இயற்கையின் சீற்றம் இயல்பே !

கணக்கிலடங்காக் குற்றம் புரிந்தோம்
காலத்தினையே சினம் கொளச் செய்தோம்
காட்டினை அழித்து நாட்டினைப் புரிந்தோம் 
கட்டிடங்களைக் காடாய் வளர்த்தோம் 

சூழ்வெளி கெடுத்திப் பாழ்வெளி படைத்தோம் 
சுந்தரக் காற்றின் சுதந்திரம் கெடுத்தோம் 
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் துளைத்தோம் 
அருமை கிராமச் சூழலை அழித்தோம் 

செயற்கை உரத்தைச் சேர்த்துத் தெளித்தோம் 
இயற்கை வித்தின் வீரம் அழித்தோம் 
இயற்கை உரங்களை இலையெனச் செய்தோம்
இன்னரு ளமுதின் தரத்தைக் குறைத்தோம் 

தொழில்வள மதனைக் கூட்டிட நினைத்து 
எழில்வள மனைத்தும் இழந்தே நின்றோம் 
தொன்மைக ளெல்லாம் தோற்றுத் தொலைத்தோம் 
தொல்பொருள் பலவும் போயின களைந்தோம்

இத்தனை செய்தும் இன்னல்கள் புரிந்தும் 
இயற்கை அன்னை பொறுமை காத்தாள்
எல்லை மீறிட அன்னை சினந்தாள்
இருக்கும் அழகை அழித்திட முனைந்தாள்



கண்கெட் டழிந்தோம் கதிரவ னொளியைக்
கண்டிட விழைந்தோம் காலம் கடந்தோம் 
எத்தனை பிழைகள் யாம் புரிந்தாலும்
இத்தனை சீற்றம் தகுமோ தாயே !

அத்தனை பேரும் உன்மக வன்றோ 
அத்தனை அழகும் உன்னழ கன்றோ
எத்தனை வளங்கள் அழிந்து போயின 
எத்தனை உயிர்கள் மடிந்து போயின !

இதுபோல் தவறுகள் இனி நாம்புரியோம் 
இன்னல்க ளிழைத்தோம் இக்கணம் அறிந்தோம் 
எம்மை ஒறுத்தது போதும் நிறுத்தாய் !
எம தன்பேநீ என்றும் எம் தாய் ! 

அன்னை சினத்தால் அழித்தவை யனைத்தும் 
அவளே தருவாள் தவறுகள் மறப்பாள் 
அவள் இனிநினைத்தால் அனைத்தும் மாறும் 
அவள்கண் திறந்தால் பொழுதுகள் புலரும் 

காலை மலரும் கதிரவ னொளிரும் 
பூவைப் போலப் பொன்னொளி படரும் 
பொருந்திய வளங்கள் போற்றிக் காத்திடப்
போயிடும் துயரம் புல்நுனிப் பனியென !

-கி.பாலாஜி
ஆகஸ்ட்-17-2018 

#கவிதை #தமிழ் #இயற்கை #மக்கள் #கேரளா #பாலாஜி #அன்னை #அழிவு #பேரிடர் #மன்னிப்பு #பூமி #மனிதன் #வாழ்க்கை #சிகரம் 

Comments

  1. உண்மை. பல அழிவுகளுக்கு மனிதனின் பேராசையே காரணம்.

    கேரள மக்களுக்கு இந்த நேரத்தில் தேவை சக மனிதர்களின் அன்பும் அரவணைப்பும்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!