பயணங்கள் பலவிதம் - 02
பயணங்கள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆம். நமக்குப் பிடித்த பயண அனுபவங்களை வாழ்வில் மறக்க முடியாது. அது போலவே சில பயணங்களை பிடித்தோ பிடிக்காமலோ வாழ்வில் நம்மால் மறக்க முடியாது.
இன்றைய இரயில் பயணம் நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்ற இடங்களையும் அதன் சுவடுகளையும் நினைவுபடுத்திச் சென்றது. சொல்ல முடியாத காயங்களாய் இன்னமும் மனதிற்குள் அவை உறுத்திக் கொண்டே இருக்கின்றன. ஒன்பது ஆண்டுகள்! இந்த ஒன்பது ஆண்டுகளில் நான் என்னைத் தேடி நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். இதில் பெற்றதை விட இழந்தது தான் அதிகம்.
ஆனாலும் இன்னமும் தேடல் முற்றுப் பெறவில்லை. இரவு, பகல், நாள், கோள் பாராமல் தேடல் தொடர்ந்த வண்ணமுள்ளது. எனக்கான என்னை எப்போது கண்டறிவது? இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கடந்த சனிக்கிழமை இரவு நாங்கள் கொழும்பில் தங்கியிருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு லொறி ஒன்றில் பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு எனது சொந்த ஊரான கொட்டகலை, லொக்கீல் தோட்டத்திற்கு ஞாயிறு காலை ஆறு மணியளவில் வந்து சேர்ந்தோம். கொழும்பில் நானும் மனைவியும் ஒரே நிறுவனத்திலேயே பணிபுரிந்து வந்தோம். கொழும்பில் வாழ்க்கையைச் சமாளிக்க முடியாது என்று தோன்றியதால் இருவரும் வேலையை விட்டு விலகி சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்தோம்.
மனைவி ஏப்ரல் 28 சனிக்கிழமையுடன் தனது வேலையை விட்டு விலகினார். நான் மே 31 திகதியிட்டு விலகல் கடிதத்தைக் கையளித்திருக்கிறேன். அதற்கு முன் விலக வாய்ப்புக் கிடைத்தால் ஆண்டு விடுமுறை நாட்களில் இருந்து விடுமுறை எடுத்து விலகிக் கொள்ள முடியும். தேயிலைப் பைகளை (Tea bags) ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஏழு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். மூலப்பொருள் கட்டுப்பாட்டாளராக (Material Controller) ஆறு வருடங்களும் தரவு உள்ளீடு செயற்பாட்டாளராக (Data entry Operator) தற்போது ஒரு வருடமாகப் பணிபுரிந்து வருகிறேன்.
மனைவி நான்கு வருடமாக பொதி செய்யும் பிரிவு ஊழியராகப் பணியாற்றி வந்தார். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது இந்த நிறுவனத்தில் தான்.
இன்று மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு மீதமிருக்கும் எனது ஒரு மாத கால வேலையை செய்வதற்காக கொழும்பு நோக்கிப் பயணம். சற்றுக் கவலையான தருணம். ம்ம்ம்... இன்னும் ஒரு மாதம் தானே? பார்த்துக் கொள்ளலாம். இன்றும் புகையிரதப் பிரயாணம். மாலை 03.49க்கு வர வேண்டிய புகையிரதம் மாலை 04.08க்குத்தான் கொட்டகலைக்கு வந்து சேர்ந்தது.
இரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு ஏறினேன். யன்னலோரம் ஆசனம் இருந்தது. பயணப் பையை வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். வழி நெடுகிலும் பல்வேறு அலைபாயும் எண்ணங்கள் என்னை அலைக்கழித்தபடியிருந்தன. தனியாக வந்திருந்ததால் எண்ணங்களை அதன்பாட்டில் அலைபாய விட்டுவிட்டேன்.
மலையக இரயில் சேவையில் சிவப்பு நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையும் நீல நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையும் தற்போது நடைமுறையில் உள்ளது. சிவப்பு நிறப் பெட்டிகளைக் கொண்ட புகையிரதம் ஒரு என்ஜினைக் கொண்டு இயங்கும். கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் போது கம்பளையில் மேலதிக என்ஜின் இணைக்கப்படும். நீல நிற பெட்டிகளைக் கொண்ட புகையிரத சேவையில் எப்போதும் இரண்டு பக்கமும் இரண்டு என்ஜின்கள் இருக்கும்.
சிவப்பு நிற புகையிரத சேவை மிகப் பழமையானது. நீல நிறப் புகையிரதங்கள் அண்மையில் வாங்கப்பட்டவை.
நான் இன்று குடிப்பதற்கோ உண்பதற்கோ எதுவும் எடுத்து வரவில்லை. புறப்படும் அவசரத்தில் அதைப்பற்றி சிந்திப்பதற்கும் நேரமிருக்கவில்லை. புகையிரதத்தில் ஏறியது முதல் ஒரு வடைக்காரரும் பனிஸ் விற்பவரும் மட்டுமே வந்து சென்றனர். நான் வேறு ஏதாவது வாங்கலாம் என்று அவற்றை வாங்கவில்லை. ஆறு மணிநேரப் பயணம் பசியோடு தான் கழிய வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கடலை விற்பவர் வந்தார். அவரிடம் இரண்டு பத்து ரூபாய் மிக்சர் பைக்கற்றுகளும் ஒரு நிலக்கடலை பைக்கற்றும் வாங்கிக் கொண்டேன். அவரைத் தொடர்ந்து வடைக்காரர் வந்தார். அவரிடம் இரண்டு பருப்பு வடைகளை வாங்கிக் கொண்டேன்.
பருப்பு வடைகள் சுமார் தான். காலையில் சுட்டதாக இருக்கலாம். மிக்சர் வகையறாக்கள் பரவாயில்லை. இப்போது ஏதாவது வேண்டும். ஆனால் யாரும் இல்லையே, என்ன செய்வது? சிறிது நேரம் கழித்து ஆப்பிள் விற்பவர் வந்தார். ஆப்பிளுக்கு மிளகாய் பொடி தூவி சுவையாக இருந்தது. நான் இரண்டாவது வகுப்பில் பயணித்தேன். சில வேளை மூன்றாம் வகுப்பில் உணவுக்கூடம் இருக்கலாம். ஆனால் தனியாக வந்ததால் பயணப் பையை வைத்துவிட்டு சென்று பார்த்து வர இயலவில்லை.
இரவு 09.50க்கு மருதானையில் வந்து இறங்கினேன். பின்பு முச்சக்கர வண்டி பிடித்து மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கொழும்பில் மீதமுள்ள முப்பது நாட்களை இங்கு தான் ஓட்ட வேண்டும். ம்ம்ம்... எவ்வளவோ பண்ணிட்டோம். இதப் பண்ண மாட்டோமா?
புகைப்படக் குறிப்புகள்:
இப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திற்கும் உரிமையாளர் தோழர் சதீன் நடராஜா அவர்கள் தான். ஒவ்வொரு புகைப்படமும் அருமை. ஒவ்வொன்றும் ஒரு கதை பேசும். நான் நண்பனின் புகைப்படங்களை பேஸ்புக்கில் காணும் போதெல்லாம் வியந்து போவேன். அப்படி ஒரு அழகு. அத்தனையும் திறமை. அந்தத் திறமைக்குத் தலை வணங்குகிறேன். நான் பதிவுக்காக புகைப்படங்களை கேட்டதும் மறுக்காமல் தந்த நண்பன் சதீன் நடராஜாவுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்!













அழகான படங்கள். வாழ்த்துகள் படம் எடுத்த நண்பருக்கு.
ReplyDelete