BB Tamil 2 | Week 07 | Day 44 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 44 | சர்வாதிகாரி ஐஸ்வர்யா
இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு நெஞ்சு பக் பக் என்று இருக்கிறது. காரணம் தங்கத் தலைவி ஐஸ்வர்யா. ஆரம்ப கட்டத்தில் குழந்தையாக இருந்தவர் இப்போதெல்லாம் ஆங்கிரி பேர்ட் ஆக மாறி ருத்ர காளியாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு நாளின் முன்னோட்டக் காணொளிகளும் படு பயங்கரமாக இருக்கின்றன.
நிற்க 43ஆம் நாளின் காட்சிகளே இன்றும் தொடர்கின்றன. மாலையில் வெளியேற்றப் பரிந்துரை. முற்றத்தில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் கரும்பலகையில் வைக்கப்பட்டிருக்கும். வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் புகைப்படங்களை எடுத்து காரணங்களை சொல்லி அரைக்கும் இயந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும்.
ஒவ்வொருவராக தங்கள் எண்ணங்களை கூறுகின்றனர். தனது முறை வந்த போது பாலாஜி பிக் பாஸ் தன்னை அழைத்துப் பேசினால் மட்டுமே தனது பரிந்துரையைக் கூறுவேன் என அடம் பிடிக்கிறார். ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார் போல. மற்றைய போட்டியாளர்கள் சமாதானம் பேசியும் வேலைக்கு ஆகவில்லை.
மூன்று மணித்தியாலம் ஆகியும் பாலாஜி தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. பிக் பாஸும் அழைக்கவில்லை. இரவு பதினோரு மணி. யாஷிகா வயிற்று வலியால் துடிக்க அவரை ரகசிய அறைக்கு அழைத்து வருமாறு கூறுகிறார் பிக் பாஸ். பாலாஜிக்கு அடுத்த போட்டியாளர் வெளியேற்றப் பரிந்துரைக்கு அழைக்கப்படவில்லை.
இரவு 11.30க்கு பேசும் பிக் பாஸ் வெளியேற்றப் பரிந்துரை முடிந்த பிறகு பாலாஜி தன்னை சந்திக்கலாம் என்று கூறுகிறார். அதனை அடுத்து ஷாரிக் மற்றும் பொன்னம்பலத்தை பரிந்துரை செய்கிறார். மஹத் மாலையில் பாலாஜியைப் பற்றி பேசிய வார்த்தைகள் பாலாஜியைக் காயப்படுத்தி இருக்கின்றன. இதனால் மஹத் தன்னைத் தானே கன்னத்தில் அறைந்து கொண்டு அழுகிறார்.
நள்ளிரவு 12.15க்கு வெளியேற்றப் பரிந்துரை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தவாரத் தலைவி ஐஸ்வர்யா, கடந்த வார போட்டியின் மூலம் சென்றாயன் மற்றும் யாஷிகா ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பொன்னம்பலம், மும்தாஜ், மஹத், ரித்விகா, பாலாஜி மற்றும் ஷாரிக் இந்தவாரம் வெளியேற்றப் பரிந்துரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
44ஆம் நாள். இன்று சென்றாயனுக்குப் பிறந்த நாள். பிக் பாஸ் கேக் அனுப்பி இருந்தார். போட்டியாளர்கள் வாழ்த்தி கேக்கை வெட்டினார்கள். பாலாஜி இன்றும் கவலையுடனே காணப்பட்டார். நேற்று பாலாஜியை பிக் பாஸ் அழைத்துப் பேசினாரா தெரியவில்லை. அது தொடர்பான காட்சிகளும் காண்பிக்கப்படவில்லை.
'ராணி மகா ராணி' போட்டி இந்த வார பொருட் கொள்வனவிற்கான போட்டி மாலையில் துவங்குகிறது. ஐஸ்வர்யா சர்வாதிகாரி. டேனியல் பாதுகாப்பு அதிகாரி. ஜனனி ஆலோசகர். இந்த பிக் பாஸ் வீட்டை சர்வாதிகாரத்துடன் தனக்கென சட்ட திட்டங்களை உருவாக்கி ஆளும் முழு அதிகாரம் ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லாரையும் வச்சு செய்ய பிக் பாஸ் முடிவெடுத்து விட்டார் போல.
ஐஸ்வர்யா தனக்கென ஐந்து சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். தனக்கான உணவை சமைத்துத் தருமாறு பொதுமக்களுக்கு ஆணையிட வேண்டும். பொதுமக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் ஐஸ்வர்யா தான் தீர்மானிக்க வேண்டும். இந்த போட்டியில் வென்றால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வார வெளியேற்றப் பரிந்துரையில் இருந்து தன்னைக் காப்பாற்றும் சக்தி வழங்கப்படும்.
ஐஸ்வர்யா, டேனி மற்றும் ஜனனி போட்டி நடத்துவதற்கான அறையில் இருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் இந்த போட்டி பற்றியும் ஐஸ்வர்யா மற்றும் சக போட்டியாளர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் நேரலையாக அவர்களுக்குக் காண்பிக்கிறார் பிக் பாஸ். உங்களை வச்சு செய்றேன் பார் என்று சூளுரைக்கிறார் சர்வாதிகாரி ஐஸ்வர்யா.
பாலாஜி, பொன்னம்பலம், ரித்விகா, ஷாரிக் ஆகியோர் சர்வாதிகாரத்தை அடக்குவது எப்படி என்று பேசுகின்றனர். பாலாஜி தான் இந்தப் போட்டியில் பங்குபற்ற மாட்டேன் என்று கூறுகிறார். அவர் நேற்றில் இருந்தே வெளியேறும் மன நிலையில் தான் இருக்கிறார். போட்டியை வெல்வது எப்படி என்று சக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சர்வாதிகாரி ஐஸ்வர்யா தனது விதிமுறைகளை அறிவிக்க போட்டியாளர்களை முற்றத்துக்கு அழைக்கிறார். பாலாஜி இந்த விளையாட்டில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் தான் இந்தப் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை எனக் கூறுகிறார். போட்டியாளர்கள் ஒன்று கூடிப் பேசக் கூடாது. இரவு விளக்கு அணைத்ததும் தூங்கிவிட வேண்டும். காலை மணி அடித்த உடன் எழுந்து விட வேண்டும். சர்வாதிகாரிகள் மூவருக்குமான உணவை மும்தாஜும் பொதுமக்களுக்கான உணவை சென்றாயனும் சமைக்க வேண்டும். ஐந்தாவது விதி பின்னர் அறிவிக்கப்படும். இவற்றை டேனி அறிவிக்கிறார்.
பாலாஜி வராததால் குப்பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவர் மீது வீச உத்தரவிடுகிறார் சர்வாதிகாரி ஐஸ்வர்யா. யாரும் வீசாததால் ஐஸ்வர்யா தானே அவர் மீது கொட்டுகிறார். மும்தாஜ் ஒரு மனுஷனை இப்படியா நடத்துவீங்க என்று கதறி அழுகிறார். அடுத்து ஷாரிக், ரித்விகா ஆகியோரின் பொருட்களை நீச்சல் குளத்தில் வீச வைக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா வெறி பிடித்தது போல ஒவ்வொரு செயல்களையும் செய்கிறார்.
அடுத்த நாளுக்கான முன்னோட்டக் காட்சியில் கூட சென்றாயனை நாயே, வாடா, போடா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார். இன்று கூட எல்லோரையும் மரியாதை இல்லாமல் நடத்தினார். ஐஸ்வர்யாவுக்கு காண்பிக்கப்பட்ட காட்சிகள் தான் அவரது இந்த ஆத்திரமூட்டும் பழிவாங்கலுக்குக் காரணம். ஆனால் இதே ஐஸ்வர்யா பொதுமக்களில் ஒருவராக இருந்திருந்தால் அவர் கூட சர்வாதிகாரத்தை எதிர்க்க திட்டம் போட்டிருப்பார் அல்லவா?
இன்றைய பிக் பாஸ் காட்சிகள் யாரும் எதிர்பாராதது. ஐஸ்வர்யா ஹிட்லர் போல வெறி பிடித்து ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறார். உடனிருக்கும் டேனியும் ஜனனியும் தடுத்தும் கூட பலனில்லை. உண்மையிலேயே சக போட்டியாளர்களுக்கு மனிதத்தன்மை இருந்தால் இந்தப் போட்டியை விட்டு வெளியேறுவதாக ஐஸ்வர்யா தவிர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும். செய்வார்களா?
கமல் இன்றைய காட்சிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஐஸ்வர்யாவின் பக்கம் நிற்பாரா அல்லது பாலாஜியின் பக்கம் நிற்பாரா? போட்டியாளர்கள் ஏன் போட்டியில் ஈடுபாடு காட்டவில்லை என்று பூசி மெழுகுவரா? நியாயத்தை விசாரித்து ஐஸ்வர்யாவுக்கு தண்டனை கொடுப்பாரா? இந்த வாரம் கமல் நடந்து கொள்ளப் போகும் விதத்தை வைத்து அவர் எப்படிப்பட்ட அரசியல் வாதி என்பதை இலகுவாகத் தீர்மானித்துவிட முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்