சிகரத்துடன் சில நிமிடங்கள் : ரேகா சிவலிங்கம்
சிகரத்துடன் சில நிமிடங்கள் : பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?
பெயர் - ரேகா சிவலிங்கம்
வசிப்பிடம் - கம்பர்மலை, யாழ்ப்பாணம்
கல்வி - இசைத்துறை பட்டதாரி
ஈடுபாடு - தமிழ் இலக்கியம் மீது
பொழுதுபோக்கு - கவிதை, கட்டுரைகள் புனைவது
கவிப்பயணம் - உயர்தரத்திலே கற்கும்போது ஆரம்பித்தது என் கவிப்பயணம். அதன்பிறகு என் கவிவரிகள் மித்திரன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் தற்காலத்தில் யாழ்களரி பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளன. அத்தோடு சர்வதேச வானொலிகள், இலங்கை வானொலி போன்றவற்றில் தனிநிகழ்ச்சிகளாகவும் கூட்டுநிகழ்ச்சியாகவும் என் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. மேலும் டான் தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும் கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பிலே கலந்து கொண்டுள்ளேன். மேலும் கவிக்குழுமங்களின் மூலம் "காதல் கவிதை நாயகி", "வித்தகக்கவி" போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.
அத்தோடு பிரான்ஸ் நாட்டின் அனைத்துலக மனித உரிமை சங்கம் மற்றும் புனிதபூமி இணையத்தளம் இணைந்து யாழ் நூலக எரிப்பின் 37 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்காக உலகளாவிய ரீதியில் நடாத்திய "எரிந்தது நூலகமா இல்லை தாயகம்" எனும் தலைப்பிலே கவிதை எழுதி வெற்றியாளர்களிலே ஒருவராக தெரிவுசெய்யப்பட்டு விருது சான்றிதழ் பெற்றுள்ளேன். ஆயினும் கவிஞர் / கவிதாயினி என்ற வரையறைக்குள் உட்படவோ அல்லது பிறர் என்னை அப்படி அழைப்பதையோ நான் விரும்பவில்லை. ஏனெனில் கவிஞர் என்ற எல்லைக்குள் நுழைய இன்னும் பல காத்திரமான இலக்கிய படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். என்னைப்பொறுத்தவரையிலே நான் நல்ல படைப்பாளியாகவே இருக்கவே விரும்புகிறேன்.
கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?
நல்படைப்பு என்பது சமூகத்திற்கு நல்கருத்தினை எடுத்தியம்புவனவாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாகவும் சுருக்கமாக சொன்னாலும் தெளிவாக விளங்கக்கூடியவகையிலே இருத்தல்வேண்டும். அத்தோடு படைப்பு என்ற பெயரிலே சகலதையும் எழுதிக்குவிக்காமல் ஒருசில படைப்பு என்றாலும் கனதியானதாக இருத்தல் சிறப்பானதாகும்.
கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?
தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் அரசியல் சூழல் ஆரோக்கியமற்ற படுமோசமான நிலையிலையே காணப்படுகின்றது. ஏனெனில் சாதாரண வாழ்வாதார பிரச்சனையிலிருந்து வேலையில்லாத பிரச்சனை வரைக்கும் தமிழ் மக்கள் நடுவீதியிலேயே நிற்கிறார்கள். அனைத்துக்கும் போராட்டம். ஆனாலும் போராடியும் தீர்வில்லை. இந்த நிலை தொடர்ந்தால் போராடி போராடியே தமிழ் மக்களின் வாழ்க்கை முடிந்து விடும். இதற்கு தீர்வுதான் என்று என்பது புரியவில்லை.....!
கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?
ஒரு மனிதனுக்கு விழி எந்தளவு அவசியமோ அவ்வாறே மொழியும் அவசியமாகிறது. தொடர்பாடல் திறன் என்பது தாய்மொழியிலே மட்டுமன்றி பிறமொழியிலும் இருந்தாலே ஒரு தனிமனிதன் மட்டுமன்றி அவனைச் சூழவுள்ள சமூகமும் வளர்ச்சியடையும்.
கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?
ஏழைமக்களுக்கு உதவுவதே என் வாழ்வின் இலட்சியம் ஆகும். ஏனெனில் வறுமை, பணம் இந்த இரண்டுமே சமூகத்தில் பல நல்ல, தீய மாற்றங்களை கொண்டு வந்ததை நன்றாக அறிந்தவள் நான். அதனாலேதான் உயர்தரத்திலே கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்திலே என் மனதிலே தோன்றிய இந்த எண்ணம் இன்று பெரும் இலக்காகவே மாறியுள்ளது. எனக்கென்று ஒரு தொழில் வாய்ப்பு அமையும் போது என் இலட்சிய பாதை நோக்கி பயணிப்பேன்.
கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?
கடந்த கால வரலாற்றினை மட்டும் பாதுகாத்துக்கொண்டு எதிர்காலத்தினை சிதறவிட்டுவிடகூடாது. கடந்தகால வரலாற்றினையும் பாதுகாத்து அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொண்டு தவிர்க்க வேண்டியவனவற்றை தவிர்த்து எதிர்காலத்தினை பற்றியும் சிந்தித்து வாழவேண்டும்.
கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?
ஆம் அப்படித்தான் நடந்தேறும்போல இருக்கிறது. ஏனெனில் இன்று அனைத்தும் கணணி மயமாகிக் கொண்டிருக்கும் வேளையிலே இன்னும் ஒரு சில வருடங்களிலே பாடசாலை கற்கைநெறிகள் கூட முழுதும் கணனி மூலமே இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தோடு 10 - 15 வருடங்களுக்கு பிறகு வரும் எதிர்கால சந்ததியினர் புத்தகம் என்றால் என்னவென்று கணணியிலே தேடும் நிலைவந்தாலும் வரலாம். இதிலே சந்தோசப்பட எதுவுமே இருப்பதாக தோன்றவில்லை. புத்தகங்கள் எங்கள் பொக்கிஷங்கள். அது அழியாமல் காப்பாற்றப்படவேண்டும் என்பதே என் விருப்பம்.
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?
சமூக வலைத்தளங்கள் வரமென்றோ அல்லது சாபம் என்றோ தனி ஒரு பக்கம் சார்ந்து கூறிவிடமுடியாது. அதாவது நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தும் போது அது வரமாக இருக்கிறது. அதேவேளை தீயதே எண்ணமே கொண்டவர்கள் இவ்வலைத்தளங்களினை பயன்படுத்தும்போதும், பலர் நேரகாலத்தினை மறந்து அதிலேயே மூழ்கி இருக்கும்போதும் இது சாபமாக மாறுகிறது. மேலும் இவ்வலைத்தளங்கள் ஊடாக தீங்கினை ஏற்படுத்தும் தகவல்கள் பகிரப்படாமலும் நல் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தும்போதும் பெரும்பாலும் வரமாகவே மாறும்.
கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?
பிடித்த எழுத்தாளர்-ஜெயகாந்தன்
கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?
வளர்ந்த சந்ததிக்கும், இனி வளரும் சந்ததிக்கும் தாய் மொழி அறிவு புகட்டவேண்டும். எந்நாடு சென்றாலும் "எம்மொழியே எமக்கு செம்மொழி". ஆதலால் முதன்மை மொழியாக எம் தமிழ் மொழியை நிலைநிறுத்தி இரண்டாம் மொழியான ஆங்கிலத்தினை இரண்டாம் மொழியாகவே வைத்திருந்தால் எம்மொழி தானாகவே காப்பாற்றப்படும். ஏனெனில் தற்கால தமிழ் மக்களிடையே உள்ள நிலவரம் என்னவெனில் ஆங்கிலம் பேசுவது அழகு என்றும் தமிழ்மொழி பேசுவது அசிங்கம் என்றும் மாயை காணப்படுகிறது. இம்மாயை நீங்க வேண்டும். "எனக்கு தமிழ் மொழி பேச தெரியாது" என்று சொல்வதை பெருமை என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். எம்மொழியை எம்மனதிலே நிலைநிறுத்தி எக்கணமும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
பதில் வழங்கியவர் : ரேகா சிவலிங்கம்
தொகுப்பு : சிகரம்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #ரேகா_சிவலிங்கம் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #எண்ணங்கள் #பகிர்வு #மொழி #சிகரம் #SigaramINFO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்