பயணங்கள் பலவிதம் - 05

ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு விலகுவதாகத் தீர்மானித்த நாளில் இருந்து ஒரே பயணமாகத்தான் இருக்கிறது. மனைவி தனது சேவையை விட்டு முழுமையாக விலகி சம்பள நிலுவை மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (Employee Trust Fund) ஆகியவற்றை கடந்த வாரம் பெற்றுக் கொண்டு ஞாயிறன்று (20/05) என்னுடன் ஊருக்கு வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை (22/05) ஹட்டனில் அமைந்துள்ள ஊழியர் சேமலாப நிதி (Employee Providement Fund) வழங்கும் திணைக்களத்திற்கு மனைவியின் நிதியை மீளப்பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக சென்றிருந்தோம். 

2018.05.22


அங்கு 'நீங்கள் கடைசியாக வேலை செய்த நிறுவனத்திற்கான படிவத்தை மட்டுமே இணைத்துள்ளீர்கள். இதற்கு முன் வேலை செய்த இரண்டு நிறுவனங்களினதும் படிவத்தையும் மேலும் சில படிவங்களையும் சமர்ப்பிப்பது அவசியம்' என கூறிவிட்டனர். ஆகவே மனைவி ஏற்கனவே வேலை செய்த சிலோன் பேப்பர் சேக்ஸ் மற்றும் சன் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களில் சேமலாப நிதிப் படிவங்களைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு நோக்கிப் பயணிக்கத் தீர்மானித்தோம்.

2018.05.22


மாலை நான்கு மணி புகையிரதத்தில் பயணிப்பதற்காக மாலை 03.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் கொட்டகலை புகையிரத நிலையத்தை நோக்கி வந்தோம். சரியாக குறிப்பிட்ட நேரமான 03.49 மணிக்கு கொட்டகலைக்கு புகையிரதம் வந்து சேர்ந்தது. வழமையாகத் தாமதமாக வரும் புகையிரதம் நேரத்திற்கு வந்தது எனக்கு சற்று ஆச்சரியத்தைத் தந்தது. 

2018.05.22


03.50 மணிக்கு கொட்டகலையில் இருந்து புகையிரதம் புறப்பட்டது. வழியில் எந்தவொரு தாமதமும் இருக்கவில்லை. புகையிரதத்தில் வடை விற்பவர் வந்தார். நூற்றியிருபது ரூபாய்க்கு வாங்கினோம். உழுந்து வடையில் உழுந்து போட்டதற்கான சுவையே தெரியவில்லை. எல்லாம் வியாபாரத் தந்திரம்.

2018.05.22


இரவு 06.45 மணியளவில் கடுகன்னாவை புகையிரத நிலையத்தைத் தாண்டிய போது முழுமையாக இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. மீரிகமை நிறுத்தத்தைத் தாண்டியதும் மழை ஆரம்பித்திருந்தாலும் அது புகையிரதத்தின் வேகத்தில் தாக்கம் செலுத்தவில்லை. காரணம் இறம்புக்கணை முதல் அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக இரட்டைப் பாதை அமைப்பு தான். என்றாலும் கடும் மழை என்றால் இவ்வளவு வேகத்தில் பயணிக்குமா என்பது சந்தேகம் தான். 

2018.05.22


மழைத்தூறல் சிறிது நேரத்தில் நின்று போனது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தூற ஆரம்பித்தது. அதுவும் சற்று நேரத்தில் நின்று போனது. இரவு 09.10 மணிக்கு கொழும்பை வந்தடைய வேண்டிய புகையிரதம் இரவு 09.30 மணிக்கே வந்து சேர்ந்தது. இருபது நிமிடத் தாமதம். ஆங்காங்கே நிகழும் சிறு சிறு தாமதங்களின் சேர்க்கை தான் இந்த இருபது நிமிடத் தாமதம். 

2018.05.22


மருதானை புகையிரத நிலையத்தில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். நாங்கள் கொழும்புக்கு வரும் எல்லா நேரங்களிலும் மருதானையிலேயே இறங்கி விடுவோம். ஏனெனில் மருதானையில் இருந்து இருப்பிடத்திற்கு சென்று சேர்வது இலகுவானது. மருதானைக்கு அடுத்த நிறுத்தம் தான் கொழும்பு கோட்டை தரிப்பிடம். ஐந்து நிமிடப் புகையிரதப் பயணம் தான். மருதானையில் இருந்து மாதம்பிட்டியவில் அமைந்துள்ள எனது பெரியம்மாவின் (அம்மாவின் அக்கா) வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றோம். உறவினர்களுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றோம்.

2018.05.22


மறுநாள் காலை (2018.05.23) நான், மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் தயாராகி மனைவி முன்பு தொழில் புரிந்த சிலோன் பேப்பர் சேக்ஸ் நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கு என்னையும் குழந்தையையும் நிறுவன அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆகவே நாங்கள் நிறுவன வாயிலில் அமைந்துள்ள காவலர் அறையில் காத்திருந்தோம். மனைவி மட்டும் அலுவலகத்திற்குச் சென்று தனது பணிகளை நிறைவு செய்து கொண்டு வந்தார். பின்பு ஈஸ்வரன்பிரதர்ஸ் நிறுவனக் குழுமத்தின் நிறுவனங்களான ஈஸ்வரன் பிரதர்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் சன் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சென்று தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டு வந்தோம்.

