கருணாநிதியும் ஈழப் போராட்டமும் - சுதர்ஷன் சுப்பிரமணியம்
ஏப்ரல் 27, 2009 அன்று தனது எண்பத்தைந்தாவது வயதில் முதுகு வலியால் அவதிப்பட்ட கலைஞர் கருணாநிதி அண்ணா நினைவாலயத்துக்குப் போகிறார். கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் ஈழத்தமிழருக்காகத் தன் உயிரையும் மாய்ப்பேன் என்று காலை ஆறு மணிக்கே உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறார். இதுபற்றி அவர் யாருக்கும் சொல்லவில்லை. திடீரென ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்ணா நினைவாலயத்தில் கூடினார்கள். தமிழக மாணவர்களின் பக்கமும் மக்களின் பக்கமும் இருந்த போராட்டமும் கமெராவும் தலைவர் கருணாநிதியின் பக்கம் திரும்புகிறது. ஈழத்தமிழர் கண்களும் நெஞ்சமும் முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்படுபவரின் செயலைப் பார்த்திருந்தது.
பெரும் வாக்கு வங்கி சரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிதம்பரமும் இன்னபிற காங்கிரஸ் தலைவர்களும் மன்மோகன்சிங்கும் சிவஷங்கர் மேனன் மற்றும் எம்கே நாராயணன் எல்லோரிடமும் பேசுகிறார்கள். போரை நிறுத்தும்படி கொழும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கச்சொல்லிக் கேட்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் மாபெரும் வல்லரசான இந்தியா இலங்கையுடன் பேசியதாகவும் இலங்கை போரை நிறுத்துவதாகச் சொன்னதாகவும் கலைஞருக்கு ப. சிதம்பரம் சொல்கிறார். கலைஞரும் வாய்வழிப் பேச்சை நம்பி உண்ணாவிரத்தைக் கைவிடுகிறார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இது காலைக்கும் மதியத்துக்கும் இடையில் அரங்கேறிய நிகழ்வு.
இதே கலைஞர் கருணாநிதி பல ஆண்டுகளாக ஈழத்தமிழருக்கு தனி அதிகார அலகு வேண்டும் என்று போராடி வந்தவர். 1985இல் தமிழீழ விடுதலைக்கு அமைப்பினை ஆரம்பித்தவர் (பின்நாளில் இது கலைக்கப்பட்டபோது பல விமர்சனங்களுக்கு உள்ளானார்).
இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பவேண்டாம் என்று கருணாநிதி போராடினார். பின்னர் அந்தப் படை ஈழ மக்களுக்கு நிகழ்த்திய அட்டூழியங்களைச் சொல்லித் தீராது. யாழ்ப்பாண மருத்துவனைக்குள் நிகழ்ந்த படுகொலைகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் என்று ஏராளம் உண்டு.
ஈழத்தில் இறங்கிய இந்திய இராணுவம் புலிகளின் தலைமைத்துவத்தை குறிவைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு தாக்குதல் திட்டத்தை (Jaffna University Helidrop) ஆரம்பித்தது. புலிகளின் புலனாய்வு அதைவிடத் திறமென்பதால் இந்தத் தாக்குதல் தோல்வி கண்டது. இந்திய இராணுவத்துக்கு இழப்பு நேர்ந்தது. இது இந்திய இராணுவம் புலிகளிடமிருந்து ஆயுதத்தை பறிக்க நிகழ்த்திய முதல் தாக்குதல். இதற்குப் பின்னரும் பல தாக்குதல்கள் தோல்வி கண்டது.
அடுத்தடுத்த செயல்களின் தொடர்ச்சியாக 1991 இல் திமுக விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கிறது, தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிடுகிறது என்று அப்போதைய பிரதமர் சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைத்தார். இப்படியாக ஈழத்தில் இந்தியாவின் தலையீடு என்பது நீண்ட வரலாறு கொண்டது.
மேலும் ஈழ விடயத்தில், இந்தியா நினைத்தால் எதுவும் செய்யும். 1987 இல் சிங்கள இராணுவம் யாழ் மண்ணைக் கைப்பற்ற வடமராட்சி நடவடிக்கை எடுத்தது. அப்போது, பின்னேரம், இலங்கை வான்பரப்பில் அதிரடியாக நுழைந்த இந்திய இராணுவத்தின் விமானங்கள் உதவிப் பொட்டலங்களை (பூமாலை நடவடிக்கை) யாழ்ப்பாணத்தில் போட்டுவிட்டுச் சென்றது. இலங்கையின் அனுமதியைப் பெறவில்லை. இவை யாவும் வரலாறு. ஆகவே இன்னொரு பிராந்தியம், யாரும் தலையிடமுடியாது என்பது பொய்ப்பேச்சு.
இந்தியத் துணைக்கண்டத்தின் பேரரசு நேபாள அரசியலில் எந்தளவு தூரம் இறங்கி வேலை செய்தது என்பதும் வரலாறு. அதற்குத் தன் துணைப் பிராந்தியப் பாதுகாப்பு அவசியம். தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளாக இருந்தது கிடையாது. இருந்தும் ஒழுங்கான உரையாடல் இன்றி எல்லாம் நிகழ்ந்து முடிந்தது.
ஈழத்தில் தமிழர்கள் சிறுபான்மை. இலட்சம் சிங்களத்தை ஆயிரங்களில் இருந்த தமிழர் சேனை எதிர்த்து வீழ்ந்தது தோல்வி இல்லை. ஆனால் இறுதியில் வைத்த நம்பிக்கைகள் துண்டாகிப்போனது. ஒரு துண்டுக் கடலுக்கு அப்பால் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்க இந்தப் படுகொலை அரங்கேறியது. மக்கள் தலைவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து செயற்படவில்லையா அல்லது அறியாமல் நிகழ்ந்த பிழையா என்பதையெல்லாம் வரலாறு என்னவென்று எழுதுமோ தெரியவில்லை.
-பதிவர் :
#ஈழம் #தமிழீழம் #கருணாநிதி #திமுக #அரசியல் #இந்தியா #வல்லரசு #ஆயுதம் #மக்கள் #தமிழ் #தமிழகம் #ஆட்சி #இலங்கை #சிங்களம் #போர் #தமிழர் #யாழ் #யாழ்ப்பாணம் #சிகரம் #SigaramINFO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்