் (Winnipeg Hawks) அணிக்கு வக்கார் யூனிஸ், எட்மன்டன் ராயல்ஸ் (Edmonton Royals) அணிக்கு மொகமட் அக்ரம் மற்றும் மொன்றியால் டைகர்ஸ் (Montreal Tigers) அணிக்கு டாம் மூடி ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அணி குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இத்தொடருக்கான வீரர்கள் தெரிவுக்காக 1600 வீரர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர். இவர்களில் 600 பேர் கனேடிய வீரர்களாவர். குளோபல் இ-20 கனடா - 2018க்கான வீரர்கள் 16 சுற்றுக்களில் 96 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் போல இத்தொடரும் விறுவிறுப்பாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். மேலதிகத் தகவல்களுக்கு சிகரத்துடன் இணைந்திருங்கள்.
#GT20Canada #T20 #IPL #CanadianCricket #குளோபல்இ_20கனடா_2018 #இருபது_20 #கிரிக்கெட் #Cricket #ICC #SixesInTheSixes #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #SigaramSports #சிகரம்ஆடுகளம் #சிகரம்
ஓ நீங்களும் கிரிக்கெட் பிரியரோ?:) அப்போ நான் ஓடிடுறேன்:))
ReplyDeleteநான் கிரிக்கெட் பிரியர் தான். அதுக்காக ஓடிடாதீங்க. நம்மகிட்ட இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கு. வாங்க பேசலாம்.
Delete