2018.05.22


அங்கிருந்து புறப்பட்டு பகல் உணவுக்காக கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கேஎப்சிக்கு (KFC) சென்றோம். கோழி உணவு (Chicken Buriyani Regular) இரண்டும் கோழித் துண்டுகள் (Crispy Chicken) இரண்டும் பெப்சி ஒன்றும் வாங்கிக் கொண்டோம். மொத்த விலை 1150 ரூபாய்! இதையெல்லாம் எப்போதாவது ஆசைக்கு வாங்கிச் சாப்பிட்டால் தான் உண்டு. ஆத்தீ... என்னா விலை? 

அதன் பின் மனைவியின் அண்ணா வீட்டுக்கு சென்றோம். அன்று இரவும் அங்கேயே தங்கினோம். அடுத்த நாள் காலை (2018/05/24) ஊழியர் சேமலாப நிதிப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்காக நாரஹேன்பிட்ட செல்லத் தயாரானோம். காலை வேளையிலேயே மழை பெய்து கொண்டிருந்ததால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தோம். எதிர்பார்த்ததை விட விரைவாக படிவங்களைச் சமர்ப்பித்து தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டோம். பிறகு லேடி ஜே (Lady J) பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டோம். மாலை நேரமளவில் மீண்டும் மனைவியின் அண்ணா வீட்டுக்கு சென்றோம். 

2018.05.25


மறுநாள் 25ஆம் திகதி காலை 08.30 புகையிரதத்தில் பயணிப்பதற்காக தயாராகி புகையிரத நிலையம் சென்றோம். நாம் அங்கு செல்லும் போது நேரம் 08.20 மணி. அப்போது நாம் செல்ல வேண்டிய புகையிரதம் மேடையில் நின்றது. ஆனால் நாம் செல்வதற்கு முன்பாகவே ஆசனங்கள் எல்லாம் நிரம்பி விட்டன. சற்று நேரம் சிந்தித்து விட்டு காலை 09.45 க்குப் புறப்படும் புகையிரதத்தில் பயணிக்கத் தீர்மானித்தோம். 

2018.05.25


ஆகவே இருந்த இடைவேளையில் காலை உணவை முடித்துக் கொண்டோம். முன்பதிவு செய்யப்படாத புகையிரதப் பயணச் சீட்டு கொடுக்கப்படும் நாளில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால் தான் நாங்கள் அடுத்த புகையிரதத்திற்காகக் காத்திருந்தோம். காலை 09.35 மணிக்கு எங்களுக்கான அடுத்த புகையிரதம் மூன்றாம் மேடைக்கு வந்து சேர்ந்தது. நான் ஒரு பெட்டியில் இடம் பிடிக்க மனைவி மற்றொரு பெட்டியில் இடம் பிடித்தார். 

2018.05.25


பிறகு மனைவி இடம்பிடித்த இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கே சென்று விட்டேன். எனது மனைவியின் அண்ணாவின் மனைவி மற்றும் அவரது அம்மா ஆகியோரும் எங்களோடு புகையிரதப் பயணத்தில் இணைந்திருந்தனர். ஆனால் அவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தனர். அவர்களின் வீட்டில் தான் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கியிருந்தோம். காலை 09.51க்கு புகையிரதம் பயணத்தைத் துவங்கியது. 

2018.05.25


காலை வேளையில் மழை இல்லாவிட்டாலும் பல இடங்களில் மழையின் தாக்கத்தை அவதானிக்க முடிந்தது. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது கவலையளிப்பதாக இருந்தது. 

2018.05.25


ஆரம்பத்தில் ஆசனங்கள் நிறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. ஆகவே நாங்கள் உலப்பனை புகையிரத நிலையத்தில் வைத்து நாங்கள் மனைவியின் அண்ணி பயணித்த மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு மாறினோம். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்கிற அடிப்படையில் இதுவும் தவறில்லை. நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பகல் உணவு விற்றுக் கொண்டிருந்தனர். மூன்று உணவுப் பொதிகளை வாங்கினோம். சிவப்பரிசிச் சோறும் முட்டைக் கறியும் கறிக்கொச்சிக்காய் கறியும் ஒரு கீரையும். ஒரு சாப்பாடு நூற்றைம்பது ரூபாய்!

2018.05.25


பகல் 02.30க்கு கொட்டகலை புகையிரத நிலையத்தில் வந்து இறங்கினோம். மனைவியின் அண்ணியும் அம்மாவும் நானுஓயா நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்தனர். நாம் புகையிரத நிலையத்தில் இருந்து நகரத்துக்கு நடந்து வந்து முச்சக்கர வண்டி ஒன்றைப் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

2018.05.25


வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் நமக்குப் புதிய புதிய அனுபவங்களை வழங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிறு சிறு அனுபவங்களின் தொகுப்பே நமது வாழ்வு. இந்த அனுபவங்களை சேமித்து வைப்பது நமது எழுத்துக்களும் புகைப்படங்களும் தான். நினைவு கூட தப்பலாம், எழுத்துக்கள் இலக்கியமாகி எதிர்கால சந்ததிகளோடு உரையாடும். நண்பர்களும் தங்கள் அனுபவங்களை எழுத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாமும் எழுத்துக்களின் வழி உரையாடலாமே?

#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

Comments

  1. சிறப்பான பயணம். பயணம் பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகிறது. ஆதலினால் பயணங்கள் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. பயணங்களை விட சிறந்த அனுபவம் வேறில்லை. நன்றி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!