ராஜேந்திரனின் பள்ளிப்படை எங்கே இருக்கிறது தெரியுமா?

நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய ஊருக்கு வழி தெரியாமல் குக்கிராமங்களுக்குள் புகுந்து வயல், வரப்பு, ஏரி என பசுமையான இடங்களை கடந்து நூற்றைம்பது கிலோமீட்டர் பயணித்து ஊரை வந்தடைந்தோம்.

'அண்ணே இந்த ஊர்ல ராஜேந்திர சோழனோட பள்ளிப்படை இருக்காமே, அதுக்கு வழி?'

'ராஜா சமாதியா? இப்படியே நேரா போங்க. பழைய காலத்து சினிமா கொட்டா ஒன்னு வரும், அதுக்கு எதிர்'ல, வயலுக்கு நடுவுல ஒரு சிவலிங்கம் இருக்கும் அது தான் அவர் சமாதி.'



ஊரின் மேற்கு திசையை நோக்கி பயணித்தோம். அழகான ஊர் தான். சரியாக திட்டமிடப்பட்ட வீதிகள், ஊருக்குள் சோழர் காலத்து சிவன் கோயில் ஒன்றும், பெருமாள் கோயில் ஒன்றும் இருந்தது. இந்த கோயில்களின் கல்வெட்டுகளில் தான் ராஜேந்திரன் தன்னுடைய கடைசி காலத்தை இந்த ஊரில் கழித்தார் எனவும், அவர் இறந்ததும் அவருடன் அவர் மனைவி வீரமாதேவி அவருடன் உடன்கட்டை ஏறியதாகவும் கல்வெட்டுகள் தெரிவித்தது. Evidence : ( ARE 263 of 1915) , (ARE 260 of 1915).  



இந்த ஊரில் தான் இறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் சரி. வயலுக்கு நடுவே இடிந்து கிடக்கும் கோயிலும் அந்த சிவலிங்கமும் தான் பள்ளிப்படை என்று எப்படி உறுதியாக கூறுவது? ஊருக்குள் விசாரித்தோம். அனைவரும் அதே இடத்தை தான் குறிப்பிட்டார்கள். "எனக்கு கல்வெட்டு எல்லாம் படிக்க தெரியாதுங்க, எங்க தாத்தா சொன்னத எங்க அப்பா சொன்னாரு, இப்போ நான் சொல்லுறேன்".



மீண்டும் அவர்கள் கூறிய அந்த இடத்தை நோக்கி நகர்ந்தோம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கு இருந்த சிறுவர்களிடம் அந்த சிவலிங்கம் குறித்து கேட்டதும், வயலுக்கு நடுவே ஒரு பெரிய மேடான புதர் ஒன்றை காட்டி அதற்குள் தான் இருக்கின்றது என்றதும் ஆடிப்போனோம். சாதாரணமாக வயல்வெளிக்கு நடுவே ஒரு லிங்கம் இருக்கும் என்று நினைத்தால், இவ்வளவு பெரிய புதருக்குள் கிடக்கின்றதே என்று அந்த இடத்தை நோக்கி நடக்கத் துவங்கினோம்.



நெருங்க, நெருங்க நாங்கள் நினைத்ததை விட புதரும், மேடும் பெரிதாக இருந்தது, (படம்: 1) உள்ளே செல்ல எங்கேனும் வழி இருக்கின்றதா என அந்த புதரை ஒரு முறை முழுமையாக சுற்றினோம். பலன் இல்லை, அதற்குள் செல்ல வழி இல்லை என்று யோசித்து நின்றுகொண்டே இருக்கையில் உடன் வந்த நண்பர் ஜகதீஷ் அங்கிருந்த தென்னை மட்டை ஒன்றை எடுத்து வந்து புதரை கலைத்து ஒரு ஒற்றை அடி பாதை போன்று உருவாக்கத் துவங்கினார் (படம்: 2). ஒரு ஆள் செல்லுமளவிற்கு வழி கிடைத்தது. கிடைத்த அந்த வழியில் எட்டிப்பார்த்ததும் அந்த புதருக்குள் இடிந்த ஒரு கோயிலும் அதற்கு நடுவே ஒரு லிங்கமும் இருந்தது கீழிருந்தே தெரியத்துவங்கியது.(படம்: 3).



ஒரு பக்கம் வழியை உருவாக்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளே செல்ல தயக்கமாகவே இருந்தது. வாழ்கையில் எதற்குமே பயம் இல்லாதவன் கூட அதற்குள் செல்லத் தயங்குவான். கையில் கம்பை வைத்து தட்டிக்கொண்டே அந்த சிறு வழிக்குள் புகுந்து உள்ளே சென்றதும், பரிதாபமாக ஒரு லிங்கம் காட்சியளித்தது. லிங்கத்தின் மீது செடிகள் சூழ்ந்து, தூசுகள் படர்ந்து... இன்னும் என்ன சொல்வது... 



இது ராஜேந்திர சோழனின் பள்ளிபடையோ அல்லது இடிந்த ஒரு சிவன் கோயிலோ எதுவாக இருப்பினும் இந்த நிலைமையிலா இருப்பது? என்ன சொல்வது இந்த சமூகத்தை? முடிந்த வரை அந்த லிங்கத்தின் மீது இருந்த தூசு, செடிகளை வெறும் கைகளை கொண்டே அகற்றினோம் (படம்: 4). மரங்கள் சூழ்ந்த அந்த அடர்ந்த புதருக்குள் ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் என்ன செய்வது என்று யோசித்தோம். 

இனி என்ன செய்ய...? பார்த்துவிட்டோம் கிளம்பலாம் என்றதும் உடன் வந்திருந்த நண்பர் ரமேஷ், இதை இப்படியே விட்டுச் சென்றால் நமக்கும் பிறருக்கும் என்ன வித்தியாசம், ஒரு மாலை வாங்கி வந்தாவது மரியாதை செலுத்திவிட்டு செல்லலாமே என்றதும் அதுவும் சரி தான் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்கு சென்று மாலை, எண்ணை பிற பூஜை சாமான்களை வாங்கிக்கொண்டே இருக்கும் போது தண்ணீர் ஊற்றி கழுவ வாட்டர் பாக்கெட் வாங்கிக்கொள்ளலாமா என்று நண்பர் கேட்க, வாயில் வார்த்தை இல்லாமல் 'வேண்டாம் ஒரு வேலை இது உண்மையில் 'ராஜேந்திரனின் பள்ளிப்படை'யாக இருந்தால்? கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரை வைத்து தான் கட்டிய "கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு" கும்மாபிஷேகம் செய்த மாவீரன் ஆயிற்றே அவருக்கு வாட்டர் பாக்கெட்டில் அபிஷேகமா? குறைந்த பட்சம் ஒரு குடம் தண்ணீராவது கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்'. பக்கத்தில் இருக்கும் வீடுகளில் கேட்டு வாங்கிக்கொள்லாம் என்று புறப்பட்டோம்.

அந்த சிறுவன் வீட்டை மீண்டும் அடைந்து ஒரு குடம் நீர் வேண்டும் என்றதும், அவரின் தந்தை தயவால் ஒரு பிளாஸ்டிக் குடத்தில் நீர் கிடைத்தது. அதை தூக்கிக்கொண்டு அந்த வயல் வெளியில் மீண்டும் நடந்து ஏற்கனவே உருவாக்கிய அந்த ஒற்றை அடி பாதை மேட்டின் மீது ஏறி மேலே சென்று தண்ணீரை ஊற்றி நன்கு தேய்த்து குளிப்பாட்டி, எண்ணை அபிஷேகம் செய்துகொண்டிருக்கும் போதே (படம்: 5) விபூதியும் சந்தனமும் வாங்க மறந்தது தெரிந்தது. உடன் இருந்த சிறுவன் இருங்கண்ணா நான் எங்க வீட்டுக்கு போய் எடுத்துட்டு வர்றேன் என்று பறந்தான். சற்று நேரத்தில் அவன் திரும்ப, அபிஷேகம் முடிந்து, மாலை சாற்றி மரியாதை செலுத்தி விட்டு நகர மனம் இல்லாமல் அந்த புதருக்குள்ளயே சற்று நேரம் அமர்ந்திருந்தோம். எல்லோர் மனதிலும் இவ்வளவு மோசமான இடத்தில் இருக்கும் இந்த கோவில் “ராஜேந்திர சோழனின்" பள்ளிப்படையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது. அங்கிருந்த சிறுவர்களிடம் புதருக்குள் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தோம். ஏன்டா தம்பி இப்படி வெச்சிருகீங்க? அண்ணா நல்ல நாள்ல சின்ன பசங்க நாங்க இங்க வந்து அபிஷேகம் பண்ணுவோம்ண்ணா, இங்க தோண்டும் போது எங்களுக்கு ஒரு பானை கெடச்சுது, அதுல ஒன்னும் இல்லன்னு பசங்க விளையாடும் போது தூக்கி போட்டு ஓடச்சிடாங்கண்ணா என்றார்கள். கொடுமை!! என்ன சொல்ல...



சரி போனா போகுது. இதற்கு ஒரு பூவையாவது பறித்து வையுங்கள் என்று கூறியதும், அந்த உடைந்த லிங்கத்திற்கு பூஜை செய்தால் சக்தி கிடைக்காதுன்னு அம்மா சொன்னாங்கண்ணா என்றார்கள். அப்படி எல்லாம் இல்லடா தம்பி நல்ல மனசோடு செய் கண்டிப்பா பலன் கிடைக்கும் என்று அறிவுறுத்தியதும், சரி என்று தலை அசைத்தார்கள். அடிக்கடி இங்க வருவோம் டா தம்பி பத்திரமா பாத்துக்கோ என்று கூறி விட்டு புறப்பட்டோம். கடைசி வரை வந்து வழி அனுப்பிவிட்டுச் சென்றார்கள் அந்த சிறுவர்கள்.(படம்: 6)

ஊருக்குள் யார் யாருக்கோ சமாதிகளை மேம்படுத்த கோடிகளை செலவிடும் அரசு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாகியவனின் பள்ளிப்படையா அல்லது பழைய கோவிலா என்று தெரியாமல் இருக்கும் இந்த இடத்தை அழவாராய்ச்சி செய்ய முன்வருமா?

-பதிவர்கள் : 
சசி தரன் மற்றும் செல்வலிங்கம்



#தமிழ் #வரலாறு #ராஜேந்திர_சோழன் #பள்ளிப்படை #வீரமாதேவி #தமிழ்நாடு #அரசு #அகழ்வாராய்ச்சி #சிகரம் 

Comments

  1. தேடல் அருமை. சிவலிங்கம் அழகு. எந்த ஊர் ?

    விளம்பரத்தை எப்படி இணைப்பது. அதன் விதிமுறைகள் என்ன ?

    ReplyDelete
  2. இது கால ஓட்டத்தின் மாற்றமா நமது வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதா அரசு ஆய்வுகள் நடத்த வேண்டும்

    ReplyDelete
  3. ஊர் பெயர் சொல்லாம இப்படி மொட்டையாக பதிவு செய்ததற்கு என்ன காரணம்? தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!