BB Tamil 2 | Week 07 | Day 43 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 43 | மூஞ்சி காட்டாதீங்க
'சொய்... சொய்...' என்று காலையிலேயே கும்கி அலற புதிய தலைவி உற்சாகமாக ஆடினார். புதிய தலைவியான ஐஸ்வர்யா காலையிலேயே அணிகளைப் பிரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நாள் முதல்வர் போல பல திட்டங்களை மனதுக்குள் வைத்திருக்கிறார் போல. டேனியும் யாஷிகாவும் சமையலறையில் குசு குசுவென பேசிக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் பிக் பாஸ் பொதுமக்களை அழைத்து கூட்டம் போட்டார் தலைவி. அந்தந்த வேலைகளுக்கான அணிகளைப் பிரித்துக் கொண்டிருந்தார். சாப்பாட்டு மேசையில் தான் பொதுக்குழு கூடியது. மேசையில் சமையல் பொருட்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. பொருட்கள் வந்திருக்கலாம். தத்தக்கா பித்தக்கா தமிழில் பேசுவது நமக்குப் பாதி புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.
மதியத்தில் போட்டி துவங்கியது. பொருட் கொள்வனவிற்கான (Luxury Budget) போட்டி இல்லை. சமையல் போட்டி. பிக் பாஸ் அனுசரணையாளரான மேகியின் அசைவம் மற்றும் சைவ உணவுக் கலவைகளைப் பாவித்து சமைக்க வேண்டும். டேனி, ஐஸ்வர்யா, யாஷிகா, ஷாரிக் அசைவ அணியிலும் பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா, சென்றாயன் சைவ அணியிலும் இடம் பிடித்தனர். மஹத் மற்றும் பாலாஜி நடுவர்.
'டேனி சிக்கன்ல மொட்டை போடலே?' என்றார் ஐஸ்வர்யா. சிக்கனுக்கு மொட்டையா என்று குழம்பி யோசித்தால் அது மொட்டை இல்லிங்க முட்டை. உன் தமிழ்ல தீய வைக்க... சமைத்து முடித்ததும் நடுவர்கள் சுவை பார்த்தனர். டேனியின் அணி வெற்றி பெற்றது. மஹத் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை வைத்தார். 'யாரா இருந்தாலும் மூஞ்சிக்கு முன்னாடி வந்து பேசுங்க' என்பது தான் அவரது மசோதாவாம்.
மாலையில் பெண்கள் படுக்கை அறையில் நாடாளுமன்றம் கூடியது. அமைச்சர் யாஷிகா ஆரம்பித்தார். டேனி சத்தமாக பேசுவது எரிச்சலா இல்லையா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பாலாஜி கெட்ட வார்த்தை வார்த்தை பேசுவது தொடர்பாக தலைவிக்கும் பாலாஜிக்கும் முட்டிக் கொண்டது. கடைசியாக மஹத் தனது பிரேரணையை சமர்ப்பித்தார். 'மூஞ்சி காட்டாதீங்க, மூஞ்சிக்கு முன்னாடி வந்து பேசுங்க' என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.
பிக் பாஸ் வீட்டில் புறம் பேசுவது இயல்பான ஒன்று தான். அதை என்ன சொன்னாலும் யார் சொன்னாலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஏதாவது போட்டி என்றால் அதைப் பற்றிப் பேசலாம். மற்றைய நேரங்களில் அந்த வீட்டில் நடந்தவற்றைப் பற்றித்தான் பேச முடியும். வெளியுலகத் தொடர்போ எதுவும் இல்லாத நிலையில் வேறு என்ன செய்ய முடியும்?
பஞ்சாயத்தெல்லாம் முடிந்த பிறகு பாலாஜி தன்னுடன் சரியாகப் பேசாதது குறித்துக் கேட்டார் சென்றாயன். பாலாஜி சரியாக பதில் கூறவில்லை. சென்றாயனுக்கும் அவருக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பது நமக்கே கண்கூடாகத் தெரிகிறது. 'அந்தப் பிள்ள இல்லில்ல அதான்' என்றார் செண்டு. உண்மை தான். நித்யா போன பிறகு பாலாஜியின் நடவடிக்கைகைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஐஸ்வர்யா பாலாஜியின் தலையில் குப்பை கொட்டுவது, வெளியேற்றப் பரிந்துரை எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் தான் தெரிய வரும். பிக் பாஸ் தனக்குத் தேவையான அளவை விட இன்று அதிகமாகவே பஞ்சாயத்து கிடைத்ததினால் மாலை ஐந்து மணிக் காட்சிகளோடு விடைபெற்றுக் கொண்டார். ஆனால் இது பார்க்கும் நமக்கு சிரமமாக இருக்கிறது. இன்னும் அரை மணி நேரம் எடுத்தாவது அன்றைய நாள் காட்சிகளை முழுமையாக ஒளிபரப்பி முடிக்கலாம். மேலும் இந்த ஆறு வாரத்தில் இல்லாத வகையில் வெளியேற்றப் பரிந்துரையும் மக்கள் வாக்களிப்பும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்