நாங்களும் தமிழர்கள் தான்! - 46/14
வணக்கம் வாசகர்களே! தொடர் பதிவின் மற்றுமொரு அத்தியாயத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று கொஞ்சம் சூடான அரசியல் பேசலாம் என்று எண்ணுகிறேன். முதலில் எமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி இலங்கை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் திரு.மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தப் பதிவு இலங்கையில் இன்னமும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் தமிழ்த் தரப்பினரைப் பற்றிப் பேசப் போகிறது. அந்த தமிழ்த் தரப்பு "ஈழத் தமிழர்கள்" என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அப்படியானால் அவர்கள் யார்? அவர்களைப் பற்றி பதிவு என்ன சொல்லப் போகிறது? வாருங்கள் போகலாம்.
உலகத்தைப் பொறுத்த வரையில் இலங்கையில் தமிழர்கள் என்றால் உடனே எல்லோரும் சொல்வது "ஈழத் தமிழர்" என்று தான். கடந்த இருநூறு ஆண்டுகளாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் "மலையகத் தமிழர்" பற்றி நீங்கள் அறிவீர்களா? தமிழகத் தமிழர்களுக்கே தமது தொப்புள் கொடி உறவான "மலையகத் தமிழர்கள்" பற்றித் தெரியாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் தமிழக நண்பர் ஒருவருடன் தொலைபேசி மூலமாக உரையாடக் கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் "நீங்கள் என்ன ஊர்?" என்று கேட்டார். நான் மலையகம் என்று சொன்னேன். ஆனால் அவர் மலையகத்தை அறிந்திருக்கவில்லை. "திருகோணமலை, மட்டக்களப்பு இவற்றுக்கு பக்கமா?" என்று கேட்டார். "ஈழத் தமிழர்கள்" தமது விடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழர்களுக்கும் விடிவு வேண்டும் என்று சொல்லவே இல்லை. அவர்களாலேயே நாம் ஒதுக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்.
தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டத்தில் மலையகத் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு இருந்தது. இன்று இலங்கை சிறைச்சாலைகளில் "அரசியல் கைதிகள்" என்ற பெயரில் "புலி" முத்திரை குத்தப்பட்டு வாடும் தமிழர்களில் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்களே என்பது பலரும் அறியாதது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கென தமிழகத்தில் இருந்து கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் தான் இந்த "மலையகத் தமிழர்கள்". இன்றும் இலங்கையின் பின் தங்கிய பிரதேசமாகவே மலையகம் காணப் படுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப் படவேண்டும் என்று உலகம் கூறுவதெல்லாம் "ஈழத் தமிழர்களுக்காகவே" அன்றி "மலையகத் தமிழர்களுக்காக அல்ல. நாங்களும் தமிழர்கள் தானே? எங்களுக்கு மட்டும் உரிமைகள் தேவையில்லையா? எங்கள் தொப்புள் கொடி உறவான தமிழகமே எங்களை மறந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தில் முதன்மை வருமானத்தை மலையகத்தின் தேயிலை உற்பத்தி தான் ஈட்டித் தருகிறது. அப்படி இருந்தும் உழைப்பை மட்டும் உறிஞ்சிக் கொண்டு உரிமைகளை மறுத்து வருகின்றனர். இலங்கையின் அதிகாரப் பகிர்வுக்கான நகர்வுகளில் மலையகத் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுமா என்பது சந்தேகமே. அன்பான வாசகர்களே, "மலையகத் தமிழர்கள்" என்பவர்களும் இலங்கையில் வாழும் ஓர் தமிழ் இனம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுக்காகவும் பேசுங்கள். உரிமைக்காய் குரல் கொடுங்கள். ஈழத் தமிழர்களை விட நெருங்கிய - தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் "மலையகத் தமிழர்கள்". இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்? இன்னும் நிறைய பேச வேண்டும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
தொடர்புடைய ஆக்கங்கள்:
நண்பனின் "வரிக்குதிரை" வலைப்பதிவில் இருந்து.....
விக்கிபீடியாவில் இருந்து........
பிற தளங்களில் இருந்து......
மீண்டும் மற்றுமொரு பதிவுடன் நாளை சந்திப்போம்.
அன்புடன்,
சிகரம் பாரதி.
விளக்கங்களுக்கு நன்றி...
ReplyDeleteமற்ற இணைப்புகளையும் பார்க்கிறேன்...
இன்னும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுங்கள்!
ReplyDelete