சிகரத்துடன் சில நிமிடங்கள் : யாழ்பாவாணன்
சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப் பதில்கள்!
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன்.
நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன். நம் தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேணச் சிறந்த நூல்கள் தேவை என்பதை உணர்ந்து, அறிஞர்களின் சிறந்த பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியிலும் இறங்கி உள்ளேன். உலகெங்கும் வாழும் தமிழர் படித்து முன்னேறவும் தமிழரல்லாத ஏனையோரும் தமிழைக் கற்பதற்கு உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர மின்நூல் களஞ்சியங்களையும் பேணுகிறேன்.
எனது தளங்கள்:
கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு படைப்பு நல்லதா? கெட்டதா? என்பதை வாசகர்களே தீர்மானிக்கின்றனர். நான் ஒரு வாசகர் என்ற வகையில், வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் படைப்புகள் சிறந்தவை. அதேவேளை, அவை மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்லவும் வேண்டும்.
மக்கள் / வாசகர் உள்ளங்களை ஈர்த்துக்கொள்ளும் படைப்பு எதுவோ அதுவே நல்ல படைப்பு! அதாவது, நல்ல படைப்பு மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டே இருக்கும். எ-கா: கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள்.
கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?
தமிழ் மக்களின் பக்கம் "ஒற்றுமையின்மை" என்ற நோயுள்ளவரை விடியல் என்ற பேச்சுக்கு இடமேயில்லை.
அங்காடியில் (சந்தையில்) பொருட்களின் விலை பேசுவது போல அதாவது உயர்ந்த விலை கிட்டாதது போல ஆளுக்கொரு கட்சியாக ஆளுக்கொரு கொடியைத் தூக்கிக்கொண்டு அரசியல் பேசினால் தமிழ் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டுவதில்லையே!
ஒரே தலைமை, ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தமிழ் மக்களின் உயரிய தீர்வு என ஓரணியில் மக்கள் அணி திரளாத வரை அதாவது ஒரு குடையின் கீழ் ஒன்றிணையாத வரை தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரக்கூடிய அரசியல் சூழ்நிலை அமையாது.
மக்களே பெரியவர்கள், மக்களின் விருப்பமே உயர்ந்தது என மக்களுக்காக அரசியல்வாதிகள் கீழிறங்கி வந்து மக்களோடு மக்களாக மக்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வந்தால் தமிழ் மக்கள் உலகையே ஆளும் சக்தி பெற்றவர்களாக வாழலாம்.
ஒருவர் தனித்து வாழ முடியாது, மக்களாயத்தின் (சமூகத்தின்) ஓர் உறுப்பினராகவே வாழ இயலும். மக்கள் கட்டமைப்பைப் பேணுவதன் மூலமே வளர்ச்சியை நோக்கி நகர முடியும்.
எனவே, மக்களிடையேயான தொடர்பாடல் ஊடகமாக மொழி தான் முக்கிய பங்கெடுக்கிறது. மொழியின்றி எந்த வெளியீடும் இடம்பெறாதே! மக்கள் முன்னேற்றக் கருத்தாடல்களைப் பகிரவும் செயல்களை மொழி பெயர்க்கவும் மொழியே ஊடகம். எனவே, மக்கள் நல மேம்பாட்டிற்கு மொழி முக்கிய பங்காற்றுகிறது.
கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?
எனது வாழ்வில் இலக்கு என்று சொல்ல நிறைய இருந்தாலும் நான் கற்றதைப் பலரறியச் செய்வதே என் பணி! அதாவது, கற்றலும் கற்பித்தலுமே எனது நெடுநாள் இலக்கு என்பேன்.
அதற்கான ஊடகமாகப் பாப்புனைதல் (கவிதையாக்கம்), உளநல மதியுரையும் வழிகாட்டலும் என வலை வழியேயும் மக்கள் முன்னிலையிலும் மேற்கொள்கிறேன். மேலும், மின்நூல்களும் அச்சு நூல்களும் வெளியிட்டுப் பிறருக்கு அறிவூட்டும் பணியைத் தொடருகிறேன்.
கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?
கடந்து வந்த வழிகள் எங்கும் தான்
கல்லும் முள்ளும் காலைத் தைத்தன
கடந்து வந்த வழியிலே கற்றவை தான்
கடந்து செல்ல வேண்டிய வழியைக் காட்டுமே!
நாம் கடந்த கால வரலாற்றைப் பேணியவாறே, மாறும் உலகிற்கேற்ப எமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, கடந்த கால வரலாற்றைப் பாதுகாப்பதோடு எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இன்றைய நிகழ்காலம் தானே, நாளைக்குக் கடந்த கால வரலாறு ஆகிறதே!
கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?
வாசிப்புப் பழக்கம் கணினி நுட்பம் வந்த பின் அதிகரிக்க வில்லை; வாசிப்புப் பழக்கத்தைக் குறைத்து விட்டது எனலாம். காரணம் ஒலி (Audio), ஒளிஒலி (Video) பதிவுகளை விரும்புவதால் வாசிப்பை நாடுவோர் குறைவு. அதற்காக வாசிப்புப் பழக்கம் அழிந்துவிடப்போவதில்லை.
ஆயினும் பாடசாலை மட்டத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதால் வாசிப்புப் பழக்கம் தொடரும். வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பல பணித்திட்டங்களை அறிமுகம் செய்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்காது விட்டால் வாசிப்புச் செயல் சோர்வடைய இடமுண்டு.
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?
மக்களாய (சமூக) வலைத்தளங்கள் ஒரு போதும் வரமாக மாட்டாது. சிறந்த படைப்பாளிகளை மங்கிப் போகச் செய்வதால் சாபமே! ஆயினும் அவை செய்தியைப் பரவச் செய்யும் ஊடகமே! அதிலும் போலிச் செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்பிக் கலகம் செய்யத் தூண்டும் ஊடகங்களே! தேடல் உள்ளவர்கள் நல்லதைப் பொறுக்கித் தம்மை மேம்படுத்த இவற்றைப் பாவிக்கலாம். ஆனால், நல்ல பதிவுகளைத் தங்களுடையதெனப் பகிரும் கெட்ட செயல் நன்மை தரமாட்டாதே! நன்மை கருதி நல்லொழுக்கமாகப் பேணினால் நன்மை உண்டு.
கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?
நான் பாவலன் என்பதால், பாப்புனையப் பழகியதே மு. மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' போன்ற அவரது நூல்களைப் பார்த்தே! பாவரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" பத்துப் பாகமும் படித்தேன். கவிஞர் வைரமுத்துவின் "என் பழைய பனையோலை" என்ற நூல் படித்தேன். இப்படிப் பல நூல்களைப் படித்துள்ளேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் யாரென்றால், அதிக வாசகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் எல்லோருமே! காரணம், அவர்களைப் போல நானும் வாசகர்களை வசப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாலே!
கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?
'தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்றால் தமிழ் வாழாது. தமிழில் எழுதுவதும் பேசுவதும் பழகுவதும் வழக்கமாக்கினால், பிறமொழி கலக்காது தமிழைப் பயன்படுத்தினால் போதாது. பெற்றோர் பிள்ளைகளைத் தமிழ் மொழி மூலக் கல்வி திட்டத்தில் இணைப்பதோடு, 24 மணி நேரமும் பிள்ளைகளோடு தமிழில் உறவாட வேண்டும். அதன் பின் தமிழின் சிறப்பை உலகெங்கும் பரப்பிப் பேணவேண்டும்.
இவ்வண்ணம்
-சிகரம்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #யாழ்பாவாணன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Interview #Q&A
#SIGARAM #சிகரம்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #யாழ்பாவாணன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Interview #Q&A
#SIGARAM #சிகரம்
மிக அருமையான பதில்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete