மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 02
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர். 'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். 'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார். 'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.
பகுதி - 02
சிகரம் : உங்களுடைய எழுத்துப் பணிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
சாரல் : எழுத்துப் பணியில் எனது பிள்ளைகளுக்கு ஆர்வமில்லையாயினும் எனது எழுத்துக்களை விரும்பிப் படிக்கின்றனர்.
சிகரம் : உங்களுடைய குழந்தைகள்?
சாரல் : ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
சிகரம் : எழுத்துப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?
சாரல் : எனக்கு ஒரு சாகித்திய பரிசு பெறும் சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் வேலை செய்த இடத்தில் விடுமுறை கொடுக்க மறுத்துவிட்டனர். எனக்கு சாகித்திய விழாவில் பரிசு கிடைக்கக் கூடாதென்று விடுமுறை வழங்க மறுத்துவிட்டனர். அதையும் மீறி இரண்டு நாள் விடுமுறை போட்டுவிட்டு பரிசு பெறச் சென்றேன். இப்படி பற்பல எதிர்ப்புகளையும் பல சந்தர்ப்பங்களில் கடந்து சென்றிருக்கிறேன்.
சிகரம் : உங்களின் ஆக்கங்களை வெளியிட உதவியோர்?
சாரல் : ஒரு சில புத்தகங்களை சாரல் வெளியீட்டகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன்.
சிகரம் : அதற்கு பொருளாதார உதவி செய்தோர்?
சாரல் : அதற்கு எனக்கு நானே தான் உதவி செய்து கொண்டேன்.
சிகரம் : ஓய்வு நேரத்தில் எழுதுகிறீர்களா? அல்லது தொழிலாகக் கொண்டுள்ளீர்களா?
சாரல் : 2000ஆம் ஆண்டில் தான் தொழில்துறையிலிருந்து விலகினேன். தற்போது வீட்டிலிருப்பதால் இப்போது கூடுதலாக எழுதுகிறேன். ஆனாலும் ஓய்வு நேரத்திலேயே எழுதுகிறேன்.
சிகரம் : நீங்கள் வாசகர்களுக்கு சொல்ல விழைந்த கருத்துக்கள் அவர்களைச் சென்றடைந்ததா?
சிகரம் : அவர்கள் என் படைப்புகளை வாசித்திருந்தால் எனது கருத்துக்கள் அவர்களைச் சென்றடைந்திருக்கும்.
சிகரம் : மேலதிகமாக எடுத்துச் சொல்ல விழையும் கருத்துக்கள்?
சாரல் : மலைநாட்டுப் பற்றுள்ளவராக இருக்க வேண்டும்.
சிகரம் : எழுத்துத் துறையில் பெற்ற பாராட்டுகள் பற்றி..?
சாரல் : பாராட்டுகள் என்று குறிப்பிடும்படியாக இல்லை.
சிகரம் : உங்களுடைய இலக்கியங்களுக்கு கிடைத்த விருதுகள்?
சாரல் : மத்திய மாகாண தேசிய சாகித்திய விழாவில் நான்கு தடவை பரிசு பெற்றிருக்கிறேன். சிறுகதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் பெற்றேன். ஜனாதிபதி பரிசு வழங்கினார்.
சிகரம் : உங்களின் ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகை அல்லது சஞ்சிகை?
சாரல் : பத்திரிகைகள் - வீரகேசரி, தினகரன், சஞ்சிகைகள் - மலர், மலைமுரசு, கணையாழி (இந்தியா)
சிகரம் : வெளிவந்த ஆக்கங்கள்?
சாரல் : சிறுகதைகளும் கவிதை மற்றும் கட்டுரைகளும்.
சிகரம் : உங்களுடைய நண்பர் எழுத்தாளர்கள்?
சாரல் : அந்தனி ஜீவா (கண்டி), முரளிதரன், மல்லிகை சி. குமார், சோமகாந்தன் (கொழும்பு), டொமினிக் ஜீவா, முல்லை மணி (வவுனியா), நேசராஜா (யாழ்ப்பாணம்)
சிகரம் : உங்கள் கவிதைகளில் கையாண்ட புதுமைகள், உத்திகள் அல்லது பாணி?
சாரல் : புதுமைகள் என்றில்லை. மலையகத்தின் அவலங்கள், மலையக மக்களின் வாழ்க்கை என்பவற்றை பற்றியே கவிதைகள் எழுதினேன்.
சிகரம் : உங்களது பெயர் நிலைபெறக் காரணம் என்னவென நீங்கள் நினைக்கிறீர்கள்?
சாரல் : எனது படைப்புகள்.
சிகரம் : உங்களது இலட்சியம் யாது?
சாரல் : சிறந்த மலைநாட்டு நாவல் ஒன்று படைக்க ஆசை. 'கண்டி ராசன் கதை' *1 இன்னும் சில மாதங்களுக்குள் வெளிவந்துவிடும்.
கண்டி ராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம ராசசிங்கனின் உண்மையான பெயர் கண்ணுசாமி என்பதாகும். இவன் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். வெங்கடாம்பாள் என்பது இவனது மனைவி பெயர்.
அப்போது ஆட்சி செய்த ஒல்லாந்தர் இருவரையும் கைது செய்தனர். அதன் போது வெங்கடாம்பாளின் காதை அறுத்து விட்டனர். அந்த இரத்தக்கறை படிந்த வெங்கடாம்பாளின் உடை கொழும்பு நூதனசாலையில் உள்ளது.
மேலும் கண்ணுசாமி (ஸ்ரீ விக்கிரம இராச சிங்கன்) பாவித்த காவடி, தப்பு, சிம்மாசனம், சோதிட புத்தகம் என்பவற்றில் சில கண்டி நூதன சாலையிலும் மற்றும் சில கொழும்பு நூதன சாலையிலும் உள்ளன. இவைதான் கண்டி இராசன் கதைக்கான ஆதாரங்கள். நான் இவற்றை நேரடியாகப் பார்வையிட்டுள்ளேன்.
சிகரம் : ஆக்கத் துறையின் எதிர்காலக் கனவு?
சாரல் : மேலும் மேலும் எழுத வேண்டும்.
சிகரம் : தொடர்ந்து எழுதுவீர்களா?
சாரல் : ஆம், தொடர்ந்து எழுத வேண்டும்.
சிகரம் : எப்படியான படைப்புகள்?
சாரல் : மலையகம் சம்பந்தமான படைப்புகளைத்தான் படைக்கப்போகிறேன்.
சிகரம் : உங்களது கலைப்பயணத்தின் இறுதி இலக்காக நீங்கள் கருதுவது யாது?
சாரல் : இறுதி இலக்கென்று எதுவுமில்லை. ஆனால் தொடர்ந்து எனது படைப்புகள் வெளிவரும்.
சிகரம் : போட்டிகளின் போது நடுவராகப் பணியாற்றிய அனுபவமுண்டா?
சாரல் : சிறுகதை, கட்டுரைப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறேன். கட்டுரைப் போட்டியொன்றில் றோயல் கல்லூரியில் பணியாற்றினேன். மற்றும் நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய இடங்களிலும் பணியாற்றியுள்ளேன்.
சிகரம் : அப்பணியின் போது எதிர்கொண்டவை?
சாரல் : அப்படியென்றில்லை. ஆனாலும் நாவலப்பிட்டி பகுதியில் வசிப்பவர்களுக்கு தமிழ் உணர்வு அதிகமென்றுதான் கூற வேண்டும்.
சிகரம் : மாணவர்களது திறன்கள், படைப்பாற்றல் பற்றிய உங்களது கருத்து யாது? மதிப்பீடு என்ன?
சாரல் : அவற்றைப் பார்த்தால்தான் சொல்ல முடியும்.
சிகரம் : எதிர்கால மாணவ சமுதாயம், இளைஞர் சமுதாயத்தினருக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?
சாரல் : தங்களிடமிருக்கும் கலைத் திறமைகளை கட்டாயம் வெளிக்கொணர வேண்டும்.
சிகரம் : புதிதாக எழுதும் மாணவப் பருவத்தினருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
சாரல் : தங்களிடமிருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்கள் எழுத வேண்டும்.
சிகரம் : வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் அல்லது மறக்க முடியாத சம்பவம்?
சாரல் : நான் வேலை செய்த இடத்தில் என்னை எல்.ரி.ரி.ஈ (LTTE - விடுதலைப் புலிகள்) பொடியன் என்று கூறிவிட்டனர்.
சிகரம் : அது ஏற்படுத்திய தாக்கம்?
சாரல் : பெரிதாக ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.
சிகரம் : எழுத்துத் துறையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?
சாரல் : சில நேரங்களில் தொழிலிடத்தில் தலைமையுடன் மோத வேண்டியிருந்தது.
சிகரம் : அது ஏற்படுத்திய தாக்கம்?
சாரல் : சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறைந்தன. இதைவிட வேறொன்றும் இல்லை.
சிகரம் : சிறந்த மலையகப் படைப்பாக எதை நினைக்கிறீர்கள்?
சாரல் : குருதிமலை (தி. ஞானசேகரன்), தூரத்துப் பச்சை (கோகிலம் சுப்பையா)
சிகரம் : இதுவரை எமது கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி ஐயா.
சாரல் : நன்றி! வணக்கம் !!
*1 'கண்டி ராசன் கதை' நூல் இந்த நேர்காணலுக்குப் பின்னரான காலப்பகுதியில் வெளியிடப்பட்டுவிட்டது.
#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry
அருமையான அறிவுப் பகிர்வு
ReplyDeleteபாராட்டுகள்