மாற்றம் வேண்டும்

வணக்கம் வாசகர்களே. நலம், நலமறிய ஆவல்.

'மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது' என்பது நம் மூத்தோர் வாக்கு. இந்த பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் மாற்ற வேண்டிய சில விடயங்களை இன்னமும் மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றோம். அது என்னென்ன, ஏன் மாற வேண்டும் என்பது பற்றியெல்லாம் இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

01. கல்வி 

02. அரசியல்  

கல்வி ஒரு மனிதனின் அறிவை வளர்க்கும் கருவி. கல்வி இருவகைப்படும். அனுபவக் கல்வி மற்றும் புத்தகக் கல்வி. என்னதான் ஒரு மனிதனுக்கு புத்தகக் கல்வி இருந்தாலும் அனுபவக் கல்வியே புத்தகக் கல்வியின் மதிப்பை உயர்த்துகிறது. நமது இன்றைய கல்வி முறை குழந்தைகளை பாடப் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கியிருக்கச் செய்கிறதே தவிர உலக அறிவை வளர்க்க விரும்பவில்லை. 


ஏட்டில் எழுதத் தெரிந்தவன் மட்டும் தான் அறிவாளி என்பது தான் இன்றைய கல்வியின் வாதம். அந்தக் காலத்தில் குருகுலம் தான் பள்ளிக்கூடம். மாணவர்கள் குருகுலத்தில் சென்று தங்கி அங்குள்ள பணிகளைச் செய்து கொண்டே வீரப் பயிற்சியும் கல்வி அறிவும் பெறுவார்கள். அவர்கள் குருகுலத்தில் இருந்து வெளியே வரும் பொழுது கல்வியிலும் வீரத்திலும் அனுபவ அறிவிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். 

அன்றைய தமிழர்களின் கல்வி முறை தான் அவர்களை முழு உலகையும் தன் காலடியில் அடக்கக் கற்றுக் கொடுத்தது. ஆனால் இன்றைய கல்வி முறையோ இதற்கு நேர்மாறானது. பாடப் புத்தகத்தை அப்படியே மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மனனம் செய்ய இயலாதவர்கள் கல்வி அறிவற்றவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். 

பாடப் புத்தகங்கள் இல்லாக் கல்வி முறை வேண்டும். புத்தகச் சுமையால் கூன் விழுந்த முதுகுகளால் இந்த நாட்டைச் சுமக்க முடியாது. புத்தகம் சுமக்கக் குனிந்தவன் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகவே இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாக கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவரவர் தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கேற்ப நெறிப்படுத்த வேண்டும். 

இன்று பதின்மூன்று ஆண்டுகளாகக் கற்ற பாடசாலைக் கல்விக்கு இல்லாத தகுதி மூன்று வருட பல்கலைக்கழகக் கல்விக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பாடசாலைக் கல்வியை  வாழ்க்கையில் எங்காவது பிரயோகப் படுத்த முடிகிறதா? இல்லை. ஏன்? பதின்மூன்று வருடங்களுக்கும் நாம் அடிப்படையை மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறோம். மிகுதியை எப்போது கற்பது? 



பத்து வயதுக்கு மேல் உயர்கல்வி ஆரம்பிக்கப்பட வேண்டும். கணினி, தொழிநுட்பம், விளையாட்டு, தற்காப்பு, காவல்துறை, விஞ்ஞானம் என வாழ்கைக்குத் தேவையான அத்தனையும் அந்த உயர்கல்வியில் கற்பிக்கப்பட வேண்டும். பதினாறாவது வயதில் இளைஞன் தன் வாழ்க்கைக்கான பயணத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவன் விரும்புவதை இந்தக் கல்வி கற்றுத்தர வேண்டும். 

எழுத்தாளனாக வர விரும்பினால் அவனுக்கு இலக்கியம் கற்றுத்தர வேண்டும். கால்பந்தாட்ட வீரனாக விரும்பினால் அவனுக்கு விளையாட்டு கற்றுத்தர வேண்டும். நாட்டைக் காக்க விரும்பினால் அவனுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும். அரசியல் வாதியாக விரும்பினால் அவனுக்கு உலக அரசியல் கற்றுத்தர வேண்டும். அவன் எதுவாக ஆக விரும்புகிறானோ கல்வி அதற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும். 

பதினாறு வயதில் இருந்து உழைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். சுயமாக சம்பாதித்து அதில் கல்வி கற்கவும் சேமிக்கவும் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தையும் அதன் சவால்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கற்றுத்தர வேண்டும். ஒரு மனிதனை அறிவும் ஆற்றல் மிக்கவனாகவும் இந்தக் கல்வி மாற்ற வேண்டும். 

கல்வி முறை இவ்வாறு மாறினாலே அரசியலும் தானாகவே மாறி விடும். அறிவும் அனுபவமும் மிக்கவர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் சீராகி விடும். மக்கள் தங்கள் வாக்குப் பலத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். நேர்மையற்றவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். 

அரசியல் வாதிகள் மக்களுக்கு சேவை செய்யவே அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அடுத்த முறை அதிகாரத்துக்கு வர அனுமதிக்கக் கூடாது. இலவசங்களுக்கும் போலி வாக்குறுதிகளுக்கும் மக்கள் ஏமாறக் கூடாது. போலி அரசியல் வாதிகளின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். 

அரசியல் என்பது தொழில் அல்ல. அது மக்களுக்கான சேவை. அரசியல் வாதிகள் வாழ்க்கையில் ஒரு முறைக்கு மேல் ஓர் அதிகாரத்தில் இருக்க முடியாது என்று சட்டம் இயற்ற வேண்டும். சேவை செய்கிறோம் என்கிற பெயரில் தங்கள் தேவைகளை மட்டுமே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அரசியல் வாதிகளின் தவறுகள் சுட்டிக்காட்டவும் தட்டிக் கேட்கப்படவும் வேண்டும். மக்களின் மௌனம் அவர்களின் தவறுகளுக்கான சம்மதம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 

இன்றைய கல்வி முறை புத்தகப் பூச்சிகளை உற்பத்தி செய்வதே இந்த அரசியல் வாதிகளால் தான். மக்கள் அறிவும் அனுபவமும் மிக்கவர்களாக இருந்தால் இந்த ஏமாற்று அரசியல் செல்லுபடியாகாது. அதன் பின் அரசியல் வாதிகளின் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கேட்பார்கள். அவர்களின் பொய்யும் புரட்டும் வெட்ட வெளிச்சமாகிவிடும். 

கல்வியும் அரசியலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது. ஒன்றின் மாற்றம் மற்றொன்றையும் மாற்றும், சீர் படுத்தும். இரண்டையுமே மக்களாகிய நாம் ஒன்றிணைவதன் மூலம் மாற்ற முடியும். நாம் சாதி, மதம், தொழில், கிராமம், நகரம் என பிளவுபட்டு நிற்பதால் தான் திருடர்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள். நாம் வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டால் எந்த மாற்றமும் சாத்தியமே! 

#கல்வி #அரசியல் #மாற்றம் #வாழ்கை #உலகம் #தமிழ் #கட்டுரை #பாடசாலை #கட்சி #மக்கள் #அதிகாரம் #சட்டம் #வெற்றி #அனுபவம் #சிகரம் #SigaramINFO 

Comments

  1. கல்வியிலும் மாற்றம் தேவைதான்.. மாற்றம் என்ன என்பது பற்றிய தெளிவும் தேவைதானே.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!