இனி என்ன?
கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக தகவல் திங்கட்கிழமை மாலை வந்தபோது மாலில் (Mall) தோழி ஒருவருடன் உணவருந்தி கொண்டிருந்தேன். தகவல் கேட்டதும் மனம் இருள் கொண்டது. நிர்க்கதி என்பார்களே, அந்த நிலை! தோழி 'என்னாச்சு' என்றார்.
நிறைய ஆகியிருக்கிறது. எதை சொல்வது!
கருணாநிதி இல்லையெனில் அந்த மால் இல்லை. மாலுக்கு வந்து சேர்க்கும் சாலைகளும் பாலங்களும் இல்லை. பேருந்துகள் இல்லை. தெருவுக்குள் இறங்கி நடக்கும் நாங்கள் இல்லை. என் அறிவு இல்லை. அந்த மாலுக்குள் அதிகம் தென்பட்ட இஸ்லாமியர்கள் இல்லை.
இது நன்றிக்கடன் மட்டுமா?
இல்லை. ஒரு மனிதனாக பிறந்து தன் சாதியை துறந்து மதத்தை துறந்து கட்சியைத் தாண்டி இனத்தை தாண்டி தனக்கானவர்களுக்கும் தனக்கு அல்லாதவர்களுக்கும் என ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் எந்தவித பாரபட்சமும் பிரதிபலனும் இன்றி உழைத்த தலைவனை இழந்த வேதனையா?
இல்லை. பார்ப்பனீயம் என்ற மிகப்பெரும் ஒடுக்கு இயந்திரத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்தியாவுக்குள் இருந்து கொண்டு, மக்களை ஏய்க்க அது உருவாக்கியிருக்கும் தேர்தல் முறையையே கொண்டு, தமிழ் மக்கள் திரளை மிகச்சரியான arithmetic-ல் கணித்து, ஓட்டுகளை வென்று ஆட்சியை கைப்பற்றி, அதன் கண்ணையே குத்தும் சமூகநீதியை செயல்படுத்திய மேதமையா?
இல்லை. மத்திய கட்சிகளின் பார்ப்பனீயம் தமிழ்நாட்டில் நுழைய விடாமலிருக்க கூட்டணி வைத்து தன் கைகளை மிஞ்சி அவர்கள் செயல்படாமல் பார்த்துக் கொண்ட ராஜதந்திரமா?
இல்லை. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறுகள் எள்ளலோடு கடந்து தனக்கான பணியை தொடர்ந்து செய்யக்கூடிய அறிவும் அனுபவமும் தன்னம்பிக்கையுமா?
இல்லை. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றுக்குள் இருக்கும் நியாயத்தை பிரித்து பார்த்து அணுகி, விமர்சிப்பவர்களை எதிரிகளாக கருதாமல் அவர்களையும் சமூகநீதியை நோக்கிய தன் பயணத்தில் நண்பர்களாக்கி இணைத்துக் கொள்ளும் தன்மையா?
இல்லை. இன்று நாம் பேசும் நீலம், சிவப்பு, கறுப்பு ஒருங்கிணைவை தன் அதிகாரத்தின் வழியும் நேசக்கட்சிகளாக அடையாளப்படுத்திக் கொண்ட வகையிலும் நமக்கெல்லாம் முன்னமே பூடகமாக செயல்படுத்திய தொலைநோக்கு பார்வையா?
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கேள்வியாக வைத்தால் 'இல்லை' என்றே பதிலளிக்க முடியும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு தலைவராக இருந்ததாலேயே கருணாநிதியின் இருப்பு என்னை போன்றோருக்கு முக்கியமாக இருக்கிறது.
தோழியின் கேள்வியை விட, என்னை அந்த நேரத்திலும் இப்போதும் குலைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, 'இனி என்ன?' என்பதுதான்.
கருணாநிதி கண்ட எந்த போராட்டத்தையும் எதிர்கொள்ளாமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகி இருக்கிறோம். பெரியாரிடமும் அண்ணாவிடமும் கருணாநிதி கண்டடைந்த அரசியல் பக்குவம் மற்றும் புரிதலை கருணாநிதியிடமே கண்டறிய முற்படாத தலைமுறை நாங்கள்.
இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், கனிமொழி என கருணாநிதி குடும்பத்தார் மக்களோடு மக்களாக நடந்து வந்ததாக சொல்கிறார்கள். ஸ்டாலினுக்கு இந்த பயிற்சி எங்கிருந்து வந்திருக்கும் என நன்றாக யோசித்து பாருங்கள். அதே இடத்தில் இருந்து பயிற்சி என நாம் ஏதேனும் கற்றிருக்கிறோமா?
கருணாநிதி மரித்துவிடவெல்லாம் இல்லை. இங்குதான் நம்மிடையே இருக்கிறார். இன்னுமே அவரை தோண்டி நாம் கற்பதற்கு ஏராளமாக இருக்கிறது. நேற்று கூட ஒரு தோழி 'பராசக்தி' படத்தை பார்த்துவிட்டு, 'அந்த காலத்துல இந்த அளவுக்கு progressive - ஆ படம் எடுக்கறது எல்லாம் வேற லெவல்!' என்றார். கருணாநிதியை பற்றி அறிந்திராத அந்த தோழிக்கு நான் கருணாநிதியை அப்படித்தான் அறிமுகப்படுத்துகிறேன். ஆனால் இன்று நாம் எடுக்கும் படங்கள் என்ன பேசுகின்றன? என்ன கதை, வசனம் எழுதுகிறோம்? தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பை கூட தன் சமூகநீதி அரசியல் பேசும் வாய்ப்பாக படம் எழுதிய கருணாநிதி எங்கே? நாம் எங்கே?
வெற்றி பெற்ற பிறகான கருணாநிதியைத்தான் நாம் கொண்டாடுகிறோம். ரசிக்கிறோம். தலையில் தூக்கி சுமந்து போகிறோம். ஆனால் வெற்றிக்கு முன் கருணாநிதி எத்தனை இடர்பாடுகளை தாண்டி, எந்த சமரசமுமில்லாமல், நாயக ஆராதிப்பின்றி, சமூகநீதி அரசியலை நோக்கி தன் நேச சக்திகளை ஒருங்கிணைத்து முன்னேறி சென்றார் என்பதை காணத் தவறுகிறோம்.
கருணாநிதி இவற்றால்தான் எனக்கு முக்கியமாக இருந்தார். இவற்றால்தான் கருணாநிதி எனக்கு தலைவராக இருந்தார். இவற்றைதான் நான் கருணாநிதியிடமிருந்து கற்றுக் கொண்டேன். இவை எல்லாமும் சேர்ந்ததுதான் கருணாநிதி.
Karunanidhi was never an exclusive person. He was always an inclusive person.
இவ்வளவும் ஏன் சொல்கிறேனெனில், தமிழ்நாடு இந்தியாவை விஞ்சி நிற்க காரணமான மூன்று பேரும் இன்று இல்லை. ஆனால் அவர்கள் இல்லாமல் போகும் இந்த காலத்துக்காக pirates of the Caribbean 2-ல் வரும் kraken போல பார்ப்பனீயம் காத்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டை சுற்றி பரவி, தன் கொடுக்குகளை மேலேற்றி நம்மை நெருக்க துவங்கிவிட்டது.
பார்ப்பனீயம் 'வைரஸ்'ஸை போல எதிர்ப்பையும் தின்று ஜீரணித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார் எதையெல்லாம் எதிர்த்தாரோ அவை எல்லாம் முளை விட தொடங்கிவிட்டன. அண்ணாவும் கருணாநிதியும் கொண்டு வந்த சமூகநீதி யாவும் பிடுங்கியெறியப்படுகின்றன. பெரியார், அண்ணா, கருணாநிதி போராடிய போர்க்களத்தில் மீண்டும் நாம் நின்று கொண்டிருக்கிறோம்; அவர்கள் எவருமின்றி. அதனால்தான் 'இனி என்ன?' என்ற கேள்வி பெரும் அச்சுறுத்தலை கொடுக்கிறது.
கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நம் புரிதல்களுக்கு அவற்றை கற்க, ஒரு ஆயுள் போதாது. Godfather படத்தில் வரும் வசனத்தை சொல்லி முடிக்கிறேன்.
"Your father was a reasonable man. Learn from him!"
ராஜசங்கீதன் ஜான்
#கலைஞர் #கருணாநிதி #தமிழகம் #நினைவுகள் #தமிழ் #அரசியல் #திமுக #பெரியார் #அண்ணா #சிகரம்
கலைஞர் இல்லாத தமிழகம் காவலனில்லாத தமிழகம். இனி என்ன? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி இனி என்னவாகும், பார்ப்பணியத்தின் பிடியில் இனி மக்கள் என்ன ஆவர் போன்ற கேள்விகள் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட தமிழனின் மனதிலும் ஓடுகிறது. இதனை தங்கள் பதிவு அழகாக படம் பிடித்துள்ளது. கலைஞர் நம்மிடையே உணர்வால் வாழ்கிறார். நம்மை அவர் நிச்சயம் பாதுகாப்பார்.
ReplyDelete