எனக்குமோர் நாள் இறப்பு வரும்... | கவின்மொழிவர்மன்
வயோதிக மடைந்தோ
நோய்வாய்ப் பட்டோ
விபத்துநடந் தோயன்று
தனக்குத் தானோ
எனக்கும் ஓர்நாள்
இறப்புவரும் அன்று!
என்னுடலும் தரையில்
சாய்ந்திருக்கும் விழிகளை
இமைகள் காத்திருக்கும்
உடையவளருகில் வீற்றிருப்பாள்
விழிநீர்காய்ந்து சோர்ந்திருப்பாள்,
பிள்ளைகளருகில் சேர்ந்திருப்பர்!
நேரஞ்சிறிதாய் கடந்தேற
உறவினர் வெகுவாய்
புடைசூழ காத்திருப்பர்,
என்னுடல் நீரால்
கழுவப்பட என்னுடை
உடமைகள் கலையப்பட!
நிர்வாணக்கோலம் நான்பூண்டேன்
என்னுடல் மறைக்கும்
துணிக்கூட என்னுடன்
பிறப்புகளீந்த பிச்சையன்றோ,
என்பெயரதும் நீங்கிபிணமானேன்
தாயுடல்வந்த ஊனானேன்!
தென்னங் குறுத்தோலை
பின்னல் சடைபோட்டு
என்னையதி லீட்டி
பாடையதைத் தூக்க,
உறவுகளெல்லாம் உதறிவிட
உடையவளென்று வீதிவர!
பெற்றமகனோ காடுவரயென்னை
கட்டையில் வைத்தாலும்
குழிதோண்டி புதைத்தாலும்
மொட்டையடித்தான் எனக்காக
முடியையீந்தான் கணக்காக
சட்டியுடைப்பது மெதுக்காக!
காடுவந்தவன் வீடுசென்றான்
காலொடுயெனையும் கழுவிவிட்டான்,
கிடத்தியவிடத்தை துடைத்தார்கள்
தீட்டாயெனையே நினைத்தார்கள்,
என்னுடல்தனையே படமாக்கி
சுவற்றிலாணியில் அடித்தார்கள்!
உடலுமுயிருமா யிருந்தநான்
பிணமானேன்புகைப் படமானேன்
மறுநாள் காக்கையுமானேன்,
விருந்துகள் பலவும்
என்பெயரில் விதவிதமாய்
சமைத்தே உண்டார்கள்!
காலங்கள் சுழன்றன
உறவுகள் மறந்தன
பிள்ளைகளால் மறக்கப்பட்டேன்,
கட்டியவள் மறந்தாள்
காக்காவும் மறந்தது
காற்றில் கலந்தேன்
காரிருளில் புதைந்தேன்!
சிலநாட்கள் சென்றிருக்கும்
பெயர்கேட்டால் ஓஓஓஅவரா
இன்னும்சில நாட்கள்
ம்ம்ம்மறந்துடுச்சே
சிலகாலம் கடந்துவிட
அப்படியாரும் இல்லைங்க!
உலகின் நியதியை
யாவரும் அறிந்திடுவீர்
உண்மை அன்புடன்
வாழ்ந்து மறைந்திடுவீர்,
பிறப்பவர்யாரும் நிலையில்லை,
பொருள்படவாழ்ந்திடின் பிழையில்லை!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #கவின்மொழிவர்மன் #மரணம் #வாழ்க்கை #மனிதர்கள் #நினைவுகள் #தமிழ் #உலகம் #இருள் #இறப்பு #சிகரம்
அருமை. கவிஞருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete